அதீத ரத்தப்போக்கு அபாயமா?



பெண்களில் 30 சதவிகிதம் பேருக்கு  அளவுக்கதிக ரத்தப் போக்கு பிரச்னை இருக்கிறது என அதிர வைக்கிறது புள்ளி விவரம் ஒன்று. எது சாதாரணம், எது அசாதாரணம் என்கிற  விழிப்புணர்வு பல பெண்களுக்கு இருப்பதில்லை. பூப்படைந்த ஆரம்ப காலத்தில் அப்படித்தான் இருக்கும் என்றோ... பிரசவத்துக்குப் பிறகு அப்படித் தான் இருக்கும் என்றோ... மாதவிடாய் நிற்கப் போகிற காலத்தில் அது சகஜம் என்றோ...

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு சுய சமாதானத்தை சொல்லிக் கொண்டு, சமாளிக்கிறவர்களே பெரும்பான்மை. அதீத ரத்தப்போக்கு என்பது அனீமியா வில் தொடங்கி, புற்றுநோய் வரை பலதின் அறிகுறியாக இருக்கலாம் என்பது தெரியுமா?அதீத ரத்தப் போக்கின் காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள் என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மீரா ராகவன்.

மெனரேஜியா (Menorrhagia)... அதீத ரத்தப் போக்கினை மருத்துவ ஆங்கிலம் இப்படித்தான் குறிப்பிடுகிறது.  டீன் ஏஜ் பெண்கள் முதல் மெனோபாஸை எட்டிவிட்டவர்கள் வரை இந்தப் பிரச்னை எந்த வயதிலும், யாருக்கும் வரலாம்.

எது அதீத ரத்தப் போக்கு?

மாதவிலக்கு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவம். ஒருவருக்கு கூடுதலாகத் தெரிகிற ரத்தப்போக்கு, இன்னொருவருக்கு நார்மலாக இருக்கலாம். ஆனாலும்,
சில பொது விதிகளை வைத்து இதைக் கணக்கிடலாம்.

* பொதுவாக 23 முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை வரும் மாதவிலக்கு, 23 நாட்களுக்கு முன்னர் வந்தாலோ, 7 நாட்களுக்கு மேல் நீடித்தாலோ, மாதவிலக்கின் போதான ரத்த இழப்பு 80 மி.லிக்கு மேல் போனாலோ, அதாவது, ஒரு நாளைக்கு 6 முதல் 7 நாப்கின்கள் மாற்றும் நிலை. ஒரே மாதத்தில் இரண்டு, மூன்று முறை மாதவிலக் காவது, 15 முதல் 1 மாதம் வரை நீடிப்பது.

* கட்டிக் கட்டியாக ரத்தம் வெளியேறுவது.

* அளவுக்கதிக களைப்பாக உணர்வது. இந்த அறிகுறிகள் இருந்தால் மெனரேஜியா என உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மெனரேஜியாவுக்கான காரணங்கள் வயதைப் பொறுத்து வேறுபடும்.

* டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை, பருமன் போன்றவை காரணங்களாக இருக்கலாம்.

* நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு கர்ப்பப்பையின் உற்புறத்தில் தசைத்தடிப்பு இருப்பதோ, ஃபைப்ராய்டு கட்டியோ காரணமாக இருக்கலாம். இந்தத் தசைத்தடிப்பானது 4 மி.மீக்கு மேல் இருந்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

* சுமார் 1 வருட காலத்துக்கு மாதவிலக்கு நின்று, மெனோபாஸ் உறுதியான பிறகு, மறுபடி திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டால் அலட்சியப்படுத்தக் கூடாது. இது கர்ப்பப்பையிலோ, கர்ப்பப்பை வாயிலோ புற்றுநோய் உண்டானதன் அறிகுறியாக இருக்கலாம்.

என்ன செய்ய வேண்டும்?

* கூடுதலான எடை இதற்கொரு காரணமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அப்படி இருப்பின் பி.எம்.ஐ. அளவீட்டின் படி சரியான எடைக்குத் திரும்பும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

* ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு, ஹீமோகுளோபின் அளவு கணக்கிடப்பட வேண்டும்.

* ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் அளவு குறைவதும் இதற்கொரு காரணம் என்பதால் அதுவும் சரிபார்க்கப்பட வேண்டும்.

* தேவைப்பட்டால் கர்ப்பப்பை வாயில் செய்யப்படுகிற பாப் டெஸ்ட் மற்றும் கர்ப்பப்பையின் உள்புற சவ்விலிருந்து மாதிரி எடுத்து ஆராய்கிற கர்ப்பப்பை சவ்வு திசுப் பரிசோதனை போன்றவையும் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.

* இவையெல்லாம் போக, கர்ப்பப்பையில் கட்டியோ, வேறு பிரச்னைகளோ இருக்கிறதா எனப் பார்ப்பதற்கு ஒரு அல்ட்ரா சவுண்டு சோதனையும் அறிவுறுத்தப்படும்.
சிகிச்சைகள்...

* மாதவிடாய் நாட்களில் மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடிய மாத்திரைகள் உள்ளன. 3 முதல் 6 மாதங்களுக்கு எடுத்துக் கொண்டால் அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும்.

* திருமணமாகி, குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையின் உள்சுவர் தடிப்பின் காரணமாக ஏற்பட்ட ரத்தப் போக்கு என்றால் மெரீனா என்கிற கருத்தடை சாதனம் பெரியளவில் உதவும். காப்பர் டியை போன்று இதுவும் ஒரு கருத்தடைச் சாதனம்தான்.

ஹார்மோன்களை ரிலீஸ் செய்யும். ‘காப்பர் டி’ பொருத்திக் கொண்டவர்களுக்கு மாதவிடாய் நாட்களில் ரத்தப் போக்கு அதிகமாக இருக்கும். ஆனால், மெரீனாவில் அந்தப் பிரச்னை இருக்காது. இது தேவையற்ற கர்ப்பத்தையும் தடை செய்யும். அதீத ரத்தப் போக்கையும் கட்டுப்படுத்தும். கருக்குழாயில் கர்ப்பம் தங்குவதைத் தடுத்து, கர்ப்பப் பை புற்றுநோய் வராமலும் பாதுகாக்கும். இன்ஃபெக்ஷன் வராமலும் காக்கும். இதை 5 வருடங்கள் வரை வைத்திருக்கலாம்.

* கேவடெர்ம் எண்டோமெட்ரியல் அப்லேஷன் என்கிற நவீன சிகிச்சையும் பலனளிக்கும். கர்ப்பப்பையின் உள்பகுதியில் வெந்நீர் பலூனை செலுத்தி, உள்பகுதித் தசையைச் செயலிழக்கச் செய்வதன் மூலம் அதிகப்படியான ரத்தப் போக்கு நிறுத்தப்படும். வெறும் பத்தே நிமிடங்களில் செய்து கொள்ளக் கூடிய சிகிச்சை. மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. 10 நாட்களுக்கு மேல் ரத்தப் போக்கு நீடிப்பவர்களுக்கு இந்த சிகிச்சையின் மூலம் ரத்தப் போக்கின் நீட்டிப்பையும் அளவையும் குறைக்கலாம்.

பிற ஆலோசனைகள்...


* சுறுசுறுப்பான உடலியக்கம் அவசியம். தினசரி அரை மணி நேரம் வேகமாக நடக்க வேண்டும்.

* ஒருவருக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் கலோரிகள் மட்டுமே போதும். அதைவிட அதிக ஆற்றல் உள்ளே செல்லாமல் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

* பருமன் கண்காணிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றிய பகுதிகளில் கொழுப்பு அதிகம் சேரும். அப்படிச் சேரவிடாமல் தடுப்பதன்
மூலம் இந்தப் பிரச்னையிலிருந்தும் விலகி இருக்கலாம்.

* அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு சேர்த்த உணவுகள், துரித உணவுகள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
அதீத ரத்தப்போக்கைத் தவிர்க்க சுறுசுறுப்பான உடலியக்கம் அவசியம். தினசரி அரை மணி நேரம் வேகமாக நடக்க வேண்டும்.

- வி.லஷ்மி