பெண் சிங்கம்



-ஸ்ரீதேவி  மோகன்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி ஹிட் அடித்த இந்தி படம் தங்கல். அதில் குத்துச் சண்டை வீராங்கனையான கீதா போகட்டின் சிறு வயது பாத்திரத்தில் நடித்திருந்த சிறுமி சைரா வாசிம் தன் சிறந்த நடிப்பால் பலரின் கவனத்தையும் கவர்ந்திருந்தார். 64ம் இந்திய தேசிய சினிமா விருதுகள் இந்த மாதம் எட்டாம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றிருந்தார் சைரா வாசிம்.

அது குறித்து அவர் பேசிய வார்த்தைகள்... “நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். அறிமுகமான முதல் படத்திலேயே இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. விருதுக்கு  என்னை தேர்ந்தெடுத்த ஜுரிகளுக்கு மிக்க நன்றி. என்னை நம்பியதற்காக என் குடும்பத்தினருக்கும், இந்த படத்தில் நான் நடிக்க ஊக்கமளித்தற்காக அமீர்கான் சார் மற்றும் நிதிஷ் சாருக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்” என்றார்.

ஆனால் அவர் நமக்கு சொல்லாமல் சொன்ன விஷயங்களும் சில உண்டு. வலிகளில்லாமல் வாழ்க்கை இல்லை என்பது இவர் விஷயத்திலும் உண்மையாகி இருக்கிறது. படத்தில் சைராவை காலையில் எழுந்ததும் பயிற்சி பயிற்சி என வாட்டி எடுப்பார் அமீர்கான். அது போல நிஜத்திலும் கிட்டதட்ட 8 மாதங்கள் அதிகாலை எழுந்து பயிற்சி எடுத்திருக்கிறார் சைரா.

ஆரம்ப காலத்தில் மிகவும் பலவீனமாக இருந்த சைராவைப் பார்த்து இவர் இந்த கதாபாத்திரத்தை சரிவர செய்துவிடுவாரா என சந்தேகப்பட்டவர்களின் கணிப்பு தவறு என்று தன் கடினமான பயிற்சியால் நிரூபித்தார் சைரா. படத்திற்கு தேர்வாகும் வரை வாக்கிங் செய்து கூட பழக்கமில்லாத சைரா படத்திற்காக உடற்பயிற்சிகளுடன் குத்துச்சண்டை பயிற்சியும் எடுத்து தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனை என்று பார்ப்பவர்கள் நம்பும் அளவிற்கு நடித்திருந்தார்.

தனது உடல் வலிமை, ஒத்துழைப்பு என அனைத்தையும் நாளுக்கு நாள்  உயர்த்தி   படப்பிடிப்பில் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி இருக்கிறார் சைரா. அவர் நடித்த போது பெண் சிங்கம் சண்டை இடுவது போன்றிருந்தது என அமீர்கானே சைராவின் நடிப்பை வியந்து பாராட்டி இருந்தார். படப்பிடிப்பின் போது காயங்கள் ஏற்பட்ட போதும் அந்த வலிகளை எல்லாம் தாங்கிக் கொண்டு நடித்திருந்தார் சைரா.

அதுமட்டுமின்றி நடிப்பிற்காக தன் தலைமுடியையும் தியாகம் செய்திருந்தார் சைரா  காஷ்மீர் போன்ற மாநிலத்தில் இருந்து வந்து சாதித்திருக்கும் சைராவின் வயது 16தான். No gain without pain என்ற பொன்மொழி ஒரு உதாரணம் இந்த குட்டிப்பெண். பெண்களின் பிரச்னையை பேசிய  ‘பிங்க்’ படத்திற்கும் தேசிய விருது கிடைத்திருக்கிறது. சமூக விஷயங்களை பேசிய சிறந்த படம் என்ற முறையில் இந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது.