சினிமா என்னை விட்டுப் போகாது!



ரேகா

நளினமான நடன அமைப்புதான்... ஆனாலும், சினிமா நடனத்துறையில் பெண் கோரியோகிராபர்களின் எண்ணிக்கை என்னவோ குறைவுதான். ஹீரோயினை விட அழகாக ஆடுவார்கள், அவருக்குப் பின்னால் ஆடும் குரூப் டான்சர்கள். ஹீரோயினாகவோ, கோரியோகிராபராகவோ முன்னிலைக்கு வரும் அவர்களது கனவு கூட்டத்துக்குள்ளேயே காணாமல் போவது பலரது சாபக்கேடு. பின்வரிசையில் இருந்து முன்னுக்கு வந்து, இன்று கோடம்பாக்கத்தின் முன்னணி கோரியோகிராபர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார் ரேகா!

‘‘அப்பா ஷ்யாம்சுந்தர் ராவ், தெலுங்கு சினிமாவுல ஸ்டன்ட் மாஸ்டரா இருந்தவர். அம்மா சாவித்ரி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தாங்க. நான் பிறந்து, வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். அப்பா கேன்சர் வந்து இறந்துட்டார். அப்புறம் அம்மாதான் கஷ்டப்பட்டு என்னையும் அண்ணனையும் வளர்த்தாங்க. குழந்தையில நான் ரொம்ப அழகா, துருதுருனு இருப்பேன். அதைப் பார்த்துட்டு அப்பவே சைல்ட் ஆர்ட்டிஸ்ட்டா நடிக்கக் கேட்டாங்க. எம்.ஜி.ஆர்- வெண்ணிற ஆடை நிர்மலா சேர்ந்து நடிச்ச படத்துல அவங்களோட குழந்தையா, ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்துல ராதாகூட... இப்படி இன்னும் நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். பாதிநாள் ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டு ஷூட்டிங், டப்பிங்னு போயிடுவேன். ‘உங்க தாத்தா ஸ்கூல்னு நினைப்பா’னு ஸ்கூல்ல திட்டுவாங்க. கஷ்டப்பட்டு ஒன்பதாங்கிளாஸ் வரை வந்தேன்.

பத்தாவது போய் ஒரே வாரத்துல ஸ்கூல்லேருந்து நின்னுட்டேன். டான்ஸ் மாஸ்டர் ஷோபியோட பெரியப்பா அந்தோணி மாஸ்டர்கிட்ட சேர்ந்தேன். டான்ஸ் மாஸ்டர் ரகுராம் சாரோட ஆபீஸ்லேருந்து குரூப் டான்சர்ஸ் செலக்ட் பண்ண வந்தப்ப, அதுல நானும் ஒருத்தியா செலக்ட் ஆனேன். அதுதான் என் கேரியருக்கான ஆரம்பம். முறைப்படி டான்சர் யூனியன்ல கார்டு எடுத்தேன். ரகுராம் மாஸ்டர், கிரிஜா மாஸ்டர், கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர்னு எல்லார் கூடவும் ஒர்க் பண்ணியிருக்கேன். ‘சிங்கார வேலன்’ல தொடங்கி, ‘இருவர்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ரட்சகன்’, ‘பகவதி’, கடைசியா ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ வரை அசிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணினேன். 5 வருஷம் குரூப்ல ஆடி, 10 வருஷம் அசிஸ்டென்ட்டா இருந்த பிறகு 2007ல டான்ஸ் மாஸ்டரா புரொமோஷன் கிடைச்சது.

‘ரோமியோ’ படத்து மூலமா டான்ஸ் மாஸ்டரானேன். தமிழ் மட்டுமில்லாம, சித்திக் லால் டைரக்ஷன்ல ப்ரித்விராஜ்-காவியா மாதவன் நடிச்ச ‘கங்காரு’, மம்முட்டியோட ‘பருந்து’, ‘சைக்கிள்’, ‘சைனா டவுன்’னு சீக்கிரமே பிஸியானேன். தமிழ்ல கேமராமேன் பாலசுப்ரமணியம் மூலமா ‘குட்டி’ படத்துல நல்ல பிரேக் கிடைச்சது. ஆர்யாவோட புரொடக்ஷன்ல ‘படித்துறை’, ‘நந்தி’, ‘வெளுத்துக்கட்டு’, ‘சண்டியர்’, ‘அச்சாரம்’னு நல்ல நல்ல படங்கள்... கேரியர்ல ஜெயிச்ச எனக்கு வாழ்க்கையில ஜெயிக்க முடியலை...’’ - வேகம் குறைத்து அமைதியாகிறது ரேகாவின் குரல். கசியும் கண்களைத் துடைத்தபடி தொடர்கிறார் ரேகா.

‘‘என்னோடது லவ் மேரேஜ். ஒரு பையன் இருக்கான். என் கணவரால என் வேலையைப் புரிஞ்சுக்க முடியலை. பிரியறதுனு முடிவு பண்ணி டைவர்ஸுக்கு அப்ளை பண்ணி யிருக்கோம். பையனையும் என்கிட்டருந்து பிரிச்சுக் கூட்டிட்டுப் போயிட்டார். நான் மிடில் கிளாஸ்லேருந்து வந்தவள். சினிமாவுல ஒரு பெண் ஜெயிக்கிறதுங்கிறது சாதாரண விஷயமில்லை. அதுக்கு மிகப் பெரிய பின்னணி வேணும். ஆனா, நான் அப்படி எந்த சப்போர்ட்டும் இல்லாம, தூக்கி விட ஆளில்லாம, தத்தளிச்சு, எதிர்நீச்சல் போட்டுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். என் நிலைமையில வேற யாராவது இருந்திருந்தா தற்கொலை பண்ணிட்டிருந்திருப்பாங்க.

நான் அப்படி யோசிக்கலை. ‘என் மனசு முழுக்க ஜெயிச்சுக் காட்டணும்... வாழ்ந்து காட்டணும்’கிற வெறிதான் இருந்தது. குரூப் டான்சர்ஸ்ல கடைசி வரிசையில நின்னு ஆடி, அப்புறம் மூணாவது வரிசைக்கு முன்னேறி, அதுலேருந்து ரெண்டாவது வரிசைக்கு வந்து, முதல் வரிசையில முகம் காட்டி, இன்னிக்கு ஒரு டான்ஸ் மாஸ்டரா வளர்ந்திருக்கேன்னா, அதுக்கு அந்த வெறிதான் காரணம்.

இன்னிக்கு எல்லா சேனல்கள்லயும் டான்ஸுக்கான ரியாலிட்டி ஷோஸ் நடக்குது. நிறைய பிள்ளைங்க ஆடறதையும் அவங்கம்மா, அப்பா அவங்களை என்கரேஜ் பண்றதையும் பார்க்கிறப்ப, அப்படியொரு வாய்ப்பு என் காலத்துல கிடைக்கலையேனு ஏக்கமா இருக்கு. இந்தத் தலைமுறைக் குழந்தைங்களுக்குக் கிடைக்கிற அன்பும் ஆதரவும் கிடைச்சிருந்தா நான்கூட வாழ்க்கையில எங்கேயோ போயிருப்பேனோ என்னவோ...’’ என்கிறவர் சட்டென சுதாரித்தபடி, நிகழ்காலத்துக்கு வருகிறார்.

‘‘இப்ப வாழ்க்கை ரொம்ப மாறியிருக்கு. ‘ரேகாஸ் ஸ்டெப் 1’ என்ற பேர்ல டான்ஸ் அகாடமி நடத்தறேன். ‘கிரீன் ஆப்பிள்’, ‘சிம்மாசனம்’, ‘ஜான் ஹோனாய்’னு மூணு மலையாளப் படங்களும், தெலுங்குல பூமிகாவோட சொந்தப் படம் ‘தகிட தகிட’, ‘அனார்கலி’, கன்னடத்துல ஒரு படம்னு நிக்க நேரமில்லாம ஓடிக்கிட்டே இருக்கேன். 2005ல என் அண்ணன் உடம்புக்கு முடியாம இறந்துட்டான். எங்க எல்லாருக்கும் ஆதரவா இருந்த எங்க பாட்டி, 2009ல தவறிட்டாங்க. 2013ல எங்கம்மாவும் ஹார்ட் பிராப்ளம் வந்து இறந்துட்டாங்க. இப்ப என்கூட உறவுனு சொல்லிக்க யாருமே இல்லை.

ஆனாலும், நான் மனசு விட்டுப் போகாம இருக்கக் காரணம், என்கூட எப்போதும் துணை இருக்கிற சினிமா. இனிமேலும் அந்த சினிமா என்னை விட்டுப் போகாதுனு நம்பறேன். எல்லா கஷ்டங்களையும் அனுபவிச்சாச்சு... இனி பிரச்னை ஒண்ணுமில்லை. சினிமாவுல நான் எதிர்பார்த்த இடத்துக்கு உயரணும்... அவார்ட் வாங்கணும்... என் பையன் என்கிட்ட திரும்பவும் வரணும்...’’ - மீண்டும் எட்டிப் பார்க்கிற கண்ணீரைக் கட்டுப்படுத்தி கனவுகள் சொல்கிறார் ரேகா.

குரூப் டான்சர்ஸ்ல கடைசி வரிசையில நின்னு ஆடி, அப்புறம் மூணாவது வரிசைக்கு முன்னேறி, அதுலேருந்து ரெண்டாவது வரிசைக்கு வந்து, முதல் வரிசையில முகம் காட்டி, இன்னிக்கு ஒரு டான்ஸ் மாஸ்டரா வளர்ந்திருக்கேன்னா, அதுக்கு அந்த வெறிதான் காரணம்...