எண்ணங்கள் வண்ணங்கள்



வாய்ப்புகளை வழங்கும் தளம்!

நான் அறிமுகப்படுத்த விரும்புவது Linkedin தளத்தைதான். வேலை தேடும், வேலையில் இருக்கும் பலருக்கும் பல கம்பெனி அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்க இதுதான் இப்போதைய டிரெண்ட்.

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்று அல்ல... இது முழுக்க முழுக்க தொழில், தொழில்நுட்பம் சார்ந்த புரொஃபஷனல் நெட்வொர்க். இதில் முதலில் அக்கவுன்ட் ஆரம்பித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எப்படி ரெஸ்யூம் தயாரிப்பீர்களோ, அதே போல இதிலும் உங்கள் பணிகளைத் தெளிவாகக் குறிப்பிடவும். ஐ.டி. துறையை சேர்ந்தவர்களாக இருந்தால், உங்கள் புராஜெக்ட்டுகளையும் குறிப்பிடலாம். நீங்கள் பணிபுரியும் கம்பெனி பெயர் வெளியிட விரும்பவில்லை எனில், ‘கான்ஃபிடென்சியல்’ என்று போட்டுக் கொள்ளலாம்.

புரொஃபைல் பிக்சர் வைக்க விரும்புகிறீர்களாயின் ஃபார்மல்ஸில் இருக்கும் புகைப்படம் ஏதேனும் வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக, நீங்கள் பணிபுரிய விரும்பும் கம்பெனியை Searchல் போடவும். உதாரணத்துக்கு... நான் ABCயில் பணிபுரிய விரும்புகிறேன் என்றால், ABC என டைப் செய்து அக்கம்பெனியின் ஹெச்.ஆர். கான்டாக்டில் connect  க்ளிக் செய்ய வேண்டும். ஃபேஸ்புக்கில் ஃபிரெண்ட் ரெக்யூஸ்ட் அனுப்புவது போலத்தான் இது.

இப்படி பல ஹெச்.ஆர்களோடும் உங்கள் துறை சாந்தவர்களோடும் தொடர்பில் இருக்கலாம். உங்கள் கம்பெனியில் வேலை செய்பவர்களோடும் நீங்கள் தொடர்பில் இருப்பது அவசியம். 10 ஆண்டுகளுக்கும் அதிக அனுபவம் இருப்பின், இன்னும் கவனமாக உங்கள் புரொஃபைலை அப்டேட் செய்யவும். இனி உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு பெரும்பாலும் linkedin மூலமாக வர வாய்ப்பிருக்கிறது. வாழ்த்துகள்! www.linkedin.com

புத்தகம்

பெண்ணின் மனதைத் தொட்டு!

சிக்கன் சூப் ஃபார் த கேர்ள்’ஸ் ஸோல்...பதின்வயதில் பெண்கள் எதிர்கொள்ளும் எல்லா விஷயங்களுமே கதைகளாகவே இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. காதல், நட்பு, அன்பு, பாசம் என எல்லாமும் கலந்த கலவையாக, கலகலப்பாக இருக்கும் படிப்பதற்கே. ஒரு பெண்ணாக என்னை மிகவும் கவர்ந்த, ஈர்த்த புத்தகம் இதுதான். கல்லூரி வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தையும் சுவாரஸ்யம் குறையாமல் எழுதியிருக்கிறார்கள். காதல் தோல்வி, உடைமையுணர்வு என பெண்ணின் உணர்வுகளைத் தொடும் நூல் இது!

சினிமா

My Little Bride என்ற கொரியன் திரைப்படம். அற்புதமான கலகலப்பான படம். பள்ளி செல்லும் பெண்ணுக்கு, தாத்தாவின் உடல்நலக்குறைவு காரணமாக, குடும்ப நண்பரின் மகனை திருமணம் செய்து வைக்கிறார்கள். எதிரும் புதிருமாக இருந்த இருவரும் திருமணத்துக்குப் பிறகு எப்படி வாழ்கிறார்கள்? எப்படி குடும்பம் நடத்துகிறார்கள்? பதின்வயது பெண்ணான கதாநாயகிக்கு சக மாணவனுடன் காதல் ஏற்படுகிறது... பின்பு இருவரின் வாழ்க்கையும் என்ன ஆகிறது? சேர்ந்தார்களா, பிரிந்தார்களா? இவற்றை சுவாரஸ்யமாக எடுத்திருப்பார்கள். நான் பலமுறை பார்த்த ஒரே படம் இது.


இடம் பாணதீர்த்தமும் அகத்தியர் அருவியும்


குற்றால அருவியில் குளித்துக் களைத்துப் போனவர்கள், ஒரு மாறுதலுக்கு அகத்தியர் அருவி சென்று வரலாம். நெல்லை மாவட்டத்தில் ‘Must Visit’ இடமென்றால் என் ஓட்டு அகத்தியர் அருவிக்குத்தான். ஜிலுஜிலு தென்றல் காற்று உங்களை விட்டு விலகாது. அருகிலேயே பாணதீர்த்தம் அருவி, மணிமுத்தாறு அணை என நெல்லை மாவட்டத்தில் இயற்கை அழகுக்குப் பஞ்சமில்லை. கோடைகாலத்துக்கேற்ற அருமையான சுற்றுலாத்தலம். அதிக கூட்டம் வராது என்பதால் அமைதியாக அருவிகளின் அழகை அள்ளிப் பருகலாம்!

ஜிலுஜிலு தென்றல் காற்று உங்களை விட்டு விலகாது!

இனி உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு Linkedin இணையதளம் மூலமாக வர வாய்ப்பிருக்கிறது!