உணர்வுகளை உயிர்ப்பிக்கும் உன்னதம்



மகிழினி

“வாய்ப்பு கொடுத்துப் பாரு...
அட, நானும் சூப்பர் ஸ்டாரு...
வசதி எனக்கு இல்லே...
அதனால் வளருகிறேன் மெல்ல...
வாய்ப்பு கொடுத்துப் பாரு...
அட, நானும் சூப்பர் ஸ்டாரு...
விடியும் முன்னே அம்மா, அப்பா
வேலைக்குத்தான் போறாங்க...
டாட்டா காட்ட யாருமில்லை
நானா பள்ளி போறேங்க...
நெடுதூரம் யாத்திரைதான்
பள்ளிக்கூடம் போறேன்
நெருஞ்சிமுள்ளு பதம் பாக்கும்
செருப்பில்லாம வாரேன்...
குடும்பச் சுமை மனசுலே
புத்தகச் சுமை முதுகுலே
உடலும் மனமும் வலிக்குதுங்க
உயர்ந்திடத்தான் முடியலே...
வறுமையைத் தின்னுதான்
வாழ்க்கையவே நடத்துறோம்
வாய்ப்பு மட்டும் கிடைக்கட்டும்
வரலாறு படைக்கிறோம்! ’’


மகிழினி மணிமாறனின் பாசாங்கற்ற தமிழ் மணக்கும் கணீர் குரல் செவிவழி நுழைந்து இதயத்தை நனைக்கிறது. உள்ளுக்குள் நம்பிக்கையை விதைக்கிறது... ‘கும்கி’யில் சொய்ங்... சொய்ங்... பாடிய பிறகு வாழ்க்கை மாறிவிட்டது. ஒரு பக்கம் பரபரப்பான பின்னணிப் பாடகி... இன்னொரு பக்கம் வழமை போலவே முற்போக்கு மேடைகளில் நாட்டுப்புறப் பாடல்கள்... பள்ளி, கல்லூரிகளில் பறை இசைப் பயிற்சி... அமர்ந்து ஆசுவாசப்பட நேரமில்லாமல் இசையில் திளைக்கிறார் மகிழினி.

இதோ ஆரம்பித்தது போல இருக்கிறது... 50க்கும் அதிக திரைப் பாடல்களை பாடியாகி விட்டது. சொந்த ஊரான வேடந்தாங்கலில் இருந்து வந்துபோகும் சிரமம் கருதி இப்போது சென்னையிலேயே செட்டிலாகி விட்டார். ரெக்கார்டிங் தியேட்டருக்கும் மேடைக்குமான ஒரு சிறு இடைவெளியில் மகிழினியை சந்தித்தோம். வெள்ளந்திச் சிரிப்பும் வெகுளிப் பேச்சும் துளியும் மாறவில்லை.

“அப்பா பேரு அமலநாதன்... விவசாயக்கூலி... அம்மா மரியாள்... கிராமத்து வாழ்க்கையில‘இல்லத்தரசி’ன்னு ஒரு பதவியெல்லாம் இல்லை. வீட்டுல பாத்திரம் கழுவி, சோறு சமைச்சு, புள்ளைகளைப் பார்த்துட்டு வயக்காடு, கொல்லைக்காடுன்னு போயி ஆணுக்குச் சமமா கட்டுத்தூக்கி, கருதும் அடிக்கணும். அப்படித்தான் கிராமத்து பொண்ணுகளுக்கு வாய்ச்சுருக்கு. அம்மாளும் அப்படித்தான். நிமிஷ நேரம் சும்மா இருக்காது.

மொத்தமா நாங்க மூணு புள்ளைங்க... ஜாக்குலின்னு ஒரு தங்கச்சியும் பவுல்ராஜ்னு ஒரு தம்பியும் உண்டு. நாந்தாம் மூத்தவ. 10ம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். பாஸ் பண்ண முடியாம அத்தோட படிப்புக்கு முழுக்குப் போட்டாச்சு...கிராமத்து வாழ்க்கையில பாட்டைக் கழிச்சுட்டுப் பாத்தா ஒண்ணுமே இருக்காது. எல்லாமே வெறுமையாத்தான் இருக்கும். நகரத்துலதான் பாடுறது ஒருத்தர்... கேக்குறது ஒருத்தர்... கிராமங்கள்ல எல்லாருமே இசைக் கலைஞருங்கதான்... வேலை வேகமா ஓட, வலியை மறக்க, சந்தோஷத்தைப் பகிர்ந்துக்க... கவலையை விரட்ட, கேலி, கிண்டல் பண்ணன்னு எல்லாத்துக்கும் ஒரு போதை வஸ்து மாதிரி பாட்டு... பெரும்பாலும் கிராமத்துப் பொம்பளங்க பாட்டுல கண்ணீர்தான் நிரம்பியிருக்கும்...

அவங்க உரையாடுறதுக்கு எந்த களமும் அங்கே இல்லை. வயக்காட்டுக் களத்தைத் தவிர... ஒருத்தருக்கொருத்தர் உணர்வுகளை பகிர்ந்துக்க கிடைச்ச வரம்தான் பாட்டு... அம்மாவும் அப்படித்தான்... அம்மா தாலாட்டுப் பாடுனா, அப்படியொரு உயிர்ப்பு... அம்மா வழியாதான் எனக்குள்ள இசை வந்திருக்கணும். வயக்காட்டு வேலைகளுக்குப் போகும்போது, அந்த அக்காங்க பாடுற பாட்டை வேலையை மறந்து கேட்டுக்கிட்டு நின்னிருக்கேன். சில பாட்டுகளைக் கேட்கும்போது என்னை அறியாம கண்ணுல தண்ணி ஊத்தும்.

‘‘கருவை மரத்தடியில
என் கவலையைச்
சொன்னேனுன்னா
கருவை இலையுதிரும்
எந்தன் தாயாரே...
அந்தக் கருங்கிணறும்
தண்ணி பாய்ச்சும்
பெத்த மாதாவே...’’

இப்படி எங்கூரு ஏலாயி ஆத்தா பாட்டுக் கட்டுனா, கேக்குற அத்தனை பேரும் கலங்கி நிப்பாங்க. பாட்டு மனச்சுமையை இறக்கிரும். மூக்கைச் சீந்தி சீந்தி பாட்டுக்கட்டுற பாட்டி அடுத்த நொடி இயல்பா மாறி சிரிச்சுக்கிட்டு நிக்கும். அந்த அளவுக்கு கிராமத்து மனசு பக்குவப்பட்டுப் போச்சு. கிராமத்துப் பாட்டுக்கு இயற்கைதான் மொழி. வலிதான் வார்த்தை... கேலி, கிண்டல்தான் இசை... இப்படி நான் நிக்கிற எல்லாப் பக்கத்திலயும் பாட்டு இருந்துச்சு. படிப்படியா நானும் பாடப் பழகிட்டேன். கிராமத்துல ஒரு பாட்டுக்காரி உருவாகுறது பெரிய விஷயமில்லை. கிராமத்து ஜனங்க எல்லாமே பாட்டுக்காரங்கதான்.

கல்யாணம், கச்சேரின்னா எஞ்சோட்டுப் புள்ளைங்க எல்லாரும் ஒண்ணுகூடி பாடுறதுண்டு. ஊர் நிகழ்ச்சிகள்ல என்னைய பாடச் சொல்லி கேப்பாங்க. வாழ்க்கை நிலைமை, மண்ணோட நிலைமைன்னு பெரிய புரிதல் இல்லாத அந்த வயசுல வந்த வார்த்தைகளை வளைச்சு பாடுவேன். நாம் பத்தாம்பு படிச்சுக்கிட்டிருந்த போது, எங்க பள்ளிக்கொடத்துல ஒரு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்துச்சு. அந்த நிகழ்ச்சியிலதான் மணிமாறனை முதன்முறையா பாத்தேன். வாத்தியாருங்கல்லாம், இந்தப் பொண்ணு நல்லா பாடுவாள்னு அவர்கிட்ட அறிமுகப்படுத்துனாங்க. அவரு எழுதின ஒரு பாட்டைக் கொடுத்து என்னைப் பாடச் சொன்னாரு. அவர் பறையடிக்க நான் பாடுனேன். எல்லாரும் நல்லாயிருக்குன்னு பாராட்டுனாங்க. அதுல இருந்து அப்பப்போ நிகழ்ச்சிகளுக்கு என்னைப் பாடக் கூப்பிடுவார்.

பத்தாம் வகுப்புப் படிக்கும்போதே அப்பா இறந்துட்டார். அவருக்குப் பிறகு அம்மாவுக்கு கூடுதல் சுமையாகிப் போச்சு... பாவம் ஓடாத்தேஞ்சு எங்களை வளர்த்துச்சு. முதப் பொண்ணுங்கிறதால நானும் அதுகூட ஒத்தாசை செய்ய வேண்டியிருந்துச்சு. படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். எந்த சூழ்நிலையில இருந்தாலும் பாட்டை மட்டும் விடலே... களம் கிடைக்காத நேரத்துல மனசுக்குள்ளேயே பாடிக்கிட்டுத் திரிவேன்.

சென்னையில, ஆதரவற்ற பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் செயல்படுற ஒரு தொண்டு நிறுவனத்துல எனக்கு வேலை கிடைச்சுச்சு. அந்த நிறுவனத்துல தங்கி, அவங்க நடத்தின இல்லத்துல வேலை செஞ்சேன். ஏதோ ஒரு விதத்துல பாதிக்கப்பட்டவங்க... அவங்ககூட தங்கியிருந்தது மனசுக்கு இதமா இருந்துச்சு. 
மணிமாறனும் சென்னைதான். என்னை விட பலமடங்கு திறமைசாலி... பறையிசை மட்டுமில்லே... ஒயிலாட்டம், மயிலாட்டம்னு பல கலைகள்ல அவருக்கு பழக்கமுண்டு. அதுமட்டுமில்லாம பாட்டும் எழுதுவார். பறை இசையை இளம் தலைமுறைங்க மத்தியில கொண்டு சேக்குற வேலையில தீவிரமா இருந்தார். பெரும்பாலும் நான் மேடையில பாடுற பாட்டு முழுதும் அவர் எழுதினதுதான்.

ஒருமுறை நான் வேலை செஞ்ச இல்லத்துல இருந்த குழந்தைகளுக்கு பறையிசை, கலைப்பயிற்சி கொடுக்க வந்திருந்தார். அதுலயே நானும் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அதுக்குப்பிறகு எங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல புரிதல்... பெரியவங்ககிட்ட பேசுனோம். எல்லாரோட சம்மதத்தோட திருமணம் செஞ்சுக்கிட்டோம். திருமணத்துக்குப் பிறகு, சென்னையில இருந்து வேடந்தாங்கல் போயாச்சு. கலையை வாழ்வாதாரமா வச்சுப் பிழைக்கிற சூழல் நம் நாட்டுல இல்லை. ‘வைராக்கியமா அப்படித்தான் இருப்பேன்’னு இருந்தா நிறைய தியாகம் செய்ய வேண்டியிருக்கும். நாங்க ரெண்டு பேருமே அப்படித்தான் இருந்தோம். நிறைய கலைக்குழுக்களோட தொடர்புல இருந்தோம்.

தனித்தனியாவும் ஒண்ணாவும் நிகழ்ச்சிகளுக்குப் போவோம். ‘இப்படியே சிதறிச் சிதறிப் போகாம நாமளே ஒரு கலைக்குழு ஆரம்பிச்சு நிகழ்ச்சி செஞ்சா என்னன்’னு எங்களுக்குத் தோணுச்சு. அப்படித்தான் ‘புத்தர் கலைக்குழு’வை ஆரம்பிச்சோம். அதுக்கு முன்னாடி பெரிசா எந்த பொறுப்புணர்வும் இல்லை. ஆனா, கலைக்குழு ஆரம்பிச்ச பிறகு, கலையை அதன் தன்மை குலையாம மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பை உணர்ந்தோம். 

பறைங்கிற இசைக்கருவி ஆதிமனிதன் கண்டுபிடிச்சது. கோபம், சந்தோஷம்னு எல்லா உணர்வையும் உயிர்ப்பா வெளிக்காட்ட முடிஞ்ச ஒரே இசைக்கருவி அதுதான். காலப்போக்குல அது ஒரு சாதியோட அடையாளமா மாறிப்போச்சு. அதை உடைக்கணும். பாகுபாட்டுக்கு எதிரா, சாதியத்துக்கு எதிரா, ஆணாதிக்கத்துக்கு எதிரா அதை ஒரு போர்க்குரல் வடிவமா மாத்தணும். சாதி கடந்து, மதம் கடந்து அந்த இசையை மனிதகுலத்துக்குப் பொதுவான ஒலியா மாத்தணும்... அந்த நோக்கத்துல பறையிசை பயிற்சிகளை வழங்கத் தொடங்கினோம். பள்ளி, கல்லூரிகள்ல ஆண், பெண் வேறுபாடில்லாம பலநூறு பேர் பயிற்சி எடுத்திருக்காங்க. பறை மேல சாதி அடையாளம் மெல்ல மெல்ல தகர்த்துக்கிட்டிருக்கு.

கும்மி, கோலாட்டம், களியல் ஆட்டம், சிலா ஆட்டம், செடிக்குச்சி ஆட்டம், மான்கொம்பாட்டம்னு பல துணை ஆட்டங்களையும் சேர்த்தோம். 27 பேர் கொண்ட குழு... மேடையேறினா நாலைஞ்சு மணி நேரம் அடங்காத ஆட்டம்!மேடையும் பாட்டுமா வாழ்க்கை போய்க்கிட்டிருந்த நேரத்துலதான் சினிமா... சினிமாங்கிறது எனக்கு களம் தந்த பரிசு... தெருப்புழுதியை தின்னுக்கிட்டு பாடிக்கிட்டிருந்த என்னை வெளிச்சமான மேடைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. கொஞ்ச காலமா சினிமாவுல கிராமிய இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைச்சுக்கிட்டிருந்துச்சு. அதைப் பார்த்து எங்களுக்குள்ளயும் சின்னதா எதிர்பார்ப்புகள் இருந்துச்சு. ஆனா, அது எட்டாத உயரத்துல இருக்கிற இடம்கிற யதார்த்தத்தை புரிஞ்சு வச்சிருந்தோம். அதனால அந்த எதிர்பார்ப்பை எந்த சூழல்லயும் வெளிக்காட்டிக்கலே.
என் கணவரோட பல பாடல்கள் ஆல்பமா வந்திருக்கு.

அப்படியொரு ஆல்பம் உருவாக்குற வேலை நடந்துக்கிட்டிருந்தப்போ, தபேலா கலைஞர் கவிநேசன், உங்க குரல் ரொம்பவே வித்தியாசமா இருக்கும்மா... சினிமாவுல பாடலாமேன்னு சொன்னார். கேட்க மகிழ்ச்சியா இருந்தாலும், அதுக்கு மேல அதைப்பத்தி நான் சிந்திக்கலே. கொஞ்ச நாள் கழிச்சு கோவையில ஒரு நிகழ்ச்சியில இருக்கும்போது அவர் போன் பண்ணி, ஒரு படத்துக்கு பாட வேண்டியிருக்கு... உடனே வரமுடியுமா?ன்னு கேட்டார். அப்போதிருந்த சூழ்நிலையில உடனே கிளம்பி வர முடியலே.

அதுக்குப் பிறகு அவரைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. இது நடந்து அஞ்சாறு வருஷமாச்சு. திடீர்னு ஒருநாள் இசையமைப்பாளர் இமான் அண்ணன் பேசுனாரு. ‘கும்கி’ யில ஒரு பாட்டு இருக்கு... கவிநேசன் உங்களைப் பத்திச் சொன்னாரு. வரமுடியுமா?ன்னு கேட்டாரு. நிஜமாச் சொல்லணும்னா, ‘யாரோ போன் பண்ணி விளையாடுறாங்க’ன்னு நினைச்சேன். உண்மைன்னு உணரவே ரொம்ப நேரமாச்சு.

ஏதோ ஒரு தைரியத்துல கிளம்பிப் போயிட்டோம். யுகபாரதி அண்ணன், பிரபு சாலமன் சாரு. இமான் அண்ணன்... மூணு பேரும் இருந்தாங்க. எவ்வளவோ மேடையில பாடியிருந்தாலும், அப்போ பாட உண்மையிலேயே தடுமாற்றந்தான் இருந்துச்சு. அவங்க மூணு பேரும் கொடுத்த உற்சாகத்துல பயம் போயிடுச்சு. பாடும் போதே நிச்சயம் இந்தப் பாட்டு நிக்கப்போகுதுன்னு புரிஞ்சு போச்சு. இந்த அளவுக்கு நிக்கும்னு தெரியாது. எந்த இடத்துக்குப் போனாலும் அந்தப் பாட்டுதான் ஒலிச்சுச்சு.

இப்போ நிறைய பாடிக்கிட்டிருக்கேன். ‘வீரம்’ படத்துல வந்த அக்காமாரே... அண்ணன்மாரே... பாட்டும் நல்ல அடையாளம் தந்திருக்கு. இப்போ ரிலீசாகியிருக்கிற காடு படத்திலயும் பாடியிருக்கேன். வாய்ப்புகள் வந்துக்கிட்டே இருக்கு. முன்னை விட வீரியமா இப்போ மேடை நிகழ்ச்சிகள் செய்றோம். நிறைய பயிற்சி முகாம்களுக்குப் போறோம். இன்னைக்குக் கிடைச்சிருக்கிற எல்லா விஷயங்களுக்கும் அடிப்படை என் கணவர் மணிமாறன். அவர்தான் எனக்குக் குரு. சோர்ந்து போற நேரத்துல தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துறதும், முடிவெடுக்க முடியாம தவிக்கிற சூழல்ல பக்கத்துல இருந்து ஆலோசனை சொல்றதும் அவர்தான். எனக்கு தமிழ் மக்கள் மத்தியில சின்னதா ஒரு அடையாளம் கிடைச்சிருக்குன்னா எல்லாத்தையும் அவரோட அன்புக்குத்தான் நான் அர்ப்பணிக்கணும்...- நெகிழ்ச்சியாக முடிக்கிறார் மகிழினி.

மகிழினி-மணிமாறன் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் சமரன் 9ம் வகுப்பு படிக்கிறான். இளையவன் இனியன் 7ம் வகுப்பு. மூத்தவன் கீ போர்டும் இளையவன் டிரம்ஸ்ஸும் வாசிக்கப் பழகுகிறார்கள். இருவரும் பெற்றோரைப் போலவே அதிர அதிர பறை இசைக்கிறார்கள். நாட்டுப்புற பாடல்களை உக்கிரம் ததும்பப் பாடுகிறார்கள்.

நகரத்துலதான் பாடுறது ஒருத்தர்... கேட்கறது ஒருத்தர்... கிராமங்கள்ல எல்லாருமே இசைக் கலைஞருங்கதான்... வேலை வேகமா ஓட, வலியை மறக்க, சந்தோஷத்தைப் பகிர்ந்துக்க... கவலையை விரட்ட, கேலி, கிண்டல் பண்ணன்னு எல்லாத்துக்கும் ஒரு போதை வஸ்து மாதிரி பாட்டு... சினிமாங்கிறது எனக்கு களம் தந்த பரிசு... தெருப்புழுதியை தின்னுக்கிட்டு பாடிக்கிட்டிருந்த என்னை வெளிச்சமான மேடைக்கு கொண்டு வந்து  நிறுத்தியிருக்கு...

- வெ.நீலகண்டன்
படம்: ஆர்.கோபால்