ஃபர்னிஷிங் துறையில் அசத்தும் பெண்கள்!



இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் தங்களை தொழில்முனைவோர்களாக நிரூபித்துக் கொள்ளவும், அதில் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளவும் தனித்துவம் நிறைந்த தொழில்களை தேர்வு செய்கிறார்கள். 
அதில்  பாரம்பரியத்துடன் புதுமைகளை புகுத்தி வெற்றிகளையும் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் ஆன்லைன் மூலமாக வீட்டிற்குத் தேவையான அழகிய குஷன் கவர்கள், பாரம்பரிய டிசைனில் கர்ட்டன்கள், திரைச்சீலைகளை டிசைனிங் செய்து அசத்தி வருகிறார்கள் சென்னையை சேர்ந்த அனு பாலாஜி மற்றும் ராஜஸ்ரீ அசோக்.

நானும் ராஜஸ்ரீயும் உறவினர்கள்.எங்களின் பாரம்பரிய வீட்டினை அழகுபடுத்த ஃபர்னிஷிங் வாங்க திட்டமிட்டோம். அந்த நேரத்தில் நாங்க எதிர்பார்த்த டிசைன்கள் கிடைக்கவில்லை. நம்முடைய பாரம்பரிய டிசைன்கள் இங்கு கிடைப்பது மிகவும் சவாலாக இருந்தது. ஆனால் இதுவே வட இந்தியா போனால் அங்கு அவர்களின் பாரம்பரிய ஸ்டைலில் பல டிசைன்களை பார்க்க முடியும். 
அதனால் நம்முடைய பாரம்பரிய டிசைன்கள் குறித்த தேடலில் இறங்கினோம். அந்த சமயத்தில் எங்களைப் போல் பலர் இது போன்ற விஷயங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டோம். அதனால் இதையே ஏன் பிசினசாக மாற்றக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அதுதான் ‘வைபவம்’ ஆரம்பிக்கக் காரணமாக அமைந்தது.

வீட்டில் பண்டிகை வந்துவிட்டால் நாம புதுத்துணிகளை வாங்குகிறோம். அதே சமயம் நம் வீட்டை அலங்கரிக்கும் தீரைச்சீலைகள், பெட் கவர்கள், தலையணை உறைகள், சோபா கவர்களை புதிதாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. 

அதையும் அலங்கரிக்கலாமே என்ற எண்ணம்தான் நாங்க இந்த பிசினஸ் துவங்க காரணம். அதனால் ஆன்லைன் முறையில் வீட்டை அழகுபடுத்தக்கூடிய அனைத்து வகையான ஃபர்னிஷிங் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தோம்’’ என்றவர் அதில் உள்ள டிசைன்கள் குறித்து விவரித்தார்.

‘‘கோவில் மேற்கூரை மற்றும் தூண்களில் இருக்கும் பாரம்பரிய டிசைன்களை தழுவியும், அதேபோன்று பாரம்பரிய பட்டுப்புடவைகளில் காணப்படும் அன்னம், மாங்காய், பூக்களின் வடிவங்கள் மற்றும் கோல டிசைன்களை ஃபர்னிஷிங் துணிகளில் வடிவமைத்து தருகிறோம்.

இந்த டிசைன்கள் புடவை மற்றும் உடைகளில்தான் காணப்படும். அதனை ஃபர்னிஷிங் அலங்கரிப்பிலும் பயன்படுத்தினால் பார்க்க அழகாக இருக்கும் என்றுதான் கோல டிசைனில் குஷன் கவர், மாங்காய் டிசைனில் பெட் கவர் என வித்தியாசமாக கொடுக்க துவங்கினோம்.

என்னதான் நாம் மார்டனாக இருந்தாலும், நம்முடைய பாரம்பரிய கலை வடிவங்களை விரும்பாதவர்களே கிடையாது. அதற்கு அடையாளம் மக்கள் மத்தியில் எங்களுக்கு கிடைத்த வரவேற்புகள்தான். பார்க்க எளிமையாக இருக்கும் இந்த டிசைன்கள் வீட்டின் வரவேற்பறையின் அமைப்பை முற்றிலும் மாற்றிடும். இந்த டிசைன்களை நம்முடைய
அன்றாட வாழ்க்கையில் பார்த்திருப்பதால், மனசுக்கு நெருக்கமாகவும் மாறிவிடுகிறது’’ என்றவர் அதன் சிறப்பம்சம் குறித்து பகிர்ந்தார்.

‘‘இன்று பலர் செட்டிநாடு மற்றும் பாரம்பரிய ஸ்டைல் வீடுகளை மீண்டும் அமைக்க விரும்புகிறார்கள். வீட்டிற்குள் முற்றம் மற்றும் திண்ணைகளை நவீனப்படுத்தி வடிவமைத்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட வீட்டினை ஃபர்னிஷிங் செய்ய விரும்புகிறவர்கள் எங்களை நாடி வருகிறார்கள். வெளிநாடுகளில் வாழ்பவர்களும் நம்முடைய பாரம்பரிய கலாச்சார வடிவங்களை உடன் கொண்டு செல்ல விரும்புகிறார்கள். 

அவர்களுக்கும் நாங்க வடிவமைத்து தருகிறோம். புது வீடு கட்டுபவர்கள், வரவேற்பறைகளை வித்தியாசமாக அலங்கரிக்க விரும்புபவர்கள் இவர்கள்தான் எங்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள். இதில் மேலும் பல வடிவங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.

நான் பொறியியல் பட்டதாரி. ராஜஸ்ரீ எம்.பி.ஏ படித்துள்ளார். எங்க  குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒரு தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், எங்க இருவருக்கும் டெக்ஸ்டைல் துறை முற்றிலும் புதிய முயற்சிதான். ஆனாலும் விடா முயற்சியுடன் பாரம்பரியத்துடன் நவீன கற்பனைகளை புகுத்தி வருவதால் இதற்கான நல்ல ஒரு வரவேற்புகள் இருப்பதோடு தொழிலை திறம்பட நடத்தவும் முடிகிறது. எங்களது இந்த முயற்சிக்கு குடும்பத்தினர் முழு ஆதரவினை அளித்து வருகிறார்கள்.

அவர்கள் இல்லாமல் எங்களால் இந்தத் தொழிலை வெற்றிகரமாக செயல்படுத்தி இருந்திருக்க முடியாது. விற்பனை ஸ்டால்கள் மற்றும் எக்ஸ்போக்கள் மூலம் எங்களின் தொழிலினை விரிவுபடுத்தி வருகிறோம். பெண்கள் துணிந்து தங்களது ஃபேஷனை நோக்கி பயணிக்க துவங்க வேண்டும். தனக்கான பிரத்யேக அடையாளங்களுடன் தனித்து விளங்கினால் வெற்றி நிச்சயம்’’
என்றார் அனு பாலாஜி.

 தனுஜா ஜெயராமன்