உண்மையின் குரல்



- கவின் மலர்

நேஹா தீக்ஷித்  இந்தியாவின் மிகச் சிறந்த பத்திரிகையாளர்களும் ஒருவர். அண்மையில் 2016 -17ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் பத்திரிகையாளருக்கான சாம்லி தேவி விருதைப் பெற்றிருக்கிறார். இந்த விருது கடந்த 37 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. பெண் பத்திரிகையாளர்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் மிகப் பழமையான விருதும் இதுவே.

நேஹா தீக்ஷித் தன் சிறந்த கட்டுரைகளுக்காக அறியப்படும் பத்திரிகையாளர். ஆங்கிலத்தில் எழுதுபவர். அவுட்லுக், கேரவான், ஹிமால் ஸ்க்ரோல், வயர், அல் அசீரா, நியூயார்க் டைம்ஸ், ஃபாரின் பாலிஸி, டெஹல்கா போன்ற பல ஊடகங்களில் எழுதக்கூடிய சுதந்திர பத்திரிகையாளர் எனப்படும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக இருக்கிறார். இவருடைய எழுத்துகள் எப்போதும் ஆளும் வர்க்கத்தையும் சமூக விரோதிகளையும் கேள்வி கேட்பவை.

பாஜக, சங் பரிவாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு இவருடைய கட்டுரைகள் கிலியை ஏற்படுத்தியவை. அஸ்ஸாமைச் சேர்ந்த பழங்குடியின சிறுமிகள் 31 பேரை ‘இந்துமயமாக்குவதற்காக’ குஜராத்துக்கு கடத்திச் சென்ற சங் பரிவாரம் எப்படியெல்லாம் குழந்தைகள் உரிமையை காலில் போட்டு மிதித்தது என்பதை அம்பலப்படுத்தும் கட்டுரையை அவுட்லுக் பத்திரிகையில் எழுதினார். இந்தக் கட்டுரைக்காகவே சாம்லி தேவி விருது நேஹாவுக்கு வழங்கப்பட்டது.

இவர் மீது காவல்துறையில் இந்தக் கட்டுரைக்காக பாஜக புகார் அளித்ததோடு நில்லாமல் தன் ஆபாச வசவுகளால் அவரை இணையத்தில் திட்டித் தீர்த்தாலும் நேஹா எதற்கும் அஞ்சாமல் சளைக்காமல் தன் பணியினைத் தொடர்கிறார். விருது வழங்கும் விழாவில் தன்னுடைய ஏற்புரையில் நேஹா இப்படிக் குறிப்பிட்டார்: “உண்மையைச் சொல்லும் எந்த பத்திரிகையாளருக்கும், எழுத்தாளருக்கும், கலைஞருக்கும், அவர்கள் பெண்ணாக இருந்தால் இணைய தாக்குதல்கள் வராமல் இருப்பதில்லை.

முன்பெல்லாம் சட்டரீதியான நடவடிக்கை என்றிருந்த நிலை மாறி இப்போதெல்லாம் இணையத்தில் அவதூறு செய்வது, தாக்கப்படுவது என்று நிலைமை ஆகிவிட்டிருக்கிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்வது நின்றுபோய் ஆபாசமாகப் பேசுவது, வதந்தி பரப்புவது என்றாகி இருக்கிறது. நான் உட்பட பல பெண் பத்திரிகையாளர்களுக்கு இவ்வாறு நடந்திருக்கிறது”.

தனக்குக் கிடைத்த விருதை தன் முன்னோடிகளான மூத்த பெண் பத்திரிகையாளர்களுக்கு அர்ப்பணித்திருக்கும் நேஹா தீக்ஷித் போன்ற துணிவான பத்திரிகையாளர்கள்தான் இப்போதைய காலகட்டத்தின் தேவை. உண்மையின் குரல்வளையை அவ்வளவு சீக்கிரம் நெரித்துவிட முடியாதென்பதற்கு நேஹா தீக்ஷித் சாட்சியாய் நம்முன் இருக்கிறார்.