தமிழ் சினிமாவின் முதல் பெண்



ஆர்ட் டைரக்டர்!

ஆர்ட் டைரக்டர், ‘ஓ.கே. கண்மணி’ என கவனம் ஈர்க்கிறது விளம்பரம்.‘யே தில்லகி’, ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’, ‘தால்’, ‘குச்குச் ஹோத்தா ஹை’, ‘பண்டி அவுர் பப்ளி’ என பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்கள் பலவற்றுக்கும் மேடம்தான் ஆர்ட் டைரக்டர். மணிரத்னத்தின் ‘ஓ.கே.கண்மணி’ மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கிற ஷர்மிஸ்டாவிடம் தன் அந்தஸ்து குறித்த அகந்தை கொஞ்சமும் இல்லை.

‘‘பாலிவுட்ல எத்தனையோ படங்கள் பண்ணிட்டேன். ‘ஓ.கே. கண்மணி’ என்னோட ஃபர்ஸ்ட் ரீஜினல் ஃபிலிம். பயங்கர எக்சைட்மென்ட்டோட காத்திட்டிருக்கேன்...” எதிர்பார்ப்புடன் எளிமையாக ஆரம்பிக்கிறார் மிஸ் ராய். சிறந்த ஆர்ட் டைரக்டருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை 3 முறைகளும், சிறந்த புரொடக்ஷன் டிசைனருக்கான தேசிய விருதையும் வென்ற பெருமைக்குரியவர்.

‘‘அப்பா சுதேந்து ராய், பாலிவுட்ல டைரக்டரா, ஆர்ட் டைரக்டரா, புரொடக்ஷன் டிசைனரா ரொம்பப் பிரபலம்.  ஆனாலும், சினிமா வாசனை இல்லாத ட்ரெடிஷனல்
பெங்காலி மிடில் கிளாஸ் குடும்பத்துப் பொண்ணாதான் என்னை வளர்த்தாங்க. வீட்ல எப்போதும் கலைகளைப் பத்தின பேச்சுக்குப் பஞ்சமிருந்ததில்லை. நான் இன்டீரியர் டிசைனிங் படிச்சேன். அப்பாகூட அவரோட ஆர்ட் டைரக்ஷனுக்கு உதவியா ஸ்கெட்ச் போட்டுத் தர்றது, டிராஃப்ட் ரெடி பண்றதுனு சின்னச் சின்ன வேலைகள் செய்து கொடுத்திட்டிருந்தேன். அப்படித்தான் எனக்கும் ஆர்ட் டைரக்ஷன்ல ஆர்வம் வளர்ந்தது. நாங்க அப்போ மும்பையில இருந்தோம். அப்பாவுக்கு உதவியா நான் இந்த வேலைகளைப் பண்றதைப் பார்த்துட்டு, எனக்கும் தனிப்பட்ட முறையில ஆர்ட் டைரக்ஷன் பண்ண வாய்ப்புகள் தேடி வந்தது.

அப்பா தன்கூட ஆபீஸுக்கு வர்றதையோ, ஷூட்டிங் ஸ்பாட் வர்றதையோ கூட விரும்ப மாட்டார்.  ஆனா, யாஷ் சோப்ரா, கரண் ஜோஹர், மகேஷ் பட்னு எல்லாமே பெரிய பெரிய டைரக்டர்ஸோட படங்களா இருந்ததால, ஒரு கட்டத்துல அப்பாவும் ஓ.கே. சொல்லிட்டார். அப்பாகிட்ட கத்துக்கிட்ட விஷயங்கள், முதல் படம் பண்ற போதே, எனக்குத் தேவையான அனுபவங்களைக் கொடுத்திருந்தது. இதுவரைக்கும் 50க்கும் மேலான படங்கள் பண்ணிட்டேன். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு டைரக்டரும் என்ன எதிர்பார்க்கறாங்களோ, அதை அவங்க எதிர்பார்த்ததைவிட பெட்டராவே பண்ணிக் கொடுத்திருக்கேங்கிற திருப்தி எனக்கு உண்டு...’’ அறிமுகப் படலம் சொல்லி நிறுத்துபவருக்கு மணிரத்னத்தின் அறிமுகமும் அழைப்பும் தந்த இன்ப அதிர்ச்சி இன்றுவரை குறையவில்லை.

‘‘நான் மணிரத்னம் சாரோட பயங்கரமான ரசிகை. ‘ரோஜா’ படம் பார்த்ததுலேருந்து அவரை சந்திக்கணும், அவர்கூட ஒர்க் பண்ணணும்னு ஒரு வெறி. ஷாத் அலி என்னோட நண்பர். அவர் மணிரத்னத்தோட ‘தில் சே‘ படத்துல அசிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணியிருக்கார். என்னைப் பத்தி மணி சார்கிட்ட சொல்லி, அறிமுகப்படுத்தி வச்சார். மணிரத்னம் படத்துல ஒர்க் பண்ணணும்கிற ஆசை இல்லாத டெக்னீஷியன் யாராவது இருப்பாங்களா? என்னைப் பத்திக் கேள்விப்பட்டு, ‘ஓ.கே. கண்மணி’யில ஆர்ட் டைரக்டரா ஒர்க் பண்ற சான்ஸை கொடுத்தார். மணிரத்னம்கூட ஒர்க் பண்ணினது நிஜமாவே வொண்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ். அவருக்குத் தெரியாத ஃபீல்டே கிடையாது. யார்கிட்ட எந்த வேலையை ஒப்படைக்கலாம்னு தெரிஞ்சவர். அப்படி அவர் செலக்ட் பண்ற நபர்கிட்ட தன்னோட எதிர்பார்ப்பை விளக்கமா சொல்லி, வேலையை ஒப்படைச்சிடுவார். அதுக்கப்புறம் அந்த வேலையில குறுக்கிட மாட்டார்.

அவர் நம்ம மேல வைக்கிற அந்த நம்பிக்கையே வேலையை நல்லா பண்ண வச்சிடும். கையில உள்ள குழந்தையை பொறுப்பா பத்திரமா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமையில்லையா... சுருக்கமா சொல்லணும்னா, மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம்னு ஜாம்பவான்களோட ஒர்க் பண்ணின அந்த அனுபவம், தினம் தினம் ஸ்கூலுக்கு போய் புதுசு புதுசா கத்துக்கிட்ட ஃபீலிங்கை கொடுத்தது...’’ மாய்ந்து மாய்ந்து மணிரத்னம் புகழ் பாடுகிறார் கலை இயக்குநர்.தமிழ் சினிமாவில் பணிபுரிந்ததும் பிரமிப்புக்குரியதாகவே இருக்கிறது இவருக்கு.

‘‘லேங்வேஜ் எனக்கு பிரச்னையாவே இல்லை. முதல் ரீஜினல் படம்னாலும் வேற்றுகிரக அனுபவத்தை எல்லாம் ஃபீல் பண்ணலை. இன்னும் சொல்லப் போனா, இங்க உள்ள மக்கள் டைம் டேபிள் போட்டு ஒர்க் பண்றாங்க. சொன்ன நேரத்துக்குள்ள ஷூட்டிங்கை முடிக்கிறாங்க. கரெக்ட் டைமுக்குள்ள ஷூட்டிங்கை முடிச்ச அனுபவம் எனக்கு ரொம்ப அபூர்வம். இந்தப் படத்துல நான் ஒர்க் பண்ணின 41 நாட்களும் அவ்ளோ என்ஜாய் பண்ணினோம். கேமராமேன், ஹீரோ, ஹீரோயின்னு எல்லாரோட நோக்கமும் படத்தை பெஸ்ட்டா கொண்டு வர்றதுலதான் இருந்தது. படத்துல ஒர்க் பண்றோம்கிறதை மறந்து எல்லாரும் ஒரு ஃபேமிலியாவே மாறிட்டோம்...” என்கிறார் நிஜமான பூரிப்பில்.

டைரக்ஷனில் தொடங்கி, எடிட்டிங் வரை கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் பெண்களைப் பார்த்துவிட்டோம். ஆர்ட் டைரக்ஷன் மட்டுமே விதிவிலக்காக இருந்தது. ஷர்மிஸ்டாவின் வருகை அந்த வெற்றிடத்தை நிரந்தரமாகப் போக்குமா?‘‘தமிழ்லதான் இந்த நிலை. பாலிவுட்ல நிறைய பொண்ணுங்க ஆர்ட் டைரக்ஷன்ல இருக்காங்க. பாலிவுட்ல என்னோட அசிஸ்ட்டென்ஸ்ல பொண்ணுங்கதான் அதிகம். ‘ஓ.கே. கண்மணி’ படத்துக்காக நான் சென்னை வந்தப்பவும், பாலிவுட்லேருந்து அசிஸ்டென்ட்ஸ் யாரையும் கூட்டிட்டு வரலை. இந்தப் படத்துல என்கூட ஒர்க் பண்ணினவங்கள்ல ரெண்டு சென்னை பொண்ணுங்களும் இருக்காங்க. ஷூட்டிங்கோட கடைசி நாள்... முதல் நாள் ராத்திரி மணி சார் திடீர்னு ஒரு பிராப்பர்ட்டி வேணும்னு சொன்னார். அப்பவே கிட்டத்தட்ட மிட்நைட். சென்னையில எங்கே தேடி அலைஞ்சாலும் அந்தப் பொருள் கிடைக்காது.

காலையில விடிஞ்சதும் அவருக்கு என்ன பதில் சொல்லப் போறோம்... எப்படி சமாளிக்கப் போறோம்னு செம டென்ஷன்ல இருந்தேன். அடுத்த நாள் காலையில மணி சார் சிரிச்சுக்கிட்டே, ‘வெரிகுட்... கேட்டதை ரெடி பண்ணிட்டீங்க’ன்னதும் எனக்கு ஷாக். ராத்திரி முழுக்க ஊரைச் சுத்தி, அவர் கேட்ட அந்தப் பொருளை ரெடி பண்ணி, அடுத்த நாள் காலையில கொண்டு வந்து சேர்த்தது என் டீம்ல இருந்த சதீஷும் இன்னும் ரெண்டு பொண்ணுங்களும். கேள்விப்பட்டப்ப பெருமையா இருந்தது.

என்னைக் கேட்டா பொண்ணுங்களுக்கு ஆர்ட் டைரக்ஷன் டிபார்ட்மென்ட் ரொம்பப் பொருத்தமானது. இயல்புலேயே கலை உணர்வு அவங்களுக்குத்தான் அதிகம். பயங்கரமான ஸ்ட்ரெஸ் உள்ள வேலைதான். ஆனா, இன்னிக்கு ஸ்ட்ரெஸ் இல்லாத வேலைனு ஏதாவது இருக்கா சொல்லுங்க... ஆர்ட் டைரக்ஷனை பொறுத்தவரைக்கும் ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லா பொருட்களையும் தயாரா வச்சிருக்கணும். இருக்கிற கம்மியான பொருட்களை வச்சு எந்த நிமிஷமும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கத் தெரிஞ்சிருக்கணும். அந்தத் திறமை பொண்ணுங்களுக்கு ரொம்பவே அதிகம்...” தமிழ்ப் பெண்களின் தலையில் ஐஸ் பக்கெட்டை கவிழ்க்கிற ஷர்மிஸ்டாவுக்கு தொடர்ந்து தமிழ்ப் படங்களில் பணிபுரிவதில் எக்கச்சக்க விருப்பமாம். வெல்கம் கண்மணி!

மணிரத்னம் கூட ஒர்க் பண்ணினது நிஜமாவே வொண்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ். அவருக்குத் தெரியாத ஃபீல்டே கிடையாது. யார்கிட்ட எந்த வேலையை ஒப்படைக்கலாம்னு தெரிஞ்சவர்.

பொண்ணுங்களுக்கு ஆர்ட் டைரக்ஷன் டிபார்ட்மென்ட் ரொம்பப் பொருத்தமானது. இயல்புலேயே கலை உணர்வு அவங்களுக்குத்தான் அதிகம். இருக்கிற கம்மியான பொருட்களை வச்சு எந்த நிமிஷமும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கிற திறமை பொண்ணுங்களுக்கு ரொம்பவே அதிகம்.