ஆரோக்கியம் தரும் மண் பானை சமையல்



-ஜெ.சதீஷ்

உணவு பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. அனைவருமே தங்களுடைய ஆரோக்கியம் பற்றிய விஷயத்தில் கவனமாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடையே வரத் தொடங்கியுள்ளது. ஆகவேதான் ஆர்கானிக் பொருட்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் தயாரிக்கப்படுகின்ற உணவின் மூலக்கூறுகளால் மட்டுமே, முழு ஆரோக்கியத்தை பெற முடியாது. உணவு சமைக்கப்படும் பாத்திரம், எரியூட்டப்படும் நெருப்பு ஆகியவையும் முக்கியம்தான் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

“உணவு சமைப்பதற்கு மண் பாத்திரமே மிகச்சிறந்தது. மண்பானை பாத்திரம் என்பது மரபு மட்டும் அல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரித்து தரக்கூடியது. மண் பானை பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில் ஜீரணம் ஆகும் தன்மை கொண்டது.  இப்போது கிடைக்கக்கூடிய பாத்திரத்தில் உலோகத் தன்மை இருப்பதால் உணவின் தன்மையை மாற்றி விடுகிறது. மண் பானையில் சமைக்கக்கூடிய உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். 

இரும்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்லது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் சில்வர் பாத்திரத்தில் சமைத்த உணவை உண்ணுவது சிறந்தது. ஆனால் இவை அனைத்தும் வியாதி உள்ளவர்களுக்கு சொல்லக்கூடியது. நல்ல பசி, நல்ல தூக்கம், சிக்கல் இல்லாத இயற்கை உபாதை, இவை மூன்றுமே மனிதனுக்கு மூன்று தூண்கள் போன்றது. இவை மூன்றையுமே மண் பானையில் சமைக்கக்கூடிய  உணவு நமக்கு வழங்குகிறது. மண் பானை ஒரு குளிர் பதன பொருளாகவும் பயன்படுகிறது.

சென்னை போன்ற இடங்களில் விறகு அடுப்பு பயன்படுத்த முடியாது. ஆனால் மண் பானையை பயன்படுத்த முடியும். அறுசுவையான உணவும் ஆரோக்கியமான உணவும் கிடைக்க வேண்டுமென்றால் மண் பானையில் சமைத்து சாப்பிடுவதே சிறந்தது. மண்பானை உணவு ரத்தக் குழாய்களை சீராக்குகிறது, ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகரிக்கிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்குகிறது.

உடல் சூட்டை தணிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் எதிர் கொள்ள வேண்டி நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக இருப்பதே புத்திசாலித்தனம். இயற்கை உணவுகள் எப்பொழுதுமே நல்ல எதிர்ப்பு சக்தியை கொடுக்க வல்லது. அவற்றை முறையாக சமைத்து உண்ணும் போதுதான் அதனுடைய முழு சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும்” என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.