ஏன் இந்த வன்மம் ஆசிரியரே!



ஆசிரியர் கையில் இருந்து கம்பைப் பறித்தாயிற்று. ஆனாலும், தினம் ஒரு தாக்குதல் செய்தி. ஆசிரியர் அடித்து மாணவிக்கு பார்வை பறிபோனது..., ஆசிரியர் தாக்கி மாணவனுக்கு கேட்கும் திறன் போனது, ஆசிரியர் தாக்கி மாணவன் மயங்கி விழுந்தான்’

- ஏன் இந்த வன்மம்? அன்பும் அக்கறையுமாக குழந்தைகளை ஈர்த்து அவர்களுக்குப் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள், குழந்தைகளை காயப்படுத்தும் அளவுக்கு மாறிப்போக என்ன காரணம்? கம்பில்லாத, வன்முறையில்லாத, அதட்டல் இல்லாத அன்பு ததும்பும் வகுப்பறை சாத்தியமே இல்லையா?

‘‘ஆசிரியர்களின் மனோபாவம் மாறினால் நிச்சயம் சாத்தியம்தான் என்கிறார் குழந்தைகளுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், கல்வி ஆய்வாளரும், தலைமை ஆசிரியருமான ஆயிஷா இரா.நடராஜன்.“திறமையுள்ள ஆசிரியர் குழந்தைகளை அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி அடித்துத்தான் பயிற்றுவிக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு ஆசிரியர் இருப்பாரேயானால், நிச்சயம்அவருக்கு ஏதோ உளவியல் சிக்கல் இருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்நடராஜன்.

‘‘பொதுவாக பெரும்பாலான ஆசிரியர்கள் குழந்தைகள் படிக்கவில்லை என்பதற்காகவோ, வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காகவோஅடிப்பதில்லை. வகுப்பறை விதிகளை கடைபிடிக்காததற்காகவே தண்டிக்கிறார்கள். நேராக உட்காரவில்லை, அமைதியாக இருப்பதில்லை, மற்ற மாணவர்களுடன் பேசுகிறான் என்பதெல்லாம் ஆசிரியருடைய பார்வையில் ஒழுங்கீனங்கள்.

உண்மையில், குழந்தைகளின் இயல்புகளே இவைதானே? குழந்தைகள் பேசக்கூடாது என்று கட்டுப்படுத்துவதை விட மிகப்பெரும் வன்முறை வேறெதுவும் இல்லை. நடைமுறைக்குச் சாத்தியமற்ற விதிகளை உருவாக்கி வைத்துக்கொண்டு ஆசிரியர் வகுப்பறையில்அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்.

வகுப்பறை என்பது ஜனநாயகத் தன்மை கொண்ட இடமாக இருக்க வேண்டும். ஆனால், அங்கே ஆசிரியர் தன் அதிகார தர்பாரை நடத்துகிறார். வெகு ஆண்டுகளுக்கு முன்பே நம் பாடத்திட்டமும் வாழ்க்கை முறையும் மேற்கத்திய சார்புடையதாக மாறிவிட்டது. நிர்வாகம்இன்னும் குருகுல முறைப்படிதான்இயங்குகிறது. மேலை நாடுகளில் வகுப்பறை, மாணவர்களுக்காக இயங்குகிறது. அங்கே ஆசிரியர்கள் கேள்விக்கு உட்படுத்தப்படுவார்கள். மாணவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்.

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டும். சாக்ரடீஸை பிளேட்டோ விமர்சித்தார். பிளேட்டோவை அவரது மாணவரான அரிஸ்டாட்டில் விமர்சித்தார். தவறுகள் மாணவர்களுடையதாக இருந்தாலும் சரி... ஆசிரியர்களுடையதாக இருந்தாலும் சரி... சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

அதுதான் ஆரோக்கிய வகுப்பறை. வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் கீழே விழும்போது வெவ்வேறு நேரத்தில் பூமியை அடையும் என்று ஆசிரியர் நடத்திய பாடம் தவறென உணர்ந்தகலிலியோ, தன் நாட்டின் சாய்ந்த கோபுரத்தில் ஏறி நின்று இரண்டு வெவ்வேறு எடை கொண்ட கற்களை பூமியில் வீசி ஒரே நேரத்தில் பூமியை அடைவதை நிரூபித்துக் காட்டினார்.

அப்போது அவருக்கு வயது 12. அந்த வயதிலேயே கேள்வி கேட்கும் திறனையும் தவறைச் சுட்டிக்காட்டும்தைரியத்தையும் மேலைநாட்டுக் கல்வி உருவாக்குகிறது. இங்கோ வகுப்பறையில் பேசுவதேதண்டனைக்குரிய குற்றம். மாற்றம் ஆசிரியர்களிடமிருந்து தொடங்க வேண்டும். ஆசிரியர் குழந்தையாக மாற வேண்டும். குழந்தைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைக் கொடுக்காமல், அவர்களுக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஆசிரியரின் வகுப்பறை சொர்க்கமாக இருக்கும்... என்கிறார் இரா.நடராஜன். இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் சராசரிகளாகவே மாறிப்போனதன்பின்புலத்தில் வாழ்வியல் கூறுகள் சிதைந்ததும் காரணமாக இருக்கிறது. கல்வி வணிகமாகி விட்டது. கல்விஉரிமைச் சட்டம் வருவதற்கு முன்பு வரை ஆசிரியர் நியமனத்தில் ஏராளமான பிரச்னைகள். நியாயமற்ற நியமனங்கள். கல்வி உரிமைச் சட்டம் வந்த பிறகும் நியமனத்தில் குழப்பங்கள். இப்படியான மன நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர நேர்கிறது.

இந்த நெருக்கடியில் குழந்தைகளின் சின்ன மனதையும் அவர்களின் உளவியலையும் உள்வாங்கிக்கொண்டு அவர்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்கிற அளவுக்கு பக்குவமுள்ள ஆசிரியர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகிறார்கள். அண்மையில் நடைபெற்ற ஓர் ஆய்வில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களில் பலர், பகுதி நேரமாக வேறொரு தொழிலையும் சேர்த்துச் செய்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. சமூகத்திலும் குடும்பத்திலும் ஆசிரியர்கள் சந்திக்கிற பிரச்னைகள், மேலதிகாரிகள் மத்தியில் எதிர்கொள்கிற சங்கடங்கள் அனைத்துக்கும் வகுப்பறையில் உள்ள குழந்தைகளே வடிகாலாக நேர்கிறது.

‘‘குழந்தைகளை அச்சுறுத்துவது என்பது பலருக்கு பிடித்தமான விஷயமாக இருக்கிறது. ஒரு குழந்தையை அச்சுறுத்த, அடிக்க வேண்டும்என்பது கூட இல்லை. கண்களை உருட்டிப் பார்த்து மிரட்டினாலே போதும். குழந்தை நடுநடுங்கிப் போய்விடும். ஆசிரியர் கல்வியை பிற படிப்புகளைப் போல படிக்க முடியாது.

அது முழுக்க முழுக்க உளவியல் சார்ந்தது. அதை முற்று முழுதாக உணர வேண்டுமே ஒழிய படித்தால் மட்டும் போதாது. ஒரு குழந்தையிடம் ஒருமுறை கேள்வி கேட்டு அது பதில் சொல்லாவிட்டால், உங்களை அந்தக் குழந்தைக்குப் பிடிக்கவில்லை என்று பொருள். மூன்று முறை அதே கேள்வியை நீங்கள் திருப்பித் திருப்பிக் கேட்டால் நீங்கள் அந்த குழந்தையை வன்முறைக்கு உள்ளாக்குகிறீர்கள்.

இந்தப் புரிதல் எத்தனை ஆசிரியரிடம் இருக்கிறது. ஏன்? எத்தனை பெற்றோர் இதை அறிந்திருக்கிறார்கள்? குழந்தையைப் புரிந்துகொள்கிற மனநிலையோ, திறனோ பலருக்கு இல்லை. இந்திய கல்விமுறை வேலை செய்வதற்குரிய எந்திரங்களைத்தான் வார்த்தெடுக்கிறது. இறுக்கம் நிறைந்த தொழிற்சாலையைப் போலத்தான் நம் கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. கல்வி என்பது மனிதமனங்களை வளர்த்தெடுக்கும் ஒரு கருவி. அதுவேலைக்காரர்களை உருவாக்குவதல்ல.

தொடக்கக் கல்விதான் குழந்தைக்கு அடித்தளம். இங்கேதான் குழந்தையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. குழந்தையை அதன் போக்கில்உலவவிட்டு அதன் திறன் அறிந்து அதற்குதேவையான கல்வியைப் போதிக்கும் ஒரு தொடக்கக் கல்வி ஆசிரியரின் பணி மிகவும் சிக்கலானது. ஆனால், நம் நாட்டில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிகவும் சொற்பம். அதே நேரம், உயர் கல்வி ஆசிரியர்களுக்கு லட்சங்களில் சம்பளம் வழங்கப்படுகிறது.

உயர் கல்வி ஆசிரியர்களின் பணி மதிப்பைக் குறைப்பதற்காக இந்த ஒப்பீட்டைச் செய்யவில்லை. உயர் கல்வியில் ஆசிரியர்-மாணவர் உறவு நிலை வேறு. அங்கே இருதரப்பிலும் ஒரு முதிர்ச்சி இருக்கும். தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பணி வேறு விதமானது. பள்ளி நேரம் முழுவதும் அவர்கள் குழந்தைகளை தங்கள் பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும்.

சளி ஒழுகும் மூக்கைச் சிந்தி, சிறுநீர் போனால் துடைத்து, ஆய் போனால் கழுவி, கல்வியையும் கற்றுத்தரும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவது மிகமிகஅவசியம்... என்கிறார் தத்துவவியல் பேராசிரியர் பாலகிருஷ்ணன். மதுரையை மையமாகக் கொண்டு குழந்தைகளின் உரிமைகளுக்காக தீவிரமாக இயங்கி வருகிறார் இவர்.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு சுமார் 70 வகையான தண்டனைகள் தரப்படுவதாக ஆய்வில்கண்டறிந்திருக்கிறார் பாலகிருஷ்ணன். தோப்புக் கரணம் போடுவது, வயிற்றில் கிள்ளுவது, தொடையில் கிள்ளுவது, காதை திருகுவது, தலையில் கொட்டுவது, அநாகரிகமாகப் பேசுவது, தலையில் புத்தகப் பையை வைத்தபடி ஓட விடுவது, முட்டாள் என்று திட்டுவது என இவர் பட்டியலிடும் தண்டனைகள் திகைப்பூட்டுகின்றன.

உண்மையான, தன்மையான ஆசிரியருக்கு வகுப்பறையில் ஆண்-பெண் பால் பேதம் தெரியாது. அவருக்கு எல்லாமே குழந்தைகள். இன்றோ, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகிறது.

 இதுபோன்ற பல அத்துமீறல்கள் பதிவு செய்யப்படுவதில்லை. ஊர் பஞ்சாயத்திலோ, மன்னிப்பிலோ பிரச்னை முடிவுக்கு வந்துவிடுகிறது. சிறு வயதில் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்படும் ஒரு சிறுமியின் வாழ்க்கை கடைசி வரை சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

‘‘தொடக்கக் கல்வி சார்ந்த கண்காணிப்பு அமைப்புகளின் தோல்விதான் குழந்தைகள் வதைக்கப்படுவதற்குகாரணம் என்கிறார் குழந்தை உரிமைக்கான குழுமத்தின் இயக்குநர் ராஜகோபால்.

‘‘குழந்தைகளின் எதிர்காலம் ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது. அந்த அக்கறையில் குழந்தைகளிடம் கண்டிப்பு காட்டும் ஆசிரியர்களை நாம் மனம் திறந்து வரவேற்கலாம். அவர்களை தெய்வத்துக்கு நிகராக வைத்து வணங்கவும் செய்யலாம். ஆனால், குழந்தைகள் மீது தேவையற்ற வன்மம் காட்டும் ஆசிரியர்களே இன்று பல வகுப்பறைகளை நிறைத்திருக்கிறார்கள். வெயிலில் நிற்க வைப்பது, முட்டிப் போட வைப்பது, முதுகில் தடம் பதியும் வகையில் அடிப்பதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

‘லீவ் போஸ்ட்’ என்ற பெயரில் ஒரு மறைமுகத் தவறு பல தொடக்கப் பள்ளிகளில் நடக்கிறது. ஆசிரியர் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிற அல்லது முடித்த மாணவர்களை பள்ளியில் ஆசிரியர்களே நியமித்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் பற்றிய உளவியலோ அனுபவமோ இல்லாமல் வரும் அந்த இளைஞர்கள் குழந்தைகளிடம் அத்துமீறுகிறார்கள். வத்திராயிருப்பு அருகே ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் பயிற்சி மாணவர் அத்துமீறியதில் மனம் உடைந்த சிறுமி தற்கொலையே செய்து கொண்டிருக்கிறாள்.

‘எல்லாப் பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். மாணவர்கள் அந்தப் புகார் பெட்டியில் தங்கள் குறைகளை எழுதிப் போடலாம்’ என்று விதி இருக்கிறது. எல்லா கூட்டங்களிலும் கல்வித்துறை அதிகாரிகள் இதுபற்றிப் பேசுகிறார்கள். பெரும்பாலான பள்ளிகளிலே புகார் பெட்டியே இல்லை.

பள்ளி என்பது வதைக்கூடமோ, ஆயுதச்சாலையோ இல்லை. அது அன்பு உறவாடும் இடம். அந்த இடத்துக்கு பொருந்தும் ஆசிரியர்களேநல்லாசிரியர்கள்... என்கிறார் ராஜகோபால். தமிழ்நாடு கல்வி உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் மூர்த்தி, ஆசிரியர்களின் புறச்சூழல் பற்றிப் பேசுகிறார்.‘‘அரசு விதிப்படி ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையில் 30 மாணவர்களுக்கு ஒருஆசிரியர் இருக்க வேண்டும்.

6 முதல் 8ம் வகுப்பு வரையில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். இந்த விதிமுறை எத்தனை பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறது? அண்மையில் நாங்கள் 20 பள்ளிகளில் ஆய்வு செய்தோம். 15 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டும்தான் இருந்தார். மற்றொரு ஆசிரியர் விடுமுறையிலோ, பயிற்சியிலோ, கற்றல் இல்லாத வேறு பணியிலோ இருந்தார். அந்தப் பள்ளிகளில் 50 முதல் 60 குழந்தைகள் இருந்தார்கள். குழந்தைகள் சத்தம் போடுவார்கள். ஓடியாடி விளையாடுவார்கள்.

சண்டை போட்டுக் கொள்வார்கள். அதுதான் அவர்களின் இயல்பு. அப்படியான 50 குழந்தைகளை ஒரு ஆசிரியரால் எப்படி நிர்வகிக்க முடியும்? அவர் நிச்சயம் குழந்தைகளை அடக்க ஆயுதத்தைத்தான் தேடுவார். அரசுப் பள்ளிகளில் கற்றல் சூழலே குறைவுதான்.ஆசிரியர் பணி என்பது பிற பணிகளைக் காட்டிலும் மேலானது. தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், பாலியல் வன்முறை செய்தாலோ, வேறு தவறுகள் செய்தாலோ ஆசிரியர்கள் மீது நடவடிக்கை வெறும் இடமாற்றம்தான். ஓரிடத்தில் தவறு செய்து அடுத்த இடத்துக்குப் போகும் ஆசிரியர், அங்கேயும் அந்தத் தவறைச் செய்யத்தானே செய்வார்? பல பிரச்னைகளில் தவறு செய்த ஆசிரியர்களின் பின்னணியைப் பார்க்கும்போது, அவர்கள் வேறொரு பள்ளியில் தவறு செய்து இந்தப் பள்ளிக்கு இடமாற்றம் ஆகி வந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

பள்ளிகள் தோறும் பெற்றோர் அடங்கிய மேலாண்மைக் குழுவை நியமிக்க வேண்டும்என்கிறது கல்வி உரிமைச் சட்டம். 20 பேர் கொண்ட அந்தக்குழு பள்ளியை முழுமையாக கண்காணிக்கும். நிர்வாகத்தில் தலையிடும். மாணவர்கள் ஒழுங்கீனமாக இருந்தால் அவர்களையும் கண்டிக்கும். பெற்றோரின் தலையீடு இருக்கும் நிலையில் ஆசிரியர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்படுவார்கள். துரதிர்ஷ்டவசமாக பல அரசுப்பள்ளிகளில் இந்தக் குழுக்கள் அமைக்கப்படவில்லை.

மாதந்தோறும் கூட்டம் நடத்தியதைப் போல ஆசிரியர்களே ரெக்கார்டு ரெடி பண்ணிக் கொள்கிறார்கள். தனியார் பள்ளிகளில் நிலை இன்னும் மோசம். பெற்றோர் ஃபீஸ் கட்டவில்லை என்றால் பி¢ள்ளைகள் வெளியில் நிற்க வேண்டும். அங்கே வேறொரு விதமான ஆளுமைத்தனம். தனியார் பள்ளி வகுப்பறைகள் அடக்குமுறையின் உச்சம். இந்த நிலையெல்லாம் மாறி ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்தால் மட்டுமே நிலை மாறும்... என்கிறார் மூர்த்தி.

குழந்தைகள் யாருடைய தனியுடைமையும் அல்ல. அவர்கள் இந்த தேசத்தின் சொத்துகள். அவர்களை வதைக்க, அவர்களின் சுதந்திரத்தை முடக்க எவருக்கும் உரிமையில்லை. வகுப்பறை என்பது அன்பு தவழும் இடமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் குழந்தையாக மாற வேண்டும். குழந்தைகள் ஆசிரியர்களாக ஆக அனுமதிக்க வேண்டும். அப்படிப்பட்ட வகுப்பறையில்தான்இந்தியாவின் உண்மையான எதிர்காலம்வார்க்கப்படுகிறது. தொடக்கக் கல்வி ஆசிரியர்களின்பணி முற்றிலும் வேறு விதமானது.பள்ளி நேரம் முழுவதும் அவர்கள் குழந்தைகளை தங்கள்பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும்...

ஒரு குழந்தையை அச்சுறுத்த, அடிக்க வேண்டும் என்பது கூட இல்லை. கண்களைஉருட்டிப் பார்த்து மிரட்டினாலே போதும். குழந்தை நடுநடுங்கிப் போய்விடும்...

- வெ.நீலகண்டன்