டாப் 5 மைதானங்கள்



சமீபத்தில் உலகில் மிக அதிக பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் கிரிக்கெட் மைதானத்தை  அகமதாபாத்தில் திறந்தனர். இதுபோல் பிரம்மாண்டமாக உள்ள மைதானங்கள் சிலவற்றை பார்ப்போம்.

* ரன்கிரேடோ மே தின மைதானம் , வடகொரியா

1988-ல் ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் சியோலில் நடத்தப்பட்டன. அதற்காக பெரிய மைதானம் கட்டப்பட்டது. இதனைப்பார்த்த வடகொரியா சும்மா இருக்குமா? உடனே அதுவும் பிரமாண்ட மைதானத்தை கட்டி திருப்திப்பட்டது. அந்த மைதானம்தான் ரன்கிரேடோ மே தின மைதானம்.

பியாங்கியாங் நகரில் அமைந்துள்ள இந்த மைதானம் 1989-ம் ஆண்டு மே 1-ம் தேதி திறக்கப்பட்டது. இங்கு முதன் முதலாக இளைஞர்கள் மற்றும்
ஸ்டூடண்ட்ஸ் சார்ந்த உலகத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் 1,50,000 பேர் உட்காரலாம் என வடகொரியா சொன்னது. ஆனால், உண்மையில் 1,14,000 பேர் மட்டுமே அமரலாம் என்கிறது மற்றொரு தகவல். தற்போது வருடாந்தர அரிராங் விளையாட்டுப் போட்டியை இங்கு நடத்தி வருகின்றனர். உலகின் மிகப்பெரிய உடற்பயிற்சிகள் சார்ந்த போட்டிகள் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன. இதனை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

* தி பிக் ஹவுஸ், அமெரிக்கா

1927-ம் ஆண்டு மிச்சிகனில் இந்த மைதானம் கட்டப்பட்டது. அப்போது அதில் 72,000 பேர் மட்டுமே அமர வசதி இருந்தது. பிறகு  மீண்டும் புதுப்பிக்கப்பட்டபோது இருக்கைகள் கூடின. 1,10,000 பேர் அமர வசதி ஏற்பட்டது. கல்லூரிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டியை 1,15,109 பேர் அமர்ந்து பார்த்தனர்.

இந்த மைதானத்தில் 1964-ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி லிண்டன் பி.ஜான்சன் ‘கிரேட் சொசைட்டி’ என ஒரு நிகழ்ச்சி யைத் துவக்கி வைத்து, பெரும்கூட்டத்தினருக்கு இடையே பேசியுள்ளார்.

* ரோஸ் பவுல், அமெரிக்கா

1922-ல் இந்த மைதானம் கலிபோர்னியாவில் கட்டப்பட்டபோது குதிரையின் லாடம் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தது. புதுப்பித்தல்களுக்குப்பின்  கிண்ணம் போன்ற வடிவம் பெற்று விட்டதால் ரோஸ் கிண்ணம் என அழைக்கப்படுகிறது. இதுவரை இங்கு இரு ஒலிம்பிக் இறுதி ஆட்டங்கள் (கால்பந்து-1994, பிரேசில் கோப்பையை வென்றது) இரு உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டங்கள், 5 சூப்பர் பவுல் போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இவற்றையெல்லாம் விட இங்கு நடக்கும் புதுவருட தின கல்லூரி கால் பந்து போட்டி மிகவும் பிரபலம். அதிகபட்சமாக மைதானத்தில் 1,01,799 பேர் அமரலாம். அமெரிக்க குடியரசு தினம் சார்ந்த வாணவேடிக்கை இங்குதான் நடத்தப்படும்.

* மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்,  ஆஸ்திரேலியா

இந்த மைதானம் 1853-ல் கட்டப்பட்டது. உலகின் பழமையான மைதானங்களில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் எளிமையாக `G’ என அழைக்கப்பட்டது. 1992 மற்றும் 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்குதான் நடத்தப்பட்டன. கிரிக்கெட் மைதானமாக இருந்தாலும் இங்கு நடக்கும் வருடாந்தர ஆசிஸ் ரூல்ஸ் கால்பந்து போட்டி மிகவும் பிரபலம். அதிகபட்சமாக இந்த மைதானத்தில் 1,00,024 பார்வையாளர்கள் அமரலாம்.

* சாக்கர் சிட்டி, தென்னாப் பிரிக்கா

ஜோகன்ஸ்பர்க்கில் 1989-ல் துவக்கப்பட்டது இந்த மைதானம். ஒரே வருடத்தில் உலகப் புகழ் பெற்றது. காரணம், ஜெயிலிலிருந்து வெளியே வந்த நெல்சன் மண்டேலா இங்கு தான் முதல் பேச்சை நிகழ்த்தினார். 2013-ல் அவர் இறந்தபோது இறுதி பிரார்த்தனை நிகழ்வும் இங்குதான் நடந்தது. முதலில் `FNB’ என அழைக்கப்பட்ட இந்த மைதானம் 2010-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்தபோது ‘சாக்கர் நகரம்’ என பெயர் மாற்றம் பெற்றது.

ராஜிராதா