பிசினஸ் மகாராஜா



‘‘நூறு கதவுகளைத்  தட்டிய பிறகே விற்பனை என்றால் என்ன? மார்க்கெட்டிங் என்றால் என்ன? என்பதைக் கற்றுக்கொண்டேன். அந்த நூறு கதவுகளில் 99 கதவுகள் உங்களின் முகத்தில் மோதும். ஒரு கதவு திறக்கும். அந்தக் கதவு ஏன் திறந்தது  என்பதை அறிந்துகொண்டால் விரைவாக வியாபாரத்தைக் கற்றுக்கொள்வீர்கள்...’’ என்கிறார் பிசினஸ் மகாராஜா ஜான் பால் டிஜோரியா.

அவருடைய வெற்றிக் கதையைத் தான் இங்கே பார்க்கப் போகிறோம். வறுமை மட்டுமே சூழந்த அடிமட்டத்தில் இருந்து கடினமான உழைப்பாலும், கனவுகளைப் பின் தொடர்ந்து போன நம்பிக்கையாலும் பெரும் பணக்காரராக உயர்ந்தவர் ஜான் பால் டிஜோரியா. பல வழிகளில் இன்றைய இளைஞர்களின் ரோல்மாடலாகவும் திகழ்கிறார்.

இத்தாலியில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த தந்தைக்கும், கிரேக்கத்தில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த தாய்க்கும் 1944-ம் வருடம் மகனாகப் பிறந்தார் ஜான் பால் டிஜோரியா. அவருக்கு ஒரு அண்ணன். உலகப் போரின் தாக்கத்தால் வாழ்க்கையே பெரும்பாடாக இருந்த ஒரு காலகட்டம் அது. டிஜோரியாவுக்கு இரண்டு வயதாக இருந்தபோது அவரின் பெற்றோர்கள் விவாகரத்து செய்துகொண்டனர்.

அவருக்கு ஒன்பது வயதானபோது அண்ணனுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கார்டுகளையும், செய்தித்தாள்களையும் விற்று, குடும்பத்துக்கு உதவியாக இருந்தார். தனியொரு ஆளாக, எந்தவித ஆதரவும் இல்லாமல் இருக்கும் அவரது தாய் இரண்டு பேரையும் வளர்க்கத் திண்டாடினார். வறுமை டிஜோரியாவின் குடும்பத்தை அலைக்கழித்தது.

அவரது அம்மா ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தார். டிஜோரியாவை, குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் ஒரு ஃபோஸ்டர் ஹோமில் சேர்த்துவிடுவது தான் அந்த முடிவு. வேண்டா  வெறுப்புடன் அந்த ஹோமில் சேர்ந்தார் டிஜோரியா. அவருக்கு வேறு வழியில்லை.

ஃபோஸ்டர் ஹோமில் இருந்தவாறே தனது கல்வியைத் தொடர்ந்த டிஜோரியா கனவு காணும் மனிதராகவே வளர்ந்தார். படிப்பை முடித்த பிறகு அமெரிக்க கப்பற்படையில் கடைநிலை ஊழியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். அதற்குப் பிறகு துப்புரவுத் தொழிலாளியாகவும், கேர்டேக்கராகவும், இன்சூரன்ஸ் சேல்ஸ் செய்யும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்வாகவும் வேலை செய்தார். ஆனால், எந்த வேலையும் அவருக்கு மகிழ்ச்சி தரவில்லை.

வறுமை காரணமாக வேலையையும் விட முடியவில்லை. ‘ரெட்கென் லேபாரட்டரிஸ்’ என்ற தலைமுடி சார்ந்த அழகு சாதனப்பொருட்களைத்  தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார். ஷாம்பூ போன்ற பொருட்கள் டிஜோரியாவை வெகுவாகக் கவர்ந்தன. தன்னு டைய எதிர்காலம் மட்டுமல்ல, வியாபாரத்தின் எதிர்காலமே  அதில்தான் இருக்கிறது என்பதை அவர் உணர்ந்தபோது வயது 36.

ரெட்கென்னின் பிசினஸ் நுணுக்கங்கள் அவருக்குப் பிடிப்பதில்லை. அதை அவர் வெளிக்காட்ட, கொஞ்ச நாட் களிலேயே அவரின் பதவியிலிருந்து
நீக்கப்பட்டார். 1980-இல் 700 டாலர்கள் முதலீட்டில் முடி திருத்துநர் பால் மிச் செலுடன் இணைந்து ‘ஜான் பால் மிச்செல் சிஸ்டம்ஸ்’ என்ற தலைமுடி பராமரிப்புக்கான அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத் தை ஆரம்பித்தார்.

அந்த 700 டாலரும் கடன். ஷாம்பூ உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களை வீடு வீடாகச் சென்று விற்றார். அப்போது அவருக்குத் தங்க வீடு இல்லை. ஒரு காரில் தங்கிக்கொள்வார் டிஜோரியா. ஒரு வாடிக்கையாளரைப் பிடிப்பதற்கே ஒருவாரம் கூட ஆகும். அப்படி சிறுகச் சிறுகச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இன்று உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறார்கள். தவிர, அழகுக் கலையைக் கற்றுத்தரும் கல்வி நிறு வனங்களையும் நடத்தி வருகிறார் டிஜோரியா.

அமெரிக்காவில் மட்டும் 109 இடங்களில் அவரது கல்வி நிறுவனங்கள் உள்ளன. உலகின் மிகப்பெரிய காஸ்மெட்டாலஜி கல்வி நிறுவனம் இவருடையது தான். இன்று ‘ஜான் பால் மிச்செல் சிஸ்டம்ஸ்’ வருடத்துக்கு ஒரு பில்லியன் டாலர் டர்ன் ஓவர் செய்கிறது. அதாவது சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய். அத்துடன் உலகின் முன்னணி டக்கீலா தயாரிப்பு நிறுவனமான ‘பேட்ரனி’ன் நிறுவனரும் டிஜோரியாதான். இன்று அவருடைய சொத்து மதிப்பு 18 ஆயிரம் கோடி ரூபாய்!

த.சக்திவேல்