இளம்பிறை



கவிஞர் / ஆசிரியர்

இடம்  

அல்லிக் குளமே...  அழகுக் குளமே!


விமானத்தில் பயணம் செய்யும் எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஒருமுறை மலேசியா சென்று வந்ததைத் தவிர, பெரிதாக பயண அனுபவம் ஏதும் வாய்த்ததில்லை எனக்கு. ஓயாத அலைச்சல்களுக்கு மத்தியில் ஓர் இனிய பயணத்தின் ஏக்கம் பழத்திலிருந்து குடையும் வண்டாக மனதை குடைந்து கொண்டே இருக்கிறதென்றாலும், இதுவரை பார்த்த இடங்களில் என் நெஞ்சோடு என்றும் நிலைத்திருப்பது - கரைகளில் கருவேலம் பூவரச மரங்களும், நீர்பரப்பில் அல்லிப் பூக்களுமாகச் சிரித்திருக்கும் எனது கிராமத்தின் அல்லிக் குளமே! அந்தச் சிறிய குளத்தில்தான் எத்தனை ரகசியங்கள்... அதிசயங்கள். அதன் கரையோரச் செடிகளின் பூக்கள் அதிர, சாயங்கால நேரத்தில் புற்றுக்குத் திரும்பும் நல்ல பாம்புகள்... குளத்தின் கிழக்குக் கரையில் வன்னியம்மன் கோயில் வேப்பமரம்... அதனருகில் சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் சிறுகன்னி... அதை ஒட்டிய நெல் வயல்கள்... அங்கிருந்து பார்த்தால் சிரத்தில் தெரியும் ஆற்றங்கரையின் அழகிய தேக்கு மரங்கள்... வானத்தைப் பார்த்தால் விதவிதமான மேகச் சிலைகள்... இப்படி அந்தக் குளக்கரையிலிருந்து பார்க்கும்போது எல்லாமே அழகாகவும் அமைதியாகவும் தெரியும்.

பூவரச மர நிழலில் அமர்ந்து, பெரிய சிறிய அல்லியின் இலைகளையும் பூக்களையும் சிறுசிறு பூச்சிகளையும் பார்த்துக் கொண்டிருப்பது அவ்வளவு மகிழ்வாக இருக்கும். மழைக்காலமெனில், இன்னும் கூடுதல் கொண்டாட்டம். பச்சை இலைகளில் வெள்ளி முத்துகளாக விழுந்து சிதறும் மழைத்துளிகள், இலைகளின் மேல் விழுந்து, இரண்டு துள்ளு துள்ளிவிட்டு நீருக்குச் செல்லும் கெண்டை மீன்கள். மேலே வந்து எட்டிப் பார்த்துவிட்டு வால் சுழற்றி உள்ளே செல்லும் பெரிய மீன்கள், மழைநீர் மண்ணோடு கரைந்து வழிந்து நிறைந்து கொண்டிருக்கும் குளத்தை வட்டமிடும் பறவைகள் என, எல்லாவற்றுக்கும் திருவிழாவின் பரவசம்!

தனிமையில் மழையில் நனைந்தபடி, அதன் பாசிபடர்ந்த உடைந்த படிக்கட்டில் மெல்ல இறங்கி, நடுக்குளத்துக்குச் சென்று, கொடிகளுக்குள் நானாகவே செல்லமாகச் சிக்கிக்கொள்வதும், ஒரு கொடியை பிடித்தபடி மூழ்கிச் சென்று, அதன் கிழங்கெடுத்து ருசி பார்ப்பதும், அல்லித்தண்டுகளில் நீர் உறிஞ்சி கொப்புளிப்பதுமாக, நிறைய நேரம் குளத்துடன் விளையாடிவிட்டு, கரையில் உதிர்ந்து கிடக்கும் பூவரசம் பூக்களை மடிநிறையக் கட்டிக்கொண்டு, வழுக்கும் பாதைகளில், வழுக்கி வழுக்கி நடந்து வீடு சேர்வதும் தனி சுகம். ஆயிரம் வண்ண ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட எந்த ஓர் இடமும் இதுவரை எனக்குத் தந்திராத குளிர்ச்சியை, மகிழ்ச்சியை, அமைதியை, நிறைவைத் தந்த அந்த அழகிய அல்லிக்குளமே என் பால்யகால தோழி, விளையாட்டுச் சிநேகிதி. என் மனம் மறக்க முடியாத எனக்கு மிகப் பிடித்த விருப்பமான இடம்!

படம்

இதயம் தொட்ட மகா கலைஞன்

வாழ்வின் இயலாமைகளும் ஏமாற்றங்களும் துரத்தும் துன்பவியல் திரைக் காவியங்களின் நாயகனாக, இயக்குநராக, தயாரிப்பாளராக சாதனை சிகரங்கள் பலவற்றைத் தொட்ட நிலையிலும், அவை எவற்றிலும் ஒட்டாத மனநிலையுடன் தற்கொலையில் தன் வாழ்வை முடித்துக்கொண்ட மகா கலைஞன் குருதத். 1959ல் அவர் நமக்களித்த Kagaz Ke Phool (காகிதப்பூ) என்ற திரைக் காவியமே நான் பார்த்த படங்களில் மனதை நெகிழச் செய்து, கண்கலங்க வைத்த படம். பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த இவரது ‘பியாசா’வில் வரும் அந்தக் கவிஞனின் பாத்திரப் படைப்பு இன்றளவும் மனதோடு இருக்கிறது. காரணம்...

அவர் தேர்வு செய்யும் கதைகளின் உண்மையும் யதார்த்தமுமே. இப்படத்திலும் (காகிதப்பூ) ஒரு திரைப்பட இயக்குநரின் தேடல்களும் போராட்டங்களும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. குருதத் தனது படங்களை இதயத்தால் பார்க்க வைக்கிறார். அதனால்தான் உலகத்தின் ஆகச் சிறந்த 100 திரைப்படங்களில் இந்தப் படமும் இடம் பெற்றிருக்கிறது. அதீத சிரமங்களினால் ஒரு புகழ்பெற்ற கலைஞனின் சுயமரியாதை சின்னாபின்னமாகி, மெய்யான காதலும் தோற்றுப் போகிறது. அவரே இயக்கி, நடித்திருக்கும் இப்படம், அவர் வாழ்வோடு தொடர்புடைய கதையாக இருக்கிறது. குருதத்வின் ‘கக்கேஸ் கி பூல்’ பார்த்தவர்கள் அவரை மறக்கவே முடியாது!

நூல் யார் சொன்னது?

ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து நார்வேயில் வசித்து வரும் கவிதாவால் எழுதப்பட்ட ‘கறுத்தபெண்’, எதிர்பாராவிதமாக எனக்கு வாசிக்கக் கிடைத்த இயல்பான கவிதைகளின் தொகுப்பு. ‘இனி’ என்ற அவரது கவிதையில் இருந்து சிலவரிகள்...

‘நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை
உன்னிடம் என்னை ஒப்படைக்கிறேன்
என்று யார் சொன்னது?
நான் உன்னுடன் வாழ விரும்புகிறேன் என்பதை
உனக்காக வாழ விரும்புகிறேன்
என்று யார் சொன்னது?’

இப்படி மிகத் தெளிவான ஆழமான வினாக்களாக மிளிரும் கவிதை, ‘ஆணுக்குப் பின்னால் நின்று, அவனை ஏற்றிவிடும் ஏணியாக வாழ்வை முடித்துக்கொள்வதே பெண்ணின் பெருமை’ என்ற போலிப் பெருமைகளை உடைத்து நொறுக்குகிறது. ‘சொன்ன சொல் மாறாமல்’ என்ற மற்றொரு கவிதை இப்படி முடிகிறது... ‘தயவு செய்து காலங்காலமாகக் கட்டிவரும் கற்பு என்றால் என்ன என்பதை கறுத்தபெண் என்ற என் முகவரிக்கு வந்து சொல்லுங்கள்’ என அந்த வெங்காயத்தை தோலுரிக்கிறது. மாதவிடாயையும் மழையையும் ஒப்பிட்டு எழுதியிருக்கும் ‘தூமை’ என்ற கவிதை இன்ப அதிர்வைத் தருகிறது. ‘மூடிய பூவுக்குள் மாட்டிக்கொண்ட வண்டினைப் போல நெற்றிப் பொட்டருகில் காதல் என்னை குடைந்து கொண்டிருக்கிறது’ எனச் சொல்லும் கவிதாவின் 80 பக்க கவிதைகளில் பம்மாத்தும் பொய்யும் இல்லாததால் மிகுந்த விருப்பத்துடன் இரண்டு முறைப் படித்தேன்! (புதுப்புனல் வெளியீடு ணூ98844 27997 / 99623 76282 t60)


Web Exclusive

36 ட்வீட்டில் முழு மகாபாரதம்! ‘இந்தியாவின் இதிகாசங்கள்’ என்று போற்றப்படுபவை ராமாயணமும் மகாபாரதமும். மூல மகாபாரதம் 18 அத்தியாயங்களையும் (பர்வங்கள்) கிட்டத்தட்ட ஒரு லட்சம் பாடல் அடிகளையும் கொண்டது. அப்படிப்பட்ட புகழ்பெற்ற இதிகாசத்தை 36 ட்வீட்டுகளில் எழுத முடியுமா? ட்விட்டரில் ஒரு ட்வீட் பதிவை 140 எழுத்துகளுக்குள்தான் பதிவிட முடியும். அப்படி இருக்க, இது எப்படி முடியும்? எழுத்தாளர் தேவ்தத் பட்நாயக் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார். மகாபாரதத்தின் முழுக் கதையையும் 36 ட்வீட்டுகளாக 40 நிமிடங்களில் பதிவேற்றி, ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்‘ என்கிற பழைய பழமொழிக்கு அர்த்தம் கொடுத்திருக்கிறார்!