ரத்தக் கொதிப்பு எனும் சைலன்ட் கில்லர்



பி.பி. (Blood pressure) என்ற  வார்த்தையைக் கேட்டாலே பி.பி. ஏறுகிற அளவுக்கு இன்றைக்கு மிகப் பெரிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது பி.பி. என்கிற ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்தமிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும் பாலானோருக்கு தங்களுக்கு ரத்தமிகு அழுத்த நோய் உள்ளது என்ற உண்மை தெரியாது என்பது தான் மிகப்பெரிய சோகம்.

டயபடீஸ் என்று சொல்லப்படுகிற நீரிழிவுக்கு இணையாக இன்றைக்கு பெரும்பாலானவர்களைப் பீடித்திருக்கிறது இந்த பி.பி. இது பற்றி விழிப்புணர்வு இல்லாமலே இந்நோய்க்கு பலியாகிறார்கள் பாமர மக்கள். இத்தனைக்கும் புற்றுநோய் போன்ற கொடிய நோய் அல்ல இது. முறையான உணவுப்பழக்கம் மற்றும் தவறாமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நீடூழி வாழ முடியும். தேவை ‘ரத்த அழுத்த நோய்’ குறித்த விழிப்புணர்ச்சிதான்.

ரத்த அழுத்தம் என்றால் என்ன? அது கூடினாலோ, குறைந்தாலோ என்ன செய்யும்? எல்லா சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார் பொது மருத்து வரும், ஆதரவு சிகிச்சை நிபுணருமான ரிபப்ளிகா.

ஒவ்வொரு முறையும் இதயம் சுருங்கி விரிந்து ரத்தத்தை உடலின் எல்லா பாகங்களுக்கும் அனுப்புகிறது. இதயம் இயங்கும்போது குழாய்களில் உள்ள ரத்தம் அவற்றின் உள்பகுதியில் ஒருவகையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் ரத்த அழுத்தம் என்று சொல்கிறோம். ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனின் ரத்த அழுத்தம் 120/80 னீனீபிரீ என்ற அளவில் இருப்பதுதான் இயல்பான நிலை.

ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையைவிட மிக அதிகமாக உயர்ந்திருப்பதை ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’ என்கிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது.  சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பிறகே கண்டுபிடிக்கப்படும்.  எனவே, இதனை ‘சைலன்ட் கில்லர்’ என்றும் சொல்லலாம்.

இதயம் ஒவ்வொருமுறை சுருங்கி விரியும்போதும் ரத்தக்குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தம் இரண்டு வகைப்படும். அதாவது, இதயம் சுருங்கும் போது ஒருவகையான அழுத்தத்தையும் விரியும்போது ஒரு வகையான அழுத்தத்தையும் ரத்தக் குழாய்களில் ஏற்படுத்துகிறது. இதயம் சுருங்கும்போது உண்டாகும் அழுத்தத்தை சுருங்கழுத்தம் (Systolic Pressure) என்றும் இதயம் விரிவடையும்போது ஏற்படும் அழுத்தத்தை விரிவழுத்தம் (Diastalic Pressure) என்றும் இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர். 120/80 என்பதில், 120 என்ற அளவு சுருங்கழுத்தத்தையும் 80 என்ற அளவு விரிவழுத்தத்தையும் குறிக்கிறது.  ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்கு மேல் இருக்கும் நிலையைத்தான் ரத்தமிகு அழுத்த நிலை (Hypertension) எனப்படுகிறது.

ஏன் வருகிறது?

90 சதவிகிதம் பேருக்கு காரணம் ஏதுமின்றி ரத்த அழுத்தம் வருகிறது.  மீதமுள்ள 10 சதவிகிதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகள், மூளை மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள். இது தவிர சிலருக்குத் தற்காலிக ரத்த அழுத்தம் வரலாம். மனநிலையில் ஏற்படுகிற மாறுதல்கள், ஓய்வு நிலை, கர்ப்ப காலம் என இதன் பின்னணி யில் பல காரணங்கள் இருக்கலாம்.வயதானவர்களுக்கும் நீரிழிவு, பருமனால் பாதிக்கப்பட்டோருக்கும் ரொம்பவும் மன அழுத்தம் தருகிற வேலையில் ஈடுபடுவோருக்கும் இந்த ரத்த அழுத்தமானது நிரந்தரமாகத் தங்கி விடுவதும் உண்டு.

என்னென்ன பரிசோதனைகள்?


சிறுநீர் பரிசோதனை அவசியப்படும். இதன் மூலம் சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம்.  ரத்தத்தில் சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பு உள்ளிட்ட வேறு சில நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். தேவையைப் பொறுத்து இசிஜி, எக்கோ, ஆஞ்சியோகிராம் போன்றவையும் பரிந்துரைக்கப்படும்.
கட்டுப்படுத்த என்ன வழி?

* உணவில் உப்பைக் குறைப்பதே முதல் அறிவுரை.

* உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உப்பானது, உடலில் நீரை தங்கச் செய்து இதயத்தை பலமிழக்கச்
செய்யும்.  கை, கால்களை வீங்கச் செய்யும்.

* கொழுப்பு அதிகமுள்ள வெண்ணெய், நெய், எண்ணெய், இனிப்பு, சாக்லெட், ஐஸ்க்ரீம், க்ரீம், சீஸ் போன்றவற்றைத் தவிர்க்கவும். 

* உடற்பயிற்சியைத் தவறவிடக் கூடாது.  ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவதுடன் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

* புகை மற்றும் மதுப்  பழக்கங்களுக்கு உடனடி யாக விடை கொடுக்க வேண்டும். இந்த இரண்டு பழக்கங்களும் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்புக்குக் காரணமாகலாம். ஜாக்கிரதை!

* எந்த நோய்க்குமே சுய மருத்துவம் என்பது தவறு. குறிப்பாக ரத்த அழுத்தப் பிரச்னைக்கு  நீங்களாக மருந்து வாங்கி சாப்பிடுவது உயிருடன் விளையாடுவதற்கு சமமானது. மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிசு செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது.  ஒரு முறை எழுதிக் கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.

* ரத்த அழுத்தத்தின் அளவை அவ்வப்போது முறையாக பரிசோதிக்க வேண்டும். 

* பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள். மனதுக்கும் உடலுக்கும் போதுமான ஓய்வு கொடுங்கள்.

* ரத்த அழுத்த நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால் அது  மாரடைப்பு, மூளை பாதிப்புகளை ஏற்படுத்தி, உயிரிழக்கச் செய்யலாம்.

எவ்வளவு இருக்க வேண்டும்?

இயல்பு நிலையில் இதயத்தின் சுருங்கிய அழுத்தம் 120 mmHg ஆகவும் இதயத்தின் விரிந்த இயக்க அழுத்தம் 80 னீனீபிரீ ஆகவும் இருக்க வேண்டும். அதாவது, 120/80 னீனீபிரீ என்றிருக்க வேண்டும். ஆனால், 140/90 னீனீபிரீ க்கு அதிகமாக ரத்த அழுத்த அளவீடு இருக்குமானால் அது உயர் ரத்த அழுத்தமாகும். இதையே ஹைப்பர் டென்ஷன் என்கிறோம்.
ரத்த அழுத்தப் பிரச்னைக்கு நீங்களாக மருந்து வாங்கி சாப்பிடுவது உயிருடன் விளையாடுவதற்கு சமமானது.

- வி.லஷ்மி