கண்கள்



கரண்டி கேமரா

‘‘கரண்டி மாமி... 2 வருஷங்களுக்கு முன்னாடி வரை இதுதான் என் அடையாளம். கேமரா மாமி... இது என் லேட்டஸ்ட் அடையாளம்... ஆர்வத்தையும் திறமையையும் வளர்த்துக்க வயசு ஒரு தடையில்லைங்கிறதை உணர்ந்தப்புறம் என் வாழ்க்கை இன்னும் அழகாவும் சுவாரஸ்யமாவும் இருக்கு...’’ டெராபைட் உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறார் ஸ்ரீப்ரியா ஐயங்கார்... புகைப்படக் கலைஞர்!

‘‘பி.எஸ்சி. மான்டிசரி எல்லாம் முடிச்சிட்டு வேலை பார்த்திட்டிருந்தேன். குடும்பப் பொறுப்புகளுக்காக வேலையை விட வேண்டிய நிர்பந்தம். உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையாயிட்ட மாமியார், வயசான மாமனார், ரெண்டுங்கெட்டான் வயசுல ரெண்டு குழந்தைங்கனு வீட்டுப் பொறுப்புகள் அதிகமாகி அதுலயே மூழ்கினேன். ஒரு கட்டத்துல எனக்குனு என்ன இருக்கு? என்னை உற்சாகமா வச்சுக்கிற விஷயங்கள்தான் என்னங்கிற தேடல் எழுந்தது.

சின்ன வயசுல ஓவியம் வரையறதுல ஆர்வமா இருந்திருக்கேன். அதோட தொடர்புடைய விஷயமா போட்டோகிராபி எனக்குத் தெரிஞ்சது. ஆனாலும், ‘இந்த வயசுல இதெல்லாம் சரியா வருமா’ங்கிற தயக்கமும் இருந்தது. அந்த விஷயத்துல என் மாமியார் கல்யாணி நரசிம்மன்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவங்க தன்னோட 58வது வயசுல நாக்பூர் யுனிவர்சிட்டியில ஜியா கரபியில டாக்டரேட் வாங்கினாங்க. தயக்கம் மாறி, தன்னம்பிக்கை வந்தது.

ஃபேஸ்புக்ல போட்டோகிராபி கத்துக் கொடுக்க யாராவது இருக்காங்களானு தேடினேன். ‘சென்டினென்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் போட்டோகிராபி’யை சேர்ந்த லஷ்மண் ஐயர் பத்திக் கேள்விப்பட்டு அணுகினேன். பேஸிக் விஷயங்களை அவர்தான் கத்துக் கொடுத்தார். அப்புறம் ‘மெட்ராஸ் இன் மோஷன்’ மாதிரியான சில அமைப்புகள்ல என்னை இணைச்சுக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். போட்டோகிராபியை பொறுத்த வரைக்கும் ‘கோல்டன் ஹவர்ஸ்’னு சொல்ற அதிகாலைப் பொழுது ரொம்பவே முக்கியம். ஆனா, என்னோட குடும்பச் சூழல்ல அந்த கோல்டன் ஹவர்ல போட்டோ எடுக்கிறது சாத்தியமில்லை.

எனக்கு என் குடும்பத்துக்கும் உறவுகளுக்கும்தான் முன்னுரிமை. வீட்டு வேலைகளை முடிச்சிட்டு, எல்லாருக்குமான பொறுப்புகளையும் நிறைவேத்திட்டுத்தான் கேமராவை கையில எடுப்பேன். கிடைக்கிற நேரத்தை எனக்கான கோல்டன் ஹவரா மாத்திக்கிட்டேன். மயிலாப்பூர் ஃபெஸ்டிவல் டைம்ல பாடகி மஹதியோட கச்சேரியை படம் எடுக்கிற வாய்ப்பு வந்தது. அடுத்து ‘மூட்ஸ் ஆஃப் மார்கழி’யில பாடகர் சசிகிரனை போட்டோ எடுத்து, செகண்ட் ப்ரைஸ் வாங்கினேன்.

கேமரா ஆர்வம் வந்த புதுசுல, தயக்கத்தோட இருந்தப்ப, என்னோட நலம் விரும்பி ஒருத்தர் ‘வீட்டை விட்டு வெளியில வாங்க... அப்பதான் உங்களால கத்துக்க முடியும்’னு சொல்லி, என்னை செம்மொழிப் பூங்காவுக்குக் கூட்டிட்டுப் போய், இயற்கையைப் படம் எடுக்கக் கத்துக் கொடுத்தார். அதுலேருந்தே எனக்கு ஸ்ட்ரீட் போட்டோகிராபி மேல தனி ஈடுபாடு வளர்ந்தது. மழைத்தூறல்களுக்கு இடையில பெரியார் பாலத்தையும் எலியட்ஸ் பீச்ல சோளப்பொரி சாப்பிட்டப்ப அதுலேருந்து பறந்த நெருப்புப் பொறியின் பின்னணியில சர்ச்சையும் நான் எடுத்த படங்கள் எல்லாரோட பாராட்டையும் வாங்கித் தந்தது.

இயற்கையோட படைப்புல என் பார்வைக்கு எல்லாமே அழகானவையாதான் தெரியும். இப்பவும் தினம் தினம் ஏதோ ஒரு விஷயத்தைக் கத்துக்கறேன். பெரிய பெரிய ஜாம்பவான்களோட போட்டோகிராபியை தேடிப் பிடிச்சு ரசிக்கிறேன். நுணுக்கங்களைக் கத்துக்கறேன். ஆனாலும், என்னோட போட்டோகிராபியில யாரோட சாயலும் இருக்கக் கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கேன். எனக்குனு ஒரு ஸ்டைலை உருவாக்கிக்கணும்கிற எண்ணம் இருக்கு. அந்த பாதிப்புலதான் திருநங்கைகளை பாசிட்டிவா காட்டற ஐடியா வந்தது.

பலரும் அவங்களைப் பத்தின நெகட்டிவ் விஷயங்களைப் பத்திப் பேசிட்டிருக்கும் போது, அவங்ககிட்ட உள்ள நல்ல விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரணும்னு விரும்பினேன். முதல் முயற்சியா திருநங்கையும் நடனக் கலைஞருமான நர்த்தகி நட்ராஜை சந்திச்சு, அவங்களோட டான்ஸை போட்டோ எடுக்க அனுமதி வாங்கினேன். ஆர்வத்தோட ஒத்துழைச்சாங்க. கொசப்பேட்டையில சில திருநங்கைகளை சந்திச்சுப் பேசி, அவங்களோட வாழ்க்கையை படம் எடுத்திருக்கேன். எதையும் எதிர்பார்க்காம, ஏன், எதுக்குனு கேட்காம எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அவங்களைப் பார்த்து பிரமிச்சுப் போனேன்.

திருநங்கைகளை வச்சு ஒரு டாகுமென்டரி பண்ற முயற்சிகள்ல தீவிரமா இறங்கியிருக்கேன். சீனியர் போட்டோகிராபர் ரமணிதரன் ராமஸ்வாமியோட ஊக்கம் மற்றும் வழிகாட்டுதல்ல ஆர்கிடெக்சர் போட்டோகிராபியையும் ஒரு பக்கம் தொடர்ந் திட்டிருக்கேன்...’’ - நிறுத்தாமல் பேசுகிற ஸ்ரீப்ரியா, இந்தியாவின் மிகப்பழமையான ‘போட்டோகிராபி சொசைட்டி ஆஃப் மெட்ராஸ்’ - ஸ்பான்சர்ஷிப் பிரிவின் இணை இயக்குநர். ‘‘போட்டோகிராபி பண்ண ஆரம்பிச்சதும், மறுபடி என்னோட காலேஜ் நாட்களுக்குள்ள பயணம் செய்கிற மாதிரி இளமையா ஃபீல் பண்றேன். இந்தக் கலை எனக்கு நிறைய தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு.

வண்டியில அடுத்த தெருவுக்குப் போகவே பயந்து நடுங்கின நான், இப்ப கேமராவை தூக்கிட்டு, சென்னை முழுக்க சுத்தி வரேன். நிறைய மக்களை சந்திக்கிறேன். சந்திக்கிற ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒரு விஷயத்தைக் கத்துக்கறேன். குழந்தைங்க வளர்ந்து செட்டிலாகி, குடும்பப் பொறுப்புகளை எல்லாம் முடிச்சிட்ட பிறகு எல்லாருக்கும் Empty nest syndromeனு ஒரு தனிமை உணர்வு வரும். என்னை மாதிரி ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு ஆர்வத்தை வளர்த்துக்கிட்டு, அதுல தன்னை பிஸியா வச்சுக்கிட்டாங்கன்னா, இதுலேருந்து வெளியில வரலாம்...’’ - தோழிகளுக்கு ஆலோசனை சொல்கிறார் மிஸஸ் ஐயங்கார்.

பெயருக்குப் பின்னால் தொக்கி நிற்கிற சாதிய அடையாளம் பற்றியும் அவரே விளக்குகிறார். ‘‘பல வருஷம் நார்த்ல இருந்திருக்கேன். அங்கே இதுதான் வழக்கம். அது அப்படியே இப்ப வரைக்கும் தொடருது. வெறும் ஸ்ரீப்ரியானு போட்டுக்கோங்க. நிறைய வாய்ப்புகள் வரும்னு சொல்றாங்க. அதை நான் சாதியோட அடையாளமா பார்க்காதப்ப, எதுக்கு எடுக்கணும்?’’ என்கிறார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் அன்ஷுமான், பிளஸ் ஒன் படிக்கும் அமோகா என இவருக்கு இரண்டு வாரிசுகள். ‘‘வயசான காலத்துலயும் எப்போதும் தன் கூடவே இருந்து பார்த்துக்கணும்னு நினைக்காம, ‘நீ போய் போட்டோ எடு’னு ஊக்கப்படுத்தற மாமனார், ‘உனக்குள்ள இருக்கிற திறமையை வீணாக்காதே...’னு தைரியம் சொல்ற ஹஸ்பெண்ட், வித்தியாசமான இடங்களுக்குக் கூட்டிட்டுப் போய் போட்டோ எடுக்க உதவற என் பசங்க, பாசிட்டிவான கமென்ட்ஸை சொல்லி பாராட்டற ஃப்ரெண்ட்ஸ்னு என்னைச் சுத்தி நிறைய நல்லவங்க இருக்காங்க. போட்டோகிராபிங்கிறது ஒரு கடல். கத்துக்கறதுக்கு எல்லையே இல்லை. கடைசி வரைக்கும் ஸ்டூடன்ட்டாவே இருக்கணும்கிறதுதான் என் ஆசை...’’ - அடக்கமாக, அமைதியாகச் சொல்கிறார் கேமராவின் காதலி!

ஸ்ரீப்ரியாவின் ஒளி ஓவியங்களைக் காண: www.flickr.com/photos/127104666@07

என்னை மாதிரி ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு ஆர்வத்தை வளர்த்துக்கிட்டு, அதுல தன்னை பிஸியா வச்சுக்கிட்டாங்கன்னா, தனிமை உணர்விலிருந்து வெளியில வரலாம்... போட்டோகிராபி பண்ண ஆரம்பிச்சதும், மறுபடி என்னோட காலேஜ் நாட்களுக்குள்ள பயணம் செய்கிற மாதிரி இளமையா ஃபீல் பண்றேன். இந்தக் கலை எனக்கு நிறைய தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு. வண்டியில அடுத்த தெருவுக்குப் போகவே பயந்து நடுங்கின நான், இப்ப கேமராவை தூக்கிட்டு, சென்னை முழுக்க சுத்தி வரேன்...

‘வீட்டை விட்டு வெளியில வாங்க... அப்பதான் உங்களால கத்துக்க முடியும்’னு சொல்லி, என்னை செம்மொழிப் பூங்காவுக்குக் கூட்டிட்டுப் போய், இயற்கையைப் படம் எடுக்கக் கத்துக் கொடுத்தார். அதுலேருந்தே எனக்கு ஸ்ட்ரீட் போட்டோகிராபி மேல தனி ஈடுபாடு வளர்ந்தது...