ஒரு தோழி பல முகம்



ஸ்டார் தோழி

பாரதி சுவாமிநாதன்

நான்... என் பெயருக்கு ஏற்ப நான் பாரதி கண்ட புதுமைப்பெண்ணே! இப்போது பி.எல்.ஆர். குழும நிறுவனத்தில் புராஜெக்ட் மேனேஜராகப் பணியாற்றுகிறேன். இந்த உலகிலுள்ளவர்களைப் போலவே வாழ்க்கையில் நானும் எத்தனையோ பாத்திரங்களை வகித்திருக்கிறேன். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்தது ‘அம்மா’ என்கிற பாத்திரம். நான் தாய்மையடைந்ததை அறிந்த தினம்... பிக்காஸோவின் அழகான ஓவியம், ஜான் கீட்ஸின் சிறந்த கவிதை, யானியின் மயக்கும் சிம்பொனியைப் போல அற்புதமான தினம் அது. நிபந்தனையற்ற அன்பை வழங்கும் நிலைக்கு நான் வந்துவிட்டேன் என்பதை புரிந்து கொண்டேன் அன்று. என் வாழ்க்கையின் சாராம்சமேஇக்கவிதை...

என்னுள்ளே
ஞானம் பெற வேண்டும் என்கிற    
ஆழமான விருப்பம்
என் குழந்தைப் பருவத்திலிருந்து
வாழ்க்கை எனக்கு
இன்பமான அனுபவங்களைக் கொடுத்திருந்தாலும்
அறியாமை இருட்டுக்குள்
உலக இயந்திரத்துக்குள் என்னை நானே சிக்க வைத்தேன்
உண்மையின் பாதையிலிருந்து
விலகி காணாமல் போனேன்
அத்துடன் குடும்பத்துக்காக சண்டையில் ஆழ்ந்தேன்
வாழ்க்கையில் என்னென்னவோ குழப்பங்கள் செய்தேன்
இன்னும் எனக்கு கடவுளின் ஆசீர்வாதம் இருக்கிறது
நம்பிக்கையின் ஒரு துளி இருக்கிறது
முயன்று வெற்றி பெற எனக்கு ஒரு வழி கிடைத்ததைப் போல!



வசிப்பது... ‘சான்ஸே இல்ல... சான்ஸே இல்ல... நம்ம சென்னை போல வேற ஊரே இல்லை. இந்த பீச் காத்து மேல பட்டா போதும்டா... உனக்கு நல்ல ராசிடா... இனி நீ சென்னை வாசிடா...’ யெஸ்... நான் இப்போதுசென்னையில்தான் வசிக்கிறேன். குஜராத்திலுள்ள பரோடாவில் பிறந்தேன். இருந்தாலும், இந்தியா முழுக்க உள்ள தேஜ்பூர்-அஸ்ஸாம், பாரக்பூர்-வங்காளம், ஆதாம்பூர், ஜலந்தர், அம்பாலா, சண்டிகர்-பஞ்சாப் போன்ற அழகான நகரங்களில் வளர்ந்தேன். அது, வெவ்வேறு கலாசாரங்களில் ஆழ்ந்த அறிவு பெறவும் சிறந்த மனுஷியாக நான் உருவாகவும் உதவியது.

படிப்பு நம் நாட்டில், பல நகரங்களில் உள்ள ‘கேந்திரிய வித்யாலயா’வில் என் பள்ளி வாழ்க்கை நடந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றேன். ஆறாவது படிக்கும் போது நடந்த ஒரு சம்பவம் எனக்கு இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது. அப்பா, சண்டிகர் ரோஸ் கார்டனில் நடந்த ‘ரோஜா திருவிழா’வுக்கு அழைத்துப் போனார். எங்களுக்கெல்லாம் ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தார்... எனக்குப் பிடித்த ஃப்ளேவரில். ஒரு ஏழைச் சிறுவன் எதிர்ப்பக்கம் நான் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அதை கவனித்ததும் நான் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. அவனிடம் போய் என் ஐஸ்க்ரீமை கொடுத்துவிட்டேன். அந்தக் கணம் அவனிடம் ஏற்பட்ட மகிழ்ச்சி, இன்ப அதிர்ச்சியாக என்னையும் தொற்றிக் கொண்டது. நான் பரவசமடைந்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெளிவாக நினைவில் இல்லை. ஆனால், புத்தரின் வார்த்தைகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை இப்போது நான் உணர்ந்துவிட்டேன்... ‘எதையும் வைத்திருப்பதிலோ, பெறுவதிலோ அல்ல... கொடுப்பதில்தான் இருக்கிறது மகிழ்ச்சி!’

அதே வருடம், என் ஆசிரியர்களில் ஒருவர், ‘புத்தரும் அங்குலிமாலாவும்’ கதையை எங்களுக்குச் சொன்னார். அந்த தினத்திலிருந்து பயமற்ற, அமைதியே உருவான, உலகெங்கும் காண முடியாத கௌதம புத்தரைப் போல ஆக விரும்பினேன்... இப்பொழுதும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்... ஹா ஹா ஹா!
காலங்கள் கடக்க, நான் புத்தரை மறந்து போனேன். படிப்பு, மதிப்பெண்கள் பெறுதல், லட்சியங்களை அடைதல் என்ற வழக்கமான வாழ்க்கைக்குள் இழுக்கப்
பட்டேன். சண்டிகர் கேந்திரிய வித்யாலயாவில் என் பள்ளிப் படிப்பைமுடித்தேன்.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்கிற லட்சியத்தோடு இருந்தேன். அதே நேரத்தில் நாங்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்தோம். மதுரை என்னை முழுவதுமாக மாற்றியது. கிட்டத்தட்ட 360 டிகிரி கோணத்துக்கு என் வாழ்க்கை திரும்பியது. வாழ்க்கை தொடர்பான கேள்விகள் என்னை அலைக்கழித்தன. ‘நான் யார்?’, ‘நான் ஏன் இங்கிருக்கிறேன்?’ போன்ற கேள்விகள். தத்துவரீதியான அல்லது அறிவியல் ரீதியான பதில்களை நான் தேடவில்லை. ஆனால், என் எல்லா கேள்விகளுக்கும் தொழில்நுட்ப ரீதியான, என் இருப்புத் தொடர்பான பதில்களை தேடினேன். எல்லா பதில்களும் கிடைத்ததா என்று என்னைக் கேட்காதீர்கள். இன்னும் நான் பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!

குடும்பம் 13 வயதில் மகன் அபிஷேக். அவன் எனக்குக் கிடைத்த வரம். கணவர் ஒரு பிசினஸ்மேன்.நாங்கள் திருமணம் செய்து கொண்டதே ஒரு
வேடிக்கைக் கதை. திருமணத்துக்கு முன்பு வரை நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை. அந்த லொள்ளுக்காக நாங்கள் இருவருமே இந்த தினம் வரை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். என் தந்தை முன்னாள் ஐ.ஏ.எஃப். அதிகாரி. அம்மா குடும்ப நிர்வாகி. எனக்கு ஒரு அண்ணனும் தம்பியும் இருக்கிறார்கள்.
 
என்னைக் கவர்ந்த பெண்கள்... எல்லோரையும் போலவே எனக்கு அம்மாவைத்தான் முதலில் பிடிக்கும். குழந்தைகளான எங்களுக்காகவே வாழ்ந்தவர் அவர். ஒரு பொருளாதார நிபுணர் ஆகும் அளவுக்கு அறிவு படைத்தவர்... சிறந்த பாடகியாகவும் கூட அவரால் ஆகியிருக்க முடியும். ஆனால், அந்த நாட்களில் பெண்களுக்கு அவற்றுக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

குடும்பம்தான் அவர்களின் முதல் முன்னுரிமை... அது சரி என்றுதான் நான் நினைக்கிறேன். நல்ல மனிதர்களாக நாங்கள் வளர்ந்து ஆளாக முடியும் என்றால் அதைவிட சிறந்த வாழ்க்கை வேறு என்ன இருக்கிறது? வீட்டிலேயே உழல்வதும் குழந்தைகளுக்காகவே வாழ்வதும் மிக முக்கியம்... குழந்தைகளின் உணர்வுபூர்வமான ஒட்டு மொத்த வாழ்க்கைக்கும் அது நல்லது. அரவிந்தர் அன்னையை மிகவும் பிடிக்கும். ஆன்மிகப் பாதையைப் பின்பற்றி ஞானம் பெறுகிற எல்லாப் பெண்களையும் பிடிக்கும். நம்மிடம் நிறைய பெண் ஆன்மிகவாதிகள் இல்லை என்பது வருத்தத்துக்குரியது.   
எதையும் வைத்திருப்பதிலோ, பெறுவதிலோ அல்ல... கொடுப்பதில்தான் இருக்கிறது மகிழ்ச்சி!