ஆற்காடு மக்கன் பேடா



படிக்கவும் கேட்கவும் சுவையானது வரலாறு. அதுவும் இனிப்பைப் பற்றிய வரலாறு எனில் சுவை கூடுதல்தான். பொதுவாகவே தமிழ் நாட்டு உணவுகளுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி யும் சுவையான கதையும் இருக்கும்.

 ஊருக்கு ஒரு சிறப்பான உணவில், இந்த முறை நாம் ஆற்காடு நோக்கி பயணம் செய்யலாம். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த நகரம், மக்கன் பேடாவுக்குப் புகழ் பெற்றது. அது என்ன மக்கன் பேடா? குலாப் ஜாமூனின் அக்கா போல இருக்கும் இந்த இனிப்பு, சுவையிலும் போட்டி போட முடியாத அளவு மிகப்பெரியதாக இருக்கிறது!

ஆற்காடு மக்கன் பேடா

பண்டிகைக் காலம் நெருங்குகிறது. வழக்கமான ஜாமூன் மிக்ஸ் வாங்கி வேலையைசுலபமாக்கலாம். அல்லது சிறிது மெனக்கெட்டு ஆற்காடு மக்கன் பேடாவை நம் வீட்டிலேயேதயாரிக்கலாமே! வழக்கம் போல எந்த ஒரு இனிப்புக்கும் அளவும் பதமும் அதைவிட கூடுதல் பொறுமையும் அவசியம். நமது பாரம்பரிய இனிப்புகள் போல அன்றி மக்கன் பேடா செய்முறை மிகவும் எளிதானது. மேலே பொன்னிறமாகவும் உள்ளே மிருதுவாகவும் வாயில் வைத்ததும் சுவையில் வழுக்கி செல்லும் மக்கன் பேடா தயாரிப்பது, ஜாமூன் செய்வது போன்ற வேலையே... எனினும் பதம் அவசியம்.

என்னென்ன தேவை?

பால் கோவா
(சர்க்கரை இல்லாதது) - 100 கிராம் 
மைதா - கால் கிலோ
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
தயிர் - 100 கிராம்
நெய் - 25 கிராம்
வனஸ்பதி - 50 கிராம்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
ஸ்டப்பிங்குக்கு...

பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி, திராட்சை, சாரைப் பருப்பு, வெள்ளரி விதை, பேரீச்சம்பழம் (சரிசமமான எடையில்) - 100 கிராம் தோராயமாக பொடியாக நறுக்கியது. இத்துடன் ஏலக்காய் 3 பொடி செய்து கலக்கி வைக்கவும்.
பாகு செய்ய...
சர்க்கரை - 750 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சி ஆறவிடவும்.
மைதாவை ஆப்ப சோடாவுடன் சேர்த்து சலித்து வைக்கவும்.
பால்கோவா, வனஸ்பதி, மைதா, தயிர் சேர்த்து மென்மையான மாவாக பிசையவும்.
பிசைந்த மாவை 5 நிமிடம் ஊற விடவும்.

நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து மோதகம் செய்வது போல செய்து உள்ளே உலர் பருப்புகளின் கலவையை வைக்கவும்.
மாவை மூடி அடுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ச்சவும்.
மக்கன் பேடாவை எடுத்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து வைக்கவும்.
எண்ணெய் வடிந்ததும் சர்க்கரைப் பாகில் போட்டு நெய் ஊற்றி மூடி வைக்கவும்.
5 மணி நேரம் ஊற விடவும்.

உங்கள் கவனத்துக்கு...

* பால்கோவாவை கட்டி இல்லாமல் மிருதுவாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* சர்க்கரை ஒரு கம்பி பதம் போதுமானது.
* அதிகம் ஊறவிட அவசியம் இல்லை.
* 5 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
* உலர்பருப்புகள் மெலிதாக சீவி கலந்து போடுவது சுவை கூட்டும்.
* ஜாமூன் செய்யும் போது எண்ணெயில் எடுத்த ஜாமூனை, உடனே பாகில் போடாவிட்டால், ஜாமூன் உடைந்து விடும். மக்கன் பேடா சூடாகவும் சர்க்கரைப்பாகு சிறிது ஆறியும் இருக்க வேண்டும்.

மைதா, கோவா சேர்த்த இந்த இனிப்பு உள்ளே உலர் பருப்பு களால் பொதியப்பட்ட, வாயில் இட்டதும் கரையக்கூடிய அருஞ்சுவையுடன் இருக்கும்!

180 ஆண்டுகளுக்கு முன் ஆற்காடு நவாப்பின் நண்பர் என்ற முறையில் அவர் வீட்டுவிசேஷத்துக்குச் சென்றிருக்கிறார் கோவிந்தசாமி செட்டியார். விருந்தில் பரிமாறப்பட்ட ஒரு வகை இனிப்பு அவரை மிகவும் கவர்ந்திருக்கிறது.

 இனிப்பு மிட்டாய் கடை நடத்தி வந்த கோவிந்தசாமி, அந்த இனிப்புக்கு இன்னும் சிலபல செய்முறைகளால் சிறப்புச் சேர்த்திருக்கிறார். உயர்ந்த வகை உலர் பருப்புகளையும் சேர்த்து அவர் உருவாக்கிய மக்கன் பேடா பிற்காலத்தில் ஆற்காடின் அடையாளமாகவே ஆகிவிட்டது.

கோவிந்தசாமி செட்டியாருக்குப்பின் அவர் வழித்தோன்றல்கள் கோவிந்தராஜ், வரதராஜர், வேணுகோபால் செட்டியார் என்று, 182வது வருடத்தில் ஐந்தாம் தலைமுறை இனிப்புக் கடையாக சுந்தரம் செட்டியாரால் நடத்தப்படுகிறது.

பொறியியல் படிக்கும் இவரது மகன் சிவசங்கரும் அடுத்த தலைமுறைக்கு மக்கன் பேடாவை தொடரத்தயாராக உள்ளார். மக்கன் பேடா என்பது மைதா, கோவா சேர்த்த இனிப்பு... உள்ளே உலர் பருப்புகளால் பொதியப்பட்ட, வாயில் இட்டதும் கரையக்கூடிய சுவையுடன் இருக்கும். பொன்னிறமான மக்கன் பேடாவை ஸ்பூனால் சிறிது எடுக்கும் போதே மிருதுவான அதன் உட்புறம் நம் விழிகளை நிறைக்கும்.

‘செட்டியார் கடை’ என்று பெயர் பெற்ற இந்தக் கடையின் இனிப்பு பெரியார் முதல் அனைத்து அரசியல், சினிமா நட்சத்திரங்களையும் கவர்ந்த சுவை. அது மட்டுமல்ல... வெளிநாடுகளுக்கும் பறந்து கொண்டிருக்கிறது. மக்கன் பேடா வாசனை இல்லாத எந்த விசேஷங்களும் வேலூர் பகுதியில் நடப்பதில்லை.

விஜி ராம்

படங்கள்: ஏ.சங்கர்