லஷ்மியை மறக்க முடியுமா?



- ஸ்ரீதேவி மோகன்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரான லஷ்மியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திட முடியுமா என்ன? அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கான கதைகளை எழுதி பெண்களின் மனதைத் திருடி, பத்திரிகைகளின் விற்பனையை உயர்த்தியவர் கதாசிரியை லஷ்மி. தமிழ் வெகுஜன இலக்கிய உலகில் தனி இடம் பிடித்தவர் லஷ்மி. அவரின் உடன் பிறந்த சகோதரி திருமதி. சாவித்ரியை சமீபத்தில் சந்தித்தேன். 93 வயதாகும் சாவித்ரி, தனது அக்கா எழுத்தாளர் லஷ்மி உடனான தன் நினைவலைகளை மகிழ்ச்சியும் கண்ணீருமாக பகிர்ந்து கொண்டார். உரையாடலிலிருந்து…

“அப்பா திருச்சி மாவட்டத்தில் முசிறி தாலுகாவில் தொட்டியம் என்ற கிராமத்தில் டாக்டராக இருந்தார். அதனால் நாங்கள் குடும்பத்துடன் அங்கு இருந்தோம். நாங்க சகோதரிங்க மொத்தம் 5 பேர். லஷ்மி அக்காதான் மூத்தவ. எங்கள் கிராமத்தில் இருந்து 8 மைல் தொலைவில் உள்ள முசிறிக்குப் போய்தான் நாங்கள் படிக்க வேண்டும். சைக்கிளில் போய்தான் படிப்போம்.

அப்பாவைப் பார்த்து தானும் டாக்டராக வேண்டும் என்று அக்கா ஆசைப்பட்டாள். பொண்ணு விருப்பப்படறாள்னு தெரிஞ்சதால அக்காவை மேலும் படிக்கச் சொல்லி அப்பா சொல்லிட்டு இருப்பார். திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரி யில் அக்கா படித்தாள். பிறகு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டராகவும் ஆனாள். அவளுக்கு எந்த அளவுக்கு டாக்டர் தொழில் பிடிக்குமோ அதுபோலவே அவளுக்கு சின்ன வயதில் இருந்தே வாசிப்பின் மீதும் நல்ல ஆர்வம் இருந்தது.

அப்பா அவளின் வாசிப்பு பழக்கத்தை உற்சாகப்படுத்தினார். அவள் படிக்க நிறைய கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார். சின்ன வயசிலே அக்கா அடிக்கடி எங்களுக்கு கதைகள் சொல்லுவாள்.  நடந்துகொண்டே கதைகள் சொல்வது அவள் பழக்கம். கதைகள் சொல்றது அவளுக்குப் பிடிக்கும். நான்தான் அவளது கதைகளை காது கொடுத்து பொறுமையாகக் கேட்பேன். ரொம்ப அழகா கதை சொல்லுவா. அக்கா கதைகள் எழுதவும் ஆரம்பிச்சா.

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது ஒருநாள் தான் எழுதிய ஒரு கதையை என்னிடம் படித்துக் காட்டினாள். ‘இந்த கதை நல்லா இருக்கான்னு’ கேட்டா. மறுநாள் அதே கதை ஆனந்த விகடனில் வந்திருந்தது. எழுத்தாளர் பெயர் லஷ்மி என்று இருந்தது. நான் அக்காவைக் கூப்பிட்டு, ‘பொய் சொல்லாதே, நீ தானே இந்த கதையை எழுதினே?’ என்று கேட்டேன். சிரித்தாள்.

அக்காவோட நிஜப்பெயர் திரிபுரசுந்தரி. எழுத ஆரம்பித்தபோது வாசன் அவர்கள் அவளுக்கு ‘லஷ்மி’ என புனைப்பெயர் சூட்டினார். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்து அவளது கதைகள் வெளியாகின. அம்மா இந்த விஷயத்தில் அவ்வளவாக ஆர்வம் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அப்பா ஊக்கமூட்டினார். எங்கள் எல்லாருக்கும் அவள் எழுதுவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும்
இருந்தது.

தொடர்ந்து சில கதைகள் வந்த பிறகு அக்காவை தொடர்கள் எழுதச் சொல்லி வாசன் கேட்டுக்கொண்டார். அக்கா நிறைய எழுதினாள். தொடர்ந்து பிற பத்திரிகைகளுக்கும் எழுதினாள். பிரபலமானாள். அவளுக்கு நேரமே இருக்காது. எப்பவும் பிஸி. டாக்டர் ப்ராக்டீஸ் பண்ணுவாள். கிடைக்கும் நேரத்தில் எல்லாம் கதை எழுதுவாள். பார்க்கறது, கேட்கிறது என்று எல்லாவற்றையும் கதையாக்கிவிடுவாள். நிகழ்ச்சிகள், விழாக்கள் போனால் யாரிடமாவது பேசிக்கொண்டிருப்பாள்.

அவர்கள் சொல்லும் சம்பவங்களை அப்படியே கதையாக்கிவிடுவாள். அப்படித்தான் என் மகள் திருமணம் திருத்தணியில் நடைபெற்றது. திருமணத்துக்காக நாங்கள் காரில் சென்று கொண்டிருக்கும் போது உழவர் போராட்டத்தால் வண்டிகளை எல்லாம் மடக்கினார்கள். கோயில் சென்று சேர்வதே எங்களுக்குப் பிரச்னையாக இருந்தது. எப்படியோ கோயில் போய் சேர்ந்தோம். திருமணம் முடிந்து வீடு வந்ததும் அதையே ஒரு கதையாக்கி விட்டாள்.

அடுத்தடுத்து சில நேரங்களில் கதைகள் கேட்டார்கள் என்றால், ‘நேரமே இல்லை. நீங்க எதிர்பார்க்கிறபடி என்னால எழுத முடியாது. கோவிச்சிக்காதீங்க’ என்று எடிட்டரிடம் தீர்மானமாக சொல்லிவிடுவாள். பல நேரங்களில் நேரமில்லாததால் ரப் காப்பி மட்டும் எழுதுவாள். எனக்கு அடுத்த தங்கையான கல்யாணி அதனை அழகாக ஃபேர் காப்பி எழுதிக் கொடுப்பாள். பின்னாளில் அக்காவின் தாக்கத்தால் கல்யாணியும் ‘நித்தியா மூர்த்தி’ என்ற பெயரில் சில கதைகள் எழுதி இருக்கிறாள்.

லஷ்மி அக்கா எழுதி வரும் தொடர் மறுநாள் அச்சுக்குப் போகிறது என்றால் முதல் நாள் இரவு பத்திரிகையிலிருந்து ஒரு பையன் வாசலில் வந்து காத்திருப்பார். அப்புறம் அந்த சமயத்தில் அமர்ந்து அக்கா அவசர அவசரமாக எழுதி கொடுப்பாள். எங்களுக்கெல்லாம் மூத்தவளாக இருந்தும் எங்களுக்கெல்லாம் திருமணம் முடித்த பிறகு தான் அக்கா திருமணம் செய்து கொண்டாள்.

அவளுடையது அந்த காலத்திலேயே காதல் கலப்பு திருமணம். இலங்கையில் நடைபெற்ற ஓர் இலக்கிய விழாவில் கண்ணபிரான் என்பவரை சந்தித்தாள். அக்காவின் கதைகளை அவர் மிகவும் நேசித்தார். அதனால் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பின் சென்னையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

தென்னாப்பிரிக்காவில் அவர் பத்திரிகை தொழில் செய்து வந்ததால் இருவரும் தென்னாப்பிரிக்காவில் செட்டில் ஆனார்கள். அக்கா அங்கே அரசு மருத்துவராக இருந்தாள். அங்கே அக்காவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர் தொழில் செய்து கொண்டே கதைகளும் எழுதி கொண்டிருந்தாள். ஆனால் அங்கே அவளுக்கு அடுத்தடுத்து இடிகள் காத்திருந்தன.

தென்னாப்பிரிக்காவின் ஒயிட்ஸ் லாவின் படி அக்காவின் கணவர் தனது 500 ஏக்கர் நிலத்தை இழந்தார். அதுமட்டுமில்லாமல் குழந்தைக்கு பத்து வயதாகும்போது அக்காவின் கணவர் தனது நாற்பதாவது வயதில் திடீரென்று ஒருநாள் மாரடைப்பால் காலமானார். அப்போது அக்கா தன் மகனை என்னிடம் ஒப்படைத்துவிட்டு அந்த பத்திரிகை தொழிலை பார்த்துக்கொண்டாள். கதைகளும் எழுதிக்கொண்டிருந்தாள்.

அவள் எழுதிய ‘பெண் மனம்’ என்ற நாவல் ‘இருவர் உள்ளம்’ என்ற பெயரில் சினிமாவாக வந்தது. அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதிதான் பெண் மனம் என்ற தலைப்பை மாற்றி ‘இருவர் உள்ளம்’ என்று பெயர் வைத்தார். மா.பொ.சி, கலைஞர் எல்லாம் அக்காவிற்கு நன்கு தெரிந்தவர்கள். உரிமையுடன் பேசிக்கொள்வார்கள்.

அந்தப் படத்திற்கு அக்காவிற்கு கதைக்கான விருதும் கிடைத்தது. அக்காவிற்கு ‘ஒரு காவிரியைப் போல’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தது. அந்த விருதின்போது அக்கா தென்னாப்பிரிக்காவில் இருந்ததால் அதனை என் அக்காவின் சார்பாக டெல்லி சென்று என் மூத்த மகன் அந்த விருதினை பெற்று வந்தார்.

பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து அந்தக் காலத்தில் அதிகமாக எழுதிய எழுத்தாளர் அக்காதான். அவளது கதைகளில் பெரும்பாலானவை பெண்கள் படும் கஷ்டத்தை மையப்படுத்திதான் இருக்கும். இப்போது வரும் சீரியல்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் பெரும்பாலானவை பெண்களை வில்லத்தனமாகக் காட்டுகின்றன. ஆனால் அக்கா படைத்த பெண்கள் எல்லாம் உன்னதமானவர்களாக இருப்பார்கள். பூங்கொடி பதிப்பகத்தில்தான் அவர் கதைகள் அதிகமாக பதிப்பிக்கப்பட்டன.

நாம் இப்போது ’குட் டச் பேட் டச்’ பற்றி பேசுகிறோம். ஆனால் அக்கா அந்தக் காலத்திலேயே யாருடைய பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தைகளை அந்நியர்கள் யாரும்  அநாவசியமாக தொட்டு தூக்குவதை அவர் விரும்பமாட்டார். அப்படி செய்யக்கூடாது என்று தடுப்பார். அக்கா ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது எல்லாரும் அறிந்ததுதான். ஆனால் அக்கா டாக்டர், எழுத்தாளர் என்பதைத் தாண்டி அவள் ஒரு சிறந்த மனுஷி. எல்லாரிடமும் மிக அன்பாக இருப்பாள். தனக்கென பெரிதாக எதுவும் வைத்துக்கொள்ள மாட்டாள்.

எல்லாவற்றையும் தன் தங்கைகள், தன் தங்கை பிள்ளைகளுக்கே கொடுத்துக்கொண்டிருப்பாள். வெளியே ஊர்களுக்கு சென்று வரும் போது வாங்கி வரும் பொருட்களை எங்களுக்குக் கொடுத்தது போக வீட்டில் எப்போதும் ஸ்டாக் வைத்திருப்பாள். வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு அவர்களின் பிள்ளைகளுக்கு என யாருக்கு எது பயன்படும் என பார்த்துப் பார்த்துக் கொடுத்து ஆச்சரியப்படுத்துவாள். காசைப் பற்றி கவலைப்படமாட்டாள். தனக்கு வேண்டுமென சேர்த்துவைத்துக்கொள்ள மாட்டாள்.

கதைகளுக்கென வரும் சன்மானத்தில் பொருட்கள் வாங்கி எங்களுக்கெல்லாம்தான் கொடுப்பாள். தென்னாப்பிரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த பிறகு சிஐடி காலனியில்தான் இருந்தாள். வீட்டில் கார் இருந்தாலும் பெரும்பாலும் ரிக்‌ஷாவில்தான் பயணிப்பாள். தீபாவளி, பொங்கல் என வந்தால் அந்த ஏரியாவில் உள்ள ரிக்‌ஷாக்காரர்களுக்கெல்லாம் பணம், புது டிரஸ் என கொடுப்பாள்.

1987ம் ஆண்டு பொங்கல் 14ந்தேதி வரப்போகிறது என்பதால் ஜனவரி ஏழாம் தேதி அன்று வீட்டில் வேலை செய்பவர்களுக்கு, ரிக்‌ஷாக்காரர்களுக்கு என புது வேட்டி சேலைகள் வாங்கிக்கொண்டு வர கடைக்குப் புறப்பட்டுச் சென்றாள். ஒரு மூட்டை புதுத்துணிகளை வாங்கிக்கொண்டு திரும்பி வரும்போது மாரடைப்பு ஏற்பட்டு ரிக்‌ஷாவிலேயே மரணித்துவிட்டாள்.

அந்த ஏரியாவில் உள்ள அத்தனை ரிக்‌ஷாக்காரர்களும் வந்து அழுதது இன்றும் என் நினைவில் இருக்கிறது. அவள் எழுதிக்கொண்டிருந்த ஒரு தொடர் கதையை அதன் பின் என் தங்கை நித்தியா மூர்த்திதான் எழுதி முடித்தாள். அக்காவின் மகனும் டாக்டர்தான். எனக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டபோது, கூட இருந்து அறுவை சிகிச்சை செய்தான்.

ஆனால் என்ன காரணத்தினாலோ அவனும் அப்பாவைப் போலவே நாற்பதாவது வயதில் மாரடைப்பினால் காலமாகிவிட்டான்” எனும் போது அவர் கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது. “அக்காவின் பேரப்பிள்ளைகள் இப்போது வெளிநாடுகளில் இருக்கிறார்கள். எங்க எல்லாருக்கும் நல்ல வாழ்வு அமைந்ததற்கு காரணம் அக்காதான். அக்காவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டது, பேசியது மனதிற்கு மிகவும் நெகிழ்வாக இருக்கிறது” என்கிறார் ஒரு குழந்தை போல.

ஓவியம் : ஸ்யாம்

சாவித்ரியின் இரண்டாவது மகன் ஸ்ரீதர்

பெரியம்மா எப்பவும் ரொம்ப ரொம்ப சுத்தமாக இருக்கணும்னு நினைப்பாங்க. அநாவசியமாக ஆங்கிலம் பேசுவது பிடிக்காது. தமிழ்ப்பற்று ரொம்ப உடையவர். ‘பவானி’ என்கிற அவரது முதல் நாவலே சினிமாவாக வந்தது. கதை யோசிக்கும் போது பெரியம்மா நடந்து கொண்டே இருப்பார். ‘ஏன் பெரியம்மா நடந்து கொண்டே இருக்கே’ என்று ஒரு தடவைக் கேட்டேன். “ஏழ்மையில் இருந்தபோது கற்பனைத் திறன் கூடுதலாக இருந்ததுடா. வசதி வாய்ப்பு வந்தவுடன் கற்பனை சக்தி குறைஞ்சிடுச்சி. அதான்” என்றார்.

தென்னாப்பிரிக்காவில் மொத்தம் இருபது ஆண்டுகள் இருந்தார். தென்னாப்பிரிக்காவில் இருந்த கடைசி எட்டு ஆண்டு களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ‘இருண்ட காலத்தில் எட்டு ஆண்டுகள்’ என்ற புத்தகமாக எழுதினாங்க. பெரியப்பா ‘கிராபிக்ஸ்’ என்ற பத்திரிகையை தென்னாப்பிரிக்காவில் நடத்தி வந்தார்.

அதில் வந்த நேருவின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக்கி இந்தியா வந்திருந்தபோது இருவரும் டெல்லி சென்று நேருவை நேரில் சந்தித்து அந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுத்தார்கள்.  பெரியப்பா இறந்த பிறகு பெரியம்மா அந்த பத்திரிகையை பார்த்துக்கொண்டார். பத்திலிருந்து ஐந்து மணி வரைதான் வேலை நேரம் என்றால் ஐந்து மணி அடித்தவுடன் ‘டாண்’ என்று வேலையில் இருந்து கிளம்பிவிடும் வெள்ளைக்காரங்களை வைத்து வேலை வாங்கின தமிழச்சி என்ற பெருமைக்குரியவர் அவர்.

வெற்றிகரமாக நடத்தி வந்த தனது பத்திரிகையை நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியா வந்து தன் மகனோடு இருந்தார். தன் கவலைகளைச் சொல்லி கழிவிரக்கம் தேடும் பழக்கம் அவரிடமில்லை.  அவங்களைப் பார்த்து ‘நீங்க கட்டி இருக்கிற புடவை நல்லா இருக்கு’ எனச் சொன்னால் போதும் உடனே உள்ளே போய் வேற புடவை மாற்றிக் கொண்டு வந்து தான் கட்டி இருந்த புடவையை நல்லாருக்கு என சொன்னவரிடம் கொடுத்து விடுவார்.

அவங்களை மாதிரி அடுத்தவங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் குணம் உடையவங்களை நான் பார்த்தது இல்லை. அவரைப் பார்க்கும் போதெல்லாம் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ரஜினி கதாபாத்திரம் தான் எனக்கு நினைவுக்கு வரும். இருக்கும் வரை எல்லாருக்கும் உதவி செய்து கொண்டே இருந்தார். எல்லாருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். ‘இருவர் உள்ளம்’ படம் பெரியம்மா எழுதிய கதை என்பதால் ஹீரோயின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருந்தது.

படம் எடுக்கும்போது இவர்தான் உங்கள் கதையின் நாயகனாக நடிக்கப்போகிறார் என சிவாஜியைக் கூட்டி வந்து பெரியம்மாவிடம் காட்டினார்களாம். அவர் சொல்லக் கேட்டிருக்கேன். ஹிக்கின் பாதம் போனால் ஒரு வரிசை முழுதும் பெரியம்மாவோட புத்தகங்கள் இருக்கும். பெரியம்மா சுயசரிதை எழுதி இருக்கிறார்.

பெரியம்மா இறந்தபோது பத்திரிகைகளுக்குச் செய்தி சொன்னால் யாரும் நம்பவில்லை. நேரில் வந்து பார்த்த பிறகுதான் நம்பினார்கள். மறுநாள் முதல் பக்கத்தில் அவரது இறப்புச் செய்தியை வெளியிட்டிருந்தார்கள். அந்த அளவிற்கு பெரியம்மாவின் மீது எல்லாரும் மரியாதை வைத்திருந்தார்கள்.