வெர்ட்டிகல் கார்டன்



-இந்திராணி

உலகம் வெப்பமயமாகி வருவதால் பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியவில்லை. அக்னி நட்சத்திர வெயில்  என்று மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலுமே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. தோட்டத்தில் போய் இளைப்பாறலாம் என்றால், சென்னை போன்ற பெருநகரங்களில் அதற்கு வாய்ப்பே இல்லை.

ஒரு சிறிய இடம் கிடைத்தால்கூட அதில் ஒரு அறையை கட்டி விட்டு வாடகை மூலம் பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இயற்கையை விரும்பும் ஒரு சிலர் மட்டும் மாடிகளிலும், படிக்கட்டு இடைவெளிகளிலும் பூந்தொட்டிகளில் செடிகளை வளர்த்து ஆறுதல்பட்டுக் கொள்கிறார்கள். நமக்கு தோட்டம் அமைக்க இடம் இல்லையே என வருத்தப்படு வோருக்காக தற்போது ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டம், டவர் தோட்டம், வெர்ட்டிகல் தோட்டம், பாட்டில் தோட்டம், மாடித்தோட்டம், பால்கனி தோட்டம், சமையலறை தோட்டம் என பல தோட்டங்கள் வந்துள்ளன.

அதில் இந்த வெர்ட்டிகல் கார்டன் என்று சொல்லப்படும் சுவர்களில் அமைக்கப்படும் செங்குத்துத் தோட்டம் பிரபலமாகி வருகிறது. இதுகுறித்து, தோட்டங்கள் அமைத்துக் கொடுக்கும் சித்ரா மோகன்குமாரிடம் பேசினோம்... ‘‘நாடு முழுவதும் அடுக்குமாடி கலாசாரம் வந்த பிறகு தோட்டங்களுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது.

தனி வீடு வைத்திருப்பவர்கள் தோட்டம் வைத்திருக்க விருப்பப்பட்டாலும், அதற்கு இடம் இருப்பதில்லை. தோட்டம் அமைத்து பசுமையோடு வாழ விரும்புபவர்கள்  மாடித் தோட்டம் அமைத்து ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. தோட்டம் அமைக்க மாடியும் இல்லை இடமும் இல்லை என்று கவலைப்படுவோருக்கானதுதான் வெர்ட்டிகல் கார்டன் என்று சொல்லப்படும் செங்குத்துத் தோட்டம்.

இந்த முறையில் வீட்டுச் சுவர்களிலேயே க்ரில் அமைத்து சுவர்களுக்கு பாதிப்பில்லாமல் செடி, கொடிகளை படரவிட்டு வளர்க்கலாம்.  இதுமாதிரியான பசுமைச் சுவர் தாவர முறைக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. தற்போது  நம் நாட்டிலும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. சுவர்களில் மட்டுமல்ல, முழு அடுக்கு மாடியிலும் கூட இந்த முறையில் விதவிதமான செடிகளை வளர்க்கலாம்.

வீட்டுத் தூண்களில் அலங்கார கொடிகளை படரவிடலாம். சுவரில் எப்படி செடி, கொடிகளை வளர்க்க முடியும் என்று சந்தேகம் வரலாம். அதற்காக அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. வீடு கட்டும்போதே  அந்தச் சுவர்களுடன் சேர்த்து மணல் நிரப்பும் வகையிலான கட்டுமானங்களை அமைத்தாலே போதும். அவற்றில் மணலை நிரப்பிச் செடிகளை நட்டு வளர்க்கலாம்.

கட்டி முடிக்கப்பட்ட  வீடுகளிலும் க்ரில் அமைத்து இந்த வெர்ட்டிகல் கார்டன் தோட்டம் அமைக்க முடியும். பழைய பாபிலோனின் தொங்கும் தோட்டம் முறையை தழுவியே வெர்ட்டிகல் கார்டன் முறை வந்து இருக்கும் என  நினைக்கிறேன். வெர்ட்டிகல் கார்டன் முறையில் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு சிறிய இடமாக இருந்தால்கூட ஒரு பால்கனியில் க்ரில் சுவரில், அடுப்பங்கறையில் வீட்டின் எந்த இடத்திலும் செடிகளை வளர்க்கலாம்.

வெர்ட்டிகல் கார்டன் முறையில் வளர்க்கப்படும் செடிகள் பொதுவாக அழகூட்டும்படியாக தொங்கிக்கொண்டிருக்கும் செடிகள்தான். ஆனால், மாற்றாக நமக்குப் பிடித்த மூலிகைச்செடிகள், கீரை வகைகள், காய்கறிச் செடிகள், குரோட்டன்ஸ் வகைகள், சிலவகை பூச்செடிகள் ஆகியவற்றையும் வளர்க்கலாம்.
 
இவைகளை வளர்க்க விரும்பும்போது எந்த இடத்தில் எந்த வகையான செடிகள் வளர்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (அந்த இடத்தின் தட்பவெப்பநிலையைப் பொறுத்து).  இவற்றில் மண்ணின் அளவைக் குறைத்து தேங்காய்நார் துகள்களுடன் மண்புழு எரு உரம் கலந்து செடிகளை நட வேண்டும். நடப்படும்  செடிகளில் வேரின் ஆழம் அதிகமாகப் போகும் செடிகளை நடக்கூடாது.

இப்பொழுது சுவர்களில் அதற்கென்றே கருங்கற்களை பதிக்கிறார்கள், அதற்கென்றே பிரத்யேகமாக க்ரில்களை வடிவமைத்து அதற்கேற்ற வகையில் கப்களை, சட்டிகளை மாட்டிவிடுகிறார்கள். நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும் இடங்களில் காய்கறிச் செடிகள், கீரை வகைகள், பூச்செடிகளை வளர்க்கலாம். மிதமான சூரிய வெளிச்சம் உள்ள இடங்களில் கீரைவகைகள், மூலிகைச் செடிகள், அழகுச்செடிகள் வளர்க்கலாம். சூரிய வெளிச்சம் மிகக் குறைவாக உள்ள இடம், சூரிய வெளிச்சமே இல்லாத இடங்களிலும் அதற்கேற்ற வகையில் வளர்க்கக்கூடிய செடி வகைகள் உள்ளன.
 
சுவர்களில் க்ரில்கள் செட்டப் செய்யும்போது சுவர்கள் வீணாகாமல் மாட்டப்பட வேண்டும். பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் இடம் பால்கனி க்ரில், சமையலறை க்ரில், ஜன்னல் கம்பிகள் ஆகியவை சிறந்த இடங்கள். இந்த வகையான செடிகளுக்கு நீர் அளவாக விட்டால் போதும். சொட்டுநீர்ப் பாசனம் என்பதுபோல், ஒரு அடுக்கில் சட்டியில் விடும் தண்ணீர் அந்த சட்டியின் துளையின் வழியாக அடுத்தக் குடுவைக்கு சென்றுவிடும்.

இப்படி தொடர்ந்து ஒவ்வொரு வரிசையாக தண்ணீர் செல்லும். இதனால் தண்ணீர் தேங்கி நிற்காமல் அனைத்துச் செடிகளுக்கும் சீரான தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும். நாம் கலக்கும் உரத்தில் தேங்காய்நாரின் கழிவுகள் இருப்பதால் இது ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளும்.

உரங்கள் என்று வரும்போது இந்த வகையான செடிகளுக்கு ஆர்கானிக் கிரானுவல்ஸ் என்றழைக்கப்படும் இயற்கை குருணைகள், டேப்லெட் வடிவில் விற்பனை செய்யப்படும் ஆர்கானிக் டேப்லெட்ஸ், ஆர்கானிக் என்ஸைம்ஸ், பூச்சிக்காக நீம் ஆயில் போன்ற இயற்கை நுண்ணூட்ட உரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். காய்கறிச் செடிகள் என்றால் பூச்சியின் தாக்கம் அதிகம் ஏற்படும்.

இதற்குத் தேவையான நீம் ஆயில் அல்லது இயற்கை வசம்பு பூச்சிவிரட்டி, வேப்பம் புண்ணாக்கு அல்லது துளிஅளவு ஷாம்பூ அல்லது ஒரு சிட்டிகை துணி துவைக்கும் சோப்பு பவுடர் அல்லது பச்சை மிளகாய்-பூண்டு விழுதை தண்ணீரில் கலந்தும் தெளிக்கலாம். எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது பஞ்சகவ்யா. இது சிறந்த பூச்சி விரட்டியாகவும் செடி வளர உயிர் ஊக்கியாகவும் இருக்கிறது.

வெர்ட்டிகல் கார்டன் அமைப்பதே பொதுவாக வெப்பத்தைக் குறைக்கவும், மாசுபாட்டை தடுக்கவும்தான். அடுத்ததாக நாம் ஒரு வீட்டிலோ அலுவலகத்திலோ இதை அமைக்கும்போது அந்த இடமே பசுமை ஆடை போர்த்தியதுபோல் அழகாக இருக்கும். கண்களுக்கு இது குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் மூளையில் நமக்கு நல்லவிதமான உணர்வுகளை ஏற்படுத்தும்.

பசுமைத் தாவரங்களை உள்ளடக்கிய சுவர்த் தோட்டம் வெப்பத்தின் தாக்கத்தை உணர முடியாத அளவுக்கு பசுமை கலந்த சூழலை உருவாக்குகிறது. இதனால் நல்ல காற்றோட்ட வசதி கிடைக்கிறது. இதுபோன்ற பசுமைச் சுவர் தாவரங்களை உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களிலும் அமைக்கலாம். வெளிப்புறச் சுவர்களில் அமைக்கப்படும் பசுமைச் சுவர் தாவரங்கள் கோடை காலத்தில் உஷ்ணத்தை உள்வாங்கி வீட்டில் வசிப்பவர்களுக்குக் குளிர்ச்சியான சூழ்நிலையை அளிப்பதுடன் உடல் ஆரோக்கியத்தையும் தருகிறது’’ என்கிறார்.

படம்: யுவராஜ்