நான்கு கால் ரோவர்



இன்னும் இரண்டு வருடங்களில் நிலாவில் பெரும் அற்புதத்தை நிகழ்த்தப் போகிறது இங்கிலாந்து. ஆம்; 2021-இல் உலகின் மிகச்சிறிய மூன் ரோவரை நிலாவுக்கு அனுப்புகிறது. பத்து நாட்கள் நிலாவில் தங்கி ஆராயப் போகும் இந்த ரோவரின் எடை வெறும் 1.5 கிலோ தான்.
நிலாவின் தட்பவெப்ப நிலையைத் தாங்கும் அளவுக்கு இதை வடிவமைத்திருக்கின்றனர். இங்கிலாந்து நிலாவுக்கு அனுப்பும் முதல் ரோவரும் இதுதான். இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மட்டுமே நிலாவிற்கு ரோவரை அனுப்பியிருக்கின்றன.

இந்த சாகச நிகழ்வுக் கான கலந்துரையாடல் லண்டனில் அரங்கேறியது. இந்த ரோவருக்கு சக்கரங்கள் கிடையாது என்பது ஹைலைட்.
சக்கரங்களுக்குப் பதிலாக நான்கு கால்களுடன் ஒரு  சிலந்திப் பூச்சியைப் போல இதை வடிவமைத்திருக்கிறது ‘ஸ்பேஸ்பிட்’ என்கிற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். ‘‘மிகச் சிறிய அளவில் விண்வெளி பயணத்துக்கான அனைத்து தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய ஒரு ரோபோ...’’ என்று இதற்கு சர்டிபிகேட் தருகிறது ‘நாசா’.

‘‘நிலாவுக்குச் சென்று அங்கே என்னென்ன இருக்கிறது மற்றும் மனித இனத்துக்குத் தேவையானது ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்வதே எங்களின் முக்கிய இலக்கு...’’ என்கிறார் ‘ஸ்பேஸ்பிட்’டின் நிறுவனர் பாவ்லோ.

மனிதன் போன்ற ஒரு உணர்வையும் தோற்றத்தையும் தர வேண்டும் என்பதற்காக சக்கரங்களுக்குப் பதில் கால்களை இந்த ரோவருக்குப் பொருத்தியுள்ளனர். ரோவரில் இருக்கும் இரண்டு கேமராக்கள் எடுக்கப்போகும் படங்கள் தான் 2021-ல் அரங்கேறப்போகும்  விண்வெளி சாகசங்களின் ஹைலைட்டாக இருக்கும்.