அவளை சக மனுஷியா ஏத்துக்கணும்



முனைவர் சுந்தரவள்ளிக்கு அறிமுகம் தேவையில்லை. குடும்பத்திலும் சமூகத்திலும் நிகழும் அவலங்களையும் அனுபவங்களையும் சுவாரஸ்யங்களையும்
மதுரையின் அலட்சியத் தமிழில் நகைச்சுவை ததும்ப அவர் பேசும்போது லயித்துப் போய் விடுவார்கள் எல்லோரும். உலகத் தமிழர்கள் அறிந்த பட்டிமன்ற பேச்சாளர். விவாதித்தலையும் விவரித்தலையும் ஒரு கலைநேர்த்தியோடு செய்து தனித்துவம் பெற்ற இயற்றமிழ் கலைஞர். சுந்தரவள்ளியின் இன்னொரு முகம் பிறர் அறியாதது. திருநங்கைகளின் வாழ்வுரிமைக்காக வேலை செய்யும் தீவிர ஆக்டிவிஸ்ட். போராட்டங்கள், செயல் திட்டங்கள், விவாதங்கள், வாழ்வாதார உருவாக்கங்கள் என திருநங்கைகளின் வாழ்க்கையை ஒரு படி முன்னே நகர்த்தப் போராடும் சுந்தரவள்ளி, எழுத்தாளர் பிரியா பாபுவோடு இணைந்து, வரலாற்றில் திருநங்கைகளின் பங்களிப்பு பற்றிப் பேசும் இடையினம் என்கிற ஆவணப் படத்தை உருவாக்கி வருகிறார்.

மதுரைக்கு அருகில் உள்ள நல்லபிள்ளைப்பட்டி சுந்தரவள்ளிக்கு சொந்த ஊர். அப்பா, செல்லம் வாத்தியார். கண்டிப்பும் கனிவும் நிறைந்த ஆசிரியர். அம்மா, சிவமணி. தேவி என்றொரு தங்கையும் பாண்டித்துரை என்ற ஒரு அண்ணனும் இருக்கிறார்கள். அவர்களும் ஆசிரியர்கள்தான். செந்தமிழ் கல்லூரியிலும் தியாகராயர் கல்லூரி யிலும் படிப்பை முடித்த சுந்தரவள்ளி, சங்க இலக்கியத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். பெண்கள் சார்ந்த பிரச்னைகளை முன்னெடுத்து கல்லூரி காலத்திலேயே கவனம் பெற்றவர்.

‘‘சின்ன வயசுல இப்போதைய குணங்களுக்கு எதிர்மாறா இருந்தவ நான். பேசவே மாட்டேன். நீயெல்லாம் எப்படிடி காலந்தள்ளப்போறேன்னு அம்மா திட்டுவாங்க. என்மேல தனிக்கவனமும் பாசமும் வச்சிருந்தார் அப்பா. நல்லாப் பாடுவேன். நாட்டுப்புறப் பாடல்கள்னா உயிர் எனக்கு. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மாதிரி என்னை ஒரு பாடகியாக்கப் பார்க்கணும்னு ஆசைப்பட்டார். ஆனா, நான் கல்லூரியில சேர்ந்த தருணத்திலயே அவர் எங்கள விட்டுப் போயிட்டார். ஹார்ட் அட்டாக். அப்போ அவருக்கு 43 வயசுதான்.

அப்பாவோட மறைவுக்குப் பிறகு குடும்பச்சூழல் மாறிடுச்சு. அம்மாவுக்கு கூடுதல் சுமை... விளையாட்டுத்தனத்தை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு மத்தவங்களைப் போல நாமும் ஏதாவது செய்யணும்கிற பொறுப்பு வந்திடுச்சு. என் இயல்பை கொஞ்சம்கொஞ்சமா மாத்திக் கிட்டேன். நிறைய வாசிக்கவும் தொடங்கினேன். வாசிப்பு நிறைய கேள்விகளை உருவாக்குச்சு. வகுப்பறைகள்ல நிறைய கேள்வி கேக்குற பொண்ணா மாறிட்டேன். அந்த சுந்தரியா இதுன்னு எல்லாரும் ஆச்சரியப் பட்டாங்க. பாட்டுத்திறனையும் வளர்த்துக்கிட்டேன். பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப் போட்டின்னு எது நடந்தாலும் அதுல நான் இருப்பேன்.
எனக்குப் பேராசிரியையா இருந்தவங்க நிர்மலா மோகன்... அவங்களும் அவங்க கணவர் மோகன் சாரும் பட்டிமன்றப் பேச்சாளர்கள். நல்லா விவாதிக்கிறே சுந்தரவள்ளி... பட்டிமன்றம் பேசலாமேன்னு மனசுக்குள்ள கனவை விதைச்சது நிர்மலா மேடம்தான். ஞானசம்பந்தன் அய்யா தலைமையில நடந்த பட்டிமன்றத்துலபேச வேண்டிய ஒருத்தர் வராததால, நிர்மலா மேடம் என்னைப் பரிந்துரைச்சாங்க. விளையாட்டுத்தனமா அந்த பட்டிமன்றத்துல பேசினேன். ஞானசம்பந்தன் அய்யா, வெற்றி மிகுந்த பேச்சாளராக வருவீர்கள்னு எழுதி ஒரு புத்தகம் பரிசு கொடுத்தார்... ரொம்ப உற்சாகமாகிடுச்சு.

அப்போ சன்.டி.வி.யில தினம் ஒரு பட்டிமன்றம் நடக்கும். ஒருநாள் அதுல பேச வேண்டிய பேச்சாளர் ஒருத்தரால குறிப்பிட்ட நேரத்துக்கு வரமுடியலே. அந்த வாய்ப்பும் எனக்குக் கிடைச்சுச்சு. பிரமாண்டமான முதல் மேடை. ‘வேலைக்குப் போவதால் குடும்பத்தில் ஏற்படுவது குழப்பமா? குதூகலமா?’ - இதுதான் தலைப்பு. எங்க அம்மாவை மனசுல வச்சுக் கிட்டு ‘குதூகலமே’ன்னு பேசினேன். நல்ல வரவேற்பு. அதுக்கப்புறம் நிறைய பட்டிமன்ற வாய்ப்புகள். ஓரளவுக்கு பொருளாதார ரீதியா அது உதவியா இருந்துச்சு. தொ.பரமசிவம் அய்யா, ஞானசம்பந்தன் அய்யா மாதிரி பெரிய ஆளுமைகள் பேராசிரியர்களா வாய்ச்சது ஒரு வரம்தான். சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், நவீன இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல்னு நிறைய வாசிக்கிற, தெரிஞ்சுக்கிற வாய்ப்புகள் கிடைச்சுச்சு. அந்த வாசிப்பு பட்டிமன்ற மேடைகள்ல ஒரு தனித்துவத்தை உருவாக்கிக் கொடுத்துச்சு.

கல்லூரியில படிக்கும்போதே இந்திய மாணவர் சங்கத்தோட தொடர்பு... கல்லூரி பிரச்னை, பொதுப் பிரச்னைன்னு பல பிரச்னைகளுக்காக போராடி கைதாகின சரித்திரமும் இருக்கு. படிப்பெல்லாம் முடிஞ்ச பிறகு கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி யில வேலை... அந்த தருணங்கள்ல மாதர் சங்கத்துல செயல்பட தொடங்கிட்டேன்.

மதுரை முத்துப்பட்டி பகுதியில கல் உடைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் நிறைய இருந்துச்சு. அவங்க வாழ்க்கை தலைமுறையா அடித்தட்டுக்
குள்ளயே முடங்கிக் கிடந்துச்சு. அந்தக் குடும்பத்துப் பெண்குழந்தைகளை சர்வசாதாரணமா பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் சம்பவங்களும் நடந்துச்சு. மாதர் சங்கம் மூலமா அவங்க மத்தியில வேலை செஞ்சோம். மாலை நேர வகுப்புகள் நடத்துனேன். சட்டப்பூர்வ விழிப்புணர்வு, பொருளாதாரத் திட்டமிடல், குவாரிகளை ஏலம் எடுக்கிற வழிமுறைன்னு பல விஷயங்களை அவங்க மத்தியில கொண்டுட்டுப் போனோம். கூலி வேலை செஞ்சவங்க கான்ட்ராக்ட் எடுக்கிற அளவுக்கு வந்தாங்க. 7 வயதேயான ஒரு சிறுமியை ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த 50 வயதான ஒருத்தர் பாலியல் பலாத்காரம் செஞ்சுட்டார். கட்டப் பஞ்சாயத்துக்குள்ள முடங்கிப்போன அந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டுபோய் போராடினோம். நிறைய எதிர்ப்புகள்... தனிப்பட்ட இழப்புகள் கூட ஏற்பட்டுச்சு.
எல்லாத்தையும் எதிர்கொண்டேன்... - புன்னகை மாறாமல் பேசுகிறார் சுந்தரவள்ளி.

பாரதி கண்ணம்மா, பிரியா பாபு, ஜீவா போன்ற முன்னோடி திருநங்கைகளின் அறிமுகத்துக்குப் பிறகே அவர்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் சுந்தரவள்ளிக்கு அறிமுகமாயின. ‘‘ஒருமுறை எங்க கல்லூரி கேன்டீன்ல மாணவர்களோட உக்காந்து பேசிக்கிட்டிருந்தேன். பாரதி கண்ணம்மா அம்மா வந்தாங்க. நாங்க ஒரு அறக்கட்டளை வச்சிருக்கோம்... அதுல நீங்க வந்து பேசமுடியுமான்னு கேட்டாங்க. மறுக்க முடியாம ஏத்துக்கிட்டேன். நிறைய திருநங்கைகள் அதுல கலந்துக்கிட்டாங்க. அந்தத் தருணத்துல அவங்களைப் பத்தி எனக்கு எந்தப் புரிதலும் இல்லை. நிகழ்ச்சி முடிஞ்சு, நான் பிரியா பாபு, ஜீவா அக்கா, அனு எல்லோரும் சாப்பிடப் போனப்போ, மத்தவங்க எங்களைப் பார்த்த பார்வையை என்னால சகிக்க முடியலே... கேலி கலந்த பார்வை. அய்யோ... நம்மையும் திருநங்கையா நினைச்சுடப் போறாங்களே’ன்னு தவிப்பு... அவங்ககிட்ட இருந்து வித்தியாசப்பட கூடுதல் நளினத்தையும் பெண்மையையும் உணர்த்த நான் எடுத்த முயற்சிகள்... இப்போ நினைச்சாலும் உறுத்தலா இருக்கு.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நிறைய திருநங்கைகள் என் நட்பு வட்டத்துல இருந்தாங்க. பரஸ்பரம் ஒரு தோழமை உணர்வுதான் இருந்துதே ஒழிய, அவங்ககூட இணைஞ்சு வேலை செய்யிற அளவுக்கு நான் பக்குவப்படலே. அதுக்கான ஒரு வாய்ப்பையும், திருநங்கைகளோட துயரங்களையும் புரிஞ்சுக்கிறதுக்கான சூழலையும் எனக்கு உருவாக்கிக் கொடுத்தது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். அந்த சங்கத்துல மாநில செயற்குழு உறுப்பினரா இருக்கேன்.

திருநங்கைகளுக்காக ஒரு பிரிவை தொடங்க நினைச்சபோது, நானே விரும்பி அதுக்கான பொறுப்புல இணைஞ்சேன். லிவிங் ஸ்மைல் வித்யா, பிரியா பாபு, மயிலை பாலு, சைதை ஜெ, மலர்னு பலர் அதுல ஒருங்கிணைஞ்சோம். இயக்க ரீதியா பிரியா பாபுவோட எனக்கு இணக்கமான தோழமை அமைஞ்சது. நிறைய பேசினோம். அவளை ஒரு எழுத்தாளரா பாத்துப் பிரமிச்சிருக்கேன். ஒருநாள் அவளோட வீட்டுக்குப் போனபோது அதிர்ந்து போயிட்டேன். வாய்க்காலுக்குப் பக்கத்துல ஒரு சின்ன குடிசை. கால்நீட்டினா தலை இடிக்கும்.

சமூகத்தில நிறைய அறிவாளிகளால மதிக்கப்படுற திருநங்கை அவ. நாவல்கள், கட்டுரைகள்னு நிறைய எழுதியும் இருக்கா... திருநங்கைகளுக்காக நிறைய களப்பணிகள் செய்யிறா... மீடியா மூலமா மரியாதையான சமூக அறிமுகமும் இருக்கு. அவ குடியிருக்கிற வீடோ ஒதுக்குப்புறமா இருக்கு. திட்டமிட்ட ஒதுக்குதல்...

என்னடி இதுமாதிரி ஒரு வீட்டுல இருக்கியே ன்னு வருத்தப்பட்டுக் கேட்டேன்... இந்த வீடு கிடைச்சதே பெருசுக்கான்னு சொன்னா... அவ மூலமாத்தான் திருநங்கைகளுக்கான வதைகள், அவமதிப்புகள், துயரங்கள் தெரியவந்துச்சு. அதுக்கப்புறம் பரிபூரணமா பிரியாவோட இணைஞ்சு செயல்பட ஆரம்பிச்சுட்டேன்.
திருநங்கைகள் பத்தி நம்ம கற்பிதங்கள் ரொம்ப மோசமாவே இருக்கு. ஒரு திருநங்கை தன்னை சின்ன வயசுலயே உணர்ந்துடுறா... அதை வெளிக்காட்டவும் முடியாம, உள்ளே ஒளிச்சு வைக்கவும் முடியாம தவியா தவிக்கிறா... அந்த சூழல்ல அவளுக்கு ஆலோசனை சொல்லி ஆற்றுப்படுத்த நம்மகிட்ட எந்த ஏற்பாடும் இல்லை. இது இயற்கை... யாரோட விருப்பத்தின் பேர்லயும் நடக்கலே... சக மனுஷியா அவளை ஏத்துக்கணும்னு பெத்தவங்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் யாருமில்லை. ‘மகனா பிறந்து, இப்படி பொண்ணு மாதிரி திரியறானே’ன்னு பலத்த வன்முறைக்கு உள்ளாக்கி வதைக்கிற போது அந்த திருநங்கை குடும்பத்தை உதறிட்டு வெளியில ஓடிப்போக வேண்டிய நெருக்கடிதான் ஏற்படுது.

தாயுள்ளம் கூட அந்த இடத்துல தடுமாறிப் போகுது. தொலைஞ்ச வரைக்கும் சரின்னு அந்த குடும்பம் கை கழுவிடுது. வெளியில ஓடிவர்ற திருநங்கைக்கு இன்னொரு திருநங்கைகிட்டதான் ஆதரவு கிடைக்குது. நம் சமூகம் ஒரு திருநங்கையை வரவேற்று ஆதரவு கொடுக்கிற அளவுக்கு இன்னும் நாகரிகமாகலே. திருநங்கைகள் உயிர்வாழ நாம ரெண்டு வழிகளைத்தான் ஏற்படுத்திக் கொடுக்கிறோம்... ஒண்ணு கடை கடையா ஏறி இறங்கி காசு கேக்கிறது... இன்னொன்னு பாலியல் தொழில். பெரும்பாலான திருநங்கைகளுக்கு இதுதான் நேருது.

திருநங்கைகள் யாரு? அவங்க எப்படி உருவாகிறாங்க? இந்த கேள்விகளுக்கு எத்தனை பேருக்கு விடை தெரியும். ஆணைப் போல, பெண்ணைப் போல, திருநங்கைகளும் ஒரு பாலினம். மனித உரிமை பேசுற, பல்லாயிரம் ஆண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்ச் சமூகம், அவங்களைப் பத்தி எந்தப் புரிதலுமே இல்லாம இருக்கு. திருநங்கைகளோட வாழ்க்கை முறை, உடல் சார்ந்த அமைப்பியல், அவங்க உளவியல் பத்தியெல்லாம் வெகுஜன சமூகத்துக்கு கவலையில்லை. உடம்புல ஆணாவும், மனசுல பெண்ணாவும் வாழ்ற வாழ்க்கையில உள்ள ரணத்தை புரிஞ்சுக்க திருநங்கையா இருக்க வேண்டிய அவசியமில்லை. அவங்க கூட ஒரு மணி நேரம் பேசினாலே உணர முடியும்.

ரொம்ப துயரம்... எங்கேயும் அங்கீகாரமில்லை. எவ்வளவு திறமையிருந்தும் பயனில்லை. திருநங்கைகள் வேடிக்கைப் பொருளாவும் பாலியல் பிண்டமாவும்தான் இங்கே பார்க்கப்படுறாங்க. அண்மைக்காலமா அந்த சமூகத்துல இருந்து தோன்றின சில ஆக்டிவிஸ்டுகளால மாற்றம் உருவாகிக்கிட்டிருக்கு... எல்லா எதிர்ப்புகளையும் அவமானங்களையும் வலிகளையும் கடந்து திருநங்கைகள் சாதிக்கத் தொடங்கியிருக்காங்க... மதுரையில இருந்து நான் சென்னைக்கு குடி வந்தபிறகு தொடர்ச்சியா திருநங்கைகளுக்கான வேலைகள்ல இறங்கினேன். நிறைய திருநங்கைகள் என் வீட்டுக்கு வருவாங்க. திருநங்கைகள் பெரிதும் விரும்புறது குடும்ப அங்கீகாரம். எல்லாரையும் என் பிள்ளைகளுக் கும் சகோதரிகளுக்கும் உறவு சொல்லி அறிமுகம் செஞ்சேன். மாற்றம் எனக்குள்ளிருந்து தொடங்கணும். அக்கான்னும் அம்மான்னும் நிறைய இளம் திருநங்கைகள் என்மேல அன்பை பொழியும்போது உண்மையிலயே பெருமையா இரு க்கு. வீட்டுக்கு நிறைய திருநங்கைகள் வரத் தொடங்கினதால, வீட்டு உரிமை யாளர் ‘வீட்டை காலி பண்ணிடுங்க’ன்னு சொல்லிட்டார். அங்கிருந்து நுங்கம்பாக்கத்துல வீடு பார்த்து வந்தேன்.

வந்தவுடனே பக்கத்து வீட்டுக்காரங்களை எல்லாம் கூப்பிட்டு ஒரு கெட்டுகெதர் வச்சேன். அதுக்கு என் எல்லாத் திருநங்கை தோழி களையும் அழைச்சேன்.
‘இவ பிரியா, எழுத்தாளர்... இவ மானு... தொலைக்காட்சியில செய்தி வாசிக்கிறா... இவ அனு... பியூட்டீஷியன்’னு அவங்களை அறிமுகப்
படுத்தி, அவங்களைப் பத்தின பத்திரிகை செய்திகளை எல்லாம் கொடுத்தேன். ரயில்கள்லயும் சாலைகள்லயும் அடாவடி செய்யிற மனுஷிகளா திருநங்கை
களைப் பார்த்திருந்த பக்கத்து வீட்டுக்காரங்க, ‘இப்படியும் திருநங்கைகள் இருக்காங்களா’ன்னு வியப்பாபாத்தாங்க. திருநங்கைகளும் அவங்ககிட்ட உறவு சொல்லி பழகத் தொடங்கினாங்க.

எல்லாருக்கும் அவங்க மேல பெரிய மரியாதை வந்துச்சு. இன்னைக்கு வரைக்கும் எந்த திருநங்கை என் வீட்டுக்கு வந்தாலும் மத்த குடித்தனக்காரங்க மரியாதையாத்தான் பாக்கிறாங்க. மானு, வானவில்னு ஒரு நிறுவனம் நடத்துறா... அதன்மூலமா நிறைய வேலைகள் செஞ்சுக்கிட்டு வர்றோம். திருநங்கைகளுக்கான உடனடித் தேவை கல்வி... கல்வி கிடைச்ச பல திருநங்கைகள் இன்னைக்கு சாதிக்கத் தொடங்கிட்டாங்க. கல்வி கிடைக்காத திருநங்கைகள் இன்னும் அடித்தட்டுல தான் வாழ வேண்டியிருக்கு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தோட சேர்ந்து எழுத்துப் பயிற்சி, வாசிப்புப் பயிற்சி கொடுத்தோம். அதை தொடர்ந்து ஒரு தனி இயக்கமா முன்னெடுத்துக்கிட்டு இருக்கோம். திருநங்கைகளுக்கு தன்முனைப்புப் பயிற்சி கொடுக்கிறோம். அவங்க கலைத்திறனை வெளிக்கொண்டு வர்ற விதமா திருநங்கை கலைவிழாக்களை நடத்துறோம். தொழிற்பயிற்சிகள் கொடுக்கிறோம். திருநங்கைகளுக்கு எதிரா நடக்குற வன்முறைகளைக் கண்டிச்சு போராடுறதோட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்து பாதுகாப்பு கொடுக்கிற வேலையையும் செய்யிறோம்.

பொதுப்பிரச்னைகளை கையில எடுத்து திருநங்கைகளை முன்னிறுத்திப் போராடுறோம்... என்று பணிகளை அடுக்குகிறார் சுந்தரவள்ளி.
‘‘திருநங்கைகளை மூன்றாம் பாலினமா அங்கீகரிக்கணும்னு நீதிமன்றம் சொல்லி பல மாதங்கள் ஆயாச்சு. அதுக்கான சின்ன அசைவுகள் கூட இல்லை. நிறைய திருநங்கைகள் உரிய கல்வித்தகுதி இருந்தும் வேலைக்குப் போக முடியலே. முடிவெடுக்கும் நிலையில் இருக்கிற அதிகாரிகளுக்கு பாலினம் குறிந்த புரிதலே இல்லை. அதனால மிக இக்கட்டான நிலையில திருநங்கைகள் தவிக்கிறாங்க. பெற்றோரோட புறக்கணிப்பு, சமூகத்தோட புறக்கணிப்பு, அரசாங்கத்தோட புறக்கணிப்புன்னு எல்லாத் திசைகள்லயும் அவங்க புறக்கணிப்பையே சந்திக்கிறாங்க. நிறைய திருநங்கைகள் ஆண்களால ஏமாத்தப்படுறாங்க.
எங்கேயும் வேலை கிடைக்கலே. உடம்பு சரியில்லைன்னா மருத்துவமனைக்குக் கூடப் போகமுடியல... திருநங்கைகள் அறுவை சிகிச்சை செய்த பிறகுதான் முழுமை அடையறாங்க. அரசு மருத்துவமனைகள்ல அறுவை சிகிச்சை நடந்தாலும் ஹார்மோன் தெரபி, உளவியல் சிகிச்சைகள் முறையா தரப்படுறதில்லை. இந்தியாவிலேயே முதன்முதலா தமிழகத்துலதான் திருநங்கைகள் நலவாரியம் தொடங்கப்பட்டுச்சு... ஆனா,அது செயல்படாமக் கிடக்கு.

முதல்ல அரசாங்கத்தோட பார்வை மாறணும். அரசு திருநங்கைகளை சக உயிர்களா மதிக்கணும். அண்மையில மக்கள் தொகை கணக்
கெடுப்பு நடந்தப்போ ஆண், பெண்ணுன்னு பாலினத்தைக் குறிப்பிட்ட அரசு, திருநங்கைகளைக் குறிக்க ஒன்பதுங்கிற எண்ணைப் பயன்படுத்துச்சு. அதிலிருந்தே அரசாங்கத்தோட புரிந்துணர்ச்சியை தெரிஞ்சுக்கலாம். எல்லாப் பிரிவுகளை விடவும் நலிஞ்சு ஒடுங்கின சமூகமா இருக்கிற திருநங்கைகளை அரசு கருணையோட பார்க்கணும். மாற்றுப்பாலினமா அங்கீகரிச்சு கணக்கெடுப்பு நடத்தணும். இட ஒதுக்கீடு தரணும். திருநங்கைகள் மீதான சமூகத்தின் பார்வையை மாத்துறதுக்கு ஒரே வழி, பாடப்புத்தகங்கள்ல திருநங்கைகள் பற்றின பாடங்களைக் கொண்டு வர்றதுதான். வேலைவாய்ப்புகள்ல திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் தரணும். அவங்களுக்கு குடியிருப்புகள் அமைச்சுத் தரணும். அவங்களுக்கான நீதியையும் உரிமையையும் மறுக்கக் கூடாது... என்கிற சுந்தரவள்ளி,
‘‘இன்னைக்கும் திருநங்கைகளோடு இணைஞ்சு போகும்போது கேலி பண்றது, அவமானப்படுத்துறதுன்னு பல பிரச்னைகளைப் பாக்குறேன். முதன்முதல்ல மதுரையில இதை எதிர்கொண்ட போது சங்கடப்பட்டேன். இப்போ என்னையும் திருநங்கையா நினைச்சு பேசும்போது பெருமையாவும் உற்சாகமாவும் இருக்கு...’’ என்கிறார் பெருமிதமாக!

‘‘எல்லோரும் எங்களைப் பார்த்த பார்வையை என்னால சகிக்க முடியலே... அய்யோ... நம்மையும் திருநங்கையா நினைச்சுடப் போறாங்களே’ன்னு தவிப்பு... அவங்ககிட்ட இருந்து வித்தியாசப்பட கூடுதல் நளினத்தையும் பெண்மையையும் உணர்த்த நான் எடுத்த முயற்சிகள்... இப்போ நினைச்சாலும் உறுத்தலா இருக்கு...’’

‘‘உடம்புல ஆணாவும்மனசுல பெண்ணாவும் வாழ்ற வாழ்க்கையில உள்ள ரணத்தை புரிஞ்சுக்க திருநங்கையா இருக்க வேண்டிய அவசியமில்லை. அவங்க கூட ஒரு மணி நேரம் பேசினாலே உணர முடியும்...’’

‘‘பெற்றோரோட புறக்கணிப்பு, சமூகத்தோட புறக்கணிப்பு, அரசாங்கத்தோட புறக்கணிப்புன்னு எல்லாத் திசைகள்லயும் அவங்க புறக்கணிப்பையே சந்திக்கிறாங்க...’’

- வெ.நீலகண்டன் படம்: ஆர்.கோபால்