அசத்துது அவகடோ!



பட்டர் ஃப்ரூட் என்றும் அறியப்படும் அவகடோ பழத்தின் சாறு, தொண்டையில் இறங்கும் போது வெண்ணெய் இறங்குவது போல இதம் தரும். அதனால் இதை வெண்ணெய் பழம் என்றும் கூறுவதுண்டு. பழம் கனிந்ததும் சாலட், ஜூஸ் செய்யலாம் என்பதைப் போல, காயாக இருக்கும்போதும் சமையலில் பயன்படுத்தலாம். மாங்காய் அல்லது குடைமிளகாய்  போன்று தனித்த சுவையோ, மணமோ இதற்குக் கிடையாது. எனினும், இதன் சுவை அலாதியானது. பச்சை வண்ண சதைப் பகுதி மருத்துவ குணமுடையது. வெளிநாட்டிலிருந்து வந்த காய் என்பதாலும் பழமாக மட்டுமே பயன்படுத்தி வந்ததாலும் ஜூஸ், சாலடுக்கு மட்டுமே வித விதமாகப் பயன்படுத்தினர். நம் சமையல் முறைப்படி பொரியல், சாம்பார், சாதமாகவும் முயற்சிக்கலாம்.

அவகடோ ஜூஸ்

 அவகடோ பழத்தின் கனிந்த சதையை ஸ்பூனால் எடுத்து, மிக்ஸியில் தேவையான சர்க்கரை சேர்த்து, அரைத்து, நீர் கலந்து ஜூஸாக அருந்தலாம்.

அவகடோ மில்க் ஷேக்

அவகடோ பழத்தின் கனிந்த சதையை ஸ்பூனால் எடுத்து, மிக்ஸியில் தேவையான சர்க்கரை சேர்த்து, அரைத்து, காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து மில்க் ஷேக் ஆகப் பருகலாம்.

அவகடோ சாலட்

1வது முறை: கனிந்த பழத்தின் சதைப் பகுதியை ஸ்பூனால் எடுத்து மசித்து, எலுமிச்சை பிழிந்து, உப்பு சேர்த்து, கொத்தமல்லி இலையை பொடியாக வெட்டிச் சேர்த்தால், சாலட் ரெடி. பழத்தின் சதைப் பகுதியை எடுத்ததுமே, எலுமிச்சைச் சாறை சேர்த்துவிட்டால், நிறம் மாறாமல் இருக்கும்.

2வது முறை: கனிந்த பழத்தின் சதைப் பகுதியை ஸ்பூனால் எடுத்து மசித்து, பொடியாக நறுக்கிய தக்காளியும் உப்பும் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சாலட்டாக உபயோகிக்கலாம். கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி, அதிக அளவில் சதைப் பகுதி எவ்வளவு எடுத்திருக்கிறோமோ அதே அளவுக்கு சேர்க்க வேண்டும்.

3வது முறை: 2வது முறைப்படி செய்த பின், அதோடு, துருவிய கேரட், வெள்ளரிக்காய் எனத் தனித்தனியாக சேர்க்கலாம்.

4வது முறை: காயைத் தோல் சீவி, துருவி எடுத்துக்கொண்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும். இதனுடன் துருவிய கேரட், வெள்ளரிக்காய் எனத் தனித்தனியாக சேர்க்கலாம். உப்பு சேர்த்து பரிமாறவும்.

 அவகடோ தயிர் பச்சடி

காயைத் தோல் சீவி துருவி எடுத்துக்கொண்டு, அதனுடன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும். தயிரில் உப்பு சேர்த்து மேலே குறிப்பிட்ட கலவையையும் சேர்த்து பரிமாறலாம்.

அவகடோ ரைத்தா

1வது முறை: கனிந்த பழத்தின் சதைப் பகுதியை ஸ்பூனால் எடுத்து மசித்து, உப்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து இந்தக் கலவையை தயிரில் உப்பு கலந்து சேர்க்கலாம்.

2வது முறை:
கனிந்த பழத்தின் சதைப் பகுதியை ஸ்பூனால் எடுத்து மசித்து, உப்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து இந்தக் கலவையை தயிரில் உப்பு கலந்து சேர்க்கவும். இதனுடன் துருவிய கேரட், வெள்ளரிக்காய் எனத் தனித்தனியாகவும் சேர்க்கலாம். தக்காளி அல்லது எலுமிச்சைச்சாறு தேவையெனில் சிறிது சேர்க்கலாம்.

அவகடோ மசால்

உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அவகடோ காயை தோல் சீவி, கொட்டை நீக்கி, ஒரு இஞ்ச் அளவில் நறுக்கிச் சேர்த்து வதக்கவும். அந்த வதக்கிய கலவையுடன் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து, மஞ்சள் தூள், தனி வத்தல் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். அவகடோ மசால் தயார்.

அவகடோ மசால் தோசை

1வது முறை: தோசையின் நடுவில் அவகடோ மசால்  வைத்து மசால் தோசையாகப் பரிமாறலாம்.

2வது முறை:
அவகடோ பழ சாலட்டை தோசையின் நடுவில் வைத்துப் பரிமாறலாம்.

அவகடோ துருவல்

அவகடோ காயை தோல் சீவி, கொட்டையை விலக்கி எடுக்கவும். காயை துருவலாகத் துருவிக் கொள்ளவும். தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். துருவலைச் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து இறக்கவும்.
அவகடோ பொரியல்

அவகடோ காயை பொடியாக நறுக்கி, கேரட் அல்லது பீன்ஸ் பொரியல் செய்வது போல அவகடோ பொரியல் செய்யலாம்.

அவகடோ ஸ்டஃப்டு சப்பாத்தி

தாளிக்காமல் அவகடோ துருவல் செய்து சப்பாத்திக்கு நடுவில் வைத்து ஸ்டஃப்டு சப்பாத்தியாகச் செய்யலாம்.
 
அவகடோ கறி


அவகடோ காயை கத்தரிக்காய் நறுக்குவது போல நறுக்கிக் கொள்ளவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். காயை லேசாக வதக்கவும். சாம்பார்பொடி, உப்பு சேர்க்கவும். மிக்ஸியில் ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், சிறிது புளி, பாதி மூடி தேங்காய், 3 தக்காளி சேர்த்து அரைத்துச் சேர்க்கவும். வெந்ததும் கெட்டியாக எடுத்துப் பரிமாறவும்.

அவகடோ - கடலைப் பருப்பு கூட்டு

கடலைப் பருப்புடன் நறுக்கிய கேரட் 2, அவகடோ காய் நறுக்கிச் சேர்க்கவும். சின்ன வெங்காயம் 5, ஒரு தக்காளி, இரண்டு சில்லு தேங்காய் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். சாம்பார் பொடி, பெரிய உப்பு சேர்க்கவும். இரண்டு தேங்காய் சில்லு, ஒரு பச்சை மிளகாய், சிறிது புளி, ஒரு தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். குக்கரில் சிறிது தண்ணீர் விட்டு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு மிளகாய் வத்தல் போட்டு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.

. அரைத்து விட்ட அவகடோ சாம்பார்

அவகடோ காயைத் தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து விடும் சாம்பாருக்குச் செய்வதைப் போல அனைத்தையும் சேர்த்து, அவகடோ லேசாக வதங்கும் போது அனைத்தையும் சேர்த்து வேக வைக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

 அவகடோ - முருங்கைக்காய் சாம்பார்

துவரம் பருப்பு சேர்த்து முருங்கைக்காய் சாம்பார் செய்யும்போது காய்கள் சேர்க்கும் அளவுக்கு, அவகடோ காய் சேர்க்கவும்.

 அவகடோ துவையல்

உளுத்தம் பருப்பு 5 டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் 3, மிளகாய் வத்தல் 3, வெள்ளைப்பூண்டு 4, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அவகடோ காயை தோல் சீவி பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கவும். வதங்கும்போது புளி, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். விரும்பினால் தேங்காய் சிறிது சேர்க்கலாம்.

அவகடோ கொத்து பரோட்டா

1வது முறை: கொத்து பரோட்டா செய்யும் போது, கேரட், பீன்ஸுடன் அவகடோ காயை நீளமாக பொடியாக நறுக்கிச் சேர்த்து செய்யலாம்.

2வது முறை:
3 சப்பாத்தி மீதமாகி இருந்தால், அவற்றைத் துண்டுகளாக்கி அல்லது துண்டுகளை மிக்ஸியில் லேசாக பெரிய சைஸ் தூளாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு, கறிவேப்பிலை, இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிச்சேர்த்து, அவகடோ காயை நீளமாக பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். வதங்கும் போது மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி சேர்க்கவும். தக்காளி 2 பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். மிக்ஸியில் தூளாகச் செய்த அல்லது சப்பாத்தியை துண்டுகளாகப் பிய்த்து எடுத்ததை இதில் சேர்க்கவும். சிறிது உப்பு, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

அவகடோ-ஆலு-பட்டர் பீன்ஸ் குருமா

எண்ணெய் விட்டு, பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு, கறிவேப்பிலை, இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து, அவகடோ காயை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ் சேர்க்கவும். இவை லேசாக வதங்கும் போது மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, கொத்தமல்லி பொடி, கறிமசால் பொடி, உப்பு சேர்க்கவும். 2 தக்காளி மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். அரை மூடித் தேங்காய், ஒரு பச்சை மிளகாய், 5 முந்திரிப் பருப்பு, மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் எடுத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

அவகடோ பிரியாணி

பிரியாணி செய்வது போலவே, இஞ்சி - பூண்டு விழுது, கறிமசால் வகைகள், உப்பு அனைத்தையும் சேர்க்கவும். அவகடோ சேர்க்கவும். மிக்ஸியில் அரை மூடி தேங்காயுடன் கால் கட்டு கொத்தமல்லி இலை, கால் கட்டு புதினா இலை சேர்த்து அரைத்து அனைத்தையும் குக்கரில் வைத்து வேக விடவும். முந்திரி வறுத்து சேர்த்து பரிமாறவும்.

அவகடோ ஃப்ரைடு ரைஸ்

1வது முறை: சாதத்தை வேக வைத்து ஆற வைக்கவும். அவகடோ காயை பொடியாகத் துருவி வைத்துக்கொள்ளவும். எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வதக்கவும். துருவிய அவகடோ காயையும் சேர்த்து வதக்கவும். விரும்பினால், அரை ஸ்பூன் சர்க்கரை, அரை தக்காளியை பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். வதங்கும் போது தேவையான அளவு  மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, கறிமசால் பொடி சேர்க்கவும். உப்பு, கொத்தமல்லி இலை சேர்க்கவும். ஆறிய சாதத்தை இதில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

2வது முறை: இதில் கேரட், பீன்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

 அவகடோ தேங்காய்ப் பால் பிரியாணி

பிரியாணி செய்யும் போது, தேங்காய் விழுதாக அரைத்து விடாமல் தேங்காய் சக்கையைப் பிழிந்து விட்டு, தேங்காய்ப் பாலை அரிசிக்கு அளவு நீராக வைத்து செய்தால் சுவை கூடும்.

 அவகடோ - மட்டர் - ஆலு குருமா

எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு, கறிவேப்பிலை, இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிச்சேர்த்து, அவகடோ காயை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்க்கவும். இவை லேசாக வதங்கும் போது மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, கொத்தமல்லி பொடி, கறிமசால் பொடி சேர்க்கவும்.  பச்சைப் பட்டாணி சேர்க்கவும். ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி எனில் அப்படியே சேர்க்கலாம். இல்லையெனில் முதல் நாள் இரவு ஊற வைத்து சேர்க்கவும். 2 தக்காளி மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். அரை மூடித் தேங்காய், ஒரு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, 5 முந்திரிப் பருப்பு, மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் எடுத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

அவகடோ - மட்டர் ரைஸ்

எண்ணெய் அல்லது நெய்யில் பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும். இரண்டு தக்காளியை மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். தேவையான தனி மஞ்சள் பொடி, தனி வத்தல் பொடி, உப்பு, கறிமசால் பொடி அனைத்தையும் சேர்க்கவும். அவகடோ காயை தோலெடுத்து நறுக்கி சேர்க்கவும். பச்சைப் பட்டாணி சேர்க்கவும். நனைய வைத்த அரிசியைச் சேர்த்து லேசாக வதக்கவும். மிக்ஸியில் அரை மூடி தேங்காயுடன் கால் கட்டு கொத்தமல்லி இலை அரைத்து சேர்த்து குக்கரில் வைத்து வேக விடவும். முந்திரி வறுத்து சேர்த்து பரிமாறவும்.

அவகடோ ரெசிபி ஆல்பம் முழுமையாகக் காண: kungumamthozhi.wordpress.com