இந்தியாவின் ஒரே பெண் ஜாக்கி



-ஸ்ரீதேவிமோகன்

தடையை உடைக்காமல் எந்த வெற்றியும் இல்லை. முட்டி மோதாமல் முன்னேற்றமுமில்லை. குறிப்பாக பெண்களுக்கு. அதிலும் ஆண்கள் மட்டுமே நிறைந்த ஒரு துறையில் ஒரே பெண்ணாக பல காலம் நீடிப்பது என்பது அசாதாரணமான விஷயம். அப்படிப்பட்ட குதிரைப்பந்தயத் துறையில் இந்திய அளவில் ஒரே பெண் தொழில் முறை நடத்துனராக (ஜாக்கி) தடம் பதித்திருக்கிறார் ரூபா சிங். சர்வதேச அளவிலும் முதலிடம் பிடித்திருக்கும் சென்னையைச் சேர்ந்த ரூபாவின் பூர்வீகம் ராஜஸ்தான். தன் வெற்றிப்பாதையின் தடைகளையும் அதில் அடைந்த உயரங்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ரூபா.

“குதிரை எனக்குப் புதிதல்ல. எனது தாத்தா உகம் சிங் ராத்தோட் பிரிட்டிஷ்காரர்களுக்கு பாடிகார்டாக இருந்ததோடு அவர்களின் போர்க்குதிரைகளுக்குப் பயிற்சி அளிப்பவராக இருந்திருக்கிறார். அதற்குப்பின் தனியாரின் (ப்ரைவேட் ஸ்டேபிள்) குதிரைகளுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். கேர் டேக்கராக இருந்திருக்கிறார். என் அப்பா நர்பத் சிங்கும் குதிரைகளின் பயிற்சியாளராக இருந்தார்.

அதனால் நாங்கள் அங்கு தங்கி இருந்தோம். எனவே நான் சிறு வயதில் இருந்தே குதிரைகளோடு பழகி இருக்கிறேன். 4,5 வயது இருக்கும் போதே தினமும் தாத்தாவுடன் குதிரை சவாரி செய்வேன். அதற்குப் பிறகு நானே குதிரை ஏறக் கற்றுக்கொண்டேன். நானே தனியாக சவாரி செய்ய ஆரம்பித்தேன். ஏழு, எட்டு வயதில் இருந்து குதிரைக் கண்காட்சிகளுக்கு எங்களது குதிரைகளை அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன்.

அங்கே ஜம்பிங், ஹார்ஸ் பால் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். அங்கும் பெண்கள் என்று பார்த்தால் பெரும்பாலும் நான் மட்டும்தான் இருப்பேன். அதில் நிறையப் பரிசுகளை வென்றிருக்கிறேன். 13 வயது வரைக்கும் அந்த கண்காட்சிகளுக்கு சென்று கொண்டிருந்தேன்” என்று சொல்லும் ரூபா படிப்பிலும் கிங் தான். எம்.ஏ.,எம்ஃபில்.,எம்பிஏ (ஹெச் ஆர்) படித்திருக்கிறார். இருந்தாலும் குதிரைப்பந்தயத்தின் மீது இருந்த தீராத ஆர்வத்தால் இதில் நுழைந்து இன்று உலகம் போற்றும் பெண்ணாகி இருக்கிறார்.

“அப்பா ஜாக்கியாகவும் இருந்திருக்கிறார். அதற்குப்பிறகு அண்ணா ரவீந்தர் சிங் ஜாக்கியானார். எனக்கு இரு அக்காக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதில் ஈடுபாடு இல்லை. ஆனால் எனக்கு ஜாக்கி ஆவதில் விருப்பம் இருந்தது. அப்பாவுக்கும் என்னை ஜாக்கி ஆக்கி பார்ப்பதில் ஆர்வம் இருந்தது. ஆண்கள் மட்டுமே கோலோச்சும் இந்த உலகில் தன் மகள் சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்தார். வெளிநாடுகளில் நிறைய பெண் ஜாக்கிகள் இருந்தாலும் இந்தியாவில் பெண் ஜாக்கி யாரும் அப்போது இல்லை.

இது ஆண்கள் உலகம், ரிஸ்கியான உலகம் என்பதால் பெண்கள் அவ்வளவாக முன் வருவதில்லை. முதன் முதலில் இந்தியாவில் இருந்த பெண் ஜாக்கி இத்தாலி நாட்டைச் சேர்ந்த சில்வா ஸ்டோர்தான் (இவர் பெங்களூரில் செட்டில் ஆகி இருந்தார்). அதனால் அப்பா என்னை இந்தியாவின் பெண் ஜாக்கி ஆக்கி, ஒரு ரெக்கார்டு படைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அதற்கான திறமை, அதாவது குதிரைகளை தள்ளுவது (புல்லிங்), கன்ட்ரோல் செய்வது போன்ற விஷயங்களில் நான் முழுமையாக வேண்டும் என்று நினைத்த அப்பா எனக்கு பதினேழு வயதில் இருந்து மிகத் தீவிரமாகப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.

எனக்குச் சிறுவயதில் இருந்து குதிரை களுடன் பழக்கம் இருந்ததால் குதிரைகளை பார்த்து எனக்கு பயம் இல்லை. அதனால் ஜாக்கியாக என்னைப் பழக்கிக்கொள்வது எனக்கு அத்தனை கடினமாக இல்லைதான் என்றாலும் அத்தனை சுலபமானதாகவும் இல்லை. அப்பா ஒரு கண்டிப்பான வாத்தியாராக இருந்தார். எனக்குக் குதிரைகளை விட அப்பாவிடம்தான் பயம் அதிகமாக இருக்கும். அப்பா திட்டுவார் என ஒவ்வொன்றையும் வேகமாகக் கற்றுக்கொண்டேன். அதனால் இந்த சாதனையை என்னால் செய்ய முடிந்ததோ என்னவோ.

பிறகு பத்தொன்பதாவது வயதில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் ஒரு பயிற்சியாளரிடம் ஒரு வருடமாக பயிற்சி எடுத்த பின் குதிரைப் பந்தய நடத்துனராக லைெசன்ஸ் பெற்றேன். அதன் பிறகு போட்டிகளில் கலந்து கொள்ள நினைத்தபோது, அம்மாவுக்கு லேசாக பயம் இருந்தது. ஆனாலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனக்கு வீட்டில் ஒத்துழைப்பு கிடைத்தது. ஆனால் ரேஸ் உலகில் சரியான ஆதரவு கிடைக்கவில்லை” என்கிற ரூபாவிற்கு இந்த உயரம் அத்தனை எளிதில் கிடைத்துவிடவில்லைதான்.

இந்தத் துறையில் அவரது ஆரம்ப காலம் கொஞ்சம் கடுமையாகதான் இருந்திருக்கின்றன. “நான் சேர்ந்தபோது ‘பொண்ணுங்களுக்கு இங்க என்ன வேலை’ என நினைத்தார்கள். நான் வந்தது நிறைய பேருக்குப் பிடிக்காமல் கூட இருந்தது. எந்த ஒரு பயிற்சியாளரும் குதிரைகளின் உரிமையாளரும் ஒரு பெண்ணை ஜாக்கியாக வைக்க முன் வரமாட்டார்கள். அதற்கு தகுந்த உடல் வலிமை பெண்களிடம் இருக்காது என்று அவர்கள் நினைப்பதுதான் காரணம். ஆண்களே அவஸ்தைப்படும்போது பெண்களை போட்டு ரிஸ்க் எடுக்கவேண்டுமா என்று நினைப்பார்கள்.

அதனால் முதல் பந்தயத்தில் எனக்கு ஒரு சுமாரான குதிரையைத்தான் கொடுத்தார்கள். முதல் பந்தயம் 2002 மார்ச்சில் நடைபெற்றது. அதில் 18 குதிரைகள் கலந்து கொண்டன. அதில் எனது குதிரை நான்காவதாக வந்தது. சுமாரான குதிரையிலே இந்தப் பெண் இப்படி நான்காவதாக வந்திருக்காங்க என்று என் மீது அவர்களுக்கு நம்பிக்கை வந்தது. என் முதல் குதிரையின் பெயர் ‘பவர் பாயின்ட்’. இந்தத் தொழிலில் வெற்றிபெற உடல் வலிமை முக்கியம்தான். என்றாலும் அதைக் காட்டிலும் மிக முக்கியம் மன வலிமையும், குதிரைகளை கையாளும் திறமையும்தான் என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

மனிதர்களைப் போல குதிரைகளுக்கும் ஒவ்வொருவிதமான மனோபாவம் இருக்கும். ஒன்று ஒரேடியாக வேகமாக ஓடும். ஒன்று படிப்படியாக வேகத்தை அதிகரிக்கும். இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். ஒரு குதிரை நீண்ட தூரப் பந்தயத்தில் நன்றாக ஓடும். ஒரு சில குதிரைகள் குறைந்த தூரப் பந்தயத்தில் நன்றாக ஓடும். இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டதில் நான் அடைந்த வெற்றிகள் பெண் என தாழ்வாக நினைத்தவர்களிடம் எனக்கு நற்பெயரைக் கொடுத்தன.

அதற்குப்பிறகு மேலும் மேலும் பயிற்சிகள் செய்து என்னை இந்த வேலையில் வலிமைப்படுத்திக்கொண்டேன். நான் இந்தத் துறைக்கு வரும் முன்னர் இந்தியாவைச் சேர்ந்த ஹேமா இந்து என்பவர் ஜாக்கியாக இருந்தார். என்ன காரணம் என்று தெரியவில்லை இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்தத் தொழிலை விட்டு போய்விட்டார். சில்வாவும் ஓரிரு வருடங்களில் தன் கேரியரை முடித்துக்கொண்டார்.
 
நான் இந்த பந்தயக் களத்திற்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்குப் பிறகு பெண் ஜாக்கிகள் யாரும் வரவில்லை. இந்தியாவில் இந்தத் துறையில் இருக்கும் ஒரே பெண் நான்தான். ஓடும் குதிரையில் அமர்ந்து அதனை பேலன்ஸ் செய்வதே அத்தனை கஷ்டம். அதைக் கற்றுக்கொள்ளவே சில ஆண்டுகள் பிடிக்கும். அதில் நம்மை நிரூபிப்பது என்பது அத்தனை சுலபமில்லை. எனது இத்தனை வருட அனுபவத்தில் கிட்டதட்ட 3500க்கும் மேற்பட்ட குதிரைப் பந்தயங்களில் கலந்து கொண்டு 720 போட்டிகளில் முதலாவதாக வந்துள்ளேன்.

650 போட்டிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளேன். தேசிய அளவில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறேன். பல முறை விழுந்து எலும்பு முறிவுகள், காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட இந்த வெற்றிகள் அந்தக் காயத்தை மறக்க வைத்துவிடுகின்றன. வலிகள் இல்லாமல் வெற்றிகள் ஏது?” எனும் ரூபா சிங் சர்வதேச அளவிலும் குதிரைப் பந்தயப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வாங்கி தனது தந்தையின் கனவை நிறைவேற்றி இருக்கிறார்.

“நெதர்லாந்து, அபுதாபி, இலங்கை, போலந்து, ஜெர்மனி போன்ற பல இடங்களில் நடைபெற்ற குதிரைப் பந்தயங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். போலந்தில் முதல் இடத்தையும் ஜெர்மன் மற்றும் இலங்கையில் இரண்டாம் இடத்தையும் பிடித்தேன்” என்பவர் சர்வதேச அளவிலான பெண் ஜாக்கிகளின் தர வரிசைப்பட்டியலில் முதலாம் இடத்தினை பிடித்திருக்கிறார். உலகளவிலான இந்த சாதனை அத்தனை சாதாரணமானதல்ல. அந்த பந்தா எதுவுமில்லாமல் இயல்பாக பேசுகிறார்.

“குதிரைப் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் 60 கிலோவுக்குள் இருக்க வேண்டும். இல்லையென்றால் போட்டியிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். அவர்கள் கேரியரே அவ்வளவு தான். நான் பல வருடமாக இந்த எடைக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன். தற்போது நான் 50 கிலோ எடை இருக்கிறேன். உணவுக்கட்டுப்பாடுகளும், தினமும் மேற்கொள்ளும் பயிற்சிகளும்தான் இதற்குக் காரணம்.

ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து எல்லாருக்கும் தினமும் அதிகாலையில் பயிற்சிகள் இருக்கும்” எனும் ரூபாவிற்கு எதிர்காலத்தில் பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. “எனக்கு இப்படி விருப்பம் இருந்தாலும் பெண்களுக்கு இதில் ஆர்வம் இருக்க வேண்டும். பலருக்கு ஜாக்கி என்றால் என்னவென்றே தெரியவில்லை. ரேடியோ ஜாக்கியா, வீடியோ ஜாக்கியா என்று கேட்பார்கள்.

நல்ல மனதிடத்துடன் இத்துறையில் நுழையும் எண்ணமும் இயல்பான விருப்பமும் உள்ள பெண்களுக்கு பயிற்சி தரவேண்டும். வற்புறுத்தி யாரையும் இதைச் செய்ய வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. இந்தத் துறை என்றில்லை, எந்தத் துறையாக இருந்தாலும் நமக்கு அதில் உண்மையான ஈடுபாடு இருந்தால் எத்தனை தடை வந்தாலும் எத்தனை பெரிய உயரத்தையும் அடைய முடியும். ஆனால் என்ன சோதனை வந்தாலும் நம் கனவை விட்டுக்கொடுக்கக் கூடாது. குடும்பமும் உறுதுணையாக இருந்து விட்டால் சாதனைகளுக்கு அளவில்லை” எனும் ரூபாவிற்கு 34 வயது. திருமணத்திற்குப் பின்னும் இந்த துறையில் சாதிக்கும் இவர் பெண்களுக்கு ஒரு முன்மாதிரிதான்.