புள்ளி சேர்த்து... புள்ளி சேர்த்து... ஓவியம்



-மகேஸ்வரி

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் கண்டிப்பாக ஒரு தனித் தன்மை உண்டு. அது எதுவாகவும் இருக்கலாம். அதை முதலில் என்னவென்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளிடம் உள்ள தனிப்பட்ட அந்த திறமையினை கலை வழியாக வெளிக்கொண்டு வரும் வேலையைச் செய்கிறது ‘ப்ளாக் அண்ட் வொயிட்’ கலர்ஃபுல் ஆர்ட் பள்ளி. படம் வரைவது மட்டுமே அந்தக் குழந்தைக்கு பிடித்தமான விசயம் என்றால் சரி. எந்தத் துறையிலும் மிளிர்வதற்கு படைப்பாற்றல் மிகவும் முக்கியம். குழந்தைகளிடம் மறைந்து கிடக்கும் படைப்பாற்றலை கண்டறிந்து அவர்கள் விரும்பும் துறையில் கொண்டு வருவதுதான் இந்த ஆர்ட் பள்ளியின் வேலை.

‘‘முன்பெல்லாம் குழந்தைகள் வளரும்போதே அப்பா என்ன செய்கிறார், அம்மா என்ன செய்கிறார் என தன்னைச் சுற்றி நடக்கும் விசயங்களை உற்று கவனிப்பார்கள். அப்பா ஒரு விவசாயி என்றால் அது தொடர்பான வேலைகளான மண் வெட்டி எடுத்து வெட்டுவதையோ செடிக்குத் தண்ணீர் விடுவதையோ பார்ப்பார்கள்.

நடனம் கற்றுத் தரும் பெற்றோர் என்றால் நடனத்தையும் பாடலையும் குழந்தைகள் பின் தொடர்கிறார்கள், தன்னைச் சுற்றி நிகழும் அத்தனை விசயங்களையும் உள்வாங்குவார்கள் ” எனப் பேசத் துவங்கிய லதா வெங்கட்ரமணன் சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் “பிளாக் அண்ட் வொயிட்” என்னும் பெயரில் வண்ணங்களால் நிறைந்த ஓர்  ஓவியப் பள்ளியினை நடத்தி வருகிறார்.

‘‘என் அப்பா சாஃப்ட்வேர் இன்ஜினியர் என்பார்கள் குழந்தைகள். ஆனால் சாஃப்ட்வேர் என்றால் என்ன எனத் தெரியவில்லை. இங்கே பொது அறிவும், தொழில்நுட்பம் சார்ந்த அறிவும் வேறுவேறாய் இருக்கிறது. எங்கள் தலைமுறைக்கு இருந்த பொதுவெளி இன்று குழந்தைகளுக்கு இல்லை. எல்லாம் ஏட்டுக் கல்வியாகவே இருக்கிறது.

சின்னத்திரையும், கைபேசியும் நான்கு சுவற்றுக்குள்ளே நம் குழந்தைகளை இருத்தி, எல்லாவற்றையும் அவர்களுக்கு கற்றுத் தருகிறது. தன்னைச்சுற்றி நடக்கும் விசயங்களை உணர்ந்து உள்வாங்கினால்தான் அதை உணர்வுபூர்வமாய் வெளிக்கொண்டுவர முடியும். மரத்தை வரையும் ஒரு குழந்தையிடம், மரத்தை பற்றிச் சொல்லச் சொன்னால் சொல்லத் தெரியாது. நமக்கு வாழ்க்கைக் கல்வியாக கிடைத்த எதுவும் இப்போது நம் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. இன்றைய குழந்தைகளுக்கு சூரியன் என்றால் வெப்பம்.

அதைத்தாண்டி எதுவும் தெரியவில்லை. அடிப்படை விசயங்கள் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. உயிரோட்டமான விசயம் இயற்கை. அது சார்ந்த விசயங்கள் குழந்தைகளுக்கு இயல்பாக தெரியவேண்டும். வாழ்க்கைக் கல்வியை அறியும் முன்பே பள்ளியில் திணிக்கப்படுகிறார்கள். பள்ளிகளில் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள். ஆனால் மனிதனின் அடிப்படைத் தேவையினை முன்நிறுத்தி அக்கல்வி இல்லை.

அதேபோல், டிஜிட்டல் டிராயிங் என்பது குழந்தைகளுக்கு கற்பனை வளத்தைத் தராது. விரல்களை பயன்படுத்தி வண்ணங்களை தீட்டும்போதுதான் கற்பனை உணர்வு இயல்பாய் ஊற்றெடுக்கும். கலர் பென்சில், க்ரயான்ஸ், கலர் ஸ்கெட்ச், கலர் மிக்ஸிங் இவைகளை கையால் தொட்டு உணர பழக்கப்படுத்துதல் வேண்டும். ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளின் கையில் பென்சிலை திணிக்கக் கூடாது. பென்சிலை பிடித்து வரையும் வளர்ச்சி பிஞ்சுகளின் விரல்களில் கண்டிப்பாக இருக்காது.

குழந்தைகளுக்கு முழுவதும் அடிப்படையான விசயங்களை உணர்த்துவதுதான் எங்களின் முக்கியமான நோக்கம். அவர்களுக்குத் தெரிந்த விசயங்களையே முதலில் வரைய வைப்போம். அதிலிருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, வெறும் தியரியாக இல்லாமல், சுற்றி நிகழ்வதைக் கவனத்தில்கொள்ள வைப்போம். அதன் பிறகு உணர்வுகளை நாம் மகிழ்ச்சியாக இருந்தால் முகம் எப்படி இருக்கும்.

கோபமாக இருந்தால் எப்படி இருக்கும். நீ தப்பு செய்தால் உன் அம்மாவின் முகம் எப்படி இருக்கும். அதை உன் அம்மா, அப்பாவிடம் சொல்லும்போது அப்பா முகத்தில் என்ன மாதிரியான உணர்ச்சி வெளிவரும் போன்ற முகபாவங்களில் துவங்கி, இருவருக்கும் தெரிந்துவிட்டால் நீ எப்படி பயப்படுவாய் என அவர்களிடம் பேசி உணர்வுகளை படங்களில் வெளிப்படுத்தச் செய்வோம்.

அடிப்படையினை புரிந்து உணர்ந்தாலே மற்ற விசயங்கள் தானாக வெளியில் வரும். இல்லையென்றால் அது தியரியாகவே இருக்கும். கண் முன்னால் இருக்கும் விசயத்தை குழந்தைகள் கவனிப்பதில்லை. அந்தத் திறனை அவர்களுக்குக் கொண்டு வந்துவிட்டால் போதும். அறிவியல், கணிதம், சமூக அறிவியல் எல்லாமே அவர்களுக்கு செயல்முறை கல்வியாக மாறிவிடும்.

தொடர்ந்து அவர்களிடம் வண்ணங்களின் அறிவைக் கொண்டு வருவோம். வண்ணங்களை அவர்களின் சிந்தனைக்கேற்பவே பயன்படுத்த வைப்போம். மேகத்திற்கு ஊதா வண்ணம்தான் என்றில்லை, வைலட் வண்ணத்தை போட நினைத்தாலும் அது தப்பில்லை. ஆனால் அதன் அர்த்தம் மற்றும் வித்தியாசம் என்னவென்று தெரிந்து செய்ய வேண்டும்.

இப்படிச் செய்ய வைப்பதால், குழந்தைகள் சொல்ல நினைப்பதை சொல்லும் தைரியம் தானாக வரும். அவர்களின் தன்னம்பிக்கை உயரும். பேசுவதற்கு மட்டுமில்லை, யோசிக்கவும் அதை வெளிப்படுத்தவும், குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை நிறைய வேண்டும். பள்ளிகளின் ஒரே மாதிரி அமைப்பு, ஒரே மாதிரி யான அலுப்பு தட்டும் படிப்பு முறை போன்றவை அவர்களை ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். மற்றும் மருத்துவம், பொறியியல் தாண்டி சிந்திக்க வைக்க மாட்டேன் என்கிறது.

நாங்க எங்கள் பாடத் திட்டத்தை 12 பிரிவாக பிரித்து வைத்திருக்கிறோம். ஒவ்வொரு பிரிவும் 4 மாதங்கள். ஆனால் பள்ளி மாதிரி ஒரு வகுப்பை முடித்து விட்டால் அடுத்த வகுப்பு என்ற அணுகுமுறை எங்களிடத்தில் இல்லை. குழந்தையின் திறனுக்கு ஏற்ப ஒவ்வொரு படமாக மாற்றுவோம். 5வது பிரிவு வரும்போது, குழந்தைகள் நிறைய மாறியிருப்பார்கள்.

பென்சிலை எப்படி பிடிக்க வேண்டும் எனத் தெரியாத குழந்தைகள்கூட நிறைய மாறி இருப்பார்கள். எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இல்லை. எல்லா குழந்தைக்குள்ளும் ஓவியர் இருப்பார் என்று அர்த்தமும் இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித் தன்மை, ஒரு ஈர்ப்பு இருக்கு. அவர்களிடத்தில் எதையும் நாங்கள் திணிப்பதில்லை. வரைவது மட்டும்தான் பிடிக்கும், வண்ணங்கள் தீட்டப் பிடிக்காது என்றால் அதை மட்டும் செய்ய வைப்போம்.

ஒரு சில குழந்தைகள் கைவேலைப்பாடு மட்டும்தான் பிடிக்கும் என்றால், அதுவும் தப்பில்லை. அதையும் செய்ய வைப்போம். அவர்களுக்குப் பிடித்த கலரை குழந்தைகளை எடுத்து வரைய வைப்போம். மன அழுத்தம் நிறைந்த குழந்தைகள் அடர் நிறங்களான கருப்பு, வயலட், அரக்கு என எடுத்து வண்ணம் தீட்டுவார்கள். அவர்கள் தீட்டும் வண்ணம் தெளிவாக இருக்காது. நம் கல்விமுறை அடிப்படையில் இருந்து புரிந்துகொள்ள வைக்காமல் மேலோட்டமாக ஏட்டுக்கல்வியாக இருப்பதால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது.

இயல்பான, சுதந்திரமான சிந்தனை உள்ள குழந்தைகள் தைரியமாக ஊதா, பச்சை, மஞ்சள் மாதிரியான வண்ணங்களை எடுத்து வரைவார்கள். ‘இதே மாதிரியே வரையணும்’ எனும் காப்பி பண்ணும் வேலையும் எங்களிடத்தில் இல்லை. நாங்கள் குழந்தைகளை அவர்களின் போக்கில் கொண்டுசெல்லும் விதம் மிகவும் வித்தியாசமானது. கிறுக்கல்களைக்கூட உருவமாக மாற்றி விட முடியும்.

சுலபமாக  துவங்கி மிகவும் கடினமான ஓவியங்களைக் கூட குழந்தைகள் வரைவார்கள். குழந்தைகளுக்குள் போட்டியை உண்டு பண்ணி முதலிடம், இரண்டாம் இடம் என அவர்களுக்குள் தகுதி தருவதில்லை. வரைதல் என்பது உள்ளிருக்கும் கற்பனைகளை வெளிக்கொணர்வது. அவரவர் சிந்தனை சார்ந்து அது மாறுபடும்.

அதில் எப்படி போட்டியினை கொண்டு வர முடியும்? இயற்கையையும், ஒருவரை அமர வைத்து அப்படியே வரைவதையும் ஆர்ட் என நினைக்கிறார்கள் இங்கே. பார்த்து அப்படியே வரைவது மட்டுமல்ல ஓவியம். அதையும் தாண்டி நிறைய விசயங்கள் உள்ளன. நம் பெற்றோர்கள் எல்லாவற்றையும் போட்டியாகவே பார்க்கிறார்கள். 5ம் வகுப்பு படிக்கும் குழந்தையினை ஐ.ஐ.டி. பயிற்சிக்கு அனுப்பும் பெற்றோர்களே இங்கு அதிகம்.

பெற்றோர்கள் தரும் ஐ.ஐ.டி. அழுத்தத்தை தாங்க முடியாத சில குழந்தைகள் தற்கொலை முடிவுக்குக் கூடச் செல்கின்றனர். என் குழந்தை வரைவதை டிஸ்ப்ளே பண்ணுவீங்களா, போட்டிகளுக்கு அனுப்புவீங்களா, முதலிடம் வரவைப்பீர்களா என்ற அளவிலே இங்கு பெற்றோர் மனநிலை உள்ளது. நடனத்திற்கு சென்றால் கூட சித்ரா விஸ்வேஷ்வரனாகவும், ஷோபனாவாகவும் எதிர்பார்க்கிறார்கள்.

பெற்றோர்களின் இந்த போட்டி மனப்பான்மை, பள்ளிகளை பணம் சம்பாதிக்கும் ஒரு நிலைக்கு கொண்டு செல்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்பு நடத்தும் பள்ளிகள் கூட நிறைய இருக்கின்றன. விடுமுறைகளைக்கூட குழந்தைகள் குதூகலிக்க அனுமதிப்பதில்லை. பள்ளியில் முதல் பரிசோ, பதக்கமோ பெறவில்லை என்றால் பெற்றோர் வருத்தப்படுகிறார்கள்.

அந்த எதிர்பார்ப்பை குழந்தைகளிடம் புகுத்தி அழுத்தம் ஏற்படுத்துகிறார்கள். பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதும், லட்சங்களில் சம்பாதிக்க வைப்பதுமே பெற்றோர்களின் நோக்கமாக இங்கு இருக்கிறது. அந்த நோக்கத்தை புரிந்துகொண்ட பள்ளிகளும், குழந்தைகளை மனித இயந்திரங்களாக உற்பத்தி செய்து வெளியில் அனுப்புகின்றன.

குழந்தைகளை குழந்தைகளாகப் பாருங்கள். அவர்களையே சிந்திக்க வையுங்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு ஜெம். நாம நினைத்த ஷேப்பை அவர்களிடம் திணிக்கிறோம். அவர்களுக்கு கொடுக்க நினைக்கிறோம். எல்லா குழந்தைகளிடமும் ஒரு இன்பில்ட் எக்ஸ்டிரீம் கண்டிப்பாக இருக்கு. எல்லா துறையிலுமே வெற்றிக்கான வாய்ப்புகளும் நிறைய உண்டு. குழந்தைகள் விருப்பப்பட்டதை செய்ய விடுங்கள். அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுங்கள். உங்கள் குழந்தைகளை முதலில் புரிந்து கொள்ளுங்கள்” என்கிறார் இவர்.         
                                       

படங்கள்: ஆர்.கோபால், ஏ.டி.தமிழ்வாணன்