பழங்குடிப் பெண் எம்.பி!



நம்மால் மறக்க முடியாத பெயர் மது. கேரளாவைச் சேர்ந்த பழங்குடியைச்  சேர்ந்த அவர், கடையில் திருடிவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டு அடித்தே கொல்லப்பட்டார். இத்தனைக்கும் அவர் எடுத்தது பசியைப் போக்குவதற்கான உணவுப் பொருளை.நூறு சதவிகித கல்வி அறிவுகொண்ட மாநிலம் என போற் றப்படும் கேரளாவில் பழங்குடி மக்களின் வாழ்க்கைத்தரம் அதலபாதாளத்தி லேயே இருக்கிறது என்பதையே இச் சம்பவம் படம் பிடித்துக்காட்டியது.

இந்தச் சூழலில்தான் பழங்குடி   இனத்துக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கிறார் ரம்யா ஹரிதாஸ். ஆம்; நடந்து முடிந்த தேர்தலில் கேரளாவின் சார்பாக நாடாளு மன்றத்துக்குச் செல்லும் ஒரே பெண் இவர்தான்.

1971-இல் அடூர் தொகுதியில் சி.பி.ஐ வேட்பாளராகக் களமிறங்கி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார்கவி தங்கப்பன்தான் கேரளாவின் முதல் பழங்குடிப் பெண் எம்.பி. அவருக்குப் பிறகு கேரளாவின் இரண்டாவது  பழங்குடிப் பெண் எம்.பி. ரம்யா தான். கேரள மாநிலம் பாலக்காட்டின்முக்கிய நாடாளுமன்றத் தொகுதி ஆலத்தூர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ரம்யா ஹரிதாஸ் 5,33,815 வாக்குகள் பெற்று, கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான பி.கே.பிஜுவை தோற் கடித்திருக்கிறார்.

இத்தனைக்கும் முப்பது வருடங்களுக்கு மேலாக கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த ஒரு தொகுதி ஆலத்தூர்.  32 வயதேயான ரம்யா அதை தகர்த்துவிட்டார் என்பதுதான் இதில் ஹைலைட்.

2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் திறமையான இளைஞர்களை இனம் காண ‘talent hunt program’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார் ராகுல் காந்தி. அந்தத் திட்டத்தின் மூலம் தேர்வானவர்தான் ரம்யா. பழங்குடி மக்களுக்கான அவரது சேவையைப் பார்த்தே சீட் கொடுத்தார் ராகுல் காந்தி.

கோழிக்கோட்டில் உள்ள எளிய குடும்பத்தில் பிறந்த ரம்யா ஒரு நல்ல பாடகியும் கூட.  தேர்தல் பிரசாரத்தின் போது பழங்குடிப் பாடல்களைப் பாடியே மக்களைத் தன்வசப் படுத்தியிருக்கிறார். வேட்பு மனு தாக்கலின் போது ரம்யாவிடம் இருந்த ரொக்கம் ரூ.22,816 மட்டுமே.