நீராலானது இவ்வுலகு-புதிய பகுதி

நீர் வரலாறு

-மு.வெற்றிச்செல்வன்
சூழலியல் வழக்கறிஞர்

நீர் என்பதென்ன?
இக்கேள்விக்கு பதில் என்னவாக இருக்க முடியும்? நீர் என்பது குடிப்பதற்கானது, குளியலுக்கானது, சமையல் அறை பயணப்பாட்டுப் பண்டம், குழந்தைகளின் விளையாட்டுக்கானது, வேளாண்மைக்கு அடிப்படை, ஆறுகளின் ஊற்றுக்கண், தொழிற்சாலைகளுக்கான உற்பத்திப் பொருள், மதுவின் கலவை, மின்சாரத் தயாரிப்புக்கு தேவையான உபகரணம், இயற்கை வளம், இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் ஒரு ஆக்சிஜன் அணு சேர்ந்த மாலிக்யூல் கலவை... இப்படி பல பதில்கள் கிடைக்கலாம்.

இவை மட்டும் தானா நீர்? நிச்சயமாக இல்லை, இவை எல்லாமும்தான். அதே நேரத்தில் இதைத் தாண்டியது ‘நீர்’ என்கிற ஒற்றைச் சொல்லின் அர்த்தம். இவ்வுலகின் உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் நீர் அடிப்படையானது. “பெருவெடிப்பின்” காரணமாக பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் புவிகோளம் உண்டான காலகட்டத்தில் எந்த உயிரினமும் பரிணமித்திருக்கவில்லை. அன்றைய பூமி அடர்த்தியான நீராவியால் சூழ்ந்து இருந்தது.

பின்பு பூமியின் மேற்பரப்பில் நீராவி குளிரடைந்து புத்தம் புது மழையாகப் பொழிந்தது. பூமியில் பொழிந்த முதல் மழை இதுவே. அது பேய் மழையாக இருந்தது. இவை கடலை உருவாக்கின. புவி நீலமயமானது !! அந்தச் சூழலில் சுமார் 390 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக கடலில் அந்த இயற்கை அற்புதம் நிகழ்ந்தது. ஒரு செல் நுண்ணுயிர்கள் பரிணமித்தன. இப்படியாக முதல் உயிரினம் நீரில் உருவானது. நீரினால் உருவானது. இந்த உயிரினங்கள் பிராணவாயுவை வளி மண்டலத்தில் முதன் முதலில் வெளியிட்டன.

அன்று முதல் இன்று வரை பல கோடி வருடங்களாக இந்த வேலையை தொடர்ச்சியாக செய்து வருகின்றன இந்த நுண்ணுயிர்கள். கடல் பரப்பில் இருந்து வெளியேறிய பிராணவாயு பிற உயிரினங்கள் பரிணமிக்க காரணமாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக மனித இனம் உள்ளிட்ட உயிரினங்கள் பரிணமித்தது நாம் யாவரும் அறிந்ததே. இந்த பரிணாமத்தின் தொடர்ச்சியாகவே நாம் தாயின் கருப்பையிலும் நீராலான உலகில் பாதுகாக்கப்படுகிறோம். மனித உடலில் 60 சதவீதம் நீர் உள்ளது.

மனித இனம் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் அவை முட்டையில் இருந்தாலும் சரி, தாயின் கருப்பையில் இருந்தாலும் சரி, நீராலான உலகில்தான் பாதுகாக்கப்படுகின்றன. உயிரினங்கள் மட்டுமல்ல, இவ்வுலகே நீராலானது. கடலில், நதிகளில், ஆறுகளில், ஏரிகளில், குளங்களில், நிலத்தடியில், காற்றில், பனிப்பாறைகளில், தனிமங்களில் என எங்கும் நீர் நிறைந்திருக்கிறது.  நிலையாக இல்லாமல்  நீராவி, மேகம், மழை, பனிக்கட்டி, பனிப்பாறை என்று பருவநிலைகளுக்கேற்ப பல அவதாரங்கள் எடுக்கும் குணம் படைத்தது நீர். இதனை நீர்நிலை வட்டம் (Hydrologic cycle) என்பார்கள்.

“வாழ்க்கை என்பது ஒரு வட்டம், மேலே இருக்கிறவன் கீழே வருவான். கீழே இருக்கிறவன் மேலே போவான்” என்னும் தமிழ் சினிமா பஞ்ச் வசனம் நீர்நிலை வட்டத்திற்கும் பொருந்தும். நீர்நிலை வட்டத்தில் நீர், நீராவியாகி, மேகமாகி, மழையாகிறது. மீண்டும் மழை, நீராகி, நீராவியாகிறது. இந்த நீர் வட்டம் நிலைத்திருப்பது நம் அனைவருக்கும் மிகவும் அவசியமானது. இந்தப் புவியின் இருப்பிற்கே அவசியமானது. “நீரின்றி அமையாது உலகு” என்பது எத்தனை சத்தியமானது !

நீர்வட்டம் ஏற்பட முக்கிய காரணம் ஆதவனிடமிருந்து வரும் வெப்பம்தான். சூரிய வெப்பம் கடல் மற்றும் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை நீராவியாக்குகிறது.  இந்த நீராவி வாயு மண்டலத்தை அடையும்போது மேகம் என்ற பெயரைப் பெறுகிறது. இம்மேகங்கள் குளிர்விக்கப்படும் போது மலை முகடுகளில் பனியாகப் பெய்கிறது. நிலத்திலும் கடற்பரப்பிலும் மழையாகப் பொழிகிறது. 

நிலத்தில் மழையாகப் பெய்த நீரின் பெரும்பகுதி நிலப்பரப்பின் தன்மைக்கு ஏற்ப ஓடைகளாகவும், ஆறுகளாகவும், ஏரி, குளங்களாகவும் உருவாகி அவை மிகும்போது இறுதியில் கடலை வந்தடைகின்றன. நிலத்தில் பெய்த மழைநீரின் ஒரு சிறு பகுதி நிலத்தின் உட்பகுதியில் சென்று நிலத்தடி நீராகிறது. அனைத்து உயிரினங்களும் நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும் நீர்நிலைகளையே நம்பி உள்ளது. மனித இனமான நாம் கூடுதலாக நிலத்தடி நீரை, சுனைகள், கிணறுகள் மற்றும் ஊற்றுகள் மூலம் பயன்படுத்திக் கொள்கிறோம்.

இப்படி எல்லாம் நீராலானதாக இருக்க, நீரை புட்டியில் அடைத்து விற்கும் காலம் வரும் என யார்தான் எதிர்பார்த்திருப்போம்? எப்படி நிகழ்ந்தது இந்த உருமாற்றம். நவயுக அகத்தியர்களான பன்னாட்டு, இந்நாட்டு நிறுவனங்கள் காவேரியை மட்டுமல்ல எல்லா நதிகளையும் புட்டியில் அடைத்து விற்கின்றனர். நீருக்கு விலை பேசும் இன்றைய நிலை மாறி நாளை மீன் நீரில் வாழக்கூட விலை பேசப்படலாம். யார் கண்டார்? நடந்தாலும் நடக்கும்.

உலகெங்கும் பல நிலைகளில் கிடைக்கும் நீரில் 97 சதவீதம் கடலிலும், உப்பு நீர் ஏரிகளிலும் உள்ளவை. 2.15 சதவீதம் நீர் வானுயர்ந்த மலை முகடுகளிலும் வட, தென் துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகளாகவும், பனிப்பாறைகளாகவும் முடங்கிக் கிடக்கின்றன. ஆறுகள், ஏரிகள், குளங்கள், குழாய்க் கிணறுகள் ஆகியவற்றில் கிடைக்கும் நல்ல தண்ணீரின் அளவு 0.615 சதவீதம் மட்டுமே. உலகில் உள்ள மொத்த நீரில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ள இந்த நீரே, உலகில் உயிர்கள் வாழ உதவும் நீராகும்.

இவற்றின் அளவும் வேகமாக குறைந்து வருகிறது. காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் மாசடைதல், வேகமாக அழிந்து வரும் காடுகள், பறிபோகும் இயற்கை வளங்கள், மக்கள்தொகைப் பெருக்கம் என உலகளவில் நீரின் அளவு குறைந்து வருவதற்கான காரணங்கள் ஏராளம் கூறப்படுகின்றன. ஆனால் உண்மையில் மனித சமூகம் உருவாக்கியுள்ள உற்பத்தி முறையும் அது சார்ந்த வர்த்தக முறையும்தான் இந்த நிலை உருவாக பெரிதும் காரணம்.

இயற்கை மற்றும் மனித சமூகத்தின் மீது இந்த முறை ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் குறித்து அதிகம் பேசப்படுவதில்லை. இன்றைய மனித சமூகம் இயற்கையிடம் இருந்து அந்நியப்பட்டதாக இருக்கிறது. ஏன் மனிதனிடம் இருந்து மனிதனே அந்நியப்பட்டு இருப்பதே உண்மை. இதனை புரிந்து  கொள்ள சற்றே பின்நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது.

16ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் துவங்கிய தொழிற்புரட்சி அதுவரை மனித சமூகத்திடம் இருந்த சூழலோடு இயைந்த வேளாண்மை சார்ந்த வாழ்வு முறையை மாற்றியது. நவீன அறிவியல் கருத்துகள் வெடித்துக் கிளம்பின. பகுத்தறிவு காலகட்டம் என்னும் வரலாற்றில் அறியப்படும் இக்காலகட்டத்தில், அறிவியல் மூலம் இயற்கையை வெல்ல முடியும் என்னும் கருத்து விதைக்கப்பட்டது. அதாவது இயற்கையின் ஓர் அங்கம் மனித இனம் என்னும் கருத்து பின்னுக்குத் தள்ளப்பட்டு மனிதன் மையமாக கொள்ளப்படும் சிந்தனைப் போக்கு உருவாகத் துவங்கியது.

இயற்கை மனிதனுக்கு முரணாகப் பார்க்கப்பட்டது. எல்லா உயிரினங்களுக்கும் மேலான இனமாக மனித இனம் பாவிக்கப்பட்டது. இயற்கை வளம் அனைத்தும் மனித இனத்திற்கு மட்டுமே உரித்தானது என்னும் கருத்து உருவாகத் துவங்கியது. காலனிய சந்தையும் பிறந்தது. கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்ற மாலுமிகள் புதிய உலகத்தில் (மேற்கல்லாத நாடுகளில்) உள்ள தங்கம் உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையிடுவதற்கான காப்புரிமை பெற்று இருந்தனர். இவர்கள் காலனிய சந்தை விரிவாக காரணமாக இருந்தனர்.
 
நீராவி ரயில், மின்சாரம், தானியங்கி வண்டிகள் போன்ற 19ம் நூற்றாண்டு கண்டுபிடிப்புகள் தொழிற்புரட்சியின் வேகத்தை அதிகப்படுத்தின. உலகின் முதல் பன்னாட்டு நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனி, அன்றைய இந்தியாவில் தொழிற்புரட்சியை அறிமுகப்படுத்தியது. அதுவரை இருந்த வேளாண்மை சார்ந்த உற்பத்தி முறை மாற துவங்கியது. வாழ்வுமுறையும் கூட. தொழிற்சாலை சார்ந்த உற்பத்தி முறை அறிமுகமானது.

புதிய சமூக சிந்தனைப் போக்கு உருவாகத்  துவங்கியது. நகரங்கள் புதிய வடிவெடுத்தன. சென்னை போன்ற நகரங்கள் கட்டமைக்கப்பட்டன. வனங்கள் அழிக்கப்பட்டன. வனங்கள் மீதான உரிமை மக்களுக்கு மறுக்கப்பட்டது. இயற்கைவளங்கள் கொள்ளையிடப்பட்டன. யூகலிப்டஸ் போன்ற  புதிய மரவகைகள் உற்பத்தி நோக்கோடு மட்டும் பயிர் செய்யப்பட்டன. விவசாயிகள் ஆலைத் தொழிலாளர்களாக மாறினர்.

கிராம கட்டமைப்பு மாறி நகர கட்டமைப்பு உருவாகத் துவங்கியது. கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறை மறையத் துவங்கியது. நகரக் கழிவுகள் நீர்நிலையில் கொட்டப்படும் நிலை அறிமுகமாகின. தொழிற்சாலை கழிவுகள் என்னும் புதிய வகை கழிவுகள் நீர், நிலம் மற்றும் காற்றில் கலக்கத் துவங்கின.

தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மூலப்பொருட்களாக தேவைப்பட்டன. சூழல் மாசு என்னும் தன்மை உருவாக துவங்கியது. இயற்கை மீதான மிகப் பெரிய போர் மனித சமூகத்தால் துவங்கப்பட்டது. உண்மையில் இந்தப் போரில் மேற்கத்திய வெள்ளை இனத்தவர் மட்டுமே ஈடுபட்டார்கள். இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க பழங்குடிகள் அன்று இயற்கையோடு இயைந்த வாழ்வு முறையையே வாழ்ந்து வந்தனர்.

மெல்ல மேற்கின் உற்பத்தி முறை கிழக்கு நோக்கி நகர்ந்தது. இந்த நகர்வு உண்டாக்கிய கலாச்சார அதிர்வில், இனஅழிப்பில் நேரிடையாக பாதிப்புக்குள்ளான ஒரு தொழில் குடியின் குரல் முக்கியமானது. சில நூறு வருடங்களுக்கு முன்பு அமெரிக்கப் பழங்குடிகளை அழித்து, அவர்கள் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்ட வெள்ளை இனத்தவரின் கொடூரச் செயல்களை புரிந்து கொள்ள முடியாத செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலின் குரல் தான் அது. இயற்கைக்கு விலை பேசும் மேற்குலக வர்த்தகம் அவருக்குப் புரியவில்லை... நமக்கும்தான். 

அவர் இப்படி கூறினார்: “நான் வானத்தை வாங்க முடியுமா? மழையையும் காற்றையும் விலைபேச முடியுமா? எனது மூதாதையர்களின் குரல் இப்படிச் சொன்னது: ஓடைகளிலும் நதிகளிலும் ஓடும் தெள்ளிய நீரை வெறும் தண்ணீரென்று நினைத்துக் கொள்ளாதே. அது நமது தாத்தாவுக்கு தாத்தாவின் ரத்தம். ஏரிகளின் தெள்ளிய நீரில் தெரியும் ஒவ்வொரு பிரதிபலிப்பும் எம் மக்களின் வாழ்க்கையின் நினைவுகளை
பிரதிபலிக்கிறது.

நீரின் முணுமுணுப்பு உனது பாட்டிக்குப் பாட்டியின் குரலே. நதிகள் நமது சகோதரர்கள், அவை உனது தாகத்தைத் தணிக்கின்றன. படகுகளைச் சுமந்து செல்லவும், குழந்தைகளுக்கு உணவு அளிக்கவும் உதவுகின்றன. நமது சகோதரரிடம் காட்டும் மரியாதையையும் அன்பையும் அதனிடம் நாம் காட்ட வேண்டும்”.

(நீரோடு செல்வோம்!)