பேரிடரின் பேரிழப்பு - குழந்தைகள் மற்றும் பெண்கள்- சுகிதா

சென்னைக்கு டிசம்பர் என்றால் ஊழிக்காலம் என்றாகி விட்டது. கடந்த ஆண்டு  சென்னையைத் தாக்கிய பெருவெள்ளத்திலிருந்து முழுமையாக மீண்டு வருவதற்குள் அடுத்த பேரிடியாய் வர்தா புயல் சென்னையின் வரைப்படத்தை புரட்டி போட்டுச் சென்றிருக்கிறது. கான்கிரீட் காடுகளுக்கு நடுவே இருந்த கொஞ்ச நஞ்ச பசுமையான மரங்களையும் அழித்துச் சென்றது வர்தா புயல். சென்னைக்கான தோற்றமே இப்போது முற்றிலும் மாறிவிட்டது. 

பசுமை போர்த்தியிருந்த சென்னையை வர்தா புயலுக்கு முன்னும் பின்னும் என்று பிரிக்க வேண்டிதாகிவிட்டது. ஒவ்வோர் இயற்கை பேரிடர் வரும் போதும் பாதிப்புகள், உயிரிழப்புகள், பொருட்சேதம் என்று இழப்புகளின் பட்டியல் நீள்கிறது. ஆனால் எதிர்கொண்ட பேரிடரிலிருந்து கற்றது என்ன என்ற பெரும் கேள்வி தனிநபரில் ஆரம்பித்து அரசு இயந்திரம் வரை தொக்கி நிற்கிறது.

புயல், வெள்ளம், நிலநடுக்கம் என்று இயற்கை பேரிடர்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாகுவது பெண்கள் மற்றும் குழந்தைகள்தான். இது போன்ற சமயங்களில் ஓர் ஆண் இறப்பிற்கு நிகராக  14 பெண்கள்  இறக்கிறார்கள் என்கிறது பிரிட்டனில் உள்ள சர்வதேச வளர்ச்சித் துறையின் ஆய்வு. ஆய்வின்படி, 141 நாடுகளில் இயற்கைப் பேரிடர் என்பது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரட்டைப் பேரிடர் என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் குழந்தைகளும் பெண்களும் பாதிக்கப்படுவது அதிகரிக்கிறது.

ஆனால் அது குறித்த விழிப்புணர்வு இல்லை. இன்னும் சொல்லப்போனால் பேரிடரில் பெண்கள், குழந்தைகளின் இறப்புப் பட்டியலை தனித்துப் பார்க்கும் முறை கூட இல்லை. ஒவ்வொரு பேரிடர் முடிந்ததும் அரசு மொத்தமாக இறப்பு எண்ணிக்கை ஒன்றை வெளியிடும். அதில் பெண்களும் குழந்தைகளும் அதிகம் இருப்பார்கள். இது சுனாமி, நிஷா புயல், தானே புயல், கடந்த ஆண்டு பெரு வெள்ளம், வர்தா புயல் வரை பொருந்தும்.

பேரிடரில் பெண்கள், குழந்தைகள் பலியாவதற்கான காரணங்கள் இதற்கு முன்பு, வங்கதேசத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பில் இறந்தோரில் 90 சதவிகிதம் பெண்கள், குழந்தைகள்தான். அதற்கான காரணம் பாதுகாப்பான இடங்களுக்கு அரசு போகச் சொன்ன போது வங்கதேசப் பெண்கள் வேலைக்கு சென்றிருக்கும் தங்கள் வீட்டு ஆண்கள் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று குழந்தைகளை வைத்துக் கொண்டு வீட்டிலயே இருந்திருக்கிறார்கள். அப்படி இருந்தவர்கள்தான் இறந்து போயிருக்கிறார்கள் என்பது வேதனை. 

பேரிடர் காலகட்டங்களில்  பெண்கள் சுதந்திரமாக சில முடிவுகளை எடுப்பது அவசியம் என்பதை உணர்த்த இந்தச் சம்பவம் போதுமானது. ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரியஅளவில் பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வோ பயற்சியோ இல்லை. பேரிடரில் மட்டுமல்ல போரிலும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச விதிமுறைகள் உள்ளன. 

அய்லான் குர்தி என்ற சிரியா நாட்டு சிறுவனின் உடல் கடற்கரையில் ஒதுங்கி இருந்த புகைப்படத்தை பார்த்து உலக நாடுகள் சிரியாவிலிருந்து வரும் அகதிகளுக்கு தஞ்சம் புக கதவை திறந்தன. வியட்நாம் போரில் 9 வயது சிறுமி கிம் புக் வெற்றுடம்புடன் போர்க்களத்திலிருந்து ஓடி வந்த புகைப்படம் வெளியானதை அடுத்து அமெரிக்கா ராணுவத்தை வியட்நாமில் வாபஸ் பெற்றது. இப்படி உலகை உலுக்கியப் புகைப்படங்கள் போரில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தின.

போபாலில் விஷவாயு தாக்கியது போன்ற சம்பவங்களிலும் எளிதில் பாதிக்கப்படுவது குழந்தைகள் மற்றும் பெண்களே. சென்னை பெருவெள்ளத்தின்போது வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்த கர்ப்பிணிப் பெண்களை இந்திய ராணுவம் ஹெலிகாப்டர் கொண்டு மீட்டது. தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி பகுதிகளில் அதிகளவில் கர்ப்பிணிப் பெண்கள் இவ்வாறாக மீட்கப்பட்டனர்.

சில இடங்களில் மொட்டை மாடிகளிலேயே பிரசவம் நடந்தது. சூளைமேட்டைச் சேர்ந்த முகமது யூனுஸ் என்ற இளைஞர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பலரைக் காப்பாற்றினார். அதில் சித்ரா என்ற கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அந்தப் பெண் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டார். இந்தச் சம்பவம் அப்போது பரவலான செய்தியாக அனைவராலும் பேசப்பட்டது.

கர்ப்பிணிப் பெண்கள்தான் இயற்கைப் பேரிடரில் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். வர்தா புயல் சென்னையில் கரையை கடந்த அன்று ஒரு பெண் பிரசவ வலியில் துடித்திருந்தால் அந்தப் பெண்மணியை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டு போயிருப்பார்கள் என யோசித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. ஏன் என்றால் வர்தா புயல் தாக்கிய அன்று காலை முதல் சாலைகளில் பொது போக்குவரத்தோ, ஆட்டோக்களோ, கால் டாக்ஸிகளோ எதுவுமே இல்லை.

சாலைகளில் மரங்கள் விழுந்ததால் வீட்டைவிட்டு வெளியே வரவே மக்கள் அச்சமுற்றார்கள். அதுமட்டுமா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகாலமான செய்தி டிசம்பர் 5ம் தேதி மாலை பரவியது. அப்போதே சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. அப்போது ஒரு பெண் பிரசவத்திற்கு மருத்துவமனைக்குச் செல்வது என்பது தன் உயிரை பணயம் வைத்து செல்வதற்குச் சமமான ஒரு சூழல் தான்.

அசாதாரண சூழல் நிலவும்போது கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கான சிகிச்சைகள் எளிதில் கிடைப்பது போன்று பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் அடிப்படை கடமை. இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் சக்தி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உடல் ரீதியாக குறைவு. நம் நாட்டில் 60 சதவிகித பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுடனும், 80 சதவிகித பெண்கள் இரும்புச்சத்து குறைபாடுடனும் இருக்கும்போது இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள உடல் ரீதியாக பெண்களால் முடியாமல் போகிறது.

கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட நேபாள நிலநடுக்கத்தில் இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம். குறிப்பாக 13 மாவட்டங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள்  அதிகளவில் இறந்து போயிருந்தனர். 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள், கணவனை இழந்து வீட்டின் தலைமை பொறுப்பில் இருந்த பெண்கள், பெண் மாற்றுத் திறனாளிகள், 65 வயது மிக்க முதிய பெண்கள், படிக்காத பாமரப் பெண்கள் ஆகியோர் இறந்து போனது ஐ.நாவின் பெண்கள் அமைப்பின் ஆய்வில் தெரிய வந்தது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது மட்டும் 93 ஆயிரம் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டதாகவும் அந்த ஆய்வு உணர்த்தியது. இதில் 41% பேருக்கு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது. பிரசவித்த குழந்தைகளுக்கு பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. நிலநடுக்க அதிர்ச்சியிலிருந்து மீளாமல் உளவியல் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் மற்றும் பெண்கள், நோய்வாய்ப்பட்ட பெண்கள் என்று அந்தப் பட்டியல் உணர்த்திய செய்தி எச்சரிக்கை விடுப்பதாக இருந்தது. பேரிடர் அதிர்ச்சியில் உளவியல் பாதிப்புக்குள்ளானவர்களை மீட்பதற்கான ஒரு அமைப்பு இங்கு இல்லை. இன்றும் சுனாமி தாக்கிய அதிர்வால் மனபிறழ்வு கொண்டவர்கள் இன்னும் மீள முடியாமல் இருக்கிறார்கள்.

நிவாரண முகாம்களில் பாலியல் தொந்தரவு
இயற்கை பேரிடர் தாக்கிய பிறகு சொந்வீடுகளை இழந்து இடம் பெயர்பவர்களில் பெரும் சவாலை சந்திக்கக் கூடிய இடத்தில் குழந்தைகளும் பெண்களும் இருக்கிறார்கள். பெரும்பாலான நிவாரண முகாம்கள் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ரணகளமாக இருந்திருக்கின்றன. நேபாள நிலநடுக்கம், ஹைதி நிலநடுக்கத்திற்குப் பிறகு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்கள்.

மாநில மற்றும் மாவட்ட எல்லைப் பகுதி முகாம்களில் குழந்தைகள் மற்றும் பெண்களை தங்க வைப்பது ஆபத்தானதாக இருந்திருக்கிறது. அங்கிருந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுவது அதிகளவில் நடைபெற்றிருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கென்று சிறப்பு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அவை தொடர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் இருப்பது அவசியம். நிவாரண முகாம்களில் சிறுநீரகங்கள் திருட்டு அதிகம் நடந்துள்ளது.

பேரிடருக்குப் பிறகு காக்கப்பட வேண்டிய சுகாதாரம்
பேரிடருக்குப் பிறகு வரக்கூடிய அனைத்து பேரிடர் கால நோய்களும் எளிதில் குழந்தைகளையும் பெண்களையும் தாக்கும். பேரிடர் நேரங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாப்பதைக் காட்டிலும் அதிகளவு பேரிடருக்கு பிறகு நீரால் பரவும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

நிவாரண முகாம்களில் சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட தேவைகளுக்கும் சுகாதாரமான தண்ணீர் வழங்குவது அவசியம். குழந்தைகள், பெண்களுக்கென்று பிரத்யேக கழிப்பறைகள் அவசியம் ஏற்படுத்த வேண்டும். அதிகளவில் சிறுநீரகத் தொற்று நோய் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பெண்களுக்கு வருவதுண்டு. சென்னை பெருவெள்ளத்தின் போது பெண்களுக்கான உள்ளாடைகள் மற்றும் சானிடரி நாப்கின்களை அதிகளவில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் வழங்கியதைப் பார்க்க முடிந்தது. பேரிடர் காலங்களில் பெண்களுக்கு அதி முக்கியமானவை இவை.

பேரிடர் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை
பேரிடர் காலங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அதிலிருந்து தற்காத்துக் கொள்ள நீச்சல், மரமேறுதல், வீடுகளில் இருந்து  நிலநடுக்கத்தின்போது வெளியேறும் முறை உள்ளிட்ட பயிற்சிகள் அவசியம். பெரும்பாலும் பொருளாதாரரீதியாக சாதியரீதியாக பின்தங்கியுள்ள பெண்கள், குழந்தைகள்தான் பேரிடரில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பேரிடர் மேலாண்மை குறித்த பாடங்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பது முக்கியமானது. 

பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, குழந்தைகளின் சான்றிதழ்களை பத்திரப்படுத்துவது நல்லது. புயல், கனமழை குறித்த வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளை அலட்சியப்படுத்தக் கூடாது. பேரிடருக்கு பிறகு பெரும்பாலான இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும். இருளில் மூழ்கும் பகுதிகளுக்கு மாலை அல்லது மதியமே சேர்த்து இரவு நேர உணவு கொடுப்பது அவசியம்.

அல்லது அந்த முகாம்களில் உள்ள ஆண்கள், பெண்களை ஒரு குழுவாக இணைந்து அங்கேயே சமைத்து சாப்பிட ஏற்பாடு செய்யலாம். இயற்கைப் பேரிடர் காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாட்டை தவிர்க்க அதிகளவில் குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டிற்கான நீரையும் சேமிப்பது அவசியம். குழந்தைகள் மற்றும் முதியோருக்கான மருந்துப் பொருட்களை வாங்கி வைப்பதும் அவசியம். பெண்களுக்கு தாங்கள் குடியிருக்கும் பகுதி மேடான பகுதியா, தாழ்வான பகுதியா, கடலோரப் பகுதியா என்பதை உணர்ந்து வைத்திருப்பது அவசியம்.

பெண்களுக்கான இழப்பீடு
இதுவரை உலக நாடுகளில் பேரிடர்கள் பாதிப்பிற்கான இழப்பீடு பெண்கள், குழந்தைகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை.  ஆண் தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடிய வீடுகளையும், பெண் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வீடுகளையும் ஒன்றாகக் கணக்கிட்டு இழப்பீடுகள் வழங்கும் முறையே தவறானது. பேரிடருக்குப் பிறகு ஆண்களுக்கு வேலை கிடைப்பது எளிது. பெண்களுக்கு ஏற்கனவே பார்த்த வேலையை தக்க வைக்கவோ அல்லது புதிய வேலை தேடுவதோ கடினம்.

ஆண், பெண் இருவருக்கும் ஊதியம் ஒரே அளவில் வழங்கப்படுவதுமில்லை. பிறகு இழப்பீட்டை மட்டும் தலா குடும்பத்துக்கு இவ்வளவு என்று அரசு பார்ப்பது தவறு. ஆண்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகையைவிட இரண்டு மடங்கு பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். பேரிடர்களில்  பெண்கள் இழக்கும் சொத்துகள் மற்றும் நிலங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான இடங்களில் கல்வி அறிவில்லாத பெண்கள் இழப்பீடுகளை பெறுவதில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

பேரிடரில் சேதமான நிலங்களை சீரமைப்பு செய்து அந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்கான முறையை பெண் உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம். பேரிடரில் சேதமாகி பகுதியில் உள்ள பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டால்  பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிடுவதுண்டு. அதைப்போன்று வீடுகள், பாடப்புத்தகங்கள் என்று அனைத்துப் பொருட்களையும் இழந்த குழந்தைகளுக்கு வாழ்வாதாரத்திற்காக குழந்தைத் தொழிலாளர்களாக மாறக் கூடிய நிலை ஏற்படும்.

அதே போன்று தொடர்ந்து குழந்தைகளை பாதுகாக்க முடியாமல் பேரிடர் நடைபெற்ற பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறுவதும் உண்டு. பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகளுடைய வாழ்க்கை இன்னும் கொடுமையானது. இந்த சூழலை மனதில் கொண்டு அரசு திட்டம் வகுத்து கல்வி, சுகாதாரம், இருப்பிடம் அனைத்தும் அமைத்துக் கொடுக்க வேண்டும். பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் பயிற்சி என்பதும் கவுன்சிலிங் என்பதும் மிக முக்கியமானது.

நிவாரண முகாம்களில் பசியாற்றவும், தேவையான பொருட்கள், மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதையும் போன்று  உளவியல் சார்ந்த பிரச்னைகளை கணக்கில் கொண்டு கவுன்சிலிங் வழங்குவதும் முக்கியம். 2009ம் ஆண்டு பெய்ஜிங்கில் பேரிடர் காலங்களில்  குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான ஆபத்தை குறைப்பது தொடர்பான ஆய்வரங்கம் நடைபெற்றது.

அதில்  பருவமாற்றம் குறித்த ஆய்வில் பேரிடர்களை முன்னறிந்து பெண்களை எச்சரிப்பது, பேரிடரிலிருந்து மீட்க தேசிய அளவில் கொள்கை வகுப்பது, பருவகால மாற்றங்களில் பாலினரீதியாக எதிர்கொள்ளும் பிரச்னைகளை அறிவது, புவிசார்பு நிலையோடு பாலினரீதியான மக்கள்தொகையை கணக்கெடுப்பது, வறுமை மற்றும் மிகவும் பின்தங்கிய சமூகச் சூழலை கண்டறிந்து அவர்களை மேம்படுத்துவது, ஊடகங்கள் வாயிலாக பேரிடர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பேரிடர் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக்களை அந்தந்த பகுதியில் அமைத்து பயிற்சி அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்களை முன்வைத்தது.

இதனை சர்வதேச நாடுகள் இப்போது பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தியாவும் இதனை ஏற்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அப்படிச் செய்தால் மட்டும் இனி வரும் காலங்களில் டிசம்பர் மாதம் வசந்தகாலமாக இருக்கும்.