ஆட்டக்கலைகளும் உடல் வலிமையும்



-ஜெ.சதீ்ஷ்

பாரம்பரிய விளையாட்டுகளும், பாரம்பரிய கலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு அதை நினைவுபடுத்த வேண்டும். இன்றைய இளைய சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாட்டுப்புறக் கலைஞர்களும், கலை ஆர்வலர்களும் முயன்று வருகிறார்கள். பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்களுக்கு கலை மற்றும் விளையாட்டுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணித்து வருகிறார் நாட்டுப்புறக் கலை பயிற்சியாளர் கிராமிய முரளி. பெண்களுக்கும் நாட்டுப்புறக் கலைகளுக்கும் பெரும் தொடர்பு உண்டு. அவை பெண்களின் உடல் வலிமை, மன வலிமை ஆகியவற்றுக்கு உந்துதலாய் இருப்பதாகக் கூறுகிறார் முரளி.

‘‘நாட்டுப்புறக் கலைகள் பெரும்பாலும் பெண்களால் ஆடப்பட்டவையே. பாரம்பரிய விளையாட்டுகள் பெண்களுக்கு மன உறுதியையும், உடல் பலத்தையும் தந்தன. இன்று ஆண், பெண் இருபாலரும் இயந்திரங்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்’’ என பேசத் துவங்கினார் முரளி. ‘‘அன்றைய காலகட்டத்தில் பெண்கள் 5 முதல் 8 குழந்தைகளுக்கும் மேல் பெற்றெடுக்கும் அளவிற்கு உடல் தகுதி பெற்றிருந்தனர்.

ஆனால் தற்போது ஒரு குழந்தை பெற்றெடுப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம் பாரம்பரிய உணவையும், பாரம்பரிய விளையாட்டுகளையும் பெண்கள் மறந்ததுதான்” என்கிறார். ‘‘தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள், தமிழர்களின் பொழுதுபோக்கு அனைத்தும் விளையாட்டோடு தொடர்புடையதாக இருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டு இன்றளவும் ஆடப்படுகின்ற கரகாட்டம், பெண்களுக்கே உரித்தான நடனமாக இருந்துள்ளது. வயக்காடு வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள், உடல் சோர்வை போக்க யதார்த்தமாக பாடப்பட்ட பாடல்களும், ஆடப்பட்ட நடனங்களும் நாட்டுப்புறக் கலையாய் மாறியது’’ என்கிறார் முரளி. முரளி தமிழக அரசு இசைக்கல்லூரியில் நாட்டுப்புறக் கலைமணி பட்டயப் படிப்பை முடித்தவர். ‘‘தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், களியலாட்டம், செடிக் குச்சாட்டம், கனியன் கூத்து, கும்மி.

நாட்டுப்பாட்டு, பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற அனைத்து நாட்டுப்புறக் கலைகளையும் முறையாகக் கற்று அதனை ஆய்வு செய்தபோது, இவை அனைத்துமே பெண்களால் நிகழ்த்தப்பட்டவை எனவும் காலப்போக்கில் ஆண்களும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார்கள் என்பதும் தெரிய வந்தது. அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்வது கூட ஒரு கலையாகவே இருந்துள்ளது. அதை கிழவி ஆட்டம் என்று கூறுவார்கள். இதைத்தான் இன்று தமிழக அரசு அனைத்து பாட சாலைகளிலும் ‘கற்றலின் இனிமை’ என்ற திட்டமாக கொண்டுவந்துள்ளது.

பெண்கள் தங்களுடைய  வாழ்க்கையில் ஏற்படுகின்ற சிக்கல்களிலிருந்து எப்படி வெளியே வரவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக பின்னல் கோலாட்டம் ஆடப்பட்டது. ‘பெண் கைபட்ட இடமெல்லாம் பொன்னாகும்’. அதனால்தான் வயல்களில் பெண்கள் நாற்று நடுவார்கள்’ என்று நான் ஆய்வுக்கு சுற்றுப்பயணம் சென்ற கிராமத்தில் பாட்டி ஒருவர் கூறினார். தண்ணீர் இல்லாத காலத்தில் பயிர்களை பாதுகாக்க, நவதானியங்கள் வைத்து முளைப்பாரி ஏந்தும் நிகழ்வு நடந்துள்ளது.

இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்களால் நடத்தக்கூடிய ஒன்று. இக்கலை கும்மி என்று அழைக்கப்பட்டது. குடும்ப நிகழ்ச்சிகளிலும் கும்மி இடம்பெற்றிருந்தது. சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் குடக்கூத்து என்கிற கலை கரகாட்டத்தையே குறிக்கிறது. மனதை ஒரு நிலைப்படுத்தி முழு கவனத்தையும் ஒரு புள்ளியில் வைத்து ஆடக்கூடிய கலை இது. இக்கலையை ஆடக்கூடிய பெண்கள் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுப்பெற்று இருந்தார்கள்.

பெண்களின் கர்ப்பக் காலத்திலும் கூட கரகாட்டம் ஒரு சிறந்த உடற்பயிற்சியாக இருந்துள்ளது. நாட்டுப்புறக் கலைகளில் பெரும்பாலும் பெண்கள்தான் பெரும் பங்கு வகித்து வந்திருக்கிறார்கள். ஆனால் நாகரிக வளர்ச்சி காரணமாக பாரம்பரிய கலைகளை மறந்து கொண்டிருக்கிறது இந்த  சமுதாயம்’’ என்று கூறிய முரளி பாரம்பரிய  விளையாட்டுகளையும் விளக்கினார். ‘‘பல்லாங்குழி விளையாட்டு பொதுவாக பெண்கள் மட்டுமே  விளையாடுகிறார்கள்.

இதில் கணக்கு மட்டுமில்லாமல் கொடுத்து உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தையும் கற்றுக்கொண்டனர் பெண்கள். ஏற்ற இறக்கம் கொண்டது வாழ்க்கை அதை எப்படி வெல்வது என்பதை உணர்த்தியது பரமபதம் விளையாட்டு. வாழ்க்கை சமமாக இல்லாதபோதும் கூட சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கைைய பெண்களுக்கு தந்தது நொண்டி விளையாட்டு. ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான பொறுமையையும், தானே ஒளிந்து மகிழும் பெருமையையும் பெற்றுத்தந்தது கண்ணாமூச்சி விளையாட்டு.

வீழ்த்தப்பட்டாலும் மீண்டெழுவது குறித்து பாடமெடுக்கும் விளையாட்டு தாயம். இப்படி வாழ்வியலோடு தொடர்பு கொண்ட கலைகளையும், விளையாட்டையும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்லும் பணியில் பல்வேறு கலைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்கள். அதன் அடிப்படையிலே கல்லூரி, பள்ளிகள் என மாணவர்களுக்கு நாட்டுப்புறக் கலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அதுமட்டுமல்லாமல் கலை நிகழ்ச்சிகளை நடத்தி கலைஞர்களை உருவாக்கி வருகிறேன். அரசு கிராமியக் கலைகளை பாடத்திட்டமாக கொண்டுவருமேயானால் அதுதான் கிராமியக் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்’’ என்கிறார் கிராமிய முரளி.

படம்: ஏ.டி.தமிழ்வாணன்