நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!



பீனா பிருத்விராஜ்

மாற்றுத்திறனாளி குழந்தைகளை மறைக்கும் பெற்றோர்களுக்கு இடையே பிருத்விராஜ் தம்பதி வித்தியாசமானவர்கள். ஆட்டிசம் பிரச்னையால்  பாதிக்கப்பட்டிருக்கும் தங்கள் மகனுடன் தயங்காமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்... பேட்டிகளில் மறக்காமல்
குறிப்பிடுகிறார்கள்.  ஐபோன் போலவோ, ஆடி கார் போலவோ சமூக அந்தஸ்துக்கான பொருளாக குழந்தைகளைக் கையாளாமல்,   மனத்தடை அற்ற அவர்களின் அணுகுமுறை பற்றி பீனா பிருத்விராஜ் தம்பதியிடம் பேசினோம்…

‘‘என் பையன் அஹத் மோகன் ஜப்பாருக்கு இப்போ 19 வயசு. அவன் வயசு பசங்க பைக் ஓட்டுவாங்க, ஃபேஸ்புக்ல இருப்பாங்க,  என்னென்னவோ பண்ணுவாங்க. ஆனா, அவன் இன்னும் எங்களுக்குக் குழந்தை மாதிரிதான். ஒரு பர்ஃப்யூமை தானா யூஸ் பண்ணாவே  நாங்க சந்தோஷமாகிடுவோம்’’ என்று தாய்மைக்கே உரிய அன்போடு ஆரம்பிக்கிறார் பீனா பிருத்விராஜ்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோருக்கு இருக்கும் பிரச்னைகள் பற்றி கேட்டதும் ஆழ்ந்த யோசனையுடன் தொடர்கிறார். ‘‘எங்களோட அனுபவத்துல இருந்து சொல்றேன். இந்த மாதிரி ஸ்பெஷல் சைல்ட் பிறந்த உடனே பேரன்ட்ஸ் நாலு ஸ்டேஜை தாண்டி வர  வேண்டியிருக்கும். முதல்ல நம்ம குழந்தை ஒரு மாற்றுத்திறனாளிங்கறதை நம்ப மாட்டோம். இரண்டாவது, எனக்கு ஏன் இதுமாதிரி  ஆச்சுன்னு கோபம் வரும், அந்த கஷ்டத்தை ஏத்துக்க மாட்டோம். மூணாவதா மனசு உடைஞ்சு போயிருவோம். ‘நாம மனசு அறிஞ்சு எந்த  பாவமும் பண்ணல... யாருக்கும் எந்தத் துரோகமும் பண்ணல. நமக்கு ஏன் இப்படி நடக்கணும்’னு நினைப்போம். பல பேரன்ட்ஸ் இந்த  மூணாவது ஸ்டேஜ்லதான் மாட்டிக்குறாங்க.

நாங்களும் அப்படித்தான். ஆனா, அதைத் தாண்டி அடுத்து என்னன்னு யோசிச்சோம். அந்தக் கஷ்டத்தை ஜெயிக்கற வழியையும் மீள்றதுக்கு  என்ன பண்ணம்னும் வழிகளைத் தேடினோம். ஒரு குழந்தை மாற்றுத்திறனாளியா பிறக்கறது பேரன்ட்ஸ் தப்பு இல்ல. அந்த குழந்தையோட  தப்பும் இல்ல. இப்படி ஒரு குழந்தையை உங்ககிட்ட கொடுத்தா நல்லா பாத்துக்குவீங்கன்னு தான் கடவுளே கொடுக்கிறார். ஸோ, மாற்றுத் திறனாளிகளோட பெற்றோர் ஆசீர்வதிக்கப்பட்டவங்கன்னுதான் சொல்வேன். மத்தவங்க என்ன நினைப்பாங்கங்கற மனத்தடைகளை எல்லாம்  விட்டுட்டு நம்ம குழந்தை, நம்ம வாழ்க்கைன்னு அடுத்த கட்டம் பத்தி யோசிக்கணும், தைரியமா செயல்படணும்’’ என்கிறார் பீனா.



‘‘என் பையனுக்கு ஆட்டிசம்னு தெரிஞ்ச உடனே, பையனுக்காக தன்னோட வேலையை எல்லாம் விட்டுட்டு, டீச்சிங் தெரபிஸ்ட் கோர்ஸ்  படிச்சாங்க. அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது, சென்னைல ஆட்டிசம் குழந்தைகளுக்கான ஸ்கூல் எதுவும் இல்லைன்னு. அதுக்கு அப்புறம்  நீலாங்கரைல We Can ஸ்கூலை நாங்களே ஆரம்பிச்சு நல்லபடியா நடத்திட்டிருக்கோம்’’ என்ற பிருத்விராஜிடம், ‘பெங்களூரு விமான நிலைய  பிரச்னைதானே உங்களோட மாற்றத்துக்கு முக்கியக் காரணம்’ என்றோம்.

‘‘அப்படியும் இருக்கலாம். பெங்களூர் ஏர்போர்ட்ல ‘உங்க பையன் லூஸா’ன்னு ஓா் ஆபீஸர் கேட்டார். ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையை  எப்படி நடத்தறதுங்கற அடிப்படை விஷயம் கூட அவருக்குத் தெரியல. அந்த நேரத்துல எனக்கு பயங்கர கோபமா இருந்தது. ‘அந்த அதிகாரி  மேல கேஸ் போடலாம்’, ‘சஸ்பெண்ட் பண்ணச் சொல்லலாம்’னு நண்பர்கள், உறவினர்கள் என்னென்னவோ சொன்னாங்க. நல்லா  படிச்சவங்க, பெரிய வேலைல இருக்கறவங்களே இது மாதிரி இருக்காங்களேன்னு கோபம் போய், வருத்தம்தான் வந்தது எங்களுக்கு. ஆட்டிசம் பத்தி எல்லோருக்குமே விழிப்புணர்வு வரணும்னுதான் அதுக்கு அப்புறம் பேச ஆரம்பிச்சேன். சினிமா உலகத்திலேயே பல  நடிகர்களோட குழந்தைகளுக்கு இந்த பிரச்னை இருக்கு. ஆனா, இதைப் பத்திப் பேசறதை அவமானமா நினைக்கிறாங்க. மாற்றுத்திறனாளி  குழந்தைகள் பிறந்துட்டா அவங்களை வெளியிலயே காமிச்சுக்காம வளர்க்கற நிறைய பெற்றோர் இருக்காங்க.

எனக்குத் தெரிஞ்ச ஒரு ஸ்டார் ஓட்டல் அதிபர் அவரோட ஆட்டிசம் பாதிச்ச பையனை வெளிநாட்ல கொண்டு போய் விட்டுட்டு  வந்துட்டார். இன்னொரு நடிகை, அவங்க பையனை வீட்டுக்குள்ளயே அடைச்சு வச்சிருக்காங்க. வெளில தெரிஞ்சா நம்ம கௌரவம்  போயிரும்னு நினைக்கற அளவுக்கு தான் நிலைமை இருக்கு. இதெல்லாம் மாறணும். அதனாலதான், எனக்குக் கிடைக்கிற எல்லா  மேடைலயும் ஆட்டிசம் குழந்தைகளைப் பத்தித் தொடர்ந்து பேசிட்டிருக்கேன். நான் இதை அனுதாபத்துக்காகவோ, வேறு  லாபங்களுக்காகவோ சொல்லல. சமீபத்துல எனக்கும் என் பையனுக்கும் Soul mate award கிடைச்சுது. இதைப் பாத்துட்டு ஒருத்தர்  அப்படித்தான் கேட்டார். என்ன பண்றது? எல்லாத்துக்கும் குறுக்க நின்னு இன்னொரு அர்த்தம் கண்டுபிடிக்கறதுக்குன்னு சிலர் இருக்கத்தானே  செய்வாங்க. அவங்களை நினைச்சு பயந்தா நல்லது நடக்குமா?’’ என்று சிரிக்கிறார் பிருத்விராஜ்.

அதை ஆமோதிக்கிற பீனா, ‘‘வெளிலயே எங்காவது கூட்டிட்டுப் போவும்போது, ‘உங்க பையன் கடிச்சிருவானா’ன்னு சிலர் கேட்பாங்க. அந்த  அளவு அறியாமைதான் இங்க இருக்கு. ஆட்டிசம் குழந்தைகள் மற்ற குழந்தைகள் மாதிரி நார்மலாதான் இருப்பாங்க. ஆனா, யார் கூடவும்  தொடர்பில்லாம இருப்பாங்க. இது மூளை வளர்ச்சியில் ஏற்பட்ட கற்றல் குறைபாடு... அவ்வளவுதான். பொதுவாவே, குழந்தைங்க நாம  என்ன பண்றோமோ அதைத்தான் அப்படியே திருப்பி பண்ணுவாங்க. நாம கைதட்டினா அவங்களும் கைதட்டுவாங்க. அதேமாதிரிதான்  குழந்தைங்கள நீங்க அடிச்சீங்கனாத்தான் திருப்பி அடிப்பாங்க. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அன்புதான் மருந்து. ‘இன்னொரு குழந்தை  பெத்துக்கங்க. உங்க பையனுக்கு ஆதரவா இருக்கும்’னு பலர் சொல்றாங்க. ஆனா, இன்னொரு பையனும் இதே மாதிரி பிறந்துட்டா ரெண்டு  பேரையும் சரியா கவனிச்சு வளர்க்க முடியாது. ஒருவேளை ரெண்டாவது குழந்தை நார்மலா பிறந்தா அந்தக் குழந்தை மேல பாசம் காட்டி,  இவன் இரண்டாம்பட்சமா ஆகிடுவானோன்னுதான் ரெண்டாவது குழந்தையே பெத்துக்கல’’ என்று வாஞ்சையோடு மகனின் தலை கோதுகிறார்  பீனா.

‘‘சரி... நாம இருக்கற வரை நம்ம குழந்தையை கவனிச்சுக்கலாம். நம்ம காலத்துக்குப் பின்னாடி அவங்க நிலைமை என்ன ஆகும்னு பல பேர்  கவலைப்படலாம். அவங்களுக்கு நான் சொல்ல விரும்பறது, மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான். கல்லுக்குள்ள இருக்கற தேரைக்கு உணவு  கொடுக்கற கடவுள், உங்க குழந்தையைக் கைவிட்டுற மாட்டான். மத்தவங்க என்ன நினைப்பாங்க, தப்பாப் பேசுவாங்களேங்கற  மனத்தடையை எல்லாம் விட்டுட்டு, முதல்ல நம்ம குழந்தையை நாம ஏத்துக்கணும். அப்பதான் மத்தவங்க ஏத்துக்குவாங்க. எங்க பையனை  பீச், பார்க்னு வெளியிடங்களுக்குக் கூட்டிட்டுப் போவோம். அங்கயே அவன் கூட விளையாடு வோம். சுத்தியிருக்கறவங்க, ‘பையன்கிட்ட  ஏதோ வித்தியாசம் தெரியுதே’ன்னு பார்ப்பாங்க. அடுத்த தடவை அவங்களே புரிஞ்சுக்குவாங்க. முதல் தடவை ஒரு மாதிரியா  பார்ப்பாங்களேன்னு தயங்கினா, அதுக்கு நாம வாழ்நாள் முழுவதும் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

சமூகத்துக்காக வாழ வேண்டியதும் முக்கியம்தான். ஆனா, தப்பே பண்ணாம நம்ம குழந்தையையும் கஷ்டப்படுத்தி, நாமளும் வெளில  சொல்ல முடியாத சித்ரவதையை வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டியதில்லை’’ என்கிறார் பிருத்விராஜ். உண்மைதான்!

"மத்தவங்க என்ன நினைப்பாங்க, தப்பாப் பேசுவாங்–்களேங்கற மனத்தடையை எல்லாம் விட்டுட்டு, முதல்ல நம்ம குழந்தையை நாம  ஏத்துக்கணும்."

"ஒரு குழந்தை மாற்றுத்திறனாளியா  பிறக்கறது ேபரன்ட்ஸ் தப்பு இல்ல. அந்த குழந்தையோட தப்பும் இல்ல. இப்படி ஒரு குழந்தையை  உங்ககிட்ட கொடுத்தா நல்லா பாத்துக்குவீங்கன்னு தான் கடவுளே  கொடுக்கிறார்."

- ஞானதேசிகன்
படங்கள்: பரணி