நான் வளர்கிறேனே மம்மி!



-இளங்கோ கிருஷ்ணன்

‘பெண் பிள்ளை வளர்ச்சி, புடலைக் கொடி வளர்ச்சி‘ என்பார்கள். கண்மூடி திறப்பதற்குள் வளர்ந்து விடுகிறார்கள் பெண் குழந்தைகள். பூப்பெய்தும் பருவம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியமான காலக்கட்டம். சிறுமியாக ஒரு பட்டுப்பூச்சி போல் கவலையின்றி வட்டமிட்டுக்கொண்டிருந்த குழந்தை, பெரிய மனுஷியாக உருவெடுக்கும் இந்தப் பருவம். கடமைகள், பொறுப்புகள் ஒவ்வொன்றாக தோளில் தாங்கத் தொடங்கும் காலம்.

பூப்பெய்துதல் குறித்து பெண் குழந்தைக்கு இருக்கும் சந்தேகங்கள், அச்சங்கள் இயல்பானவை. அவற்றை நீக்கி அது குறித்த முழுமையான தகவல்களைச் சொல்லி, மனதளவில் அந்தக் குழந்தையைப் பெண்மைக்குத் தயாராக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் முக்கியமான கடமை. பூப்பெய்துதலுக்கு நம் குழந்தையை எப்படித் தயாராக்க வேண்டும்? இதோ மனநல மருத்துவர் குறிஞ்சி தரும் டிப்ஸ்…

“பூப்பெய்துதல் என்பது அனைத்துப் பெண்களுக்கும் ஏற்படும் இயற்கையான உடலியல் மாற்றம். பெண்ணின் உடலில் உள்ள சினைப்பையில் ஈஸ்ட்ரோஜென் உள்ளிட்ட பெண்மைக்கான ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும் பருவத்தையே பூப்பெய்துதல் என்கிறோம். இதனால், கருமுட்டைகள் வளர்ச்சி அடைந்து, இனப்பெருக்கத்துக்குத் தயாராகும்.

சுமார் 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்குப் பிறகு அந்தக் கருமுட்டைகள் முதிர்ச்சியடைந்து வெளி ஏறுவதால் உதிரப்போக்கு ஏற்பட்டு மாதவிலக்கு எனும் உடலியல் நிகழ்வு ஏற்படுகிறது. பூப்பெய்துதல் என்பது சுமார் இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளும் தொடர் நிகழ்வாகும். இப்போது பெண்கள் சுமார் 12 வயதிலேயே பூப்பெய்திவிடுகிறார்கள்.

சிலருக்கு 14-16 வயதிலும் இது நிகழும். இதற்கு மரபியல் உட்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. பூப்பெய்துவதற்கு சில வருடங்களுக்கு முன்பே மார்பு பெருக்கத் தொடங்கும். சிலருக்கு பிறப்பு உறுப்பு, அக்குளில் ரோமங்கள் வளரத் தொடங்கும். எனவே, பூப்பெய்தும் வயதுக்கு கொஞ்சம் முன்பே பெண் குழந்தைகளுக்கு இதைப் பற்றி அறிவுறுத்த வேண்டும். இதனால், தேவை இல்லாத பயம், சந்தேகங்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

சிலருக்கு, மார்புத் தசை மென்மையாக இருக்கும். சிலருக்கு கடினமாக இருக்கும். சிலருக்கு மெலிதான வலிகூட இருக்கும். மேலும் சிலருக்கு ஒரு மார்பு அதிக வளர்ச்சியும் ஒரு மார்பு சற்று வளர்ச்சிக் குறைவாகவும் காணப்படும். இவையாவும் இயல்பான விஷயங்களே எனப் புரிய வைக்க வேண்டும். மாதவிலக்கு சுழற்சி சுமார் 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். பொதுவாக, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் முதல் 14 நாட்கள் வரை இருக்கும்.

ஒருவரின் உடல்வாகு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, மரபியல் போன்ற காரணங்களால் இந்த சுழற்சியில் வேறுபாடுகள் இருக்கும். எனவே, தனது தோழிக்கு இது போன்ற பிரச்னை இல்லையே, நமக்கு மட்டும் வருகிறதே எனக் குழம்ப வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும். சானிட்டரி நாப்கின்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை பெண் குழந்தைகளுக்கு முன்பே கற்றுக்கொடுப்பது நல்லது.

இது, முதல் முறை மாதவிடாய் ஏற்படும்போது அதை எதிர்கொள்வதற்கு உதவியாய் இருக்கும். பள்ளியிலோ வெளியிலோ இருக்கும்போது பூப்பெய்துதல் நிகழ்ந்துவிட்டால், தயங்காமல் ஆசிரியையிடமோ அருகில் உள்ள பெண்களிடமோ சொல்லி உதவி கேட்கலாம், தவறே இல்லை என்பதைக் கட்டாயம் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

முகத்தில் பரு ஏற்படுவது, அதிகமாக வியர்ப்பது, வியர்வை கடினமான வாடையுடன் இருப்பது, குரல் லேசாக மாறுவது, இடுப்பு அகலமாவது ஆகியவை அனைத்துமே பூப்பெய்துதலின் இயல்பான உடல் மாற்றங்கள் என்பதைப் புரியவைக்க வேண்டும். சில பெண் குழந்தைகள் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களால் தடுமாறி, தனிமையைத் தேடுவார்கள்.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பெற்றோர் தோழமையுடன் குழந்தையிடம் நடந்துகொள்ள வேண்டும். அவர் உடல், மனம் சார்ந்த தடுமாற்றங்கள், சந்தேகங்களைப் போக்கி, ஆதரவாக இருக்க வேண்டும். சில பெண் குழந்தைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். சிலர் அதீத முதிர்ச்சியுடன் நடந்துகொள்வார்கள். சிலர் சட்டென அமைதியாகிவிடுவார்கள். சிலர் விளையாட்டுத்தனமாகவே இருப்பார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள் பற்றி புரிந்துகொண்டு, அது குறித்து அறிவுறுத்தலாமே தவிரவும் தேவையற்ற அதிகாரத்தை அவர்கள் மேல் செலுத்தக் கூடாது. இதனால் சிலருக்கு தனிமைப்படுத்தப்படும் உணர்வு உருவாகும். இந்த வயதில் தனக்கென ஒரு தனி அடையாளமும் கருத்தும் உண்டு என்ற எண்ணம் மேலோங்கும்.

சாதாரணமாக ஐஸ்கிரீம் தேர்வு செய்வதில் தொடங்கி, முக்கியமான விஷயங்கள் வரை ஒவ்வொன்றிலும் தனக்கென தனித் தேர்வும், கருத்தும் இருப்பதாகக் கருதுவார்கள். அவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டியது அவசியம். சிறிய விஷயங்களில் அவர்களின் தேர்வுக்கு மதிப்பளிக்கலாம். மாற்றுக்கருத்து இருந்தால் நட்பாய் பேசி புரியவைக்கலாம்.

முக்கியமான விஷயங்களில் அவர்களின் கருத்துகள் எப்படி உள்ளன என்பதைக் கவனித்து, அதே சமயம், சமூகத்தின் பார்வையில் அந்த விஷயம் எப்படி உள்ளது என்பதையும் புரியவைக்க வேண்டும். எதிர்பாலினத்தவரின் மேல் ஒருவித ஈர்ப்பு இந்த வயதில் ஏற்படும். இது இயல்பே. ஆனால் அவற்றை எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும் உணர்ச்சிவயப்பட்டநிலையில் விஷயங்களைக் கையாளும் பருவம் இது என்பதால் விளைவுகள் அறியாமல் செயல்படுவார்கள்.

அன்போடும், கண்டிப்போடும், நட்போடும் விஷயங்களை அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்துவதற்கு இரண்டு வருடங்களுக்கு உள்ளாகத்தான் அவர்கள் உடல் தீவிரமான வளர்ச்சி அடைகிறது (Peak Height Velocity). பொதுவாக, பூப்பெய்தியதற்குப் பிறகு பெண்களின் உயரம் அதிகரிப்பது குறைவு. எனவே, இந்தக் காலகட்டத்தில் உடலுக்கு வலுவூட்டும் உணவுகள் உண்பது அவசியம்.

உடலின் அத்தியாவசிய தேவைகளான கார்போஹைட்ரேட்; கொழுப்புச்சத்து; ஏ, சி, இ, டி,கே மற்றும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்; நார்ச்சத்து; நீர்ச்சத்து; இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைந்த உணவு களான அரிசி, இறைச்சி, முட்டை, பால், சிறுதானியங்கள், அனைத்துவண்ண காய்கறிகள், கீரைகள், பழங்கள் என ஆரோக்கியமான உணவுகளை தர வேண்டும்.

ஜங்க்ஃபுட்ஸ், கார்போரேட்டட் பானங்கள், சாக்லெட், செயற்கையான பழரச பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவை ஹார்மோன் சுரப்பை பாதிக்கும் என்பதால் இவற்றை இந்த வயதில் தவிர்ப்பது நல்லது. உடலின் தசை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி சீராக இருக்க வேண்டியது அவசியம். எனவே, நீச்சல், சைக்கிளிங், ஏரோபிக்ஸ், நடனம் போன்ற உடல் உழைப்பு நிறைந்த பணிகளில் தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஈடுபடலாம்.

உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டையுமே கண்காணிக்க வேண்டிய முக்கியமான பருவம் இது. எனவே, அவர்களின் சின்னச் சின்ன பிரச்னைகளையும் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவசியம் எனில் அவர்களுக்கு பூப்பெய்துதல் தொடர்பாக மனநல ஆலோசகரின் கவுன்சலிங் ஒன்றையும் தரலாம்.