மரங்களின் தாய்கர்நாடக மாநிலம், கூதூர் கிராமத்துக்கு அருகே உள்ள ஹுளிகல் கிராமத்தைச் சேர்ந்த சாதாரண கிராமத்துப் பெண்ணான திம்மக்கா, சிக்கண்ணா என்ற விவசாயத் தொழிலாளியின் வாழ்க்கைத் துணையானார். ஆனால் துரதிருஷ்டவசமாக திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது. இதைக் காரணம் காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா நிறைய காயப்பட்டுள்ளார்.

பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா? உயிரும், உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா? பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும். ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள் சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா, மரம் நடுவது... அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார். 80 ஆண்டுகளில் 8000 ஆலமரங்களை நட்டு அதை தன் பிள்ளைகள் போல் வளர்த்து வருகிறார் ‘சாலு மரத’ திம்மக்கா. 

தங்கள் கிராமத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை பொட்டல் காடாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஊரை பசுமையாக்க, தனி ஆளாக தனது கணவருடன் சேர்ந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆலமரக் கன்றுகளை நட்டு வைத்து, அதனை வளர்த்து வந்துள்ளார். அவரின் விடாமுயற்சி ஊர் மக்கள் இளைப்பாற மனதை மயக்கும் சோலையாக படர்ந்துள்ளது. திம்மக்காவின் முயற்சியை பாராட்டி குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் என பலரும் பாராட்டியுள்ளார்கள். 

கர்நாடகாவில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளும் மாநில‌ அரசும் ராஜ்யோத்சவா, கன்னட ரத்னா உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. இதேபோல இந்திய சிறந்த தேசிய குடிமகள் விருது உட்பட பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. தள்ளாடும் வயதிலும், தளராமல் உழைத்து மரங்களை காத்த திம்மக்காவை நாடு போற்றுகிறது நாமும் போற்றுவோம்...

- ஜெ.சதீஷ்