மத்திய பட்ஜெட் பெண்களுக்கு ஏமாற்றமே



-ஜெ.சதீஷ்

பிரதமர் மோடியின் பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதனை சரிகட்டும் வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக பெண்களுக்கான சிறப்பு அம்சங்கள் கொண்ட நிதி ஒதுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கென்று எந்த விதமான சிறப்பும் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இல்லை என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் உ.வாசுகி. ‘‘அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. ஆகையால் எல்லா துறைகளிலும் ஒதுக்கப்படுகிற இட ஒதுக்கீட்டில் பெண்களுக்கு ஒரு பகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அதுதான் சமமான பட்ஜெட். உதாரணத்திற்கு விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பார்த்தோ மேயானால் உணவுப் பாதுகாப்பு பணியில் மட்டும்தான் பெண்களுக்கென்று நிதி ஒதுக்கியுள்ளார்கள். ஆனால் மீன் வளத்துறை, பால் உற்பத்தி இவற்றில் எல்லாம் பெண்களின் பங்களிப்பு என்பது அதிக அளவில் இருக்கிறது. இதில் எல்லாம் பெண்களுக்கென்று எதுவுமில்லை. எப்போதும் பட்ஜெட் உரை என்பது வேறு. செயல்படுத்தப்படுவது என்பது வேறாக இருக்கிறது. நூறு நாள் வேலை திட்டத்தில் 85 சதவீதம் பெண்கள்தான் இருக்கிறார்கள்.

நூறு நாள் வேலை திட்டத்தில் கடந்த வருடம் 38,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இறுதியில் 47,499 கோடியாக மாற்றி அமைக்கப்படடது. இது திருத்தப்பட்ட பட்ஜெட் என்றுதான் சொல்லவேண்டும். இதில் 501 கோடிதான் அதிகம். ஆனால் இந்த காலகட்டத்தில் வறட்சி காரணமாகவும், வேளாண்துறை பாதிப்பு போன்ற பிரச்சனைகளாலும் நூறு நாள் வேலைக்கு செல்லக்கூடிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதற்கு தகுந்தாற்போல் இந்த ஒதுக்கீடு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் பல மாநிலங்களிலும், மாவட்டங்களில் வேலை செய்தவர்களுக்கும்  சம்பளமே கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையையும் சேர்த்தால் இப்போது ஒதுக்கப்பட்டிருக்கக்கூடிய பட்ஜெட் என்பது பயனளிக்காத ஒன்றுதான்.

விவசாயிகளின் தற்கொலை, விவசாயக் கடன் போன்ற பிரச்சனைகளில் இந்த பட்ஜெட் என்பது நியாயமில்லாத ஒன்றாகத்தான் பார்க்க முடிகிறது. அதே போன்று நிர்பயா நிதிக்கு, கடந்த வருடம் 585 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வருடம் 400 கோடியாக குறைத்துள்ளார்கள். பெண்கள் அமைப்புகள் பல ஒன்று சேர்ந்து  நிதியமைச்சரை சந்தித்து இதனுடைய நிதியை உயர்த்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிதியை குறைத்துள்ளார்கள் என்பது நியாயமில்லாதது.

உணவுக்கான மானியமும், எரிவாயு மானியமும் 8.5 சதவீதம் கடந்த வருடம் வழங்கப்பட்டது, இந்த வருடம் 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது நியாயமில்லாத ஒன்று. முக்கியமாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதைப் போன்று அங்கன்வாடியை சேர்ந்த பெண்கள் ஊதியத்தை அதிகப்படுத்தவேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இதைப் பற்றிய எந்த தகவலும் இந்த பட்ஜெட்டில் வரவில்லை.

பண மதிப்பு நீக்கம் விஷயத்தில் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். கணிசமாக பெண்களும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். வருமானம் இழந்திருக்கிறார்கள். பண மதிப்பிழப்பு காரணமாக நீண்ட காலத்திற்கு பிறகு நல்ல பலன் கிடைக்கும் என்பதுதான் உரையில் வருகிறதே தவிர, தற்போது உள்ள பிரச்சனைகளை குறிப்பாக ஏழை, எளிய பெண்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை பட்ஜெட்டில் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

பணமதிப்பு இழப்பின் பலன் அடுத்த வருடம் கிடைக்கும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தப்பட்டது. இந்த வருடம் ஏழை எளிய பெண்கள் என்ன செய்வார்கள்? விவசாயக் கடன் பெற்றிருப்பவர்கள், கல்விக் கடன் பெற்றிருப்பவர்களுக்கு கடன் கட்டுவதற்கான காலத்தை நீட்டிப்பது, கடன் ரத்து போன்ற எந்த விதமான சிறப்பு அம்சங்களும் இந்த வருடபட்ஜெட்டில் இல்லை.

மோடியின் இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் எந்த வித மாற்றமும் இல்லை என்பதை மக்கள் உணர்ந்த தருணத்தில் அவர்களை திசை திருப்பவே பணமதிப்பு பிரச்சனையை பாஜக அரசு திணித்ததே தவிர நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய எந்த எண்ணமும் மோடி அரசுக்கு கிடையாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலேகூட இன்னமும் 100 சதவீத ரொக்கம் இல்லாத பொருளாதார நிலை வரவில்லை.

அப்படி இருக்கும்போது, இணையம் என்றால் என்னவென்றே தெரியாத இந்தியாவின் பல கிராம மக்களிடையில் டிஜிட்டல் இந்தியா என்பது சாத்தியமே இல்லை. வேலை வாய்ப்பு பற்றி அவர்கள் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கும் முயற்சியை அவர்கள் மேற்கொண்டு வருவதால் வேலைவாய்ப்பு என்பதும் ஏமாற்றம்தான். சிறுகுறு தொழில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கலாம். ஆனால் சுயதொழிலுக்கான கடன் கொடுக்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான்.

ஆகையால் இப்போது கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய  பட்ஜெட்டை பொறுத்தவரை ஏழை, எளிய பெண்களுக்கு பலனளிக்காது. வேளாண்துறையிலும் வேலை வாய்ப்பு இருக்கிறது. அதில் அரசின் கொள்கையானது விளை நிலத்தை கையகப்படுத்துவது என்ற நோக்கத்துடனே இயங்குகிறது. இதனால் வேலை வாய்ப்பு கிடைப்பது சாத்தியமில்லாத ஒன்று. கிராமப் புறங்களில் காய்கறிகளை சேமித்து வைப்பதற்கு குளிர்பதனக் கிடங்குகள் தேவைப்படுகின்றன.

அரசு சார்பாக கொடுக்கப்படக்கூடிய கிடங்குகள் குறைவாக இருப்பதால், தனியார் கிடங்குகளை அரசு வாடகைக்கு  எடுத்துக்கொள்கிறது. கடந்த முறை கொடுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என்பதை இந்த நிலை உணர்த்துகிறது. மாநில அரசு கேட்பதை மத்திய அரசு சரிவர கொடுப்பது இல்லை என்பது பெண்களை பெரிதும் பாதிக்கிறது. மத்திய அரசு திட்ட இலாக்காவை கலைத்து விட்டார்கள்.

இந்த நிலை தொடர்ந்தால் திட்டமி–்டல் என்பதே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இதே போன்று எஸ்.சி,எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கக்கூடிய நிதியானது, அவர்களின் மக்கள் தொகைக்கும் பட்ஜெட்டிற்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு கேட்கிறோம். ஆனால் 5 சதவீதம்தான் மொத்த ஒதுக்கீடாக இருக்கிறது.

பட்ஜெட் என்பது ஒரு அரசின் பொருளாதாரக் கருவி. இந்த அரசினுடைய கொள்கையானது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை உயர்த்துவதாக இருக்கிறது. வரி என்பது எங்கிருந்து வருகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். நேர்முக வரி அதாவது பெரிய முதலாளிகளிடமிருந்து வரக்கூடியது 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாக வரும் என்று மத்திய அரசு கணித்திருக்கிறது. மறைமுக வரி என்பது சாதாரண மக்கள் வாங்கக்கூடிய பொருட்கள் மீது விதிக்கப்படுகின்ற வரியின் மதிப்பு 75 ஆயிரம் கோடி வருவாய் இந்த வருடம் வரும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

இதிலிருந்து சாதாரண மக்களின் தலையில் 75 ஆயிரம் கோடி வரிச்சுமையை ஏற்றி, வசதி படைத்தவர்களுக்கு சலுகை கொடுக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஏற்கனவே  இந்த அரசு கடந்த வருடம் சொத்து வரியை ரத்து செய்தது. இதுதான் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை என்றால் சாதாரண மக்களுக்கும் பெண்களுக்கும் வஞ்சகம் செய்து வசதி படைத்தவர்களை உயர்த்தும் முயற்சியாகத்தான் பார்க்க முடிகிறது. பெண் கல்வியில் கல்வி உரிமைச் சட்டம் அமலாக வேண்டும். 25 சதவீதம் ஏழை, எளிய பிள்ளைகளை  அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்கை கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்திற்கே போராடிக்கொண்டிருக்கிறோம். மத்திய அரசு சொல்லக்கூடிய புதிய கல்வி கொள்கையால் கல்வி நிறுவனங்கள் கூடுதலாக தனியார்மயமாக்கப்படுகிறது. இதனால் உயர்மட்டக் கல்வியில் கூடுதல் கட்டணம் வரும்போது சராசரி குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை உயர் கல்விக்கு அனுப்ப முடியாத சூழல்தான் ஏற்படும். இந்த புதிய கல்வி கொள்கையால் அரசு கல்வி நிறுவனங்கள் இல்லாமலே போகக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

மொத்தத்தில் கல்வி பற்றிய எந்த விதமான முற்போக்கு சிந்தனையும் மத்திய அரசு பட்ஜெட்டில் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. வேளாண் துறைக்கு மத்திய அரசு மானியத்தை அதிகப்படுத்த வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் வரக்கூடாது என்பதில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். விவசாயிகளின் மீது மத்திய அரசு காட்டும் அலட்சியப் போக்கால் விவசாயிகளின் உயிரிழப்பு அதிகரித்து இருக்கிறது. 2019ம் ஆண்டிற்குள் 50 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்துகளில் ஏழ்மை முற்றிலுமாக அகற்றப்படும் என்று பட்ஜெட் உரையில் பேசப்பட்டது.

இதுதான் அரசின் கொள்கை என்றால் கொண்டு வரக்கூடிய சட்டங்களில் திட்டங்களில் பிரதிபலிக்க வேண்டும். பட்ஜெட் ஒதுக்கீட்டில்  பிரதிபலிக்க வேண்டும். இதில் எதிலும் பிரதிபலிக்காமல் வறுமையை குறைப்பது என்பது முடியாத ஒன்று. வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். பொது விநியோக முறையை அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில் வறுமையை ஒழிக்கவே முடியாது. மொத்தத்தில் இந்த வருட பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றமே”  என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் உ.வாசுகி.