ஆண்-பெண் நட்பு சாத்தியமே!



செம்புலப் பெயல் நீர் போல-5


சந்திரா லஷ்மண்

சன் டி.வி.யில் ‘பாசமலர்கள்’ தொடரில் நடிக்கிற சந்திரா லஷ்மண் நிஜத்திலும் ஒரு பாசமலர்.சந்திராவின் தோழமை வட்டம் பற்றிக் கேள்விப்படுகிற யாருக்கும் ஏக்கம் எட்டிப் பார்க்கும். பொதுவாக சக வயதுக்காரர்களுடன் மட்டுமே நட்பு பூக்கும். சந்திராவுக்கு ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதிலும் நண்பர்கள் உண்டு. ஒவ்வொரு நட்புக்கும் பின்னால் ஒரு கதையும் நட்புக்கான அழுத்தமான காரணமும் வைத்திருக்கிறார்!

‘‘எங்கம்மா, அப்பாவுக்கு நான் ஒரே பொண்ணு. அதனால அவங்கதான் எனக்கு ஃபர்ஸ்ட் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். அடுத்து என்னோட இண்டஸ்ட்ரி ஃப்ரெண்ட்ஸ்ல எனக்கு ரொம்ப க்ளோஸ்னா நடிகை நித்யாவைதான் சொல்ல ணும். ஒரு சீரியல்ல எனக்கு அம்மாவா நடிச்சாங்க. ‘நித்யா ஆன்ட்டி’னு கூப்பிட்டுக்கிட்டிருந்த நான் ரெண்டே வாரத்துல அவங்களை ‘நித்யா அத்தை’னு கூப்பிட ஆரம்பிச்சிட்டேன். அவ்வளவு அன்யோன்யமாயிட்டோம். அவங்க நிஜமாவே எனக்கு அத்தை மாதிரியே எங்கக் குடும்பத்துல ஒருத்தரா ஆயிட்டாங்க!

பொதுவா யார்கூடவும் அத்தனை ஈஸியா என்னால ஃப்ரெண்ட் ஆக முடியாது. ரொம்ப டைம் எடுக்கும். அது தெரியாதவங்க நான் பெரிய பந்தா பார்ட்டினு நினைக்கிறதுண்டு. என் மனசுக்கு நெருங்கினவங்களுக்கு நான் எப்படிப்பட்டவள்னு நல்லாவே தெரியும். என்னோட ‘ஆல் விமன் ஃப்ரெண்ட்ஸ்’ குரூப் ரொம்பப் பெரிசு. சாதாரண ஹோம் மேக்கர்லேருந்து, பெரிய பதவியில இருக்கிறவங்க வரைக்கும் பலதரப்பட்டவங்களும் அதுல இருக்காங்க. நாங்க எல்லாரும் மாசத்துல ஒரு நாள் லஞ்சுக்கோ, டின்னருக்கோ மீட் பண்ணுவோம். ஒரு ஃப்ரெண்டுக்கு ஃபார்ம் ஹவுஸ் இருக்கு. பொங்கல் டைம்ல அங்கே போயிடுவோம். புடவை, பாவாடை-தாவணினு பாரம்பரிய டிரெஸ்ல போய், கோலம் போட்டு, பொங்கல் வச்சுக் கொண்டாடுவோம். எல்லாப் பண்டிகைகளையும் இப்படி வித்தியாசமா கொண்டாடுவோம்.

இவங்க எல்லாரையும் தாண்டி, என் வாழ்க்கையில ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான ஒரு ஃப்ரெண்டை பத்தி நான் சொல்லியே ஆகணும். அவன் பேர் கவுஸ். நானும் அவனும் 12 வருஷ ஃப்ரெண்ட்ஸ். ஹோட்டல் மேனேஜ்மென்ட் காலேஜ்ல நானும் அவனும் கிளாஸ்மேட்ஸ். ஃபர்ஸ்ட் இயர்ல நாங்க மொத்தம் 70 பேர். அதுல வெறும் 7 பேர்தான் பொண்ணுங்க. மீதி உள்ள பசங்கள்ல எல்லார்கூடவும் பொண்ணுங்களால பேசவோ, பழகவோ முடியாத நிலை...

அப்பதான் கவுஸ் எனக்கு அறிமுகமானான். அறிமுகமானதுமே அவன் மத்தவங்களைவிட ஸ்பெஷலானவன்னு உணர்ந்தேன். அவன்கிட்ட என்னால என்ன வேணாலும் பேச முடியும். நடிப்புல பிஸியானதால, நான் ரெண்டாவது வருஷமே ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை டிஸ்கன்டின்யூ பண்ணிட்டேன். ஆனாலும், அவனுக்கும் எனக்குமான நட்பு எந்தப் பிரச்னையும் இல்லாம தொடர்ந்தது.

கவுஸ் எங்க வீட்டுப் பிள்ளை மாதிரி. இங்கிலீஷ்ல ‘2 ஏ.எம். ஃப்ரெண்ட்’னு சொல்வாங்க. கவுஸ் எனக்கு அப்படித்தான். நடு ராத்திரி 2 மணிக்கு எனக்கு ஏதோ பிரச்னைன்னா கூட நான் அவனைக் கூப்பிடலாம். என்னோட சந்தோஷம், துக்கம், ஸ்ட்ரெஸ்னு எல்லாத்தையும் அவன்கிட்ட கொட்ட முடியும். இவ்ளோ க்ளோஸா பழகின உங்களுக்கு இடையில நட்பைத் தாண்டி வேற எதுவும் தோணலையானு நீங்க கேட்கலாம். நிச்சயமா இல்லை.

எங்க ரெண்டு பேருக்குமே ஃப்ரெண்ட்ஷிப்பை தாண்டி வேற எந்த உணர்வும் எட்டிப் பார்த்ததில்லை. நல்லா இருக்கிற ஃப்ரெண்ட்ஷிப்பை தப்பா பேசி, வேணும்னே வேற ஒரு உறவுக்குள்ள தள்ளறதுக்கு நம்மைச் சுத்தி நிறைய பேர் இருப்பாங்க. எங்க விஷயத்துல அதுவும் நடக்காதது ஆச்சரியம். யாருமே எங்களைத் தப்பா பேசினதில்லை. இத்தனைக்கும் நாங்க அடிச்சு, பிடிச்சு விளையாடியிருக்கோம். இது வேற மாதிரி இருக்குமோங்கிற சந்தேகப் பார்வை கூட எங்க மேல விழுந்ததில்லை.

கவுஸ் பாதி பிராமணர்... பாதி முஸ்லிம். அவங்கம்மா பிராமின்... அப்பா முஸ்லிம். அதனால அவனும் 50 : 50-யாவே வளர்ந்துட்டான். அவனுக்கு வந்த மனைவியும் கிட்டத்தட்ட அவனை மாதிரியே தான். கவுஸோட ஒயிஃப் சஃபிதாவும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவங்களுக்கு கல்யாணம் நிச்சயமானதும், நானும் கவுஸும் சில விஷயங்களைப் பேசிக்கிட்டோம். தடுக்கி விழுந்தா எங்க வீட்டுக்கு வந்திட்டிருந்த கவுஸ்கிட்ட, கல்யாணத்துக்குப் பிறகு மனைவியோட வர்றதுதான் சரியா இருக்கும்னு சொன்னேன். அடிச்சு விளையாடறதை நிறுத்திக்கிட்டோம். கவுஸ்-சஃபிதா கல்யாணத்துக்கு முன்னாடி மெஹந்தி செரிமனியை எங்க வீட்ல நான்தான் நடத்தினேன்.

சஃபிதா மலையாளி. ஆனாலும், கல்யாணமானதும், எல்லா ஓணமும் சந்திரா வீட்லதான் கொண்டாடணும்னு கவுஸ் சொன்னப்ப, ஏன், எதுக்குனு ஒரு கேள்வி கேட்காம, சந்தோஷமா ஏத்துக்கிட்டா சஃபிதா. எங்க மூணு பேருக்கும் இடையில நல்ல புரிதல் இருக்கிறதாலதான் இந்த நட்பு தொடர்ந்திட்டிருக்கு. எனக்குக் கல்யாணமானா, அதுக்குப் பிறகும் இந்த நட்பு இப்படியே தொடருமாங்கிறது தெரியலை.

வரப் போறவர்கிட்ட எங்க நட்போட புனிதத்தைப் பத்திச் சொல்வேன். புரிஞ்சுப்பார்ங்கிற நம்பிக்கை இருக்கு. புரிஞ்சுக்கலைனாலும் அதை ஏத்துக்கிற மனப்பக்குவம் எனக்கும் கவுஸுக்கும் இருக்கு...’’ என்கிற சந்திரா வின் வார்த்தைகளில் அத்தனை தீர்க்கம்! நல்லா இருக்கிற ஃப்ரெண்ட்ஷிப்பை தப்பா பேசி, வேணும்னே வேற ஒரு உறவுக்குள்ள தள்ளறதுக்கு நம்மைச் சுத்தி நிறைய பேர் இருப்பாங்க. எங்க விஷயத்துல அதுவும் நடக்காதது ஆச்சரியம்!