கனி இருப்ப காய் கவர்ந்தற்று!



நமக்கு நன்கு தெரிந்த சில பழ மரங்களை வீட்டருகே வளர்ப்பதற்கும் அவற்றை உண்பதற்கும் நிறைய கட்டுப்பாடுகளை நாம் வைத்திருக்கிறோம். இங்கு தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட் அறிமுகப்படுத்தும் பழ மரங்கள் வரும் காலத்தில் நல்ல வரவேற்பைப் பெறும்.

 இவற்றின் சாகுபடி பரப்பளவும் விற்பனை விலையும் ஏறுமுகமாக உள்ளதுடன் மதிப்பு கூட்டப்பட்டு கணிசமான ஏற்றுமதியும் உண்டு என்பதே காரணம்.

பலா

நம் முன்னோர் மூன்று கனிகளுக்கு முக்கியத்துவம் தந்தனர். அவற்றில் ஒன்று பலா. மரங்களிலிருந்து கிடைக்கும் பழங்களில் பெரியது இதுவே. மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிக அளவு பயிரிடப்பட்டாலும், தமிழகத்தின் பண்ருட்டி பழம்தான் சுவைக்கு பிரபலம்.

உண்ணுவதற்கு அதிக ஆசையிருந்தாலும் சுளையை எடுப்பதற்கு அதிக கஷ்டப்பட  வேண்டிய காரணத்தாலும், தேவைக்கு மேலாக சுளைகள் இருப்பதும், எடை அதிகமாக இருப்பதாலும் மக்கள் வாங்கிச் செல்ல விரும்புவதில்லை.

இன்று நிலைமை மாறி மதிப்பு கூட்டப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. அதே போன்று பலா வீட்டருகில் இருந்தால் வேர்கள் மூலம் கட்டிடம் பாழாகிவிடும் என்ற எண்ணமும் உண்டு. ஆனால், இன்று ஒட்டு மரங்கள் சிறியதாகவும், நான்கு ஆண்டுகளிலேயே பழம் தர ஆரம்பித்தும் விடுகிறது. பலாக்கொட்டையும் சமையலுக்கு உகந்தது. நன்கு விளைந்த மரங்கள் தச்சு வேலைக்கு உகந்தது.

திம்லா அத்தி

அபூர்வமாக வரும் விருந்தினர்களை ‘அத்தி பூத்தாற் போல’ என்று கூறுவதுண்டு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் உபயோகம் நன்கு அறியப்பட்டுள்ளது. நாட்டு அத்திப் பழத்தில் ஒரு வகை பூச்சியினம் பழுப்பதற்கு முன்பே பழத்தினுள் சென்றுவிடும். சாப்பிட பிரிக்கும் போது அவைகள் பறக்கும். இதனால் சத்துமிகுந்த இந்தப் பழத்தை மக்கள் அதிகம் விரும்பி உண்ணுவதில்லை. இதனால் நாட்டு அத்தி வியாபார ரீதியாகவும் வீட்டருகிலும் வளர்க்கப்படுவ தில்லை.

அத்தியில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ‘திம்லா அத்தி’ தமிழகத்தைப் பொறுத்த வரையில் சிறப்பு பெறுகிறது. பூச்சியினம் உள்ளே செல்வதில்லை. மேலும் இவை பெரியதாக இருப்பவை... உலர வைத்துப் பதப்படுத்தி அதிக நாட்கள்  பயன்படுத்தலாம். சத்துமிகுந்த இப்பழம் பொதுவாக மலைப்பாங்கான பகுதியில் நன்கு வளரும்... சமவெளிப் பகுதியிலும் வளரும்.4வது ஆண்டில் கனி தர ஆரம்பிக்கும்.

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் ‘ஏற்காடு 1’ பிரபலமான ரகமாகும். பொதுவாக விண்பதியம் மூலம் நாற்றுகள் உருவாக்கப்படுகின்றன. பெரிய அகன்ற இலைகளுடன் கூடிய இம்மரம் நன்கு நிழல் தரும். வேர்ப்பகுதியிலிருந்தே காய்கள் தோன்றும். மரத்தில் பழுத்த பழங்களே நன்கு சுவையுடன் இருக்கும். அதிக தண்ணீர் தேவையில்லை. நாட்டு அத்தி மரங்கள் வறட்சியைத் தாங்கி வளரும் இயல்புடையவை.

பப்பாளி


பெண்கள் அதிகம் சாப்பிடக் கூடாது என்ற நிலைப்பாடு தமிழகத்தில் உண்டு. வெப்பமண்டல நாடுகளில் எளிதாக வளர்க்கப்படும் பழமரம். நல்ல மகசூல் தரும். 2 அல்லது 3 ஆண்டு பயிர். பூர்வீகம் மெக்ஸிகோ. வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் போது பழத்திற்கான வகைகளை வளர்ப்பது நல்லது.

காரணம், பழத்திற்கான வகைகளும், ‘பப்பையின்’ எனப்படும் பால் தரும் பப்பாளி வகைகளும் உண்டு. பூசா (Pusa)  விவசாயக் கல்லூரியின் ரகங்கள், வேளாண்மைக் கல்லூரி, கோவையின் ‘கோ’ ரகங்கள், பெங்களூரு ரகங்கள், பெண்ட்நகர் ரகங்கள் பிரபலம். தற்சமயம் தைவான் நாட்டு ரகமான ‘ரெட்லேடி’ (Redlady (F1 Hybrid)  நகர்ப்புற மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது.

10 கிராம் விதையின் விலை ரூ.2,000க்கு மேல். உயரம் குறைவாக இருக்கும் போதே காய்க்க தொடங்கிவிடும். நன்கு வளர்க்க நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள மண் வேண்டும். மேலும் பப்பாளியில் ஆண் மரம், பெண் மரம் மற்றும் இருபால் மரங்கள் உள்ளன. இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம் உடலில் ரத்தச் சிவப்பு அணு அதிகரிக்க தமிழக அரசு விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு தந்தது நினைவிருக்கலாம். ரத்த விருத்திக்கும் தசை வளர்ச்சிக்கும் துணை புரியும் பப்பாளி, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மலச்சிக்கலை நீக்கும். பப்பாளிக் காயை சமைத்து உண்டு வந்தால் உடல் எடை குறையும். பழச்சாற்றை நன்கு முகத்தில் பூசி சில நிமிடங்கள் கழித்து கழுவ முகப் பொலிவு கிடைக்கும். ஆனால், மாவுப் பூச்சியின் தாக்கம் அதிகமிருப்பதால் மக்கள் விரும்பி வளர்ப்பதில்லை.

ரத்த விருத்திக்கும் தசை வளர்ச்சிக்கும் துணை புரியும் பப்பாளி, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

(விதை போடுவோம்!)

தொகுப்பு: வர்ஷா