விரல் நுனி விபரீதம்



-கே.எஸ்.சுகிதா

‘முளைச்சு மூணு இலை விடலை… இந்த செல்லுல உள்ள எல்லாம் தெரியுது இந்த வாண்டுக்கு’ என்று வீடுகளில் அம்மாக்களும், அப்பாக்களும் தன் பிள்ளையின் தொழில்நுட்ப அறிவைக் கண்டு புளங்காகிதம் அடைவதுண்டு. எனக்கு என்ன தெரியுது, எல்லாம் எம்பையன் தான் ஏதாவது நோண்டியிருப்பான், எம்பொண்ணுதான் ஃப்ரெண்டுக்கு மெசேஜ் அனுப்புவா இப்படி தனக்குத் தெரியவில்லை என்றாலும் தன் பிள்ளைகள் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள் என்று பெருமைக் கொள்ளும் பெற்றோர்களும் உண்டு.

ஆனால் பெருமைக் கொள்வதோடு செல்போன் பயன்பாடு குறிப்பாக ஆன்லைன் பயன்பாட்டில் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டியது... பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்று எந்த புரிதலும் இல்லாமலும் தான் சந்தைகளில் வரும் அனைத்து தொழில் நுட்ப சாதனங்களையும் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நுனிவிரலில் உலகம் என்று ஆனபிறகு நம் பிள்ளைகளை இவை இல்லாமலும் வளர்க்க முடியாது.

அதே நேரத்தில் இணைய சேவையை எப்படிக் கையாள வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. தம் பிள்ளை ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் இணைய சேவையை பயன்படுத்துகிறது, இணையத்தில் கொட்டிக் கிடக்கும் நல்லவை, தீயவை இவற்றில் எது குறித்து தன் பிள்ளை பார்ப்பதற்கும் அறிந்து கொள்ளவும் அதிக ஆர்வமாக இருக்கிறது என்பதை பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

மூன்றில் ஒரு குழந்தை இணைய மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக் கொள்கிறது. நான்கில் ஒரு குழந்தை அதனுடைய 12 வது வயதில்  பாலியல் சார்ந்த ஆபாச வீடியோக்களை இணையத்தில் பார்ப்பதை பழக்கமாகக் கொண்டிருக்கிறது. பெண் குழந்தைகள் இணையத்தில் சமூக வலைத்தளங்களில் முகமறியா நபருடன் நட்பாகி பிறகு பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலான பெண் குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை சமூக விரோதிகள் மார்ஃபிங் செய்து அந்த குழந்தைகள் பிளாக்மெயில் செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

வெர்ச்சுவல் காதல், வெர்ச்சுவல் சாட்டிங் என்ற பெயரில் பதின்வயது குழந்தைகள் இருபாலரும் நேரத்தை அதிகளவில் வீணாக்குவதோடு, பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள். முறையாக பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தாதன் விளைவுகளை பல்வேறு ஆய்வுகள் அதிர்ச்சியோடு பட்டியலிடுகின்றன. பீகார், அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு இணைய சேவை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படுகிறது.

இவை அனைத்தும் கல்வி சார்ந்த கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டாலும் இதனை பள்ளிகளில் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆசிரியர்கள் கவனிப்பது அவசியம். இணைய பயன்பாடு குறித்து விழிப்புணர்வை பள்ளிதோறும் ஏற்படுத்துவதன் மூலமாகவே மாணவர்களை பிரச்சினையில் சிக்காமல் பாதுகாக்க முடியும். இணைய பயன்பாட்டாளர்கள் அதிகரிப்பது போன்றே இணைய குற்றங்களும் அதிகரித்துள்ளன. இணைய குற்றங்கள் அதிகமுள்ள ஆபத்தான 12 நாடுகளில் இந்தியாவும் அடக்கம்.

இன்டர்நெட் மூலமாக குழந்தைகள் மற்றும் பெண்களை மிரட்டும் சைபர் புல்லிங், குழந்தைகள் மற்றும் பெண்களுடைய சமூக வலைத்தளங்களில் இருந்து புகைப்படங்களை திருடி ஆன்லைன் மூலம் அவற்றை  ஏலம் விடுவது, ஆபாச காட்சிகளை குழந்தைகளுக்கு அனுப்புவது, போர்னோ வீடியோக்களில் குழந்தைகள் மற்றும் பெண்களை ஈடுபடுத்துவது, குறப்பிட்ட நபருடைய சமூக வலைத்தள கணக்கை ஹேக் செய்து அதில் சமூக விரோத கருத்துகளை பதிவிடுவது அல்லது காட்சிகளை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல குற்றங்கள் மூலம் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வங்கிக் கணக்குகளை இணையம் மூலமாக அபகரிப்பது, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு உள்ளிட்ட இணைய வழி பொருளாதார குற்றங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன. தேசிய குற்றவியல் புள்ளி விவரத்தில் சைபர் குற்றங்கள் என்றாலே பொருளாதார ரீதியான குற்றங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் ஏமாற்றுகளை சைபர் குற்றங்கள் புள்ளி விவரங்களுக்குள் கொண்டு வருவதே இல்லை.

தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகமும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இணைய வழியில் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் ஏமாற்றப்படுவது குறித்தும் கணக்கில் கொள்வதில்லை. புகார் பதிவுசெய்வதை மட்டும் கணக்கில் கொள்கிறது. இதனால் இணைய வழியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிப்புக்குள்ளாவது கணக்கில் கொள்ளப்படாமல் உள்ளது. 2000த்தில் கொண்டு வரப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டமானது 2008ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.

இதன்பிறகு இணையத் தொடர்பான குற்றங்களை தடுக்க தேசிய இணைய பாதுகாப்பு கொள்கைகள் வகுக்கப்பட்டது. ஆனால் அவை எந்தளவிற்கு செயல்பாட்டில் உள்ளன என்பது கேள்வியாக உள்ளது. அதே ஆண்டு குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க உருவாக்கப்பட்ட தேசிய குழந்தைகளுக்கான கொள்கைகள் சாசனம் குழந்தை உரிமை, பாலின சமத்துவம், அனைத்து குழந்தைகளுக்கான கல்வி இவை குறித்து மட்டும்தான் பேசுகிறது.

அதில் கூட இணையவழிக் குற்றங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு தீர்வு காண்பது குறித்து எதுவும் இல்லை. பெண்களை அநாகரிகமாக காட்டுவதை தடை செய்யும் சட்டத்தை வைத்தே தற்போது பெண்கள் சைபர் குற்றங்களில் பாதிக்கப்படும் போது தண்டனை வழங்கப்படுகிறது. தகவல் தொழில் நுட்பச் சட்டம் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு சட்டமான போக்சோ  சட்டத்தின் மூலமாக இப்போது தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புதல், மற்றும் பெண்களை இழிவாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் அல்லது கேலியாக சித்தரித்தல் உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. ஆகையால் பெண்கள் மற்றும் குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்க தேசிய அளவிலும் மாநில அளவிலும் கொள்கை உருவாக்குவதும், தகுதி வாய்ந்த நிபுணர்களை நியமித்து இணையதளங்களை கண்காணிப்பதும்தான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என்கின்றனர் துறைசார் வல்லுனர்கள்.

தொழில்நுட்பம் சார்ந்து  பிரச்சினைகள் எழும்போது உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண்கள் செல்போன் பயன் படுத்த தடை விதிப்பது, கஃப் பஞ்சாயத்துகளில் பெண்கள் இணையம் பயன்படுத்த கட்டுப்பாடு உள்ளிட்ட நடைமுறைக்கு ஒவ்வாத கட்டுப்பாடுகள் ஒரு போதும் பலனளிக்கப் போவதில்லை. இணையத்தில் அவதூறு பரப்புவதால் உளவியல் சிக்கலுக்கு ஆளாகுவதை கணக்கில் கொள்வதே கிடையாது. புகார் அளித்தாலும் பெரிய அளவில் அவதூறு பரப்பியவர் மீது குற்ற நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இணைய குற்றங்களுக்காக தண்டனைக்குள்ளானவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காவல்துறை இணையவழி குற்றங்கள் தொடர்பாக வரும் புகார்களை மெத்தனமாக கையாள பழகியதன் விளைவுதான் சேலத்தில் வினுப்பிரியா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இருமுறை காவல்நிலையத்தில் வினுப்பிரியாவின் தந்தை தன் மகள் படத்தை முகநூலில் மார்ஃபிங் செய்து யாரோ வெளியிட்டுள்ளனர்;

அதனால் உடனடியாக அதனை நீக்க வேண்டும் என்று புகார் அளித்தும் காவல்துறை மெத்தனமாக செயல்பட்டதும் வெளிநாட்டு சர்வர் மூலம் ஃபேஸ்புக்கில் வினுப்பிரியா படத்தை மார்ஃபிங் செய்து பதிவேற்றி இருக்கிறார்கள். அதனால் கால தாமதமாகும் என்றுதான் காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சொல்லப்போனால் அவருடைய படத்தை அவர்கூட முகநூலில் பதிவிடவில்லை.

வினுப்பிரியாவின் தந்தை தனது வாட்ஸ்அப்பில் புரொபைல் படமாக மகளது படத்தை வைத்துள்ளார். அந்தப் படத்தை காப்பி செய்தே குற்றவாளி பயன்படுத்தி இருக்கிறார். தமிழகத்தில் முற்போக்காக பேசும், எழுதும் பெண்களை குறிவைத்து முகநூலில் அவதூறு பரப்பப்பட்டது. அப்போது அவர்கள் கொடுத்த புகாருக்கு இதுவரை குற்றவாளிகளுக்கு எந்த தண்டனையும் இல்லை. காதலர்களிடையே வரும் பிரச்சினைகளில் காதலை விட்டு வெளியேறும் பெண்களுக்கு, அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், மின்னஞ்சல்களை முகநூலில் பதிவிடுவேன் என்று ஆண்கள் மிரட்டல் விடுப்பது அதிகரிக்கிறது.

இதனை எதிர்கொள்ளத் தெரியாமலும், முகநூலில் மார்ஃபிங் செய்து தன்னுடைய  புகைப்படம் வந்தவுடன் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று எண்ணுவதும்தான் தொடர் தற்கொலைகள் அரங்கேற காரணமாகிறது. இப்படியான பிரச்னையை எதிர்கொண்டு வெளியேறினால் நாளை இது போன்ற பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்போம் என்பதை பெண்கள் உணர வேண்டும். குழந்தைகளிடம் இவ்வாறான புகைப்படங்கள் வெளியாகும் போது உடல் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

இது தன்னுடைய தவறில்லை என்பதையும், இதனை செய்தவரே வெட்கி தலை குனிய வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு புரியவைப்பது அவசியம். இணையதளத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களின் படத்தை தவறாக சித்தரித்து வெளியிடுவதை கண்காணிக்க குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி ‘ஆரம்ப் இந்தியா’ என்ற இணைய ஹாட்லைனை இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் இணைய குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்கள் புதிது புதிதாக வருவதும் அதற்கேற்ப நூதன குற்றங்களும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். ஆனால் முறையான கண்காணிப்பும், தனி நபரின் இணைய பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வும்தான் இணையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

பெற்றோர்கள் கவனத்திற்கு... பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் இணையத்தை பயன்படுத்துவது குறித்து விரிவாக உரையாட வேண்டும். உதாரணத்திற்கு ‘‘இன்னைக்கு நீ என்ன இன்டர்நெட்ல பார்த்த” என்று தினமும் கேட்கும் போது இணையத்தில் குழந்தையின் தேடல் எதை நோக்கி என்பது புலப்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இணையதளத்தின் தேவை அதிகரித்திருக்கிறது. குழந்தைகள் தங்கள் பாடம் சார்ந்த விளக்கங்களை பெற இணையத்தை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் சமூக வலைத்தளங்களை உங்கள் குழந்தைகள் பயன்படுத்துவதை  எந்த வயதில் அனுமதிக்க போகிறீர்கள் என்பதை பெற்றோர்களின் முடிவை பொறுத்தே அமையும். எவ்வளவு நேரம் உங்கள் குழந்தை இணையத்தை பயன்படுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இவ்வளவு மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பார்க்க வேண்டும் என்று வரையறுக்கலாம். அனைத்து Appகளையும் டவுன்லோட் செய்வதை அனுமதிக்காதீர்கள்.

இ.வேலட் போன்று மின்னணு அல்லது இணைய பணப்பரிமாற்றம் நீங்கள் செய்யும் போது one time passwordஐ பயன்படுத்துவது நல்லது. நிரந்தர பாஸ்வேர்டு ஆபத்தானது. அது மட்டுமல்லாது உங்கள் குழந்தை ஆன்லைனில் ஷாப்பிங் மற்றும் கேம்ஸ் போன்றவற்றை காசு கொடுத்து வாங்க அது வழி வகுக்கும். ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு எக்காரணம் கொண்டும் உங்கள் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.

உங்கள் வீட்டு கம்ப்யூட்டர், டேப்லெட், செல்போன் அனைத்திலும் வன்முறையைத் தூண்டக் கூடிய அல்லது பாலியல் சார்ந்த ஆபாச தளங்களை முடக்கி வைக்கலாம். பிளாக் செய்து வைக்கலாம். வீட்டில் குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும்போது தனி அறையில் இல்லாமல் அனைவரும் இருக்குமிடமாக அல்லது நடுக் கூடத்தில் வைத்து பயன்படுத்துவது நல்லது. பெரும்பாலும் குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும்போது கூடவே பெற்றோரும் நட்புடன் இணைந்து பயன்படுத்தும் அளவிற்கான பழக்கத்தை குடும்பத்தில் இளம் தலைமுறை பெற்றோர் கடைப்பிடிப்பதில் சிக்கல் இல்லை.

குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் ஆபத்தில் சிக்கும்போது உடனடியாக பெற்றோரிடம் அதனை தெரிவிக்கும் வண்ணம் குழந்தைகளின் நம்பிக்கைக்குரியவர்களாக எது தொடர்பானதையும் பிள்ளைகள் மனம்விட்டு பெற்றோரிடம் பேசலாம் என்ற நம்பிக்கையை விதைப்பது அவசியம். உங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை  சமூக வலைத்தளங்களிலோ அல்லது இணையதளத்திலோ தவறாக பயன்படுத்தினால் உடனடியாக அந்த தளத்தை ஸ்கிரின்ஷாட் எடுங்கள். குறைந்தது அந்த இணையதளத்தை புகைப்படமாவது எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புகார் கொடுக்க உதவும்.

இரவு 9 மணிக்கு மேல் வீட்டில் வைஃப்பை பயன்படுத்துவதை பெரியோர்கள் தவிர்த்துவிட்டு குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பேசுவதை வழக்கமாக கொள்வது நல்லது. தாங்கள் இணையத்தில் பார்த்த, படித்த விஷயங்களை அவ்வப்போது பரிமாறிக்கொள்வதும் சிறப்பு.

குழந்தைகள் கவனத்திற்கு...

* இமெயில், பேஸ்புக், ட்விட்டர் என்று உங்கள் இணையதளத்தின் அனைத்து கணக்குகளுக்கும் வைக்கும் பாஸ்வேர்டை யாருக்கும் பகிராதீர்கள்.
* பாஸ்வேர்டில் எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் (@) போன்றவற்றை சேர்ப்பது நலம். பாஸ்வேர்டுகள் திருடப்படாமல் பாதுகாக்க இது உதவும்.
* தனக்கும் தன் குடும்பத்தினர் மட்டும் அறியக்கூடிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.   
* இணையத்தில் அவ்வப்போது உங்களது சொந்த தகவல்களை கேட்கும் தளங்களுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது.
* உங்கள் சமூக வலைத்தளங்களில் allow, ok போன்று பட்டன்களை கிளிக் செய்வதற்கு முன்னால் எதற்காக உங்களிடம் அனுமதி கோருகிறார்கள் என்பதை அறிந்த பிறகே கிளிக் செய்யுங்கள்.
* உங்கள் பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தவர்களின் பெயர்களை பாஸ்வேர்டாக வைக்காதீர்கள். எளிதில் உங்களது பாஸ்வேர்டை எதிரிகள் கண்டுபிடித்து விடுவார்கள்.
* புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் போது கூடுதல் கவனம் தேவை.
* தாங்கள் செல்லும் இடங்களை உடனுக்குடன் பதிவிடுவதும் ஆபத்துதான். சொந்தக் கருத்துகளை பதிவிடும் போது அதிக கவனம் தேவை. உங்களுக்கு வந்த தகவலையும் அப்படியே பகிராமல்  அதன் உண்மைத் தன்மை உணர்ந்து ஆராய்ந்து பிறகு பகிருங்கள்.

* இந்தியாவில் இணையம் பயன்படுத்தும் 35 கோடி பேரில் 94% பேர் மொபைல் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துகிறார்கள்.
* இதில் 2.8 கோடி  பள்ளி செல்லும் குழந்தைகள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்கிறது இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் சங்கம்.
* கிராமப்புறங்களில் பெண்கள் 10% இன்டர்நெட் சேவையை பயன்படுத்து கிறார்கள். நகர்புற பெண்களில் மூன்றில் ஒரு பெண் இணைய சேவையை பயன் படுத்துகிறார்கள்.

பிப்ரவரி 7ம் தேதி உலகளவில் சர்வதேச இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இணைய பயன்பாட்டின்போது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த safetyinternetday2017# என்ற பெயரில் கனடா, அமெரிக்கா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இணையதளத்தில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 73% பேர் குழந்தைகள் இணையத்தை பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு தேவை என வாக்களித்துள்ளனர்.

74% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு இணைய பயன்பாடு அவசியம் என்று வாக்களித்துள்ளார்கள். 21% பெற்றோர்கள் இணைய மோசடிக்காரர்களால் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். பாலியல் தொல்லைகள் பெண் குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகம் இருப்பதாக 20% பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 19% ஆபாச காட்சிகள் அடங்கிய போர்னோ தளங்கள் குழந்தைகள் கவனத்தை சிதறடிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். அதனால் போர்னோ தளங்களை முடக்க
அரசு தரப்பிலே முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்துள்ளனர்.