ஜெயில் பிரியாணி



திருச்சூரில் உள்ள வியூர் மத்திய சிறைதான் இப்போது ஹாட் டாக். பொதுவாக சிறையில் தயாரிக்கப்படும் உணவு அவ்வளவு தரமாகவும் சுவையாகவும் இருக்காது என்பது பலரின் கருத்து. ஆனால், இங்கு நடப்பதே வேறு. கேரளாவின் பாரம்பரிய சிக்கன் பிரியாணியை இங்கிருக்கும் கைதிகள் பிரமாதமாக சமைக்கின்றனர்.

இந்த பிரியாணிக்கு திருச்சூர் எங்கும் தனி மவுசு. நீங்கள் விரும்பினால் நேரடியாக சிறைக்குச் சென்று பிரியாணியை வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஸ்விக்கியில் ஆர்டர் செய்தால் பிரியாணி வீடு தேடி வந்துவிடும்.
300 கிராம் பிரியாணி, ஒரு கோழியின் கால், கப் கேக், தயிர், வெங்காயம், வாழை இலை அடங்கிய ஒரு காம்போவின் விலை ரூ.127. இதற்கு முன் சப்பாத்தி வியாபாரத்தில் சக்கைப்போடு போட்டது இந்த ஜெயில். ‘‘வியூர் சிறைக்குச் செல்லும் கைதி வெளியே வரும்போது சிறந்த சமையல்கலைஞனாக விடுதலையாவான்...’’ என்கின்றனர் அப்பகுதி மக்கள்.