அழகுபடுத்துவது மட்டுமே மேக்கப் இல்லை!”



மேக்கப் பிடிக்காது என்று சொல்லும் பெண்கள் உலகளவில் தேடிப் பார்த்தாலும் குறைவாகத்தான் இருப்பர். சில பெண்களுக்கு மேக்கப் போட்டுக்கொள்ளப் பிடிக்கும். சில பெண்களுக்கு மேக்கப் போட்டுவிடப் பிடிக்கும். மேக்கப் என்றாலே அழகுப்படுத்துதல் என்று தான் நாம் நினைக்கிறோம். ஆனால் சாதாரணமாக இருக்கும் ஒருவரை வித்தியாசப்படுத்திக் காட்டுவதும் மேக்கப்தான். அந்த வகையில் அழகிய ஹீரோயின்களுக்கெல்லாம் பேய் மேக்கப் போட்டு பிரபலமானவர் நம் லலிதாராஜ். அவரது இல்லத்தில் அவரை சந்தித்தபோது, அவரின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். உரையாடலிலிருந்து...

படிப்பும் கனவும்?
“அம்மா டாக்டர், அப்பாவுக்கு  ஐ.டியில் வேலை. அதனால் எங்கள் வீட்டில் படிப்பிற்கு  முக்கியத்துவம் இருந்தது. அம்மாவும் அப்பாவும் படம் பார்த்தே இருபது வருஷம் ஆகி இருக்கும். அந்த மாதிரி சூழ்நிலைதான் எங்க வீட்டில் இருந்தது. ஆனால் எனக்கு ஃபேஷன் டிசைனிங், மேக்கப் இதில் எல்லாம் ஆசை. ஆனால் அம்மா, அப்பா, ‘நல்லாப் படிச்சிட்டு முறையா வேலைக்குப் போ’ன்னு சொல்லிட்டாங்க. இந்த ஃபீல்டில் அவங்க என்னை என்கரேஜ் பண்ணலை. அதனால் அக்கவுன்ட்ஸ் அண்டு பைனான்ஸ் முடித்தேன்.

ஃபேஷன் மாதிரியான விஷயங்கள் எனக்கு ஒரு தூரக் கனவாக இருந்தது. அந்தத் துறைக்குப் போனா நல்லா இருக்கும்னு நினைச்சேனே தவிர அந்தத் துறைக்கே வருவேன்னு நினைக்கலை. காலேஜ் முடிச்சப்ப நான் இப்படிப் போகப்போறேன்னு சொல்லி இருந்ததால் கண்டிப்பாக வீட்டில் ஒத்துக்கிட்டிருக்க மாட்டாங்க. சினிமாவில் சின்னப்பொண்ணுங்க கிட்ட அட்வான்டேஜ் எடுப்பாங்கன்னு ஒரு எண்ணம் அவங்களுக்குள்ள இருந்தது. ஆனா நான் முறையா படிச்சு கார்ப்பரேட்டில் பல வருஷம் வேலை செய்த பிறகு என்னால வெளி உலகை சமாளிக்க முடியும்னு அவங்களுக்கு நம்பிக்கை வந்தது. அதன் பிறகுதான் இந்தத் துறைக்குள்ள என்னால வர முடிஞ்சுது.”
 
வேலை?
“சென்னையில் கொஞ்சநாள் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலைப் பார்த்தேன். பிறகு  அமெரிக்காவில் நியூயார்க்கில் கார்ப்பரேட் கம்பெனியில் வேலைப் பார்த்தேன். மறுபடி சென்னைக்கே வந்தேன்.”

மேக்கப் மீதான ஆர்வம்?
“இயல்பாகவே மேக்கப் மீது ஆர்வம் இருந்தது. காலேஜ் படிக்கும்போது ஸ்டேஜில் போய் நிகழ்ச்சிகள் பண்ண பயம். அதனால மேடையின் பின்புறம் நிறைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்வேன். கூட படித்தவர்களுக்கு மேக்கப் போடுவேன். அதெல்லாம் ஒரு பொழுதுபோக்காக பண்ணினேன். அது மட்டுமில்லாமல் வேலை பார்க்கும்போது நியூயார்க்கில் இருந்தேன். அங்கே சாதாரண பெண்கள் கூட நிறைய மேக்கப் குறித்து தெரிந்திருப்பார்கள். அதனால அங்கே இன்னும் நிறைய கத்துக்கிட்டேன். இங்கே வந்த பிறகு ஃப்ரெண்ட்ஸ் மற்றும் தெரிந்தவர்களின் கல்யாணங்களில் மேக்கப் போட ஆரம்பிச்சேன்.

நடிகை லஷ்மிப்பிரியாவை எனக்குத் தெரியும். அவர் மாடலிங் ஃபீல்டில் நுழைந்தபோது அவருக்கு மேக்கப் போட்டேன். பல மாடலிங் ஷோக்களுக்கு அவருக்கு மேக்கப் போட்டிருக்கேன். அப்படியே வேறு சில மாடலிங் செய்பவர்களுக்கும் போட்டேன். மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு போர்ட்ஃபோலியோவிற்காக மேக்கப் போடுவேன். கல்யாணப் பெண்களுக்கும் ட்ரையல் மேக்கப் மாதிரி நிறைய பேருக்குப் போட்டிருக்கேன். இதெல்லாம் பார்ட் டைமாக, ஹாபியாக செய்து கொண்டிருந்தேன்.

எனக்குமே படங்கள் மீது அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனா மேக்கப் மீது அவ்வளவு ஆர்வம். ஒரு நாள் முழுக்க மேக்கப் போடச் சொன்னாலும் போடுவேன். பிடிக்காத ஒரு துறையிலேயே ஒரு நாளைக்கு 10, 12 மணி நேரத்திற்கு வேலை செஞ்சிருக்கேன். பிடிச்ச இந்த வேலை செய்யும் போது நேரம் போறதே தெரியாது. கார்ப்பரேட் வேலையில் இருக்கும்போது கூட ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் மேக்கப் குறித்து யோசிச்சிட்டு இருப்பேன். புதுசா என்ன எல்லாம் பண்ணலாம்னு யோசிப்பேன்.”
 
மேக்கப் ஃபீல்டில் எப்போது தீவிரமா நுழைஞ்சீங்க?
“நான் இதை ஜாலியா பண்ணிட்டு இருந்தப்ப என் தோழிகள், என் அக்கா எல்லாரும் ‘நீ ரொம்ப நல்லா பண்ற. இதை நீ சீரியஸா எடுத்துப் பண்ணு’ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்போதான் இதையே தொழிலாக்கிக்கணும்னு முடிவு பண்ணினேன். அதுக்குப் பிறகு லண்டனில் ஆறு மாதம் மேக்கப் கோர்ஸ் பண்ணேன். அதுவரைக்கும் இந்த ஃபீல்டில் சக்ஸஸ் ஆக முடியுமான்னு ஒரு யோசனை இருந்தது. அதுக்குப் பிறகு என்னோட தன்னம்பிக்கையும் எல்லாரோட ஆதரவும் என்னை இந்த முடிவு எடுக்க வைத்தது.”
 
லண்டனில் படிக்கும்போது மேக்கப்பில் புதுசா என்ன கத்துக்கிட்டீங்க?
“ஃபேஷன் மேக்கப், ஃபிலிம் மேக்கப், அடிபட்ட மாதிரி போடற மேக்கப், பேய் மேக்கப், ஏஜிங் மேக்கப் இது மாதிரி நிறைய விஷயங்களை லண்டனில் கத்துக்கிட்டேன்.”  

உங்களைப் பொறுத்தவரை மேக்கப் என்பது என்ன?
“இளம் வயதுக்காரர்களுக்கு (பள்ளி, காலேஜ் படிக்கும் பெண்கள்) இயற்கையாக ஓர் அழகு இருக்கும். காலேஜ் பெண்களுக்கு நாம பவுடர் போட்டு ரூஜ் போடுவதை விடவும் நேச்சுரலா அவங்க தலை குளிச்சிட்டு ஒரு க்ளிப் போட்டாக் கூட அழகா இருப்பாங்க. ஏன்னா இயற்கையிலே அவங்களுக்குன்னு ஒரு இளமைக்கே உரிய மினுமினுப்பு இருக்கும். அதை நாம் மேக்கப் போட்டு குறைச்சிடக் கூடாது. மேக்கப் என்பது நிறைய விஷயங்களை முகத்தில் போட்டு அழகாக்கிவிடுவது மட்டும் இல்லை.

எந்த அளவுக்கு குறைவா போடணும்னு தெரியுதோ அதுவும் கூட மேக்கப்தான். ஓரிடத்தில் இவங்களுக்குப் போடவே வேணாம்னு தோணும். ஒரு சிலருக்கு வெறும் லிப்ஸ்டிக் மட்டும் போட்டா போதும்னு தோணும். அப்ப அது மட்டும் போட்டா போதும். இதை தட்டிக் கழிக்கறதாக நினைக்கக் கூடாது. போடச்சொல்லிட்டாங்க கடமையேன்னு பவுடர் போடறேன்னு போடக்கூடாது. சில சமயம் நேரில் பார்க்கும்போது மேக்கப் போட்டது மாதிரி தெரியாது. ஆனால் போட்டோவில் ரொம்ப அழகா இருக்கும். அதாவது யாருக்கு எவ்வளவு எப்படி போட்டா நல்லா இருக்கும்னு கவனிச்சுப் போடறதுதான் உண்மையான மேக்கப்.”
  
முதல் பட வாய்ப்பு?
“3 வருஷத்துக்கு முன்பு லண்டனில் மேக்கப் கோர்ஸ் முடித்துவிட்டு வந்த சமயத்தில் ‘யாமிருக்க பயமேன்’ டைரக்டர் டிகே புதிதாக மேக்கப் போட ஆள் தேடிக்கொண்டிருந்தார். அது சம்பந்தமாக படித்தவர்களாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கும்போது தெரிந்தவர்கள் மூலமாக நான் அவரை சந்தித்தேன். எனது போர்ட்ஃபோலியோ பார்த்தவுடன் அவருக்குப் பிடித்துப்போனது. அன்னிக்கே தன் படத்துக்கு என்னை செலக்ட் பண்ணினார்.”
 
‘யாமிருக்க பயமேன்’ அனுபவம்?
“ஹாரர் காமெடி ஜர்னர் ஆரம்பித்த புதிதில் தமிழில் வந்த படம் அது. கிருஷ்ணா, அனஸ்வரா, ரூபாமஞ்சரி, மயில்சாமி, கருணாகரன் எல்லாரும் நடித்திருந்தார்கள். இரண்டரை மாதம் நைனிடாலில் சூட்டிங் நடந்தது. பேய் மேக்கப் போட மூணு மூன்றரை மணி நேரம் கூட ஆகும். அனஸ்வரா முகம் ரொம்ப குழந்தைத்தனமாக இருக்கும். அவங்களை கிழவி மாதிரி மாத்தணும். மேக்கப் போடும்போது அந்தக் குளிரில் அவங்க அவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பாங்க.  

கிளைமாக்ஸ் 3 நாட்கள் எடுத்தோம். அதில் எல்லாருக்கும் பேய் மேக்கப் போட வேண்டி இருந்தது. ஒவ்வொருத்தருக்கும் ஒன்றரை மணி நேரம் ஆகும். காலை 3 மணிக்குப் போனால் நைட் ஆகிடும். காலையில் முதல் ஆளா செட்டுக்குப் போக வேண்டி இருக்கும். சூட்டிங் முடிந்தவுடன் மேக்கப் க்ளீன் பண்ணவே ஒரு மணி நேரம் ஆகும். லேயர் லேயரா மேக்கப்பை எடுக்கவேண்டி இருக்கும். எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டோம்.

இன்னும் கொஞ்சம் டைம் இருந்திருந்தால் இன்னும் கூட நல்லா பண்ணி இருக்கலாமோன்னு நினைச்சேன். ஆனால் எங்கள் உழைப்பிற்கான பலன் கிடைச்சது. படம் நல்லா ஓடுச்சு. எனக்கும் நல்ல பேர் கிடைத்தது. தியேட்டரில் ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுத்தாங்க. அந்த சமயம் தியேட்டரில் நான் இருந்தேன். அது ஒரு கிரேட் பீலிங்.” 
  
‘பிசாசு’ பட அனுபவம்? 
“‘மிஷ்கின் சார் கூப்பிட்டாங்க’ என்று சொன்னப்ப அது ஜோக் என்றுதான் முதல்ல நினைத்தேன். அவ்வளவு பெரிய டைரக்டர், ஒரே ஒரு படம் மட்டுமே பண்ணியிருந்த என்னை பெரிய படத்துக்குக் கூப்பிடும் போது நெர்வஸாக இருந்தது. அவரை சந்திச்சேன். ஆனால் சார் ரொம்ப ஜோவியலாக இருந்தார். கேஷுவலாக இருந்தார். அப்புறம்தான் நிம்மதியாச்சு.  

ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் கொஞ்சம் டைம் எடுத்தது. பேய் லுக் செட் பண்ணவே ஒரு மாதம் எடுத்தது. ஓரிடத்தில் இருந்து இன்ஸ்பிரேஷன் வேண்டுமானால் எடுக்கலாமே தவிர, நாமதான் அந்த உருவத்தை உருவாக்கணும்னு நினைச்சோம். அதுக்காக நிறைய யோசிச்சோம். நிறைய லுக் ட்ரையல் பார்த்தோம். ஓரளவு லுக் செட் ஆனவுடன் ஹீரோயினுக்குப் போட்டு பார்த்தோம்.  

பேய் என்கிற ஃபீலும் இருக்கணும். அதே சமயம் அகோரமாவும் தெரியக்கூடாது. இன்னசன்ட்டாக இருக்கணும். அதாவது பேய் மாதிரியும் இருக்கணும். பேய் மாதிரியும் இருக்கக்கூடாது. அதுதான் இந்தப் படத்தோட சவால். அதுக்காக நிறைய மெனக்கெட்டோம். அதில் ப்ரயாகா போட்டிருந்த கான்டாக்ட் லென்ஸ் ஸ்பெஷலாக வெளிநாட்டில் இருந்து ஆர்டர் பண்ணி வரவழைச்சது. ரொம்ப நேரம் போட்டிருந்தால் கஷ்டமாக இருக்கும். ஆனா அது நல்ல எபெக்ட்டிவ்வா இருந்தது.
 
‘பிசாசு’ பட டீம் வெரி யங் டீம். மிஷ்கின் சார் ரொம்ப சப்போர்ட்டிவ். டெக்னீசியன்களின் பிரச்னைகளை புரிஞ்சுப்பார். அவங்களுக்கு என்ன செய்யணுமோ அதை செய்யணும். அப்பதான் ப்ராடக்ட் சரியா வரும் என்பதில் கரெக்டா இருப்பார். ரொம்ப தெளிவான பார்வை உள்ளவர். இப்படித்தான் வரணும்னு விளக்கிக்கிட்டே இருப்பார். ‘சார் எனக்கு இந்த மெட்டீரியல் இன்னும் கொஞ்சம் இருந்தால் நல்லா இருக்கும்’னு சொன்னா உடனே அதுக்கு என்ன பண்ணணுமோ அதைச் செய்வார். ரொம்ப டிமாண்டிங். ரொம்ப பர்ஃபெக்ஸனிஸ்ட். அதனால்தான் அவர் படங்கள் மக்களிடம் ரீச் ஆகுது.
 
சில வகை மேக்கப்கள் ரொம்ப நேரம் தாங்காது. அதுக்கு மறுபடி போட வேண்டி இருக்கும். ஸோ, எங்களுக்கு என்ன சப்போர்ட் பண்ண முடியுமோ கண்டிப்பா பண்ணுவார். இது எனக்குத் தெரியும்னு சொல்லிட்டு சொதப்பினால்தான் கோபப்படுவார். ஆனால் எனக்கு இது தெரியும், இது தெரியாதுனு  சொல்லிட்டா பிரச்னை இல்லை. படம் பார்த்துவிட்டு நிறைய பேர் பாராட்டினாங்க. இவ்வளவு பெரிய படத்தில் லீடாக செய்வேன்னு நினைக்கவே இல்லை. அப்பா-அம்மாவை அக்கா வற்புறுத்தி படத்திற்கு அழைச்சிட்டுப் போய் காண்பிச்சாங்க. இப்ப என் பேரன்ட்ஸுக்கும் என் மேல் நல்ல நம்பிக்கை வந்துருக்கு.”

உங்களுக்கே உரிய அடையாளம் என்று சொல்லக்கூடிய ஸ்டைல் என்ன?
“சில கல்யாணப் பெண்கள் ஹெவியா மேக்கப் போடாமல் நேச்சுரலா இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. அதற்காக நேச்சுரலாக போடுவேன். அந்த ஸ்டைல் முன்பிருந்தே என்னிடம் இருந்தது. அதுதான் எனது இன்றைய ஸ்பெஷலும் கூட. அதாவது அழகா தெரியணும். ஆனால் மேக்கப் போட்டிருக்காங்களான்னு சந்தேகம் வரணும். அதாவது மேக்கப் போட்டிருக்காங்க. ஆனால் எங்க எவ்வளவு போட்டிருக்காங்கன்னு கண்டுபிடிக்க முடியாம இருக்கணும்.

மேக்கப் போட்டு இருப்பவர்களுக்கு அது ரொம்ப பொருத்தமாகவும் இருக்கணும். ஆனால் சினிமாவில் இப்படி இது மட்டும்தான் பண்ண முடியும்னு சொல்ல முடியாது. கிளாமரஸாகவும் பண்ண வேண்டி இருக்கும். அதனால் இப்ப எல்லா ஸ்டைலும் பண்றேன். ஆனால் இப்பவும் கல்யாணப் பெண்களுக்கு நிறைய பேர் இன்னமும் அதைத்தான் என்னிடம் கேட்கிறாங்க. அதனால அதுதான் என்னோட அடையாளம்னு நினைக்கிறேன்.”

எதிர்கால நோக்கம்?
“இதுவரை எனக்குக் கிடைச்ச இயக்குநர்கள் ரொம்ப நல்ல டைப். இனிமேலும் நல்ல இயக்குநர்களின் படங்களில் வேலை பண்ணணும்னு நினைக்கிறேன். ‘பிசாசு’ படம் வெளிவந்த பிறகு நிறைய பேர் பேய்ப் படங்களுக்குக் கூப்பிட்டாங்க. ஆனால் நான் ஒரு மாற்றம் வேணும்னு நினைக்கிறேன். க்ரியேட்டிவ்வாக விதவிதமாக பண்ணணும்னு நினைக்கிறேன். வரலாற்றுப் படங்களில் மேக்கப் போடணும்னு ஆசை. அதில்தான் வித்தியாசத்தைக் காட்ட நல்ல வாய்ப்பு இருக்கும். ஃபேஷன் பேஸ்ட் படங்கள் பண்ணணும்னு ஆசை. இப்படியான சில படங்கள்தான் இப்ப பண்றேன். சில விளம்பரப் படங்களும் பண்ணிட்டு இருக்கேன்.

- ஸ்ரீதேவிமோகன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்