ஒரு வகுப்புக்கு மூன்று லட்ச ரூபாய் கட்டணம்



ஜெர்மனியின்  டோர்முண்ட் நகரம். ஜூலை மாதத்தில் மெல்லிய காற்றுடன் பனி மழையாகப் பொழிவது, நிலவு உடைந்து துகள் துகளாக பூமியை நோக்கி விழுவதுபோல காட்சி தருகிறது. மரங்களும், வீடுகளும், வாகனங்களும், தெருமுனைகளில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சதுக்கங்களும் குளிருக்கு பனியை ஆடையாக உடுத்திக்கொள்கின்றன.

ஊரே ராட்சத ஐஸ் கட்டி களுக்கு நடுவிலே மாட்டிக் கொண்ட தீவு போல அமைதி யாய் காட்சியளிக்கிறது. இந்தக் குளிருக்கு இதமாக ‘பெண்களின் மனசைக் கொள்ளையடிக்க ஆண்கள் என்ன செய்ய வேண்டும்?’ என காதல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் 27 வயதே நிரம்பிய இளைஞரான வென்சல். ஜெர்மன் இளசுகளால் ‘நம்பர் ஒன் காதல் நிபுணர்’, ‘Mr.Flirt’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

‘‘மக்கள் ஒன்றிணைவதற்கு சிறந்த வழி தனக்கான துணையைக் கண்டடைவதுதான். அதற்காகவே இந்த வகுப்பை எடுக்கிறேன்’’ என்று சொல்கிற வென்சல், வெளியே ஸ்பெஷலாக பாடம் நடத்த ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்ச ரூபாயைக் கட்டணமாகப் பெறுகிறார். இதுவே ஒரு பெரிய குழுவிற்கு என்றால் மூன்று லட்ச ரூபாய்.

ஆண்களுக்கான வென்சலின் முக்கிய டிப்ஸ்

* ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டால், உடனே அவளிடம் சென்று பேசிவிடுங்கள். தயங்க வேண்டாம்.

*  தொடர்ந்து கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருந்தால் அவள் உங்களைவிட்டு  ஓடிவிடுவாள். அதனால், அவளைப் பற்றிச் சொல்வதற்கான நேரத்தைக் கொடுங்கள்.

* ‘உன்னோட கண் ரொம்ப அழகாக இருக்கிறது’ என்று எல்லோருமே சொல்வதை நீங்களும் சொல்லாதீர்கள். ‘உன்னோட பர்ஃப்யூமோட வாசனையை நான் நேசிக்கிறேன்’, ‘உன்னோட குரல் ரொம்ப அழகாக இருக்குது’ என தனித்துவமாக ஏதேனும் சொல்லுங்கள்.

* அறிமுகமாகிய கொஞ்ச நாட்களில் அவளின் கையை நேசத்துடன் பிடியுங்கள். பதி லுக்கு என்ன செய்கிறாள் என்று கவனியுங்கள். கையைத் தட்டிவிட்டால் உஷாராகிவிடுங்கள். அவளும் பதிலுக்கு கையை நீட்டினால் நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

* முக்கியமாக ஜெர்மன் பெண்களிடம் பழக ஆரம்பித்த மூன்று மாதங்களில் காதலைச் சொல்லிவிடாதீர்கள். அப்படிச் சொன்னால் அவள் உங்களைவிட்டு விலகிப் போய்விடுவாள். ஜெர்மன் பெண்கள் தங்களுடன் எதுவும் ஒட்டிக்கொண்டிருக்க விரும்புவதில்லை போர்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகளிலிருந்து வெளியேறி அகதி களாக ஜெர்மனியில் முகாமிட்டிருக்கும் ஆண்களுக்கு சமீபத்தில் பாடம் நடத்தியிருக்கிறார் வென்சல். பெண்களும் ஆர்வத்துடன் இவரிடம் பாடம் கற்கின்றனர்.

ஜெர்மனியில் டீன் ஏஜில் இருக்கும் ஆணுக்கு கேர்ள் ஃப்ரண்ட் இல்லையென்றாலோ அல்லது பெண்ணுக்கு பாய் ஃப்ரண்ட்  இல்லையென் றாலோ ஏதோ உளவியல் பிரச்னையில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று பெற்றோர்கள் கருதி கன்சல்டிங் கொடுக்கின்றனர். வென்சலின் வகுப்புக்குப் பெற்றோர்களே தங்களின் குழந்தைகளை அனுப்பி வைப்பதுதான் இதில் ஹைலைட். இளசுகளை இணைக்கின்ற வென்சலின் சேவை தொடரட்டும்!