தவிக்க வைக்க வருகிறது தண்ணீர் பஞ்சம்



நீர் நம் உயிர்!

கர்நாடகாவிடமிருந்து காவிரிநீரைப் பெற வேண்டும் என்பதை அரசியலாக முன் நிறுத்தும்போதெல்லாம் ‘தமிழ்நாட்டில் பெய்கிற மழைநீரை நாம் முழுமையாகப் பயன்படுத்துகிறோமா?’ என்கிற கேள்வி நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழ வேண்டும். கடந்த ஆண்டு அக்டோபர்- டிசம்பர் வரையிலும் பெய்த வடகிழக்குப் பருவமழை தமிழகத்தையே புரட்டிப் போட்டதை யாரும் மறப்பதற்கில்லை.



சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்குண்டு தவித்ததை இந்த நூற்றாண்டின் பெருந்துயர் என்றே சொல்லலாம். நீர் மேலாண்மை குறித்த எவ்வித திட்டமிடுதலும், செயல்பாடும் இல்லாத காரணத்தால்தான் இந்தப் பேரிடருக்கு ஆளாக நேரிட்டது. மாற்றாக நீர் மேலாண்மையை முறையாகக் கையாண்டிருந்தால் இப்பேரிடர் நிகழ்ந்திருக்காது என்பதோடு, மழைநீரையும் சேமித்திருக்கலாம் என்பதும் உண்மை.

இப்படிப்பட்ட பெருமழை பெய்தும் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்துதான் காணப்படுகிறது. சில மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக ஆண்களை விடவும் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்புள்ள பெண்களே அதிகம் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கொளுத்துகிற வெயிலில் வெற்றுக் குடத்தோடு தண்ணீருக்கென காத்திருக்கும் காட்சியை இன்றைக்கு பல கிராமங்களில் பார்க்க முடியும். அப்படியாக அவதிக்குள்ளாகி வரும் பெண்கள் சிலரிடம் பேசினோம்...   

தமிழ்ச்செல்வி (திருப்பூர்)
‘‘திருப்பூர்ல பல பகுதிகள்ல குடிநீர் தட்டுப்பாடு நிலவுது. மக்கள் சாலை மறியலில் ஈடுபடுறது தொடர்ந்து கிட்டுதான் இருக்கு. நான் வசிக்கிற ராக்கியாபாளையம் பகுதியில் 20-22 நாட்களுக்கொரு முறைதான் குடிநீர் வருது. அதுவும் 12 குடங்களுக்கு மேல தர மாட்டாங்க. அதைப் பிடிக்க வரிசையில் குடத்தை வெச்சுக் காத்திருக்கணும். வீட்டிலேயே இணைப்பு வெச்சிருக்கவங்களுக்கும் 15 நாட்களுக்கொரு முறைதான் குடிநீர். 5 பேர் கொண்ட குடும்பம் எங்களுது.

குடிக்கிறதுக்கும் சமைக்கிறதுக்கும் மட்டும் ஒரு நாளைக்கு 2 குடம் தண்ணீர் தேவைப்படுது. 22 நாளைக்கு 12 குடம் எப்படி போதுமானதாக இருக்கும்? அது போக புழங்குறதுக்கு என்ன பண்ண முடியும்? தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குறதைத் தவிர வேற வழியே இல்லை. ஆயிரத்து 500 லிட்டர் தண்ணீர் 400-450 ரூபாய் வரை விற்கப்படுது. பொது மக்களுக்குக் கொடுக்கிறதுக்கே தண்ணி இல்லைங்குறாங்க. இந்த டேங்கர் லாரிக்காரங்களுக்கு மட்டும் எப்படித் தண்ணி கிடைக்குது?’’



முருகேஸ்வரி (மதுரை)
‘‘5 நாளைக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருது. ராத்திரி 10 மணிக்கு மேல வர்றதால தூக்கம் பார்க்காம வரிசைல காத்திருந்துதான் தண்ணி பிடிக்கணும். இப்ப சில காலமாவே வர்ற தண்ணீர் குடிக்கிறதுக்கு மட்டுமில்ல... குளிக்கிறதுக்குக் கூட பயன்படுத்த முடியாதபடி வாடையா வருது. அந்தத் தண்ணில குளிச்சா அரிப்பு வருதுங்கிறதால பயன்படுத்துறதில்லை. புழங்குறதுக்கான போர் தண்ணி ஆயிரம் லிட்டர் 200 ரூபாய்க்கு விற்குறாங்க. அது ஒரு வாரத்துக்கு வரும். குடிக்கிற தண்ணி ஒரு குடம் 10 ரூபாய்னு விக்குறாங்க. ஒரு நாளைக்கு ஒரு குடம்னு வாரத்துக்கு 7 குடம் வாங்குறோம். 4 பேர் வசிக்குற குடும்பத்தில தண்ணிக்குன்னே மாசத்துக்கு 1,100 ரூபாய் செலவு பண்ண வேண்டியிருக்கு.’’

ஜரீனா பேகம் (விருதுநகர்)
‘‘8 நாளைக்கொரு முறைதான் தண்ணீர் விடுறாங்க. அந்தத் தண்ணீரும் குடிக்கவே முடியாத அளவுக்கு சாக்கடை நாற்றத்தோடதான் வருது. குளோரின் மருந்து வாசனையும் சேரும்போது தண்ணிய வாயிலயே வைக்க முடியாது. புழங்குறதுக்குக் கூட லாயக்கே இல்லாத தண்ணியை வேற வழி இல்லாம புழங்கிக்கிட்டிருக்கோம். 8 நாள்ங்கிறது சில வேளை 10 நாளாக் கூட மாறும். அப்பவெல்லாம் தண்ணீர் தீர்ந்து போய் குடத்தை தூக்கிட்டு பக்கத்துத் தெரு, அதுக்கடுத்த தெருவுக்கெல்லாம் போவோம். அதிலும் பெரும்பாலான நேரம் ஏமாற்றத்தோடுதான் திரும்ப வருவோம்.

குடிக்கிற தண்ணி ஒரு குடம் 12 ரூபாய்னு விக்குறாங்க. அதைத்தான் வாங்கிக் குடிச்சிக்கிட்டிருக்கோம். மாசச் செலவுப் பட்டியல்ல குடிக்கிற தண்ணியும் சேர்ந்துகிச்சுங்கிறதுதான் கவலையா இருக்கு. அருப்புக்கோட்டை பக்கமெல்லாம் இன்னும் கொடுமையான நிலைமை. தீபாவளி, ரம்ஜான் போல பண்டிகை மாதிரிதான் அங்க தண்ணீரே விடுறாங்க...’’ கூலி வேலை செய்து பிழைப்பவர்கள் தங்களது குறைந்த வருவாயில் தண்ணீருக்கென ஒரு பகுதியை ஒதுக்க வேண்டிய அவல நிலை ஏன்? நீர் மேலாண்மை மேல் அரசு அக்கறை செலுத்தாததற்கு தண்ணீருக்குப் பின்னால் இருக்கும் வணிகமும் ஒரு காரணம் என்று கூறும் சூழலியலாளர் நக்கீரன் விரிவாகப் பேசுகிறார்...

‘‘நீர் மேலாண்மை என்கிற சொல்லுக்கு அர்த்தத்தையே அறிந்திராத அரசாகத்தான் இது இருக்கிறது. சென்னைக்கு ஆண்டுக்கு 13 டி.எம்.சி. தண்ணீர் தேவை. மாநகர் மற்றும் புறநகரில் உள்ள நீர்நிலைகளை சரியாகப் பராமரித்தாலே தேவைக்கும் அதிகமான  நீரை நாம் பெற்று விட முடியும். அதை விடுத்து, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை முன் நிறுத்துவது மிகவும் அபத்தமானது. அதன் மூலம் சென்னைக்கு 2 டி.எம்.சி. தண்ணீர்தான் கிடைக்கும். தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான மழை வளம் இருந்தும் நம்மால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதே மோசமான நிர்வாகத்துக்கான சாட்சியம்.

1970களில் எடுத்த கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 39 ஆயிரத்து 202 ஏரிகள் இருந்திருக்கிறது. இன்றைக்கு அவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகியும் பராமரிப்பின்றியும் கிடக்கின்றன. சென்னையில் குடிநீருக்கென ஒதுக்கப்பட்ட 29 ஏரிகளில் 10 ஏரிகளைக் காணவில்லை. மீதமிருக்கும் 19 ஏரிகளும் 25 முதல் 75 சதவிகிதம் வரையிலும் சுருங்கிக் கொண்டு வருகிறது. ‘லேக் ஏரியா’ என்பதே ஏரியை அழித்து உருவாக்கப்பட்டதுதானே? தாம்பரத்தில் ஒரு வார்டே ஒரு ஏரிக்குள்தான் இருக்கிறது. இந்த அரசுக்கு நீர் நிலைகள் மற்றும் நீர் வழிப்பாதைகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை ஒரு போதும் இருந்ததில்லை.

நீர் நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்கென்றே பொதுப்பணித்துறையில் ‘லஸ்கர்’ எனும் கீழ்நிலைப் பணியாளர்கள் இருந்தார்கள். ஆக்கிரமிப்புகளைக் கண்காணிப்பதோடு, ஆற்றுப்பாசன மதகுகளை திறந்து விடுதல் போன்ற பணிகளையும் அவர்கள் மேற்கொண்டு வந்தார்கள். தினமும் ஏரி, குளம் என தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நீர்நிலைகளை சுற்றிப் பார்த்து அதன் நிலவரத்தை அதிகாரிகளுக்குத் தர வேண்டும். இந்தத் தகவல்களைக் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர் மேலாண்மை குறித்து திட்டமிட முடிந்தது.

இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பவர்கள் கூட கடைசித் தலைமுறை லஸ்கர்கள்தான். இவர்களுக்குப் பிறகு அந்தப் பணியில் யாரும் அமர்த்தப்படவில்லை. நீர் மேலாண்மைக்காகவே இருந்த இப்பணியை ஒழித்ததன் நோக்கமே ஆக்கிரமிப்பு மேற்கொள்ளத்தான். நீர் மேலாண்மைக்குப் பின்னால் மிகப்பெரும் வியாபார அரசியலே இருக்கிறது. ஏரி, குளங்களை தூர்வார வேண்டுமென்றால் கடும் விதிமுறைகள் உண்டு. 1952ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘மைனர் மினரல் ஆக்ட்’ நீர்நிலைகளில் உள்ள தூரை அகற்றக்கூடாது என்கிறது. ஏரிகளில் இருந்த வண்டல் மண்ணைத்தான் விவசாயிகள் உரமாகப் பயன்படுத்தி வந்தார்கள்.

உர விற்பனை நடைபெற வேண்டுமெனில் வண்டல் மண் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட முதலாளிகளுக்கான சட்டம் அது. அதோடு, அரசியல்வாதிகள்தான் தண்ணீர் லாரி வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சரி வர குடிநீர் விநியோகம் செய்வதன் மூலம் தண்ணீரைக் கொண்டு நடக்கிற வணிகம் படுத்து விடும் என்பது கூட இப்போக்குக்கு ஒரு காரணம். மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்தாலும் குளிர்பான / குடிநீர் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி மட்டும் குறைந்தபாடில்லை. சிவகங்கையில் படமாத்தூர் பகுதியில் கிடைக்கும் தண்ணீர் கொக்ககோலா நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது.

ஓட்டுப் போட்ட மக்கள் குடிக்கும் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கையில் தனியார் நிறுவனங்களுக்கு தாராளம் காட்டும் அரசின் போக்கை என்னவென்று சொல்வது? ஆரம்பத்தில் குடிநீருக்கெனவே ஒவ்வொரு கிராமங்களிலும் குடிமராமத்து எனும் அமைப்பு இருந்தது. அந்தந்த கிராமங்களில் உள்ள நீர்நிலைகளின் உரிமை அந்தந்த கிராம மக்களிடமே இருந்தது. குடிமராமத்து மூலம் அவர்கள் நீர் மேலாண்மை புரிந்து வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் குடிமராமத்து அமைப்பு தகர்க்கப்பட்டு வருவாய் ஈட்டுவதற்கென நீர்நிலைகள் அரசுடைமையானது.

அப்போதுதான் மக்களுக்கும் நீர்நிலைகளுக்குமுள்ள தொடர்பு அறுந்து போனது. கிராம மக்கள் கையில் நீர் மேலாண்மைக்கான அதிகாரம் கிடைக்கப்படும்போதுதான் அவர்களுக்குத் தேவையான நீரை அவர்கள் முறையாக பாதுகாத்துக் கொள்வார்கள். இதை சமகாலத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் ராஜேந்தர் சிங். வறட்சி மாநிலமான ராஜஸ்தானில் ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகியும், வண்டிப்பாதையாகவும் இருந்த 5 நதிகளை பொதுமக்கள் உதவியோடு மீட்டெடுத்திருக்கிறார் அவர். ‘தண்ணீர் நாடாளுமன்றம்’ அமைப்பை உருவாக்கிய அவர் ஆல்வாரி நதிக்கரையில் உள்ள 72 கிராம மக்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆல்வாரி நதியைக் கொண்டு வந்திருக்கிறார்.

மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நீர் மேலாண்மைக்கான அதிகாரத்தை மீட்டெடுத்த நிகழ்வு இது. மக்களைக் கொண்டே மழைக்கு ஆதாரமான மரங்களை நட்டிருக்கிறார். ராஜேந்தர்சிங் இதை சாத்தியப்படுத்திய ராஜஸ்தானில் ஆண்டுக்கு 200-400மி.மீக்கும் குறைவாகத்தான் மழை பொழிகிறது. அப்படியிருந்தும் அங்கு முப்போகம் விளைவிக்கப்படுகிறது. சென்னையில் மட்டுமே ஆண்டு சராசரியாக 985 மி.மீ மழை பெய்தும், நம்மால் குடிநீர் ஆதாரத்தைக் கூட வலுப்படுத்த முடியவில்லை.

சென்னையில் பெய்த பெருமழையை முறையாக பயன்படுத்த சிறிதளவு கூட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளின் கொள்ளளவையும் உறுதிப்படுத்தியிருந்தாலே போதுமானது. என்ன செய்வது? இது மக்கள் நலனுக்கான அரசாக இருந்தால் மேற்சொன்னதை எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கிறது’’ என்கிறார் நக்கீரன். நீர் மேலாண்மையை அறிய விஞ்ஞான / பொறியியல் அறிவெல்லாம் தேவையில்லை.

அடிப்படை அறிவு இருந்தாலே போதுமானது. அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டிய இந்த சீர்மிகு பணியை தமிழகத்தில் பல தனிநபர்/தன்னார்வ அமைப்புகள் சிறப்பாக செய்து காட்டியிருக்கின்றன. சேலத்தில் மக்களைத் திரட்டி 4 நீர்நிலைகளை புணரமைத்த பியூஸ் மனுஷ் இதற்கு மாபெரும் உதாரணம். சேலத்தைச் சேர்ந்த பியூஸ் மனுஷ் வறண்டு கிடந்த பகுதிகளில் மரங்கள் நடும் பணியை மேற்கொண்டு வந்தார். 2009ல் ஏற்பட்ட கடும் வறட்சி அவருக்குள் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நீர்நிலைகளெல்லாம் முறையான பராமரிப்பின்றியும் ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகியிருப்பதுமே இந்நிலைக்குக் காரணம் என்பதை உணர்ந்தார்.

அதன் வெளிப்பாடாக ‘சேலம் மக்கள் குழு’ என்கிற பெயரில் மக்களை ஒருங்கிணைத்து கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியை தூர்வாரி புணரமைத்தார். தூர் மண்ணை ஏரிக்குள்ளேயே சிறுசிறு திட்டுகளாகக் கொட்டி அதனுள் மரங்களை நட்டார். ஏரியைச் சுற்றிலும் மரங்கள் நட்டு வளர்த்தார். அம்மாப்பேட்டை குமரகிரி ஏரியிலும் இதே போன்ற சீரமைப்பை மேற்கொண்டு, இரு ஏரிகளையும் பல்லுயிர்ச் சூழல் நிலவும் பகுதியாக மாற்றிக்காட்டியுள்ளார். அரிசிப்பாளையம் சத்திரம் தெப்பக்குளம், பள்ளப்பட்டி தெப்பக்குளம் ஆகிய குளங்களைத் தூர்வாரியதன் பிறகு அது பொதுமக்களின் உபயோகத்துக்குப் பயன்படுகிறது.

‘‘நிலத்துக்கடியில் நீர் இறங்குவதற்கான வாய்ப்பையே நாம் முற்றிலுமாக முடக்கி வருகிறோம். அரசால்  போடப்படும் சாலைகளும் சரி, தனிநபர்கள் கட்டும் வீடுகளிலும் சரி... மண்தரைகளே இல்லாமல் காங்கிரீட்டால் நிரப்பி விடுகிறோம். நம் ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் இயற்கைக்கு விரோதமானதாக இருக்கும்போது நிலத்தடி நீர் குறைந்து விட்டது என்று அங்கலாய்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று இருப்பது போல இயற்கைக்கு ஒரு மாற்றை உருவாக்க முடியும் என்று நம்புவதுதான் நமது முட்டாள்தனம். ஏ.சி. ஒரு அறையைக் குளுமைப்படுத்துகிறது. ஆனால், அது சூழலியலை சூடாக்குகிறது. வீட்டைச் சுற்றி மரங்களை வளர்த்தோம் என்றால் யாருக்கும் எந்தக் கேடும் இருக்காது... குளிர்ச்சியும் இலவசமாகவே கிடைக்கும். இயற்கையைச் சிதைக்காமல் வாழ்வது எப்படி என்கிற அறிவுதான் நமக்குத் தேவை. குடிநீருக்கு ஆதாரமான மழை வளத்தைப் பெருக்க மரம் வளர்க்க வேண்டும். மழைநீரைக் கொண்டு நிலத்தடி நீரைப் பெருக்க வேண்டும்.

எத்தனையோ காரணங்களுக்காக குழி தோண்டுகிறார்கள். சாலை ஓரத்தில் தெருவுக்கு தெரு குழி தோண்டி மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து க்ரில் கேட் மூலம் மூடி விடலாம். இதனால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை. மக்கள் நலன் மீது அக்கறை கொள்ளும் அரசு இதைச் செய்யும். சென்னை சேத்துப்பட்டு ஏரியை 42 கோடி ரூபாயில் புணரமைத்ததை முதலமைச்சர் பெருமையுடன் விளம்பரப்படுத்துகிறார். இங்கு மக்களே இரண்டரை கோடி ரூபாய் செலவில் 5 ஏரிகளை தூர்வாரி புணரமைத்திருக்கிறோம். அதனுள் மரங்களை நட்டு ஒரு பறவைகள் சரணாலயமாகவும் உருவாக்கியிருக்கிறோம்.

ஏரியைச் சுற்றிலும் மரங்களை நட்டு சிறுவனமாக பல்லுயிர்ச் சூழலுக்கு வழிவகை செய்திருக்கிறோம். இந்தப் பணியை முழு முனைப்போடு அரசு கையிலெடுத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் ஓராண்டுக்குள் புணரமைக்க முடியும். செய்வார்களா?’’ என்கிறார் பியூஸ் மானுஸ். கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள 9 குளங்களை தூர் வாரி புணரமைத்து நிலத்தடி நீர் மட்ட அளவை உயர்த்தியதில் ‘சிறுதுளி’ அமைப்பின் பணி குறிப்பிடத்தக்கது. 2003ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்றைக்கும் தீவிரத்தன்மை குன்றாமல் இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் வனிதா மோகனிடம் பேசினோம்...

‘‘2003ம் ஆண்டு கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கோவையைச் சுற்றியிருந்த பகுதியில் விவசாயம் பின்னடைவைச் சந்தித்திருந்தது. நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்திருந்தது. கோவை மாநகரில் மட்டுமே 9 குளங்கள் இருந்தது. அவை குப்பைக்கழிவுகளால் நிரம்பியும், அதன் நீர்வழி பாதைகள் அடைபட்டுமிருந்தன. அக்குளங்களை தூர்வாரி சரி செய்வதன் மூலம் மழைக்காலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும் என்று தோன்றியதன்  விளைவாகத்தான் சிறுதுளி அமைப்பைத் தொடங்கினோம்.

முதலில் 2 குளங்களைத் தூர்வாறி செப்பனிட்டோம். பிறகு 2 நாட்கள் பெய்த மழையில் அந்தக் குளங்கள் நிறைந்தன. சுற்றுப்புறத்தில் உள்ள போர்வெலில் தண்ணீர் வந்தது. அதன் தொடர்ச்சியாக மற்ற 7 குளங்களையும் பொதுமக்கள் உதவியுடன் தூர்வாரினோம். எங்களின் இந்த முயற்சி நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. மற்ற நகரங்களைக் காட்டிலும் கோவையில் நிலத்தடி நீர் அதிகமாக இருக்கிறது.

கோவை மாநகரில் மழைநீர் தேங்கி நிற்கும் 500 இடங்களில் குழி தோண்டி கப்பி, கல் ஆகியவற்றைக் கொண்டு மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்திருக்கிறோம். மழை பெய்து 2 மணி நேரத்தில் அத்தொட்டிகள் வழியாக மழைநீர் நிலத்துக்குள் இறங்கி விடும். கோவை மாநகரைச் சுற்றியிருக்கக் கூடிய பஞ்சாயத்துகளில் உள்ள குட்டைகளையும் தூர்வாறியிருக்கிறோம். காட்டாற்று வெள்ளத்தை அது போன்ற குட்டைகளில் ஒன்றன் தொடர்ச்சியாக இன்னொன்றில் நிரப்புவதற்கான வழிவகைகளை மேற்கொண்டு வருகிறோம்.

நொய்யலாற்றின் நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகியிருக்கின்றன. சில பாதைகள் வண்டித்தடமாக மாறிவிட்டன. பொதுப்பணித்துறையுடன் கலந்து அதை மீட்டெடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கோவையில் ஆண்டுக்கு 600 மி.மீ. மழை பெய்கிறது. அதை முறையாக சேமித்தாலே போதுமானது. ஓர் அமைப்பாக எங்களால் இயன்ற அளவில் நீர் மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அரசு இதைக் கையிலெடுத்தால் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும்’’ என்கிறார் வனிதா மோகன். மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளும் அரசு முறையாக நீர் மேலாண்மையை முறைப்படுத்தினால் மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்தால் கூட பெருத்த சேதங்களின்றி மக்களையும் மழைநீரையும் பாதுகாக்க முடியும். பெண்கள் குடத்தோடு அக்னி வெயிலில் அலையும் பரிதாபக் காட்சிகளையும் தவிர்க்க முடியும்.

சென்னையில் குடிநீருக்கென ஒதுக்கப்பட்ட 29 ஏரிகளில் 10 ஏரிகளைக் காணவில்லை. மீதமிருக்கும் 19 ஏரிகளும் 25 முதல் 75 சதவிகிதம் வரையிலும் சுருங்கிக் கொண்டு வருகிறது. ‘லேக் ஏரியா’ என்பதே ஏரியை அழித்து உருவாக்கப்பட்டதுதானே? தாம்பரத்தில் ஒரு வார்டே ஒரு ஏரிக்குள்தான் இருக்கிறது.

முறையாக நீர் மேலாண்மையை முறைப்படுத்தினால் மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்தால் கூட பெருத்த சேதங்களின்றி மக்களையும் மழைநீரையும் பாதுகாக்க முடியும். பெண்கள் குடத்தோடு அக்னி வெயிலில் அலையும் பரிதாபக்  காட்சிகளையும் தவிர்க்க முடியும்.

முதலில் 2 குளங்களை தூர்வாரி செப்பனிட்டோம். பிறகு 2 நாட்கள் பெய்த மழையில் அந்தக் குளங்கள் நிறைந்தன. சுற்றுப்புறத்தில் உள்ள போர்வெலில் தண்ணீர் வந்தது. அதன் தொடர்ச்சியாக மற்ற 7 குளங்களையும் பொதுமக்கள் உதவியுடன் தூர்வாரினோம். எங்களின் இந்த  முயற்சி நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. மற்ற நகரங்களைக் காட்டிலும் கோவையில் நிலத்தடி நீர் அதிகமாக இருக்கிறது.

- கி.ச.திலீபன்
படங்கள்: பிரபு, நாகராஜ், பரமேஸ்வரன், குழந்தைசாமி,சத்யராஜ், செல்லப்பாண்டி