வக்கிரமும் வன்முறையும்



அண்மையில் பெண்கள் மீதான தாக்குதல்கள், தொடர்ந்து பல்வேறு வடிவில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொதுவெளிகளில் இயங்கும் பெண்களை, அவர்களின் செயல்பாட்டை முடக்கும் விதத்தில் பாலியல்ரீதியாக, வக்கிரமான வார்த்தைகளாலும், வக்கிரமான சீண்டல்களாலும் தாக்கத் தொடங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்களும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களுமே இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதுதான் வேதனையின் உச்சம்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், அரசியல் பின்புலமும் இல்லாத விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிமணி. ஊராட்சி ஒன்றியக்குழு செயலாளராகவும், அகில இந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். ஓர் எழுத்தாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். சிறந்த சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருதை பெற்று, மூன்று புத்தகங்கள் வரை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

மத்திய அரசின் செயல்பாடான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பிரச்னை 50 நாட்கள் கடந்து முடிவுக்கு வராத நிலை குறித்து, சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, இணையத்தில் இவர் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடங்கியது. இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை, தெரியாத நபர்களிடமிருந்து 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தகாத செய்திகள் என்று தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்.

“பெண்கள் மீது நடத்தப்படுகிற, திட்டமிட்ட இத்தகைய தொழில்நுட்ப வசதி நிறைந்த தாக்குதல்களால், நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சுதந்திரமான பொதுவெளிகளை அவர்கள் பயன்படுத்த முடியாமல், தங்கள் கருத்துக்களை பகிரவும் முடியாமல், மற்றவர்களின் கருத்துக்களை அறியவும் முடியாமல், இணைய வெளிகளை பயன்படுத்த முடியாத நிலையில் முடக்கப்படுகிறார்கள்.

நிறைய பெண்கள் பாலியல்ரீதியாக தங்களுக்கு நடக்கும் இணையத் தாக்குதல்களை, பொதுவெளிக்குக் கொண்டுவராமல், உள்ளுக்குள்ளேயே வைத்து கூனிக் குறுகிப் போய்விடுகிறார்கள். நாகரீகமான சமூகம் இதை ஏற்றுக்கொள்ளாது. தேசத்தின் வளர்ச்சியை இது பாதிக்கும்” என்கிறார் ஜோதிமணி. “இது குறித்து ‘சைபர் குற்றத் தடுப்பு பிரிவு’ காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
ஏற்கனவே என்னைப் போலவே பொதுவெளியில், இணையத் தாக்குதலுக்கு உள்ளான சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகைத்துறை சார்ந்த பெண்களின் வழக்குகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களை தடுக்க வேண்டிய ‘சைபர் கிரைம்’ மாவட்ட அளவில் சரியான வளர்ச்சியின்றி முடங்கி இருக்கிறது. டி.ஜி.பி. அலுவலகத்திலும், முகநூல் நிறுவனத்திடமும் இது குறித்து புகார் அளித்துள்ளேன்” என்று தெரிவிக்கிறார் ஜோதிமணி.

மத்திய அரசின் செல்லா நோட்டு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 31.12.2016 அன்று சென்னை மேடவாக்கம்-மாம்பாக்கம் சந்திப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். “ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்மீது பள்ளிக்கரணை காவல்நிலைய உதவி ஆய்வாளரும் காவல்துறையினரும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீதும் தடியடி நடத்தி கடுமையாகத் தாக்கியதுடன், பாலியல்ரீதியாக உச்சபட்சமாக அத்தனை பெண்களையும் இழிவுபடுத்தி, சொல்வதற்கே நா கூசும் தகாத வார்த்தைகளால் பேசியும், கேவலமான பாலியல் சீண்டல்களாலும் காவல் துறையினர் அராஜகத்தில் இறங்கியுள்ளனர்.

மக்கள் பிரச்னைகளைப் பேசும் எங்களைப் போன்ற இளம் போராளிகளை இந்தக் காவலர்கள் இந்த அளவிற்கு வக்கிரமான முறையில் அடக்குமுறை செய்து, உச்சபட்ச பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதற்கான காரணம் என்ன? இனி எந்தப் போராட்டமும் செய்யக் கூடாது என்று எங்களை எச்சரித்ததுடன், எங்களின் கைபேசிகளையும் பறிமுதல் செய்து, மனரீதியான அழுத்தத்தை எங்களுக்குக் கொடுத்தனர். நாங்கள் உயிருடன் வெளியில் செல்வோமா என்ற எண்ணத்தையே எங்களுக்கு ஏற்படுத்திவிட்டனர்.

மக்கள் பிரச்னைகளுக்காக, சமூக நலன்களுக்காக ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் அமைப்பு எங்கள் அமைப்பு. மக்கள் பிரச்னைக்காக போராடிய எங்களை மனிதாபிமானமே அற்ற முறையில், காவலர்கள் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து, அராஜகத்துடன் பாலியல்ரீதியான வக்கிரச் செயல்களாலும், வார்த்தைகளாலும் தாக்கியதற்கான காரணம் என்ன?” என்ற கேள்வியை முன் வைக்கிறார் இந்த அமைப்பின் மாநில நிர்வாகியான தீபா. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களையும் கொடூரமாக காவல்துறை தாக்கியதால் பலருக்கு அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இச்சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பெண்கள் தாக்கப்பட்டனர். புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது பெங்களூரின் முக்கியப் பகுதியான எம்ஜி சாலையில், பெண்களுக்கு எதிராக மிக மோசமான வன்முறைச் சம்பவங்கள் காவலர்களின் முன்பாகவே நடந்தேறின. நாட்டையே தலைகுனியச் செய்தது இந்தக் கொடூரம். பெங்களூர் குடியிருப்புப் பகுதியில் பெண் ஒருவரை, இரண்டு ஆண்கள் வன்முறைக்கு உட்படுத்தும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில், குடியிருப்புப் பகுதி ஒன்றில், ஜனவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2.30 மணிஅளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை, சாலையில் நின்றிருந்த இரண்டு ஆண்கள் வன்முறைக்கு உட்படுத்தும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. ஐ.டி. துறையில் முன்னிலை வகிக்கும் பெங்களூர் போன்ற பெரிய நகரங்கள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருவதையும், யாருமற்ற இடங்களில் குற்றங்கள் நடைபெறும் என்ற நிலை மாறி, குற்றங்கள் நடைபெறும் இடத்தில் யாரும் தட்டிக் கேட்காமல், அங்கிருந்து நகர்ந்து செல்லும் நிலையையும் இந்த வீடியோ நமக்கு காட்டியது.

பெண்களுக்கு எதிரான எல்லா கொடுமைகளுக்கும் பெண்கள் மீதே பழி போடுவது, கட்டுப்பாடுகள் விதிப்பது என்பதுதான் பொதுக்கருத்தாக நிலவுகிறது. இவை நாட்டில் நிலவும் சமூகப் பண்பாட்டு நெருக்கடிகளைதான் சுட்டிக்காட்டுகின்றன. பெண்கள் மீதான தொடர்ச்சியான இந்த பாலியல் தாக்குதல்கள் அதிகார மட்டத்தில் தொடங்கி அடிமட்டம் வரை தொடர்கின்றன.

- மகேஸ்வரி