உன்னை அறிந்தால்!



அபிராம்பிகா - ஜெயலட்சுமி

அது ஒரு பழைய தமிழ்த் திரைப்படம்... ‘வேட்டைக்காரன்’. முன்னாள் நடிகை சாவித்திரி நடந்து கொண்டிருப்பார். ஒரு குதிரையை நடத்தியபடி பின்னால் வரும் எம்.ஜி.ஆர். ஒரு பாடல் பாடுவார்... ‘உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்...’ என்ற அந்தப் பாடல் காட்சியை பார்த்தவர்களால் மறக்க முடியாது. பாடல் வரிகளையும் ஒரு போதும் மறக்க முடியாது. சென்னையில் உள்ள ‘கிரீன் மைண்ட்ஸ்’ அமைப்பின் நிறுவனரும் இயக்குநருமான அபிராம்பிகா ரவிவர்மனும் கிட்டத்தட்ட அந்த எம்.ஜி.ஆர். மாதிரிதான். ஒரே வித்தியாசம்... அபிராம்பிகா அந்தப் பாடல் வரிகளில் வரும் விஷயங்களை செயல்படுத்தும் உத்வேகத்தோடு களத்தில் இறங்கி பணியாற்றுகிறார். அவருக்கு உறுதுணையாக தோள் கொடுக்கிறார் ‘கிரீன் மைண்ட்ஸ்’ இணை நிறுவனர் ஜெயலட்சுமி சக்திவேலன்... அபிராம்பிகாவின் அம்மா!

‘பேண் தகைமை’ (Sustainability)... இதுதான் ‘கிரீன் மைண்ட்ஸ்’ அமைப்பின் தாரக மந்திரம். ‘பேண் தகைமை வாழ்க்கைமுறை (Sustainable Life Style) என்பது என்ன? முதலில் மனிதர்கள் தங்களை பேணிக் காத்துக் கொள்வது. பிறகு, இயற்கையின் அற்புதப் படைப்பான இந்த உலகை பேணிக் காப்பது. அதன் பின் தங்கள் சமூகத்தைப் பேணிக் காப்பது. இது குறித்துக் கேட்டால் மலர்ந்த முகத்தோடு ஆரம்பிக்கிறார் அபிராம்பிகா...

‘‘நம்மோட தினசரி வாழ்க்கை ஏற்றமும் இறக்கமும் கொண்டது. ஒருநாள் சுமுகமா நல்லா இருக்கும்... இன்னொரு நாள் கொஞ்சம் வருத்தம் நிறைஞ்சதா இருக்கும். இது ஏன் வருது? ஒருநாள் சாப்பிடுறோம்... அடுத்த நாள் சாப்பிடாம இருக்கோமா? அது போல நாம நினைச்சா எல்லா நாளையும் ஒரே மாதிரி கழிக்க முடியும். அதுக்கு உதவறது தான் சஸ்டெயினபிலிட்டி (நிலை நிறுத்துதல் / தக்க வைத்தல்). ஒரு கம்பெனியில வேலை பார்க்கறோம்.

லட்சியம்னு ஒண்ணு இருக்குமில்லையா? சீக்கிரமே கம்பெனிக்கு எம்.டி. ஆகணும்னு நினைக்க வேணாம். அடுத்த லெவலுக்குப் போகணும்னு நினைக்கணும்ல? அதுக்கு எப்படிப் போறது, கம்பெனிக்கு நாம என்ன செய்யணும், அப்படிச் செய்யறதால கம்பெனியால நமக்கு என்ன கிடைக்கும்? இதையெல்லாம் உள்ளடக்கினதுதான் சஸ்டெயினபிள் டெவலப்மென்ட் (நிலை நிறுத்தத்தக்க வளர்ச்சி). ஒருவர் ஆபீஸ்ல ரொம்ப திறமைசாலியா இருப்பார். வீட்ல அதுக்கு நேரெதிரா இருப்பார். வீட்ல தன்னோட பொறுப்புகளைக்கூட சரியா செய்ய மாட்டார். அங்கேயும் சரியா இருந்தாத்தானே வாழ்க்கை நல்லவிதமாகப் போகும்? ஒரு தராசில் நிறுக்கற மாதிரி, பணியிடமோ, வீடோ, சமூகமோ சரியான வாழ்க்கையை வாழறதுதான் சஸ்டெயினபிள் லைஃப் ஸ்டைல் (நிலை நிறுத்தத்தக்க வாழ்க்கைமுறை).

சாப்பிடுவது தொடங்கி, ஆரோக்கியம் வரை பலருக்கும் சரியான விழிப்புணர்வு இருக்கறதில்லை. யோகாவையே எடுத்துக்குவோமே... ‘குண்டா இருக்கறவங்களுக்குத்தான் யோகா, ஒல்லியா இருக்கறவங்களுக்குத் தேவையில்லை’னு சிலர் நினைக்கிறாங்க. ‘ஆரோக்கியமான, நிம்மதியான, நிறைவான வாழ்க்கைக்கு எல்லாருக்குமே யோகா அவசியம்’னு நாங்க வலியுறுத்தறோம். தினமும் வீட்ல குப்பை சேருது. என்ன செய்ய றோம்? காலையில எடுத்துட்டுப் போய் குப்பைத் தொட்டியிலோ, குப்பை வண்டியிலயோ போட்டுடறோம். என் அளவுல நான் சரியாக இருக்கேன்... கடமை முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறோம். இது ஒருவிதத்துல சரிதான். இருந்தாலும், அந்தக் குப்பையைப் பிரிக்கணும், மக்கும் குப்பையை மக்கச் செய்யணும், சில குப்பைகளை ரீசைக்கிள் பண்ணி பயன்படுத்தணும்னு எல்லாரும் நினைக்கறதில்லை. நம்மைத் தாண்டி இந்த சமூகத்து மேலயும் அக்கறைப்படணும்னு யோசிக்கறதில்லை.

விடுமுறைக்கு ஊட்டி, கொடைக்கானல்னு போறாங்க. எதுக்கு? மரம், செடி, கொடி சூழ்ந்த இயற்கையைப் பார்க்கறதுக்கு. இங்கேயே செடி நடணும், மரத்துக்கான விதையைப் போடணும்னு எல்லாருக்கும் தோணறதில்லை. அன்றாடம் 10 நிமிஷம் மரம், செடியைப் பார்த்தா மனசுக்கு எவ்வளவு இதமாக இருக்கும்? நல்ல சிந்தனை, மனநிலையில நல்ல மாற்றம் எல்லாருக்கும் வந்துட்டா, இந்த சமூகத்துக்கும் உலகத்துக்கும் எவ்வளவு நன்மை? அப்படியொரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வழிகாட்டறதுதான் கிரீன் மைண்ட்ஸோட நோக்கம்...’’ என்கிற அபிராம்பிகா ஒரு தனியார் வங்கியில் உயரதிகாரியாகப் பணிபுரிந்தவர். அதை விட்டுவிட்டு இந்தத் துறைக்கு வந்திருக்கிறார். ஏன்?

‘‘எந்த மனிதரா இருந்தாலும் குழந்தைப் பருவம்தான் வாழ்க்கையோட முக்கியமான பருவம். அந்த வயசுல நடக்கறதுதான் கடைசி வரை நினைவுல நிக்கும். இப்போ இருக்கற வாழ்க்கைச் சூழல்ல பெற்றோரால குழந்தையோட போதுமான அளவுக்கு நேரம் செலவழிக்க முடியறதில்லை. என் பையனுக்கு ஒண்ணரை வயசு நடக்கும் போது, எனக்கும் அதுதான் நடந்தது. நான் வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தேன். மகனோட அதிக நேரம் செலவிட முடியலை. அப்போதான் நம்மை மாதிரி இருக்கற பெற்றோருக்காக ஏதாவது செய்யலாமேன்னு தோணிச்சு. வேலையை விட்டேன். கொஞ்சம் கொஞ்சமா கிரீன் மைண்ட்ஸுக்கான விதை வளர ஆரம்பிச்சுது...’’  

ஊடகத் துறையில் 30 வருட அனுபவம் உள்ள ஜெயலட்சுமி தொடர்கிறார்...

‘‘இன்னிக்கி சஸ்டெயினபிலிட்டின்னாலே புவி வெப்பமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவைதான் நினைவுக்கு வருது. தனிமனிதனுக்கும் அது வேண்டும். மனிதனும் இயற்கையின் ஒரு மகத்தான படைப்புதானே? இயற்கையின் அங்கம்தானே? நீங்களும் நானும் இயற்கைதானே! இயற்கையோட படைப்புல பயனற்றதுன்னு ஒண்ணும் இல்லை. அப்படியிருக்கும் போது, மனுஷன் மட்டும் எப்படி தவறானவனாக இருக்க முடியும்? ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஏதோ ஒரு திறமை, நல்ல விஷயங்கள் எல்லாம் இருக்கும். அதை வெளிக்கொண்டு வந்தா மனுஷன் வெற்றி பெற்றுவிடுவான். தன் திறமையால சமுதாயத்துக்கு எப்படி உதவலாம்னு யோசிப்பான். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தறதுதான் கிரீன் மைண்ட்ஸ் அமைப்போட நோக்கம்.’’

அபிராம்பிகா சொல்கிறார்... ‘‘நாம யாராவது எறும்பைப் பத்தி யோசிக்கிறோமா? அதைக்கூட விடுங்க... யாருமே மத்தவங்களைப் பத்திக் கவலைப்படறதில்லை. சக மனுஷனை நேசிக்க ஆரம்பிச்சாலே, தன்னைப் போல மத்தவங்களை நினைக்க ஆரம்பிச்சாலே உலகத்துல எவ்வளவோ பிரச்னைகள் காணாமப் போயிடும். ஒரு காலத்துல நம்ம வாழ்க்கைமுறை கூட்டுக் குடும்ப முறையா இருந்தது. ஒரு குழுவா இருந்தோம். மற்றவங்களோட உறவாடினோம், உதவி செஞ்சோம். இப்போ அப்படி இல்லை. மாரத்தான் ஓட்டம்கிறது என்ன? பல்வேறு விதமான மனுஷங்களை ஒரு குழுவா ஒன்றிணைக்கிற முயற்சிதானே? பேண் தகைமை மனித வாழ்க்கை முறையில அப்படி ஒரு கூட்டுப் பண்பை உருவாக்கும்.

அதனால் சமூகத்தில் பெரிய, நல்ல மாற்றங்களும் ஏற்படும். குழந்தைப் பருவம்தான் எந்த விஷயத்தையும் கற்றுக் கொள்ள சரியான பருவம். அந்த வயசுல தன்னை அறிந்து கொள்ள குழந்தைகளால் முடியும். அதுக்கான சிறப்புப் பயிற்சிகளை கொடுக்கிறோம். 6 மாதம் இந்தப் பயிற்சி வகுப்புகள்ல கலந்துக்கிட்டாலே போதும்... அவங்க தங்களை புரிஞ்சுப்பாங்க. அதுக்கேத்த மாதிரி குழந்தையின் எதிர்காலத்தை பெற்றோரும் வடிவமைக்கலாம். எங்க அமைப்புல ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனம் செலுத்தறோம். அவங்களோட படைப்பாற்றலை, நுண் அறிவை, திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான செயல்பாடுகளைச் செய்றோம்.

இயற்கை, அதைக் காக்க வேண்டிய கடமை, உறவுகள், சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள பொறுப்பு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து, புரிய வைக்கிறோம். சஸ்டெயினபிலிட்டி தனி மனிதனுக்கு மட்டுமானது இல்லை... ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கே இன்னிக்கி அவசியத் தேவை. பெரிய நிறுவனங்களுக்கும் சி.எஸ்.ஆர்.னு சொல்லப்படுற ‘கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி’ இருக்கு. இதையும் கணக்குல எடுத்துக்கிட்டு நாங்க பல நிறுவனங்களுக்கு வழிகாட்ட முடிவு செஞ்சிருக்கோம்... பல நிறுவனங்கள்ல அதுக்கான வகுப்புகளை நடத்தவும் செய்யறோம்...’’  

பேண் தகைமை குறித்தான விழிப்புணர்வை பள்ளி மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியதுதான் ‘கிரீன் மைண்ட்ஸ்’ அமைப்பின் சாதனை. தமிழகமெங்கும் நானூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 582 மாணவர்களிடம் ஒரே மாதத்தில் நிகழ்ந்தது சஸ்டெயினபிலிட்டி விழிப்புணர்வு இயக்கம். இந்த நிகழ்வு அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

‘‘நாம் நம்மை அறிந்து கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம். காஞ்சி மகா பெரியவர் சொல்லுவார்... ‘கடல்தான் உலகம்னு வச்சுக்குவோம். அதுல இருந்து ஒரு உத்தரணியில நீரை எடுத்தா அதுதான் ஒரு மனுஷன். மனுஷன்னாலும் கடல்ல இருந்துதானே எடுக்கறோம். அப்போ அதே கடலின் தன்மையும் குணமும்தானே மனுஷனுக்கும் இருக்கும்’. அது மாதிரி மனுஷன் இயற்கையின் அற்புதப் படைப்பு. அவன் சரியான திசையில போகணும்னா தன்னை உணர்ந்து கொள்ள வேண்டியது ரொம்ப அவசியம்’’ என்கிறார் ஜெயலட்சுமி.  

குழந்தைப் பருவம்தான் எந்த விஷயத்தையும் கற்றுக் கொள்ள சரியான பருவம். அந்த வயசுல தன்னை அறிந்து கொள்ள குழந்தைகளால் முடியும்...


- பாலு சத்யா
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்