சாத்தூர் சேவு



தமிழகம் முழுதும் ருசிக்காகவே ஒரு சுற்றுலா செல்லலாம். இப்படித்தான் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு உணவுக்குச் சிறப்புப் பெற்றிருக்கிறது.  ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, ஆற்காடு மக்கன்பேடா, திருவையாறு அசோகா போல இன்னும் ஒரு சிறப்பான நொறுக்குப் பண்டம் சாத்தூர் காராச்சேவு. சேவு  என்று அழைக்கப்படும் இதன் பூர்வீகம் ராஜஸ்தான் எனக் கருதப்படுகிறது. ராஜஸ்தானின் பிகானீரில், 1877ம் ஆண்டு, ‘பிகானேரி புஜியா’ என்னும் பெயரில், அந்த  ஊர் அரசரின் சிறப்பு உணவாக ஒருவகை சேவு தயாரிக்கப்பட்டது. இப்போதும் சுமார் 25 லட்சம் மக்கள் அப்பகுதியில் புஜியா தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதால்,  இப்பண்டம் புவிசார் குறியீடும் பெற்றிருக்கிறது (ஒரு குறிப்பிட்ட இடத்தில்மட்டும் அந்தப் பொருள் அதிகமாக விளைந்தாலோ, உற்பத்தி செய்யப்பட்டாலோ, அந்த  ஊரின் பெயரோடு வழங்கப்படும் உரிமைக் காப்பு சான்றிதழே புவிசார் குறியீடு. உதாரணம்: பத்தமடை பாய், மதுரை மல்லி...).

சேவு போலவே புஜியாவிலும் பிரதான பொருள் கடலைமாவுதான். நம்ம ஊர் காராச்சேவுடன் ஒப்பிடுகையில், இது அளவில் சிறியதாகவும் காரம் குறைவாகவும்  இருக்கும். உருளைக்கிழங்கில் தொடங்கி, பல சுவைகளிலும் கிடைக்கும். ஒன்றரை நூற்றாண்டை எட்ட இருக்கும் இந்த சேவுடன் ஒப்பிடுகையில், சாத்தூர்  காராச்சேவு 80 ஆண்டுகளாகப் புகழ்பெற்று இருக்கிறது.

காமராஜர், கலைஞர் ஆகியோர் உள்பட பல பிரபலங்கள் ருசித்த சாத்தூர் காராச்சேவு, இன்றளவும் அதன் காரம் குறையாமல் காணப்படுகிறது. எல்லா ஊர்களிலும்  காராச்சேவு விற்பனை செய்யப்பட்ட போதிலும், சாத்தூர் காராச்சேவுக்கு என்றுமே ஒரு மவுசு உண்டு. இங்குள்ள நீர் ஆதாரங்கள், விளையும் மிளகாய் வற்றலின்  காரம், சேவு தயாரிப்பவர்களின் கைவண்ணம், தரம் ஆகியவை, மற்ற ஊர் சேவுகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன. சாத்தூர் சுற்றுப்புற கிராமங்களில்  பனைமரங்கள் அதிகம் காணப்படுவதால், பனை வாசம் கொண்ட ஓலைக் கொட்டான்களில் சேவுகளை விற்பனை செய்வது முன்பு வழக்கம். பனை ஓலை  சேவுகள் மிகவும் வாசனையாகவும் சுவையாகவும் காணப்படும். காலச் சூழ்நிலைக்கேற்ப இப்போது பாலிதீன் பைகளிலும் துணிப்பைகளிலும் சேவு விற்பனை  செய்யப்படுகிறது.

சாத்தூரைக் கடந்து செல்லும் பயணிகள் மறக்காமல் சேவு வாங்கிச் செல்வது இன்றைக்கும் மாறவில்லை. தலை தீபாவளி கொண்டாடும் தம்பதிகளுக்கு சீர்  பலகாரமாக சாத்தூர் சேவு அளிப்பதும் வழக்கம். சிங்கப்பூர், மலேசியா உள்பட உலகின் பல நாடுகளுக்கும் சாத்தூர் சேவு பறந்து செல்கிறது.  80 ஆண்டுகளுக்கு முன் சண்முக நாடார் காராச்சேவில் உருவாக்கிய தனிச்சுவையே சாத்தூருக்கு இன்றும் புகழ் சேர்க்கிறது. அவருக்கு அடுத்தபடியாக  என்.ஆர்.கே. ஸ்வீட்ஸ் ‘லட்டு’ கருப்பசாமி, 25 ஆண்டுகளாக சேவு தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். தென் தமிழகம் முழுதும் லட்டு மொத்த வியாபாரம் செய்ததால்,  அவரது பெயருக்கு முன் ‘லட்டு’ சேர்ந்திருக்கிறது. இப்போது அவரது கடையில் காராச்சேவும் வீட்டு முறுக்கும் பிரபலம். இங்கு சேவு விலை கிலோ ரூ.200  மட்டுமே.

ஏன் சாத்தூர் காராச்சேவுக்கு அத்தனை ருசி? தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எண்ணெயும் பூண்டும் தனிச் சிறப்பானவை என்பதுதான் காரணம் என்கிறார்  கருப்பசாமி. வழக்கமாக சூரியகாந்தி எண்ணெயில்தான் இவ்வகை பலகாரங்கள் செய்வார்கள். சாத்தூர் சேவு கடலை எண்ணெயில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.  அதன் தனிச் சிறப்புக்கு கடலை எண்ணெயின் மணமும் ஒரு காரணமே. அத்துடன் கொடைக்கானலில் இருந்து தருவிக்கப்படும் மலைப்பூண்டும் சாத்தூர்  மிளகாயும் கூடுதல் சுவை சேர்க்கின்றன. ஒரு மாதம் வரை கெடாத பலகாரம் இது. மெலிதான காராச்சேவு மட்டுமல்ல... நயம் சேவு, சீரகச் சேவு, மிளகுச் சேவு,  பட்டர் சேவு, இனிப்பு சேவு என பல வகை உண்டு இங்கு!

(சாத்தூர் திருவேட்ட போத்தி உதவியுடன்)

சீக்ரெட் ரெசிபி

சாத்தூர் சேவு


இதை வீட்டில் செய்யவும் சுலபமான வழி உண்டு. கொடைக்கானல் பூண்டு சேர்க்கும் அளவுக்கு சுவை கிட்டாவிட்டாலும், அதில் 90 சதவிகித சுவையை  நம்மாலும் கொண்டு வர முடியும். கொஞ்சம் மெனக்கெட்டால், சுவையும் சுத்தமும் கொண்ட குழந்தைகள் விரும்பும் இந்த ஸ்நாக்ஸை வீட்டிலேயே செய்யலாம்.  பாரம்பரிய சாத்தூர் சேவுடன் மிளகு, உருளைக்கிழங்கு என்று சேர்த்து வெரைட்டியும் காட்டலாம்!

என்னென்ன தேவை?

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - கப்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பல்
பெருங்காயம் - 1 சிட்டிகை
சீரகம் - டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கடலை மாவையும் அரிசி மாவையும் சலித்து வைக்கவும் (சிறு கற்கள் இருக்கும் பட்சத்தில் எண்ணெயில் போடும் போது வெடிக்கும் அபாயம் உள்ளது).
பூண்டை சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைத்துக் கொள்ளவும். மாவில் சீரகம், உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், பூண்டு விழுது சேர்த்து பிசைந்து  கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை கொதிக்க வைக்கவும்.
சேவுக்கு என்றே சிறு துளைகள் கொண்ட தனி அச்சு உள்ளது. அதைக் கொண்டு மாவு தேய்த்து, எண்ணெயில் நேரடியாக விடவும்.
பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து, காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்

உங்கள் கவனத்துக்கு...


இந்த மாவில் விரும்பினால் சிறிது வெண்ணெய் சேர்க்கலாம். ஆனால், அதிக நாள் வைத்திருக்க முடியாது. மாவு பிசைந்த உடன் சேவு செய்துவிட வேண்டும். அல்லது கடுகடுப்பாக மாறிவிடும். மிளகுத் தூள் அல்லது வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து, புது வெரைட்டியாக பெப்பர் சேவ், ஆலு சேவ் செய்யலாம்.
80 ஆண்டுகளாக புகழ்பெற்றிருக்கும் சாத்தூர் காராச்சேவு, தலை தீபாவளி தம்பதிகளுக்கு சீர் பலகாரமாகவும் அளிக்கப்படுகிறது.

ஏன் சாத்தூர் காராச்சேவுக்கு அத்தனை ருசி? தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கடலை எண்ணெயும் கொடைக்கானல் மலைப்பூண்டும் தனிச் சிறப்பானவை  என்பதுதான் காரணம்!