ஒரு பெண் நிகழ்த்துகிறாள்



சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னை செல்லும் ரயில்பயணத்தில் ஒரு முதிர்ந்த தம்பதியைப் பார்த்தேன். மனைவிக்கு 65 வயதிருக்கலாம்... கணவருக்கு 70 இருக்கலாம். அந்த இரவு நேரப் பயணத்திலும் அவர்கள் இருவருக்கும் களைத்துப் போகாத தெளிந்த முகம். அவர்களது செயலும் பாவனைகளும் மட்டுமல்ல... உடலும் கூட ஒன்று போலவே இருந்தது. நீண்டகால தாம்பத்தியம் அவர்களை அவ்விதமாக ஒன்று போலவே ஆக்கியிருந்தது என்று தோன்றியது. மூன்றடுக்கு இருக்கையில் அவர்களுக்கு இரண்டு பக்கங்களிலும் மையத்தில் படுக்கை கிடைத்திருக்கிறது. நான் மேலே என்பதால் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

அந்த கணவர் தன்னுடைய மனைவிக்கு வசதியாக கீழ்ப்படுக்கை அமைத்துத் தருவதில் கவனமாக இருந்தார்.பயணச்சீட்டு பரிசோதகரிடம் கேட்டுப் பார்த்தார். அவர், ‘பயணிகளுக்குள் நீங்களே அனுசரித்து மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். எங்கள் பகுதிக்கு கொடைரோட்டில் ஆள் ஏறுவதாக இருந்து. ஒரு பெண்ணும் அவருடைய வயதான தாயாரும்திண்டுக்கல்லில் ஏறினார்கள். அந்தப் பெண்ணிடம் தன் மனைவிக்கு இருக்கையை விட்டுக்கொடுக்குமாறு கேட்டுப் பார்த்தார். அந்தப் பெண்ணோ, ‘உடல்நலம் இல்லை... இடையிடையே எழுந்துக்க வேண்டியிருக்கும்’ எனச் சொல்லிவிட்டார். அவர் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு  பக்கத்துத் தடுப்புக்குச் சென்றார்.

‘யாராவது கீழ்ப்படுக்கை விட்டுத் தரமுடியுமா’ என மனைவிக்காகக் கேட்டார். பிறகு இளைஞர் ஒருவர் இடம் மாற்றிக் கொண்டார். இவர் ஓடும் ரயிலில் மனைவியைக் கைப்பிடித்து பக்கத்து தடுப்பின் படுக்கைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்து விட்டு திரும்பி வந்து மையத்தில் ஏறிப் படுத்துக் கொண்டார். ரயில் திருச்சியை நெருங்கி விட்டது. இப்போது நினைத்துப் பார்க்கிறேன்... இது போன்ற காட்சியை நான் ஒவ்வொரு ரயில் பயணத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரயில் மட்டுமல்ல... இரவு நேர பேருந்துப் பயணங்களில் தன்னுடைய மனைவியை நள்ளிரவில் அழைத்துச் சென்று சிறுநீர் கழிக்கவோ, பால் வாங்கிக் கொடுக்கவோ பரிவுடன் நடந்து கொள்கிற ஆண்களைப் பார்க்கிறேன். மனைவியைக் கைப்பிடித்து சாலையைக் கடக்கச் செய்யும் வயதான கணவன்களைப்  பார்த்திருக்கிறேன். அவரும் கையில் ஒரு தடி வைத்திருக்கலாம், தடுமாறி நடக்கலாம் என்றாலும் மனைவியிடம் அவர்கள் காட்டுகிற பரிவு குறித்து நான் கவனம் கொள்வதுண்டு.  நீண்ட காலத் தாம்பத்தியம் அமையப் பெற்ற தம்பதியரை அவதானிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும்.

‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தில் முதிர்ந்த தம்பதியின் நெருக்கத்தையும் அல்சைமர் நோய்வாய்ப்பட்ட மனைவியிடம் கணவனின் அரவணைப்பும் நேர்த்தியாக காட்டப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது. இவர்களுக்குள் ஆரம்ப காலத்தில் மனவேறுபாடு இருந்திருக்கும்தானே? உடலின் வாசனையோ, வேறு எதுவோ ஒன்று அவர்களுக்குள் பிடிக்காமல் போயிருக்கும்தானே? உணவின் சுவை வேறுவேறாக இருக்கும் தானே? உடுத்துவது, உறங்குவது என ஒரு நாளின் பழக்கவழக்கங்களில் மாறுபட்டிருப்பார்கள்தானே? இப்படி எத்தனையோ இருந்தும் அவர்கள் மிகஒற்றுமையாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த விட்டுக்கொடுக்கும் இடம் அல்லது ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் நிலை என்பது எவ்விதம் நிகழ்ந்திருக்கும்?

பெரும்பாலும் வயதான பின்பு கணவன் இறந்து விட்டால், பெண்கள் மகன் வீடு, மகள் வீடு என அனுசரித்துக் கொண்டு தங்கள் வாழ்வைத் தொடரும் மனநிலைக்கு வந்துவிடுவார்கள். மனைவிஇறந்துவிட்டாலோ அந்த ஆண் மிகவும் தளர்ந்துபோய் விடுகிறான் என்பதே உண்மை. ஏனெனில் பெண் என்பவள் தகப்பன், சகோதரன், பிறகு கணவன் என சார்பு நிலையிலேயே வளர்க்கப்படுகிறாள் என்பதால், மகனிடமோ மகளிடமோ இணைந்து அவர்கள் தங்கள் வாழ்வைத் தொடர இயலுகிறது. ஆண் என்பவன் வளர்ப்பிலேயே தனித்து வளர்க்கப்படுகிறான். ஆண் பொருளீட்டத் தொடங்கியவுடன் அவனுக்கு தான் ‘ஆண்’ என்கிற எண்ணமும் அது சார்ந்த சமூகத்தின் கற்பிதங்களும் மேலோங்குகின்றன. குடும்பம் என்கிற நிறுவனத்தின் மையமாக தானே இருப்பதாக நினைக்கிறான்.

தண்ணீர் சூடு செய்து குடிப்பது, தானே சாப்பாடு போட்டு சாப்பிடுவது, தன்னுடைய உடைகளைத் தானே துவைத்துக் கொள்வது, தன்னுடைய பொருட்களை தானே ஒழுங்கு செய்து வைப்பது போன்ற அடிப்படையான வேலைகளைக் கூட அவன் செய்வதில்லை. அவற்றையெல்லாம்  தன்னுடைய மனைவிபார்த்துக் கொள்வாள் என்றும், அவனைப் பராமரிப்பது, அவன் குழந்தைகளைப் பராமரிப்பது ஆகியவற்றுக்காகத்தான் மனைவி இருக்கிறாள் என்றும் நினைக்கிறான். அதனால் தன்னுடைய நீண்டகால இணையான மனைவி இறந்த பின்பு அவன் செயலிழந்து போகிறான். தனக்கென ஒன்றுமே இல்லாமல் போய்விட்டதாக நினைக்கிறான்.

ஆண்தான் இந்தச் சமூகத்தின் மையம் எனில், இணையான தன்னுடைய பெண்ணை இழந்த ஒருவன் ஏன் இவ்விதமாகத் தளர்ந்து போக வேண்டும்? இது எப்படி நிகழ்ந்தது என சிந்தித்தால், இதை அந்தப் பெண்ணே நிகழ்த்துகிறாள். பொதுவாக திருமணம் ஆனவுடன் ஒரு பெண்ணுக்கு அவளுடைய அம்மா, ‘மாப்பிள்ளைக்கிட்ட பக்குவமா நடந்துகொள்... அவர் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் நீதான் விட்டுக் கொடுத்து போகவேண்டும்’ என்று சொல்வார். ‘காயத்ரி’ திரைப்படத்தில் புதிதாக திருமணமான பெண்ணுக்கு கணவன் வீட்டுச் சூழல் தவறானதாகத் தெரியும். அப்போது அவளைப் பார்க்க வருகிற அம்மாவிடம், ‘உங்களோடு என்னையும் அழைத்துப் போய்விடுங்கள்’ எனக் கூறுவாள். அம்மா மகளிடம், ‘புத்திசாலித் தனமாக நடந்துகொள்ளம்மா’ என்பதாகவே காட்சி அமைக்கப்பட்டிருக்கும். குடும்ப உறவு நிலைத்திருப்பதில் பெண்ணே முதன்மையான பங்கு வகிக்கிறாள் என்பதை இதுபோன்ற சூழல்களின் வழியாக உணர முடியும்.

‘வியட்நாம் வீடு’ திரைப்படத்தில் ‘உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ பாடலில் சிவாஜிகணேசன் நடிப்பது சற்று மிகை என்று தோன்றினாலும், ‘என் தேவையை யாரறிவார்’ என்று கேட்டு நிறுத்திய ஒருகணம் பத்மினியின் முகத்தை அருகில் காட்டுவார்கள். அதில் எழும்புகிற கேள்வியும் ‘உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என்றவுடன் அந்தப் பெண் மனதில் படருகிற நிம்மதியும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. பெண்களுக்கும் ஆண் என்பவன் தன்னைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கிறது. அதனாலேயே அவள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறாள். இந்நிலை எங்கு தொடங்குகிறது? ஆண் பெண் இருவருக்குமான வாழ்வின் முதல் நிகழ்விலேயே கணவனை இனியவன் என்று பெண் நம்பத் தொடங்குகிறாள்.

சங்க காலம் என்பது நிலவுடைமை சமூகம், நிலவுடைமையின் பண்பு பாலியல் ஒடுக்கம். இந்த பாலியல் ஒடுக்கம் என்பது பரந்துபட்டு எல்லோருக்கும் நிகழ்த்தப்பட்டதாக நாம் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. மாறாக களவில் உறவு வைத்துக் கொள்கிற நிலையிலிருந்து திருமணத்துக்குப் பின்பான பாலுறவுக்கு இந்த சமூகம் அங்கீகாரம் கொடுக்கிற செயல் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இது பெண்களை கற்பு நிலைக்கு ஒடுக்குதலுக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். அதனால்தான் காதலில் ஈடுபடுகிற பெண் வீட்டில் அடைத்து வைக்கப்படுகிறாள். கண்காணிக்கப் படுகிறாள். தமையன், தாய் மற்றும் உறவினரால் தண்டிக்கப் படுகிறாள். பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொள்வது என்பது அத்தனை எளிதில் நிகழ்ந்
திருக்க வாய்ப்பில்லை எனவும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. காதலில் ஈடுபடும் பெண்கள் ஆண்களினால் வஞ்சிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் விரும்பிய ஒருவனை இணைத்து வைக்க உதவுகிற தோழியைக் குறித்து மகிழ்வதும் இயல்பாக இருக்கிறது.

சமூகம், பெற்றோர் என அனைவரின் ஆதரவுடன் விரும்பிய ஆணை மணம் முடிக்கிற பெண்கள் மகிழ்வின் உச்சத்தில் இருக்கிறார்கள். திருமணம் முடிந்தது, தலைவி இல்லற வாழ்வில் ஈடுபட்டாள். ஒரு நாள் தோழி தலைவியின் இல்லத்துக்குச் சென்றாள். தோழியின் வரவில் மகிழ்ந்த தலைவி, சிறந்ததொரு தலைவனுடன் பெரிதும் முயன்று தன்னை சேர்ப்பித்தமைக்கு அவளைப் பாராட்டி அஞ்சியத்தை மகள் நாகையார் பாடிய பாடல்...

‘முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்
பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
பாடி இமிழ் அருவிப் பாறை மருங்கின்,
ஆடுமயில் முன்னது ஆக, கோடியர்
 விழவுகொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ
இன்துணைப் பயிரும் குன்ற நாடன்
குடிநன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்;
கெடு நா மொழியலன்; அன்பினன்’ என நீ
 வல்ல கூறி  வாய்வதின் புணர்த்தோய்;
நல்லை காண் இனி -காதல்அம் தோழீஇ!
கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி,
நல்இசை நிறுத்த நயம்வரு பனுவல்,
தொல்இசை நிறீஇய உரைசால் பாண்மகன்
 எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்,
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.

‘அன்புத் தோழியே! ஆராய்ந்து பார்க்குமிடத்து நீ மிகவும் நல்லவள். அருவி ஒலி பாறையிடத்தே மயில் ஆடிவர, கூத்தர் விழாவெடுக்கும் முதிய ஊரில் ஆடுகின்ற விறலியின் பின்னால், மத்தளக் கருவியை தழுவிக் கொண்டு வாசிப்பவன் போல, வளைந்து நிற்கும் பலாமரத்தின் குடத்தைப் போன்ற பெரிய பழத்தை தன்னகத்தே பொருந்தத் தழுவிக் கொண்டிருக்கும் ஆண் குரங்கு தன் இனிய துணையாகிய பெண் குரங்கினை அழைக்கும் மலைநாட்டுக்கு உரியவன் நம் தலைவன்...அன்னவன் உயர்குடிப் பிறப்பினன்... தன்னுடன் பழகியோரைப் பிரியலன்... நாவால் கெடுமொழி கூறான்... எல்லோரிடத்தும் அன்பினன் எனவெல்லாம் அவன் சிறப்புகளை எடுத்துக்கூறி என்னுடன் அவனை வைத்தனை...

விரைந்தோடும் குதிரைகள் பூண்ட நெடிய தேரினையுடைய அதியமான் அஞ்சியின் பழம் புகழ் நிறுவிய புகழமைந்த பாண்மகனானவன், இனிய இசைத்தமிழ் நூலின் எண்ணின் முறைப்படி இயற்றிய பண்ணைக் காட்டினும், அவன் புதுமையாக இயற்றிய திறத்தைக் காட்டினும், எம் தலைவன் எம்மைத் திருமணம் செய்த நாளினும் இப்பொழுது பெரிதும் இனியனாக விளங்குகின்றான்.   சுருக்கமாகச் சொன்னால்... திருமணம்  முடிந்த பின் தோழி தலைவியின் வீட்டுக்குச் செல்கிறாள். அவ்வாறு சென்ற தோழியிடம் தலைவி, ‘உன் உதவியால் அடையப்பெற்ற தலைவன் ,’மலைநாடன், நல்ல குடியில் பிறந்தவன், தன்னுடன் கூடிய என்னைப் பிரியாதவன், நெடுநா மொழியை உடையவன், மிக்க அன்புடையவன்’ என்று கூறி எங்களைச் சேர்த்து வைத்தாய். அது அத்தனையும் உண்மை. முன்னைவிடவும் திருமணம் செய்து கொண்ட பின் அவன் மிக இனியவனாக இருக்கிறான்’ என்று சொல்கிறாள்.

ஒரு பெண் தன்னுடைய ஆணிடம் தன்னை ஒப்புக்கொடுக்கும் போது அவனை மிக இனியவனாக நினைக்கிறாள். அதற்கு முன்பாக அவனை  ‘தன்னுடைய ஆண்’  என்று நம்பிக்கையடைகிறாள். மேலும் அவனே இந்த உலகத்தின் மிகச் சிறந்த ஆண் என்றும் அவனுடைய நெஞ்சில் இவளுக்கு மட்டுமே இடம் இருப்பதாகவும் அவனை இவள் மட்டுமே அரவணைத்துச் செல்ல முடியும் எனவும் நம்புகிறாள். இந்த நம்பிக்கையின் பொருட்டே அவன் வாழ்வில் யாவற்றையும் பெண்நிகழ்த்துகிறாள்.

அஞ்சியத்தை மகள் நாகையார் இந்தப் பெயர் காரணம் இரண்டு விதமாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, அஞ்சி என்பவரின் அத்தை மகள் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இந்த அஞ்சி என்பவர் அதியமான் நெடுமான் அஞ்சியாகவும் இருக்கலாம்.  நாகு என்னும் சொல் இளமையைக் குறிக்கும். இந்த வகையில் ‘அஞ்சியத்தை மகள் நாகையார்’ என அழைக்கப்பட்டிருக்கலாம். அல்லது இவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தவராக இருக்கலாம். அடுத்தது, அஞ்சி எனும் பெயர் உடைய ஒருவரை ‘அஞ்சியத்தை’ என அவர் உறவினர் அழைத்திருக்கலாம். அவருடைய மகளாக ‘நாகையார்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாம். எவ்விதமாகவும் இவரது இயற்பெயர் ‘நாகை’ என்றிருக்கலாம். இவர் பெண்பாற் புலவர்தான் என்பதைப் பாடலில் உள்ள குறிப்புகளும் உறுதி செய்கின்றன.

இவரது பாடல், அகப்பாடலாக இருப்பதும் பெண்கூற்றாக இருப்பதும் ஒரு பெண்புலவரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கருத வைக்கின்றன.
இந்தப் பாடலில் கிடைத்துள்ள குறிப்புகள்குதிரைகள் பூட்டிய நெடுந்தேரை ஓட்டும் அஞ்சி மன்னனையும் அவன் மேல் பாடப்பட்ட இசைப் பாடலையும் அதனைப் பாடிய பாணனையும் தலைவி குறிப்பிடுகிறாள்.இசை பற்றிய குறிப்புகளையும் பாணன் இசைப் பண்ணை அமைத்தான் என்றகுறிப்பையும் இப்பாடல் தருகிறது (352:14-15).விறலியர், உழவர், பாண்மகன் ஆகிய பல்கலை வாணர்களை இப்பாடல் சுட்டுகிறது.மூதூரில் விழாக்கள் நடந்தன என்பதையும் விழா நாளில் விறலி ஆடுவாள் என்பதையும் அவள் ஆட்டத்துக்கு ஏற்ப, கலைஞர் முழவை அடிப்பார் என்பதையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.   
    
முன்பே இருந்த பண்களை மேலும் ஆராய்ந்து பாணன் புதிது புதிதாகப் பண்ணை அமைத்தான் என்றும் தெரிவிக்கிறது. ஒரு பாடலாயினும் பலவகையாலும் செய்திச்செறிவுடைய கலைப் பாடலாகும் இது.இவரது பாடலாக சங்க இலக்கியத்தில் ஒன்று மட்டுமே கிடைத்துள்ளது. அக நானூறு: 352.

ஒரு பெண் தன்னுடைய ஆணிடம் தன்னை ஒப்புக்கொடுக்கும் போது அவனை மிக இனியவனாக நினைக்கிறாள். அதற்கு முன்பாக அவனை  ‘தன்னுடைய ஆண்’  என்று நம்பிக்கையடைகிறாள்.

 (சங்கத் தமிழ் அறிவோம்!)