பறவைகள்தான் என் நண்பர்கள்ஒரு வாரம் அல்லது ஒரு நாள் மின்சாரம் இல்லாமல் உங்களால் வாழ முடியுமா? என்று கேட்டால் ‘முடியாது’ என்ற பதில் மட்டுமே கிடைக்கும். அந்தளவுக்கு மின்சாரம் நம் வாழ்க்கையில் முக்கிய அங்கமாகிவிட்டது. மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அதுவும் அனல் கக்கும் கோடை காலத்தில் ஒரு நிமிடம் மின்சாரம் தடைப்பட்டாலே போதும். வாழ்க்கை நரகமாகிவிடுகிறது.

இப்படியான ஒரு சூழலில்தான் இயற்கையின் மீதான காதலால் வாழ்க்கை முழுவதும் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார் ஹேமா சேன். புனேவில் உள்ள புத்வார் பேத் என்ற இடத்தில் மரங்களும் பறவைகளும் சூழ்ந்த ஒரு இடத்தில் அமைந்திருக்கிறது அவரது குட்டி வீடு. அந்த ஊரிலேயே சிறிய வீடு அதுதான்.

ஒரு வேளை மின்சார வசதி செய்துகொள்ளும் அளவுக்கு ஹேமாவிடம் பணமில்லையோ... என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தால் அது தவறானது. ஆம்; தாவரவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று புனேவில் உள்ள கார்வேர் கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஹேமா சேன்.

தாவரவியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து நிறைய புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் எழுதிக்கொண்டிருப்பது இவரது பொழுதுபோக்கு. 79 வயதிலும் உற்சாகத்துடன் இயங்கி வருகிறார் இந்த இயற்கையின் காதலி. இவ்வளவு ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வந்தாலும் இப்போது தான் ஹேமாவைப் பற்றிய விவரங்கள் வெளியே வந்திருக்கிறது. அவர் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சி சேனல்களுக்கும் கொடுத்த நேர்காணல் இது.

இவ்வளவு வருடங்களாக மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்கிறீர்கள்?

நான் வாழ்வதற்கு மின்சாரம் தேவையென்று ஒருபோதும் உணரவேயில்லை. ஒரு காலத்தில் உணவு, உடை, இருப்பிடம்தான் மனிதன் வாழ்வதற்கு அத்தியாவசியத் தேவையாக இருந்தன. அப்போது மின்சாரம் ஒன்றும் அடிப்படைத் தேவையில்லை. உண்மையைச் சொன்னால் மின் சாரம் பற்றி சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு கொஞ்சகாலம் தானே ஆகிறது. எனக்கு அத்தியாவசிய தேவைகள் மட்டுமே போதும். மின்சாரம் தேவையில்லை.  உங்களைப் போலவே நிறைய பேர் என்னிடம்  ‘மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். நான் பதிலுக்கு ‘மின்சாரத்துடன் எப்படி வாழ்கிறீர்கள்? ' என்பேன். அதற்கு அவர்கள் என்னை முட்டாள், பைத்தியக்காரி என்கிறார்கள். ஆனால், அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறேன். அந்த வாழ்க்கையில் ஒருபோதும் மின்சாரத்துக்கு இடமில்லை.

உங்களின் வீடு உடைந்து கிடைக்கிறது. இதைச் சரி செய்யலாம் அல்லது வீடு மற்றும் சுற்றி யிருக்கும் இடத்தை விற்றுவிட்டு வேறு இடத்துக்குப் போகலாம். ஆனால், அதை ஏன் நீங்கள் செய்யவில்லை?

இந்த வீடு, இடம் எல்லாம் எனக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. இங்கிருக்கும் நாய், இரண்டு பூனைகள், கீரிப்பிள்ளை மற்றும் பறவைகள் அனைத்துக் கும் சொந்தமானது. பறவை கள்தான் என் நண்பர்கள். நான் வீட்டில் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்போது என்னைப் பார்க்க பறவைகள் வரும். நான் இந்தப் பறவை களையும் மரங்களையும் பார்த்துக்கொள்ளவே இங்கு குடியிருக்கிறேன். இதை விற்றுவிட்டு எங்கேயும் போகமாட்டேன்.  அப்படிப் போனால் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை.

இப்படியான ஒரு வாழ்க்கை மூலம் மற்றவர்களுக்கு  ஏதாவது சொல்ல வருகிறீர்களா?

இந்த வாழ்க்கை மூலம் நான் யாருக்கும் பாடம் நடத்தவில்லை. மெசேஜ் சொல்லவில்லை. ‘‘வாழ்க்கையில் உனக்கான பாதையைக் கண்டுபிடி...’’ என்று புத்தர் சொல்வார். நான் என் பாதையைக் கண்டுபிடித்துச் சென்றுகொண்டிருக்கிறேன். யாரையும் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள் என்று  ஒருபோதும் அழைக்க மாட்டேன். அது என் வேலையும் அல்ல.

தமிழில்: த.சக்திவேல்