நீராலானது இவ்வுலகு



காலநிலை மாற்றமும் குடிநீர் பற்றாக்குறையும்

கொதிக்கும் நீரில் ஒரு தவளையை பிடித்துப் போட்டால் அப்படியே ஒரு எம்பில் குதித்து வெளியே வந்துவிடும். குளிர் நீர் பானையில் அதே தவளையைப் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றினால் பட்டெனக் குதித்து வெளிவரும் அந்த ஒருமுக ஆற்றல் அதற்கு வராது. கொஞ்சம் கொஞ்சமாக வெந்து சாகும். மனித சமூகம் கூட இந்த தவளையைப் போல கொஞ்சம் கொஞ்சமாக மடிந்து கொண்டு இருக்கிறது புவி வெப்பமயமாதல் காரணமாக.

இதற்கு காரணமும் மனித சமூகம் தான். மனித சமூகத்துடைய சுயநல நடவடிக்கையால் இவ்வுலகில் வாழும் பிற உயிரினங்களும் அழியும் நிலையில் உள்ளன. எதிர் வரும் மே மாதத்தில், வெயில் அளவு கடுமையாக இருக்க போவதாக இந்திய வானிலை துறை  தெரிவிக்கிறது.  கூடுதலாக வெப்பக் காற்றின் தாக்குதலும் இருக்கும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

குடிநீர் பற்றாக்குறையை பற்றி கேட்கவே  வேண்டாம். காலி குடங்களுடன் வீதியெங்கும் குடிநீருக்கான போர் நடைபெறப் போகிறது. மொத்தத்தில் வரப்போகிற மே மாதம் நமக்கு மிகப் பெரிய சவாலான மாதமாக இருக்க போகிறது. இந்த சவாலை எதிர் கொள்ள நம்மிடமோ அல்லது அரசிடமோ என்ன திட்டங்கள் இருக்கின்றன?  விடை தேடுவதற்கு முன்பாக காலநிலை மாற்றம் பற்றி சில அடிப்படை தகவல்களை பார்ப்போம்.

மனித சமூகம் நிகழ்த்தும் காலநிலை மாற்றம் புவி வெப்பமாகும் காரணத்தால் காலநிலை மாற்றம் நிகழ்ந்துகொண்டு இருப்பதாக பல அறிஞர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். பூமியின் வளிமண்டலத்தில் நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்ற பல வாயுக்களும் நீராவியும் கலந்துள்ளன. வளிமண்டலத்திலுள்ள இந்த வாயுக்கள்தான் பூமியின் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருக்கப் பெரிதும் உதவுகின்றன.

வளி மண்டலத்திலுள்ள கார்பன்-டை-ஆக்சைடு புவியைச் சுற்றிலும் ஒரு கண்ணாடிப் படலம் போல செயலாற்றி சூரிய ஒளி பூமியை வந்தடைய அனுமதிக்கிறது. அதே நேரத்தில் இது பூமியிலிருந்து வெப்பக் கதிர்வீச்சு வெளியேறாதவாறு தடுக்கவும் செய்கிறது. இப்படி சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் ஏறத்தாழ 19 சதவிகித அளவைக் காற்றுமண்டலம் உறிஞ்சிவிடுகிறது.

34 சதவிகித அளவு காற்றுமண்டலத்தில் சிதறடிக்கப்படுகிறது அல்லது பிரதிபலிக்கப்பட்டு விண்வெளிக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது. எஞ்சிய 47 சதவிகிதக் கதிர்வீச்சு ஆற்றல் பூமியினால் உறிஞ்சப்பட்டு வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. இதனை பச்சை இல்ல செயல்பாடு (Green House Effect) என்று அழைக்கின்றனர். தற்போது பச்சை இல்ல வாயுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக சூரியக் கதிர்வீச்சு வெளியேற முடியாமல் பூமி படலத்திற்குள்ளாக சிக்கி தவித்து புவியின் வெப்பத்தை அதிகரிக்கின்றன. மனிதனால் செயற்கையாக வெளியேற்றப்படும் பச்சை இல்ல வாயுக்களால் இந்த மாற்றம் நிகழ்வதாக அறிஞர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்திற்கான சர்வேதச ஆய்வு மையமும் இந்தத் தகவலை உறுதி செய்கிறது.

உண்மையில் தற்போது நிகழ்ந்து வருவது மாற்றமல்ல, குற்றம். இதற்கு ஒட்டுமொத்த மனித இனத்தையும் நாம் குற்றம் கூறமுடியாது. அமெரிக்க மற்றும் ஜரோப்பிய நாடுகள் மட்டுமே இந்த குற்றத்துக்கு முழு பொறுப்பேற்க வேண்டியவர்கள். காலநிலை மாற்றத்திற்கு ஒட்டுமொத்த மனித சமூகத்தையே குற்றவாளியாக அடையாளப்படுத்தும் போக்கு உள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு காரணமாக மனித சமூகம் வெளியேற்றும் பச்சை இல்ல வாயுக்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இவற்றை ஆந்தோரோஜெனிக் வாயுக்கள் அதாவது மனித சமூகம் வெளியேற்றும் பச்சை இல்ல வாயுக்கள் என்று அழைக்கின்றனர். உண்மையில் இவற்றை மேற்கத்திய நாடுகளின் வாயுக்கள் என்றுதான் அழைக்க வேண்டும்.

19ம் நூற்றாண்டு துவங்கி 20ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம்தான் மனித சமூகம் வெளியேற்றிய அதிகப்படியான பச்சை இல்ல வாயுக்களால் பூமியின் தட்பவெப்ப நிலை மாற துவங்கியது என்று அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இந்த காலகட்டம் ஜரோப்பா - அமெரிக்காவில் தொழில் புரட்சி நடந்த கால கட்டமாகும். ஆக ஜரோப்பா-அமெரிக்க நாடுகள் நிகழ்த்திய இந்த செயல்பாடுகள் இன்று ஒட்டுமொத்த மனித சமூகத்தின் தலையில் கட்டப்பட்டுள்ளன.

காலநிலை மாற்ற ஆபத்துகள் உலகெங்கும் கடலளவு அதிகரித்தல், மழைப்பொழிவின் அளவில் மாற்றம், தட்ப வெப்ப  அளவில் மிக மாற்றம்  போன்றவை தொடர்ந்து  நிகழ்ந்து வருவதாக காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, காலநிலை மாற்றத்தின் காரணமாக உலக நாடுகளில் மிகப் பெரிய பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் வெப்பக் காற்று, சூறாவளிகள், நிலச்சரிவுகள், வறட்சி போன்றவை தொடர் நிகழ்வுகளாக மாறக் கூடும் என்று கூறியுள்ளது. காலநிலை மாற்றம் மனிதர்களை பெருமளவில் இடம்பெயரச் செய்யவுள்ளது. அகதிகளாக மக்களை மாற்றப் போகிறது என்கிற எச்சரிக்கையும் அறிக்கையில் உள்ளது.

காலநிலை மாற்றம் நேரிடையாக உண்டாக்கும் பாதிப்புகளை விட மறைமுகமாக உண்டாக்கும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்கிறார் லவ்லாக். மறைமுக பாதிப்புகளாக அவர் கூறுபவை: உணவு பற்றாக்குறை, இயற்கை வளங்களை பங்கிடுவதற்கான போட்டி மற்றும் குழுச் சண்டை.

அரேபியா, சிரியா போன்ற நாடுகளில் தற்போது நிகழ்ந்து வரும் உள் நாட்டு போரை இதனோடு தொடர்புப்படுத்திப் பார்க்க வேண்டும். அரேபியா, சிரியா போன்ற நாடுகளில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் உணவு உற்பத்தி சரிவு போன்றவையே உள் நாட்டு கலவரம் உண்டாக முக்கிய காரணமாக இருந்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன. மேற்கூறிய மூன்று அம்சங்களும் இந்திய தமிழகச் சூழலில் நிச்சயமாக நிகழ வாய்ப்புள்ளது.

இந்திய தமிழகச் சூழலை பொறுத்தவரை மாறிவரும் தட்பவெப்ப நிலை காரணமாக, பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்வது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. 2011ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் உணவு உற்பத்தி குறையும் என்னும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு  2010ம் ஆண்டு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் காலநிலை காரணமாக தமிழகத்தில் மழைப்பொழிவின் அளவு 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என்று கூறியுள்ளது. கடலோர மாவட்டங்களில் கடலளவு அதிகரிப்பதால் மீனவர்கள் பெருமளவு பாதிப்படைவர். சூறாவளி, வெப்பக் காற்று, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் தாக்கமும் அதிகரிக்கக்கூடும் என்னும் எச்சரிக்கையையும் தந்துள்ளது ஆய்வறிக்கை.

மேலும் பல்வேறு ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் நிகழக்கூடியவையாக கீழ்க்கண்டவற்றைத் தொகுத்துக் கொள்ளலாம்: சூறாவளிப் புயல், வெப்பக் காற்று, நிலச்சரிவுகள், வெள்ளம், வறட்சி, கடலில் அளவு அதிகரித்தல்,  நிலத்தடி நீர் உப்புமயமாதல், நோய்களின் தாக்கம் அதிகரித்தல் மற்றும்  பருவமழை பொய்த்தல்.

இந்த நிகழ்வுகள் மக்களை இடம்பெயர வைக்கும். அதாவது இவை மக்கள்தொகை அடர்த்தியை அதிகப்படுத்தும். ஒரு சதுர கிலோ மீட்டருக்குள்ளாக ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்க வேண்டிய அவல நிலையை உருவாக்கும். சுகாதாரம் சீர்கேடை உருவாக்கும். குடிநீர் பற்றாக்குறைக்கான காரணம் குடிநீர் பற்றாக்குறை உருவாக பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும், காலநிலை மாற்றம் அதில் முக்கிய காரணமாக உள்ளது.

குறைந்து வரும் மழை வரவு குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்தினாலும், காலநிலை மாற்றம் காரணமாக மழை வரவு குறைந்து வருகிறது என்பதையும் நாம் உணர வேண்டும். இத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்ள நமது அரசுகள் தயாராகிவிட்டதா என்றால் அதுவும் இல்லை. மத்திய அரசு பெயரளவுக்கு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சில கொள்கை அறிக்கைகளை தயார் செய்துள்ளது.

இந்தக் கொள்கை அறிக்கைகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எந்தவித செயல் திட்டங்களையும், கட்டமைப்பு திட்டங்களையும் கொண்டதாக இல்லை. தமிழகத்திற்கும் பெயரளவிலான ஒரு காலநிலை மாற்ற செயல்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக பேரிடர் மேலாண்மை சட்டவிதியைக் கூட இயற்றாத தமிழக அரசு  காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ள என்ன செய்ய போகிறது என்பது மிகப் பெரிய கேள்வியே.

ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தாலும் குடிநீருக்கு மாற்று ஏற்பாடாக விவசாயக் கிணறுகளில் இருந்து கூடுதல் தண்ணீர் எடுக்க திட்டம் இருப்பதாக தமிழக அரசு சொல்கிறது. நிச்சயம் இது நிரந்தர தீர்வாக இருக்க போவதில்லை. மழைக் காடுகளை பாதுகாத்து, மழை வரத்தை பெருக்கி, மழை நீரை சேமித்து, நீர் நிலைகளை பாதுகாத்தல் மட்டுமே குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நிரந்தர தீர்வாக அமையும். 

(நீரோடு செல்வோம்!)