நவம்பர் 6 அன்னாபிஷேகம்



‘உலகையே புரந்தருளும் வல்லமை படைத்தவன் ஈசன்’ என்பதில் லேசாக சந்தேகம் வந்தது பார்வதிக்கு. சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கும் பேராற்றல் கொண்ட  தன் தலைவனைக் கொஞ்சம் பரீட்சித்துப் பார்க்க விரும்பினாள். ஒரு எறும்பைப் பிடித்து ஒரு சிறு பேழைக்குள் இட்டு மூடினாள். அதற்கு முன் பேழைக்குள் எந்த  உணவுத் துணுக்கும் இல்லாதபடி பார்த்துக்கொண்டாள்... ‘இப்போது இந்த எறும்புக்கு ஈசன் எப்படி படியளக்கிறார் என்று பார்ப்போம்!’

சில மணி நேரம் கடந்தபின், ஆவலுடன் அப்பேழையை மெல்லத் திறந்து பார்த்தாள் அன்னை. உள்ளே, வெறும் எறும்பாக இருந்த அந்த ஜீவன், இப்போது வாயில்  ஒரு சிறு அரிசி துணுக்கைக் கவ்விக் கொண்டிருந்தது. திகைத்துப் போனாள் அன்னை. உடனே ஈசனிடம் ஓடிச் சென்று, ‘என்னை மன்னித்துவிடுங்கள். சிறுமதி  கொண்டு அனைத்து உயிர்க்கும் அன்னம் பாலிக்கும் உங்கள் பரந்த மனப்பான்மையை சோதிக்க நினைத்தேன்... என்னை மன்னியுங்கள்’ என்று வேண்டிக்  கொண்டாள்.

மெல்லச் சிரித்தார் மகாதேவன்... ‘தேவி, அது என் அருள் மட்டுமல்ல... உன் பாசமும் கூடதான். உன் கரத்தால் எறும்பைப் பற்றி, அதை ஒரு பேழைக்குள் இட்டு  மூடியபோது, உன் பாசத்தையும் சேர்த்து உள்ளே இட்டாய். தாய்ப் பாசத்துக்கு பங்கம் வரலாமோ? அதனால்தான் அந்த எறும்புக்கு ஒரு சிறு  அரிசித் துணுக்கை அளித்தேன்’ என்று கருணையால், மனைவியை விட்டுக் கொடுக்காத தன்மையால், அம்பிகையை மேலும் அழ வைத்தார் சிவன்!

இந்த சிவனுக்கு ஒவ்வொரு ஐப்பசி மாதமும் பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. தினமும் பூஜை செய்யும்  வழக்கம் உள்ளவர்கள், சுவாமிக்கு பிரசாதம் என்று சிறு உணவுப் பொருளைப் படைப்பதில்லையா? அதே போல சிவாலயங்களில் லிங்கத்தை  அப்படியே சாதத்தால் மூடி அபிஷேகம் செய்கிறார்கள். பெரிய அளவிலான நன்றியறிதல் இது. வரும் பக்தர்களுக்கெல்லாம் இந்த அன்னத்தைப் பிரசாதமாக  வழங்குகிறார்கள். அந்தப் பிரசாதத்தை உட்கொள்கிறவர்களுடைய கோளாறுகள் நீங்குவதாகவும் விருப்பங்கள் நிறைவேறுவதாகவும் சொல்கிறார்கள்.

நவம்பர் 17

கார்த்திகை மாதப் பிறப்பு


அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே ‘ஸ்வாமியே...ய் சரணம் ஐயப்பா...’ என்று பக்தர்கள் ஆன்மிகக் குரல் கொடுக்கும் சபரிமலை விரத நாள் இன்று ஆரம்பம்.  கறுப்பு உடை, இருமுடி, கழுத்தில் மணிமாலை, உள்ளமும் உதடுகளும் சதா உச்சரிக்கும் ஐயப்ப மந்திரம் - இவை சகிதமாக பக்தர்கள் சபரிமலை நாதனை  தரிசிக்கச் செல்லத் தம்மைத் தயார் செய்து கொள்ளும் திருநாள்.

2014 நவம்பர் விசேஷங்கள்

3, 18 - ஏகாதசி
4, 20 - பிரதோஷம்
6 - பௌர்ணமி
7 - கிருத்திகை
10 சங்கடஹர சதுர்த்தி
26 - சதுர்த்தி
12, 27 - சஷ்டி
20 - மாத சிவராத்திரி
22 - அமாவாசை

நவம்பர் 23

புட்டபர்த்தி பகவான் சாயிபாபா அவதார நாள்‘அன்பு அன்பு அன்பு... உலகில் மனிதரிடையே நல்லிணக்கம் பரவ வேண்டும். எங்கும் அமைதியும் அதனால்  ஆனந்தமும் பெருக வேண்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்று இந்தக் கலியுகத்தின் அத்தியாவசியத் தேவையைத் தன் ஒவ்வொரு சொல்லிலும்  செயலிலும் பிரதிபலித்து மக்களுக்காகவே வாழ்ந்த மகான் புட்டபர்த்தி சாயிபாபா. எப்படி அன்பு செலுத்துவது? சேவை மூலமாகத்தான். யார், எவருக்கு, எந்த  நேரம், காலம், எந்த இடம், ஊர் என்றெல்லாம் பார்க்காமல், தேவைப்படுவோருக்கெல்லாம் சேவை புரிவதே இறைவனுக்கு நாம் செலுத்தும் பக்தி. தன் வாழ்நாளை  மக்கள் நல்வாழ்வுக்காக அர்ப்பணித்த மகான், சத்ய சாயிபாபாவின் அவதார நாள் இன்று. மிக உயரிய தொழில்நுணுக்க வசதிகளைக் கொண்ட இலவச  மருத்துவமனைகள், ஆண்டாண்டு காலமாக தண்ணீரையே பார்த்தறியாத வறட்சிப் பகுதிகள், இப்போது தினசரி தேவைக்கான நீரைப் பெறும் சேவை என்று  எத்தனையோ மக்கள் நலத்திட்டங்களை, ஓர் அரசாங்கத்துக்கே சவால் விடும் வகையில் தனி மனிதராக நிறைவேற்றித் தந்தாரே... இவரை பகவான் என்று  அழைத்து மனம் உருகுவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை. அவர் தொடங்கி வைத்த இதுபோன்ற சேவைகளை அவருடைய பக்தர்கள்  தொடர்கிறார்களே... அந்த மனப்பக்குவத்திலிருந்து அவர் இன்றும் நம்முடனேயே உலவி வருகிறார் என்ற நம்பிக்கையும்
வலுக்கிறது.

நவம்பர் 16 / 17

கடை முழுக்கு / முடவன் முழுக்கு


புண்ணிய நதிகள் எல்லாம், ஐப்பசி மாதத்தில் காவிரியில் கலப்பதாக ஐதீகம். ஐப்பசியில் காவிரியில் நீராடினால், அந்தப் புண்ணிய நதிகள் எல்லாவற்றிலும்  நீராடிய பேறு கிடைக்கும்... முக்தியும் கிடைக்கும். தந்தை வழியில் ஏழு தலைமுறையினருக்கும், தாய் வழியில் ஏழு தலைமுறையினருக்கும் இப்போது  நீராடுபவருக்கும் சேர்த்து அந்த வம்சத்துக்கே மோட்ச பிராப்தம் கிட்டும்.

ஐப்பசி மாதக் கடைசி நாளன்று நடைபெறும் புனித நீராட்டத்தை ‘கடை முழுக்கு’ என்கிறார்கள். கார்த்திகை மாதம் முதல் நாளன்று நடைபெறும் புனித நீராட்டம்
‘முடவன் முழுக்கு’ என வழங்கப்படுகிறது. பக்தர் ஒருவரின் உண்மையான பக்தியின் வெளிப்பாடே முடவன் முழுக்கு. அதாவது, கால் ஊனமான அந்த பக்தர்,  ஐப்பசி மாதம் முடிவதற்குள்ளாக காவிரியில் நீராட விரும்பிப் புறப்பட்டார். அவர் மயிலாடுதுறை வருவதற்குள், ஐப்பசி மாதம் முடிந்துவிட்டது. அவர்  மயூரநாதரிடம், ‘துலா ஸ்நானம் (ஐப்பசி மாத நீராடல்) செய்ய வந்தால், என் இயலாமை காரணமாக அந்த மாதமே முடிந்துவிட்டதே’ என்று சோகமாக  முறையிட்டார். அதற்கு சிவபெருமான், ‘உன் பக்தி ஆர்வம்தான் முக்கியம். ஐப்பசி போனால் என்ன, கார்த்திகை பிறந்தால்தான் என்ன, நீ போய் மூழ்கு! உனக்கும்  பேறு கிடைக்கும்’ என்று அருள் செய்தார்.

அவ்வாக்குப்படியே அவரும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று புனித நீராடி முக்தி பெற்றார். அதுவே முடவன் முழுக்கு. அதாவது, காவிரியில் வந்து கலந்த  புண்ணிய நதிகள், ஐப்பசி முடிந்ததும் அவளிடமிருந்து விடை பெற்றுக்கொள்ள மனதில்லாமல், மேலும் ஒருநாள் தங்கி, அந்த கால் ஊனமுற்றவருக்கும்  ஆறுதலளித்துப் பிறகு பிரிந்து செல்வார்கள் என்றும் சொல்லலாம்.