கருகிய இளந்தளிர்



-மகேஸ்வரி

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது ஒரு பயங்கரம். பிப்ரவரி 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க அரசியல் மல்லுக்கட்டு நடந்த மாலை நேரத்தில், செய்திகளும், விவாதங்களும் அனல் பறக்க தொலைக்காட்சிகளில் நிகழ்ந்த வேளையில், சமூக வலைத்தளங்களில் மெல்ல பரவிக் கொண்டிருந்தது சிறுமியைக் காணவில்லை என்ற செய்தி. தொலைபேசி எண்ணுடன் ஒரு பெண் குழந்தையின் புகைப்படம் அதில் இருந்தது.

புகைப்படங்களுடன் இப்படி வரும் ஒரு சில செய்திகள், சில நேரங்களில் பழைய சம்பவமாகக் கூட இருக்கலாம் என்ற எண்ணத்திலே சிலர் அந்த செய்தியினைக் கடந்திருக்கக் கூடும். ஆனால் நேரம் செல்லச் செல்ல விஷயம் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியது. என்ன நடந்தது என்பதை நம்மிடம் வேதனை கலந்த உணர்வுகளுடன் விவரித்தார், சிறுமி ஹாசினியின்  வீட்டுக்கு அருகில் குடியிருப்பவரான ஸபி.

‘‘கடந்த 5ம் தேதி மாலை சரியாக 6 மணி வாக்கில், குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில், வீட்டிற்கு அருகிலேயே பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள் 7 வயது சிறுமி ஹாசினி. 6.10 மணிக்கு ஹாசினியின் பெற்றோர் பாபு-ஸ்ரீதேவி தம்பதி இளைய மகனை மட்டும் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டு 20 நிமிடங்களில் திரும்பி வந்து ஹாசினியை தேடியபோது அவளை காணவில்லை.

அக்கம் பக்கம் தேடியும் பயனில்லை. பக்கத்து வீடு, உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர், மாங்காடு காவல்நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குடியிருப்பில்  பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், வெளியில் விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி கடைசியாக அபார்ட்மென்ட்டுக்குள் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது்.

சிறுமியை யாரும் அழைத்து செல்வது போல காட்சிகள்  எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து அருகில் இருந்த கிணறு, கால்வாய், நீர்  தேக்கத் தொட்டி உள்ளிட்ட இடங்களில் தேடியும் பலனில்லை. இதற்கிடையே சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆராய்ந்தபோது, அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் (23) டிராவல் பேக் ஒன்றை வீட்டிலிருந்து எடுத்துச்செல்வதும், பின்னர் ஒரு மணி நேரத்தில் கையில் பேக் இல்லாமல் திரும்புவதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை செய்தனர்.

அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகப்பட்டு விசாரணை செய்ததில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹாசினியின் குடும்பத்தினர் வசிக்கும் அதே குடியிருப்பில் பெற்றோர் மற்றும் தம்பியுடன் வசிக்கும் தஷ்வந்த் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முடித்துவிட்டு மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்.

குழந்தையினை ஏமாற்றி வீட்டுக்குள் அழைத்துச் சென்ற தஷ்வந்த், அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்தபோது, ஹாசினி பயந்து சத்தமிட்டு கத்தத் துவங்கியதும், மாட்டிக் கொள்வோமோ என்று நினைத்து அருகில் இருந்த பெட்ஷீட்டால் வாயை அழுத்திப் பொத்தியதில் குழந்தை மூர்ச்சையாகி மயங்கியிருக்கிறாள். பிறகு குழந்தை விஷயத்தை வெளியில் சொல்லிவிடுவாளோ எனப் பயந்து, ஹாசினியின் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார்.

குழந்தையை தேடிக்கொண்டிருந்த நேர இடைவெளியில், அவர்கள் குடியிருப்பின் முதல் தளத்திலே நிகழ்ந்துள்ளது. இது நிகழ்ந்தபோது,  தஷ்வந்தின் பெற்றோர் அவர்களின் உறவினர் இல்லத் திருமணத்திற்கு சென்றுவிட்டதால் அந்த இடைவெளியினை பயன்படுத்திக்கொண்டு குழந்தையின் உடலை தனது இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில், அனகாபுத்தூர் அருகே உள்ள ஒரு முட்புதரில், குழந்தை இருந்த டிராவல் பேக்கை தூக்கிப் போட்டுவிட்டு வந்திருக்கிறான்.

தஷ்வந்த் குளித்து முடித்து உடைமாற்றிக் கொண்டு கீழே வந்தபோது, குழந்தையைக் காணவில்லை என ஹாசினியின் பெற்றோரும் குடியிருப்புவாசிகளும் தேடிக்கொண்டிருந்தபோதே, அவர்களுடன் இணைந்து ஒன்றும் அறியாததைப்போல கூட தேடிவிட்டு, 100க்கு தன் கைபேசி மூலம் அழைத்து யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு நடந்திருக்கிறார்.

பிறகு இரண்டு குளிர்பான பாட்டில்களில் பெட்ரோல், தீப்பெட்டி மற்றும் பெட்ஷீட்டை ஒரு பையில் வைத்து எடுத்துச் சென்று குழந்தையின் உடலை வெளியில் எடுத்து, பெட்ஷீட்டில் அந்த பிஞ்சு உடலைக் கிடத்தி பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு, பின் தனது உறவினர் இல்லத் திருமணத்திற்கு சென்று, அவரது பெற்றோருடன் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து குழந்தையை காணவில்லை என  ஊடகங்களுக்கு செய்தி பரவி அவர்கள் ஹாசினியின் வீட்டிற்கு வந்தபோதும், கேமரா முன் நின்று, குழந்தை காணாமல் போனதைப் பற்றி பேட்டியும் வழங்கயிருக்கிறார்’’ என்கிறார் கோபத்துடன் ஸபி.

எனவே யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணைக்குப் பிறகே இந்த உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தது. கொலை செய்தது எப்படி என விளக்கம் பெற, குடியிருப்பிற்கு அழைத்து வரப்பட்டபோது, அடக்க முடியாத ஆத்திரத்தால் பொதுமக்கள் சூழ்ந்து சரமாரியாக அடித்திருக்கின்றனர். கைப்பற்றப்பட்ட குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து பிப்ரவரி 8ம் தேதி ஹாசினியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

‘‘குழந்தையை மிகவும் அநியாயமாக இழந்து விட்ட அந்தப் பெற்றோருக்கு, என்ன வார்த்தை சொல்லி, எப்படி ஆறுதல்படுத்த முடியும்” என கேட்கிறார் ஸபி. பெற்றோர் ஆண் பிள்ளைகளின் படிப்பு, சாதனை, சந்தோஷத்திற்கு தரும் முக்கியத்துவத்தை, அவர்களின் வளர்ப்பிலும் காட்ட வேண்டும். பாலியல் புரிதலையும், சுயகட்டுப்பாட்டையும், மனிதாபிமானத்துடன் கூடிய அறம் சார்ந்த விஷயங்களையும் ஆண் பிள்ளைகளுக்கு சின்ன வயதிலிருந்து கற்றுக்கொடுக்க வேண்டும். பெண்பிள்ளைகளை வளர்ப்பதில் காட்டும் கவனத்தைவிட, ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.