மரண கபே



உலகெங்கும் மனிதர்கள் விரும்பிப் பருகும் பானங்களில் முக்கியமானது காபி. நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே காபி பருகுவது தனி அனுபவம். இதற்காகவே பிரத்யேகமான கபேக்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அந்த வகையில் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் வீற்றிருக்கும் கிட்-மாய் கபே தனிச் சிறப்பு வாய்ந்தது.

குளிரூட்டப்பட்ட விசாலமான அறை, அழ கழகான நாற்காலிகள், கண்களைப் பாதிக்காத மின் விளக்குகள்; அத்துடன் அரிஸ்டாட்டில், நீட்ஷே, காண்ட்போன்ற புகழ்பெற்ற தத்துவவாதி களின் வாசகங்கள் இந்தக் கபேவை அலங் கரிக்கின்றன. இதுபோக ஆங்காங்கே மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், மரணம் பற்றிய விழிப்புணர்வுகள் கபேவை வேறுவிதமாக மாற்றுகின்றன.

இங்கே ஒரு காபியோ அல்லது தேநீரோ அருந்தினால் தனித்த ஒரு அனுபவத்தை இலவசமாகத் தருகிறார்கள். அதாவது உங்களைச் சவப்பெட்டிக்குள் படுக்க வைத்து சில நிமிடங்களுக்கு மூடி விடுகிறார்கள். மூச்சு விடுவதற்கான வசதியுள்ளது. மரணம் பற்றிய விழிப்புணர்வையும் சிந்தனையையும் ஏற் படுத்தவே இதைச் செய்வதாகச் சொல்கிறார் வீரநட். கிட்-மாயின் நிறுவனர் மற்றும் புத்த கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

‘‘புத்த தத்துவங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தபோது இந்த யோசனை தோன்றியது. மரணம் பற்றிய சிந்தனை மக்களுக்கு வாழ்க்கையில் முக்கியத்துவத்தை தருகிறது. அத்துடன் பேராசையையும் கோபத்தையும் குறைக்கிறது. சவப்பெட்டிக்குள் சிறிது நேரம் இருந்துவிட்டு வந்த நபர் நிச்சயம் தனக்கும் மற்றவர்களுக்கும் சமூகத்துக்கும் நல்லதையே செய்வார்...’’ என்கிற வீரநட், மரணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமே இந்த கபேவை ஆரம்பித்திருக்கிறார்.

‘‘இன்று தாய்லாந்து இளைஞர்கள் அதிகமாக தங்கள் நேரத்தை கபேவில்தான் கழிக்கிறார்கள். கபேக்கள் இந்த தலைமுறையின் அடையாளமாகவே மாறிவிட்டன. ஆன்லைன் வேலையைக்கூட கபேவில் தான் அவர்கள் செய்கிறார்கள். புத்த சிந்தனையை தாய்லாந்து இளசுகளிடம் சேர்க்க ஒரே வழி கபேவை திறப்பதுதான்...’’ என்கிற வீரநட்டின் கபே எப்போதும் இளைஞர்களின் கூட்டத்தால் நிரம்புகிறது.உங்களுக்கு சவப்பெட்டிக்குள் இருக்க விருப்பமில்லை என்றால் வீரநட் வற்புறுத்துவதில்லை.