ஓவியம்



வரைதலே வாழ்க்கை

ரம்யா சதாசிவம்

பி.டெக் பயோடெக்னாலஜி, பிறகு எம்.பி.ஏ. என பெரிய படிப்புகள்... பட்டங்கள்... தொடர்ந்து காத்திருக்கிற வாய்ப்புகள், பிரகாசமான எதிர்காலம்... எல்லாவற்றையும் ஒற்றை ஆசைக்காகத் தூக்கி எறிய யாருக்குத்தான் மனம் வரும்? எறிந்திருக்கிறார் ரம்யா சதாசிவம். ஓவியத்தின் மீது அவருக்கிருந்த அளவுகடந்த காதல்தான் காரணம்!



``வாழறது ஒரே ஒரு முறை... அதுல கனவுகளைத் தொலைச்சிட்டு வாழறதுல என்ன அர்த்தம் இருக்கப் போகுது?’’ தத்துவமாக ஆரம்பிக்கிறார் ரம்யா. எல்லாக் குழந்தைங்களையும் போலத்தான் நானும் சின்ன வயசுலயே வரைய ஆரம்பிச்சேன். குழந்தைப் பருவத்தோட காணாமப் போற அந்த ஆர்வம் என் விஷயத்துல அதுக்குப் பிறகும் தொடர்ந்தது. வரைஞ்சிட்டே இருந்தேன். ஆனா, வரையறதை வாழ்க்கையா ஆக்கிக்க முடியும்னு அப்ப தெரியலை. பயோடெக்னாலஜி முடிச்சேன். அப்புறம் எம்.பி.ஏ. முடிச்சேன். படிச்சிட்டிருக்கும்போது என் நண்பர் ஒருத்தருக்கு சினிமா துறையில இருந்த ஈடுபாட்டை, அந்த வெறியைப் பார்த்ததும் எனக்குள்ளயும் ஒரு உத்வேகம் பிறந்தது. நாம நேசிக்கிற ஒரு விஷயத்தை, நமக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தை இவ்வளவு சீரியஸா எடுத்துக்க முடியுமாங்கிறதையே அப்பதான் உணர்ந்தேன். அந்தக் கணம் என்னோட படிப்பு, பட்டம்னு எல்லாத்தையும் தூக்கிப் போட வச்சது. அன்னிலேருந்து நான் முழு நேர ஓவியர்...’’ - அழகான ஃப்ளாஷ்பேக்குடன் அறிமுகம் சொல்கிறார் ரம்யா.

என்னோட பாதை இது இல்லை... என் தேடல்களும் வேறன்னு அம்மா-அப்பாவுக்குப் புரிய வச்சேன். நான் கண்டிப்பா சாதிப்பேன்னு புரிஞ்சுக்கிட்டாங்க. `உன்னை அவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்க வச்சோமே’ங்கிற மாதிரியோ, படிப்புக்காக பண்ணின செலவு வீணாப் போச்சேன்னோ ஒரு வார்த்தைகூட சொல்லாம என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, ஊக்கப்படுத்தினாங்க. என்னோட சூழல்ல இருந்த சுதந்திரம் ஓவியத்துல இன்னும் தீவிரமா என்னை ஈடுபடுத்திக்க உதவினது...’’ - உற்சாகம் குறையாமல் பேசுகிற ரம்யா, ரஷ்ய ஓவியர்களிடமிருந்தே ஓவிய நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்.

"ஐகர் கஸாரின், செர்கை மார்ஷிநிகோ, விளாடிமர்வோலிகாவ்னு ரஷ்ய ஓவியர்களைப் பத்தின தகவல்கள் எனக்குக் கிடைச்சது. அவங்களைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கிற ஆர்வத்துல நிறைய படிக்க ஆரம்பிச்சேன். அவங்களோட ஓவியங்கள் ஒவ்வொண்ணும் எனக்கு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சது. நிறைய நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். 2014ல என்னோட முதல் ஓவியக் கண்காட்சி நடந்தது. கஸாரின் பாணியில பத்து படங்களும், ஆயில் பெயின்ட்டிங்ல மிச்ச படங்களுமா அந்த கண்காட்சியை நிரப்பினேன். நான் எதிர்பார்த்ததைவிடவும் நல்ல வரவேற்பு கிடைச்சது. அங்கேயே நிறைய ஆர்டர்ஸ் வந்தது. அடுத்தடுத்து நிறைய கண்காட்சிகள்... சிலதை தனியாகவும் சிலதை குழுக்கள்ல சேர்ந்தும் நடத்தினேன். இந்த வருஷம் இந்தியா முழுக்க கலந்துக்க நிறைய கண்காட்சிகள் வெயிட்டிங்...’’ - ஆரவாரமின்றிச் சொல்பவரின் ஓவியங்கள் இந்தியக் கலாசாரத்தைப் பற்றிப் பேசுபவை.

"நான் பிறந்து வளர்ந்த நாட்டுல, என் சமூகத்துல, என்னைச் சுத்தி நடக்கிற விஷயங்கள்தான் எனக்கு அதிகப் பரிச்சயமானவை. கோயில்ல நவகிரகத்தைச் சுத்தி வர்றவங்க முகத்துல தெரியற நம்பிக்கையையும், மண்பானை பண்ற ஒரு குயவரோட முகத்துல தெரிய அயர்ச்சியையும் விடவா வேற இடங்கள்ல என்னால எமோஷன்களை தேடிட முடியும்? அதனால எனக்குத் தெரிஞ்ச கலை, கலாசாரங்களையே என் ஓவியத்துக்கான களமாக்கிக்கிட்டேன்...’’ - காரணமும் சொல்கிறார். ஓவியர்களுக்கு வருடத்தின் எல்லா நாட்களும் வசந்த காலமாக இருப்பதில்லை. வறுமையும் பசியும் பட்டினியுமே பெரும்பாலான ஓவியர்களின் நிரந்தர சொத்துகளாக இருக்கும் நிலையில், ரம்யாவுக்குத்தான் தவற விட்ட படிப்பு, வேலை, பொருளாதார அந்தஸ்து குறித்த கவலை எழுவதுண்டா?



"சத்தியமா இல்லை. பொருளாதார ரீதியா ஓவியர்களோட நிலைமை கொஞ்சம் மந்தம்தான். அதுல சந்தேகமில்லை. நம்மூர்ல காசு கொடுத்து ஓவியங்களை வாங்கற பழக்கம் அரிது. நம்மாட்களைப் பொறுத்த வரை, முதலீடுன்னா அது தங்கமும் நிலமும்தான். வெளிநாடுகள்ல ஓவியங்களை ஒரு முதலீடா நினைச்சு வாங்கறவங்க இருக்காங்க.  வட இந்தியாவுலகூட ஓவியங்களுக்கான மதிப்பு நல்லாவே இருக்கு. குறிப்பா நம்ம கலாசாரங்களைப் பதிவு பண்ற, ஒரு கதை சொல்ற மாதிரியான ஓவியங்களை அவங்க விரும்பறாங்க. அப்படி என்னைப் போன்றவங்களோட ஓவியங்களோட மதிப்பு தெரிஞ்சு ஆர்டர் பண்றவங்களை நம்பித்தான் எங்க பிழைப்பு ஓடுது. `நீங்க ஏன் கிளாஸ் எடுக்கக்கூடாது? இன்டீரியர் டிசைனிங்க்கு வரைஞ்சு கொடுக்கக்கூடாது’ன்னெல்லாம் கேட்கலாம். ஒரு மாசத்துக்கு நான் 3 ஓவியங்களை வரையறேன். ஒரு வருஷத்துக்கு 36 ஓவியங்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஓவியத்துலயும் என்னோட திறமை மெருகேறிட்டு வர்றதை உணர்கிறேன். அது முழுநேரமும் என்னை ஓவியத்துக்குள்ளேயே வச்சிருக்கிறதால மட்டும்தான் சாத்தியப்படறதாகவும் நம்பறேன். வேற விஷயங்கள்ல என் கவனம் திரும்பினாலோ, ஓவியத்தை பகுதி நேரமா வச்சுக்கிட்டாலோ இது சாத்தியமாகாது...’’ என்பவர், எந்தவித மனநிலையிலும் தன்னால் தான் நினைத்ததை வரைய முடியும் என்கிறார்.

"மூடுங்கிறதெல்லாம் சும்மா. வரையறதுக்கான மனநிலை வந்தாதான் வரைய முடியும்னு இல்லை. இன்னும் சொல்லப் போனா வரையாம இருக்கிற நேரத்தைக் கடக்கிறதுதான் எனக்குக் கஷ்டம். ஒரு ஓவியத்தை வரைஞ்சு முடிக்கிற வரைக்கும் என்னால தூங்க முடியாது. ஓவியத்துக்குள்ள போயிட்டேன்னா, எனக்கு வேற எந்த சிந்தனையும் தோணாது...’’ - வித்தியாசமாக சிந்திப்பவர், தனது ஓவிய லட்சியத்துக்காக திருமணத்தையும் தவிர்த்திருக்கிறார்.

"கிரியேட்டிவான துறைகள்ல இருக்கிற பலரும் சந்திக்கிற பிரச்னைதான் இது. கல்யாணம்கிறது அவங்களோட தனிமைக்கும் சுதந்திரத்துக்கும் தடையாகிடக் கூடாதேங்கிற பயம்தான் காரணம். எல்லா பொண்ணுங்களையும் போல எனக்கும்  கல்யாணம் பண்ணச் சொல்லி வீட்ல வற்புறுத்தல்கள் இருந்தது. மூணு, நாலு வருஷங்கள் அதுக்காக போராடியிருக்கேன். ஒரு கட்டத்துல வீட்ல புரிஞ்சுக்கிட்டாங்க. இன்னிக்கு என்னால முழு நேரமும் ஓவியத்தைப் பத்தியே சிந்திக்க முடியுதுன்னா என் பெற்றோரோட புரிதலும் ஒத்துழைப்பும்தான் காரணம். சமுதாயத்தோட விமர்சனங்களைப் பத்தியோ, வேற எதையும் பத்தியோ கவலைப்படாம என்னை என் வழியில செயல்பட அனுமதிச்ச அவங்கதான் என் கனவுகளைக் கலையாமலும் காப்பாத்திட்டிருக்கிறவங்க...’’ - நெகிழ்ந்து சொல்பவருக்கு சின்னதும் பெரியதுமாக ஏராளமான கனவுகள்...

‘`மும்பையில உள்ள ஜஹாங்கிர் ஆர்ட் கேலரியில என்னோட ஷோ நடக்கணும்கிறது சின்ன கனவு. வெளிநாடுகள்லயும் அது தொடரணும்கிறது அதுக்கடுத்த கனவு. கடைசி வரைக்கும் வரைஞ்சுக்கிட்டே இருக்கணும். என்னோட கடைசி ஓவியம் என் எதிர்பார்ப்பை நிறைவேத்தற மாதிரி அமையணும்... அது போதும் எனக்கு...’’ கனவுகள் நனவாகட்டும்!       

கடைசி வரைக்கும் வரைஞ்சுக்கிட்டே  இருக்கணும். என்னோட கடைசி ஓவியம் என் எதிர்பார்ப்பை நிறைவேத்தற மாதிரி  அமையணும்... அது போதும்எனக்கு...