ஆராரிராரோ... நான் இங்கு பாட...



“மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கையும் இனி உண்டோ…?” ஒரு பெண் தன் முதல் குழந்தையை, கையில் ஏந்தும் அந்த நொடிவரை அவள் அடையும் அத்தனை வலிகளையும் அவ்வளவு எளிதில் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. பத்து பொருத்தம் பார்த்து, அழகு பார்த்து, ஆஸ்தி பார்த்து, அந்தஸ்து பார்த்து, சாதி பார்த்து, சம்பிரதாயங்கள் பார்த்து.. என பார்த்து பார்த்து..

நாம் செய்யும் திருமணங்களில் எதைப் பார்க்க வேண்டுமோ அதைப் பார்க்க கோட்டை விடுகிறோம் என நம் மண்டையில் அடித்து உறக்கச் சொல்வதற்காய், இது தொடர்பாக ஆராய்ச்சி ஒன்றினை செய்து, அதனை காட்சிவழி ஆவணப்படுத்தி வழங்கியிருக்கிறார், தன்னார்வலரும், தொடர்ந்து மனித உரிமைகள் சார்ந்து இயங்குபவருமான பூங்குழலி. உறவுக்குள் நிகழும் திருமணம் குறித்த அவருடைய ஆவணப் படமான “தீ வரைவு” பற்றி அவரிடம் பேசியபோது.  வரைவு என்றால் சங்க இலக்கியத்தில் திருமணம். “தீ வரைவு” என்றால் “தீய திருமணம்” என்ற முன்னுரையுடன் பேச ஆரம்பித்தார்.

‘‘உறவுகளை நிலைநிறுத்தவும், புதிய உறவை உருவாக்கவும் முக்கிய நிகழ்வாக நடக்கும் திருமணம், சாதியையும் சேர்த்தே நிலை நிறுத்துகிறது. இதன் விளைவாய் உடல் ஊனம், மன ஊனம் மற்றும் மருத்துவ ஊனங்கள் பெருகி வருகின்றன. ஒரே மாதிரியான  குழுவுக்குள் நிகழும் இவ்வகைத் திருமணங்களால், உளவியல் மற்றும் உடல் ரீதியாக, அடுத்த தலைமுறையினர், எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதை, ஆவணப்படுத்துதல் வழி இதில் தெளிவுப்படுத்தியுள்ளேன்” என்கிறார் பூங்குழலி.

‘‘ஒரு பெண் தன் தாய்மாமனை திருமணம் செய்யும்போது, அக்காவின் பெண்ணிற்கும் தாய்மாமனுக்கும் 25% மரபணு ஒத்துப்போகும். ஓர் ஆண் தன் சொந்த அத்தைப் பெண்ணையோ, மாமாவின் பெண்ணையோ நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்யும்போது 12.5% மரபணு ஒத்துப்போகிறது. அதுவே சாதிக்கு வெளியே திருமணம் செய்தால் 4 சதவிகிதமே ஒத்துப்போகும்.

விலகிப் போய் திருமணம் செய்தால் மரபணு குறைபாடு குறைவாக உள்ளது. விலகிப் போகாமல் உறவுக்குள்ளும் சாதிக்குள்ளும் திருமணம் செய்தால் மரபணு குறைபாடு அதிகமாக உள்ளது” என்று இந்த ஆவணப்படத்தில் பேசும் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவரான டாக்டர் எழிலன். ‘‘இங்கே திருமணம் என்பது உயிரியல் சார்ந்ததாக இல்லாமல், சமுகம், சாதி, மதம், பொருளாதாரம், அரசியல் பின்னணி கொண்டதாக உள்ளது. இந்துக்களில் சித்தப்பா மகளை மண முடிக்க மாட்டார்கள்.

முஸ்லீம் சமூகத்தில் சித்தப்பா மகளை மணம் முடிப்பார்கள். முஸ்லிம்கள் தாய்மாமனை திருமணம் செய்யமாட்டார்கள். ஆனால் இந்துக்களில் செய்வதுண்டு. வட இந்திய இளைஞர்கள் நேரடி உறவில் கண்டிப்பாகத் திருமணம் செய்யவே மாட்டார்கள். ஒரு சமூகத்தில் காதல் உணர்வோடு பார்க்கப்படும் பெண், வேறு சமூகத்தில் சகோதரியாக பார்க்கப்படுவதும் நடக்கிறது. உறவுக்குள் திருமணம் செய்யும், இந்த முறையை, வட நாட்டைச் சேர்ந்தவர்கள் மிகவும் கேலியாகப் பார்க்கின்றனர். 

சாதிக்குள் திருமணம் செய்யும் அகமணமுறை என்பது கட்டுப்படுத்தப்பட்ட தீர்மானிக்கப்பட்ட திருமண முறை. சாதியக் குழுக்கள், ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை, அந்தக்  குழுக்களுக்குள்ளேயே, அவர்களுடைய மரபணுவைச் சுற்றிச் சுழல விடுகின்றன. புத்திக் கூர்மை, வீரம், துணிச்சல் இவையெல்லாம் மரபணு சார்ந்து வராது. ஆனால் வியாதி என்பது மரபணு சார்ந்து வருகிறது. அறிவுத்திறன் என்பது கண்டிப்பாக மரபணு வழியாக வராது. உடல் ரீதியாக ஏற்படும் குறைபாடு கட்டாயமாக மரபணு வழியே வருகிறது.

ரஷ்ய கலாச்சாரத்தில் வளரும் குழந்தை அந்த கலாச்சாரத்தில்தான் வளரும். சாதியைவிட்டு வெளியில் வந்து வளர்ந்தால் மாற்றங்கள் வரும். ஒரு சாதி ஒரு வேலை செய்தால், அந்தச் சாதி அதே வேலையைத்தான், அவர்களின் அடையாளமாக திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். 1900 ஆண்டுகளாகத்தான், உறவுக்குள்ளும்,  ஒரே சாதிக்குள் திருமணம் செய்யும் அகமணமுறை, நடைமுறையில் உள்ளது.

1900 ஆண்டுகளுக்கு முந்தைய, நம் மூதாதையர் காலங்களில், அகமணமுறை என்ற வழக்கமே இல்லை” எனத் தெளிவாக்குகிறார் மானுடவியல் அறிஞரும், ஆந்திரப் பல்கலைக் கழகப் பேராசிரியருமான முனைவர் சத்யபால். ‘‘வெளிநாட்டவர்களில், ரஷ்யர்கள் அமெரிக்கர்களையும், ஆப்பிரிக்கரையும் கலந்து திருமணம் செய்கின்றனர். அந்த இருநாட்டவரின், மரபணு இணையும்போது, புதிய மரபணுக் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட, மிகவும் அறிவார்ந்த குழந்தையாக இருக்கும்.

கலப்பு மணம் என்பது, ரிச் காம்பினேன் எனப்படும் ஹைப்ரீட் வளர்ச்சியைத் தருகிறது. ஹைப்ரீட் குழந்தைப்பேறில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. முழுமையான மாற்றங்களை கொண்ட உயிரினங்களே பிழைக்கின்றன. அவர்களே, அறிவிலும் விளையாட்டுத்துறையிலும், முன் நிற்கின்றனர். மீண்டும் மீண்டும் உறவுக்குள்ளும், ஒரு குறிப்பிட்ட சாதிய சமூகத்துக்குள்ளும், நிகழும் திருமணங்கள் ப்யூர் ப்ரீட் என அழைக்கப்படுகிறது.

இத்தகைய ப்யூர் ப்ரீட் திருமணத்தில் பிறக்கும் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளாக, தீய மரபணுக்களைக் கடத்துபவர்களாகப் பிறக்கின்றனர். அதுவும் குறிப்பிட்ட சாதிக்குள்ளே மணம் முடித்தால் வளர்ச்சி மிகவும் தடையாக உள்ளது. ஆரோக்கியமான குழந்தைப் பேற்றால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும்” என்கிறார் சென்னை மரபணு அறிவியலாளரான டாக்டர் அரவிந்த் இராமநாதன்.

‘‘ஆணும் பெண்ணும், சொந்தத்தில் திருமணம் செய்யும்போது, தீய அணுக்கள் ஒன்று சேர்ந்து, உடல் குறைபாடுடைய குழந்தைகளை பிறக்க வைக்கின்றன. நமக்குத் தெரிந்தது, ஒரு சில குறைபாடுகள் மட்டுமே. ஆனால் 3000க்கும் மேற்பட்ட உடல் குறைபாடுகள் உள்ளன. ஊனம் அடைந்த ஒரு குழந்தை பிறந்தால் வாழ்க்கையில் பலத்த இடி விழுந்த மாதிரியான உணர்வு. அதை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது. நமக்குப் பிறகு இந்தக் குழந்தையை யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற உணர்விற்கு, பதில் தேட முடியாது.

பெற்றோரின் வாழ்க்கை முழுவதும் அந்தக் குழந்தையுடனே அஸ்தமித்துவிடுகிறது. ஏன் வந்தது? எதனால் வந்தது? யாரிடம் கொண்டு செல்வது? என்ன மாதிரியான மருத்துவம் கொடுப்பது? என்று ஒன்றுமே புரியாத நிலையில், தாய் தன் வாழ்க்கையை வாழ மாட்டாள். மன வளம் குன்றிய சிறப்புக் குழந்தையாக இருந்தாலும் சரி, உடல் ஊனம் அடைந்த குழந்தையானாலும் சரி, அதற்கான சிறப்புப் பள்ளிக் கூடங்களுக்கு, அம்மாதான் கூட்டி வருகிறார்.

குறைபாடுடைய குழந்தை பிறந்தால் பெரும்பாலான ஆண்கள், வேறு திருமணம் செய்து கொண்டு, தாயையும் குழந்தையையும் தவிக்கவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால் தாய்? முழுக்க மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தையாக இருந்தால் வாழ்வாதாரத்திற்காக, அறையிலிட்டு பூட்டிவிட்டு, வேலைக்குச் செல்லும் எத்தனையோ தாய்மார்கள் நம் கண்முன் சாட்சியாக இருக்கிறார்கள். மரபணு குறைபாட்டால், தெரிந்தே ஊனத்தை உருவாக்கினால், பண்பட்ட சமூகத்தை, நம்மால் கண்டிப்பாக வளர்க்க முடியாது.

ஏன் தெரிந்தே இந்தத் தவறை செய்ய வேண்டும்?” என்ற கேள்விகளை முகத்தில் அறைந்தால்போல் முன்வைக்கிறார் தமிழ்நாடு மாற்றுத் திறனாளி சங்க கூட்டமைப்பின், துணைத் தலைவர் தீபக். ‘‘மரபணு சார்ந்த பிரச்சனைகள் எல்லா குழந்தைகளுக்கும் வராது. Biological vulnerability என மருத்துவத் துறையில் அழைக்கப்படும் இந்தப் பிரச்சனை, மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வரும்.

மற்ற இரு குழந்தைகள் நன்றாக இருக்கலாம். ‘சொந்தத்தில்தான் பண்ணினோம் வரலை. சொந்தத்தில் பண்ணலை வந்தது’,  இந்த மாதிரியான குழப்பங்களுக்கு ஒரே பதில்தான். உறவுகளையும், குறிப்பிட்ட வட்டம் சார்ந்த சமூகத்தை தாண்டினால் மட்டுமே நல்ல வளர்ச்சியான சமூகத்தைக் கொண்டுவர சாத்தியக்கூறு அதிகம்” என்கிறார் சென்னை குழந்தைகள் நல மருத்துவர் ஜெயந்தினி. சொந்தத்தையும் சாதியையும் காப்பாற்றுவது சரி. அடுத்த தலைமுறையைக் காப்பாற்றுவதில் அக்கறை வேண்டாமா..? என்ற அழுத்தமான கேள்வியை முன்வைக்கிறது தீ வரைவு ஆவணப் படம்.

கட்டுரை மற்றும் படங்கள்: மகேஸ்வரி

சாவித்திரி-வெங்கட்ராமன் தம்பதி, சென்னை

சரியான வயதில், உறவே இல்லாத, ஆனால் குறிப்பிட்ட சாதிக்குள் திருமணம் செய்து கொண்ட சாவித்திரி வெங்கட்ராமன் தம்பதியருக்கு திருமணம் ஆன அடுத்த ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தைதான் கணேஷ் ராம். ‘‘எல்லா குழந்தைகளை போன்று நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்த அவனுடைய அசைவுகளும், வளர்ச்சியும், பார்ப்பதற்கு வழக்கமானதாகவே இருந்தன. ஆனால் அவனுடைய ஒன்றரை வயதில், அவன் ஆட்டிசம் என்ற மூளை வளர்ச்சி குன்றிய சிறப்புக் குழந்தை என்று, எங்களுக்குத் தெரிய வந்த அந்த நொடி தான் நான் நொறுங்கிப் போய்விட்டேன்” என்கிறார் சாவித்திரி.

26 வயதில் திருமணம் முடிந்து 27ல் தாய்மைப் பேறை அடைந்ததில் இருந்தே, தொடர்ந்து பதினாறு ஆண்டுகளாக இன்னும் தொடர்ந்து, தன் வாழ்க்கை முழுமையும், இந்தக் குழந்தைக்காகவே அர்ப்பணித்திருப்பதாகக் கூறி பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். ‘‘நாங்கள் இருவரும் ஒரே சாதி, கோத்திரம். உறவு இல்லை. ஆனாலும் இக்குறைபாட்டுடன் அவன் பிறந்திருக்கிறான்” என்கிறார்.

‘‘அவன் குழந்தையாக இருந்தபோது எங்களை நேருக்கு நேர் பார்க்கமாட்டான். பெயர் சொல்லி அவனை அழைத்தால், எங்களை திரும்பியும் பார்க்க மாட்டான். எந்த ஒரு செயலிலும் அவனுக்கு பயம் இருக்காது. எதிரில் எது இருந்தாலும் யார் இருந்தாலும், அதைப் பற்றி கருத்தில் கொள்ளாமல், மேலே மோதிக்கொண்டே வேகமாக ஓடுவான். சூடு, வலி இவைகளை உணர மாட்டான். பேச்சு சரியாக வராது. பிறர் சொல்வதையே கிளிப்பிள்ளைபோல் திருப்பிச் சொல்லும் (Echolalia) பேச்சு மொழி இருக்கிறது.

தனிமைதான் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அடுத்தவர்களுடன் தன்னை தொடர்புபடுத்திக்கொள்வதை விரும்பமாட்டான். முதலில் நாங்கள் இவற்றை உணர்ந்தபோது மிகவும் தடுமாறிப் போனோம். இதுதொடர்பாக மருத்துவர்களின் அறிவுரை மற்றும் நிறைய புத்தகங்களையும் தொடர்ந்து படித்ததன் மூலம் கிடைத்த விழிப்புணர்வே எங்களை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. நான் அவனுக்காக எனது முழுவாழ்க்கையையும் ஒரு தாயாக மகிழ்ச்சியோடு அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறேன்.

ஆரம்பத்தில் இவன் சிறப்புக் குழந்தை எனத் தெரிந்தபோது, வீட்டுப் பிரச்சனை மற்றும் அவனை பள்ளிக்கு அனுப்புவதில் நிறைய பிரச்சனைகள் இருந்தது. ஒரு வழியாக அவற்றை எல்லாம் கடந்து வந்திருக்கிறோம். இப்போது அவன் 16 வயதைத் தொட்டு நிற்கிறான். ஆனால் இந்த 16 ஆண்டுகளில் நான் கடந்து வந்துள்ள வாழ்க்கை சமதளமற்றது. ஒவ்வொரு சின்னச் சின்ன செயல்களையும் திரும்பத் திரும்ப கூடவே இருந்து கற்றுக்கொடுக்க வேண்டும்.

தொடர்ந்து பல மாதங்கள் சொல்லிக்கொடுத்த பிறகே அதைச் செய்ய சிறிதளவு முயற்சிப்பான். அவனது உடல் சார்ந்த தேவைகளைச் செய்வதைக்கூட உடனிருந்தே மிகவும் பொறுமையாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதீத பொறுமை வேண்டும். அதை நான் ஏற்படுத்திக்கொண்டேன். முதலில் பெற்றோராகிய நாம் தயாராகிக்கொண்டு அதன் பிறகே நம் குழந்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவர சிறிதாவது முயற்சிக்க முடியும். இதற்கு ஆக்குபேஷனல் தெரபி ஒன்றே தீர்வு” என்று முடித்தார்.

டாக்டர் மஞ்சுளா, மகப்பேறு மருத்துவர், கும்பகோணம்

‘‘தாத்தாவுக்கு உள்ள நோய், பேரனுக்கு வரும் வாய்ப்பு மிகவும் அதிகம் உள்ளது. இங்கே வியாதியானது, தாத்தாவோட தாத்தாவிற்கு இருந்ததா என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். மூன்று தலைமுறைகள் வரை மட்டுமே, நம் அனைவருக்கும் குறைந்தபட்சம் தெரியும். மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய தலைமுறையில் குறையிருந்திருந்தால் கூட, அந்த தீய மரபணுவானது, நான்கு ஐந்து தலைமுறையைக் கடந்து, தற்போதுள்ள தலைமுறைக்கு தீய விளைவுகளைத் தரும்.

மரபணு பிரச்சனையில்லாத பெண்ணும், மரபணு பிரச்சனையுடைய பையனும், திருமணம் செய்யும்போது, நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். மரபணு குறைபாடுகளுடைய, ஒரே உறவில் இருக்கும் பேத்தியும்-பேரனும் திருமணம் செய்தால் குழந்தை 50% குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது. எனது 35 வருட மகப்பேறு மருத்துவ அனுபவத்தில், உறவு முறையில் திருமணம் செய்பவர்களுக்கே குறைபாடு உடைய குழந்தைகள் அதிகம் பிறக்கிறது”.